-சேக்கிழான்

7. பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!
சமுதாயத்தில் சரிபாதியான பெண்களுக்குரிய இடத்தையும் கல்வியையும் அளிக்கத் தயங்கிய காலகட்டம் நமது நாட்டில் இருந்தது. ஔவையாரும், குந்தவைப் பிராட்டியாரும், ராணி மங்கம்மாளும், ஜான்சி ராணியும் வாழ்ந்த இம்மண்னில், பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற கருத்து இடைக்காலத்தில் ஏற்பட்டது ஓர் அறிவீனமே. இதனை சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி எனப் பலரும் கண்டித்திருக்கின்றனர்.
‘எந்த நாடு, எந்த இனம், பெண்களை மதிக்கவில்லையோ, அவை ஒரு போதும் சிறந்த நிலையை அடைந்ததில்லை. அடையவும் அடையாது. நம் இனம் இவ்வளவு இழிந்துள்ளததற்கு முக்கியக் காரணம் பெண்களுக்கு நீங்கள் மரியாதை அளிக்காதது தான்…. எந்த நாட்டில், எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ, அந்த நாடும், குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை. எனவே அவர்களை முதலில் உயர்த்த வேண்டும்… எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி, சமூக அந்தஸ்து போன்றவற்றால் இணையாக நடத்தப்படுகிறார்களோ அந்த நாடு பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் எல்லா வளங்களிலும் சிறந்து விளங்கும்.”
-என்று கூறுவார் சுவாமி விவேகானந்தர்.
கார்க்கி, வாஸக்தலி, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயி போன்றோர் பிரம்ம ஞானத்தைப் பற்றிய விவாதங்களில் கலந்துகொண்டு தங்கள் திறமையினால் ரிஷிகளுக்குரிய சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதே பாதையில் பயணித்த மகாகவி பாரதியும், ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ கொட்டி பாடி மகிழ்கிறார்.
கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 1
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி) 2
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி) 6
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி) 7
(பெண்கள் விடுதலைக் கும்மி)
-என்ற பாரதியின் வரிகளில் மிளிரும் பெண்மையின் பொலிவு, கல்வியால் விளைந்தது.
“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியிடம் விதைத்தார். அவரைத் தனது மானசீக குருவாக ஏற்ற பாரதி அதனையே தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.
சுவாமி விவேகானந்தர், ‘பெண்களை கல்வி கற்க அனுமதிப்பதோடு நின்றுகொள்ள வேண்டும். அதற்கு மேல் அவர்கள் விஷயத்தில் தலையிடும் உரிமை யாருக்குமே இல்லை. கல்வி கற்ற பெண்கள் தங்கள் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக் கொள்ளும் சக்தியைப் பெற்று விடுவார்கள்’ என்றார். அவரது அடியொற்றியே பாரதியும், பெண்கல்வியின் அவசியத்தை தனது படைப்புகளில் வெளிப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க்கோயில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?
(தேசியக் கல்வி-2)
-என்று வினவும் பாரதியிடம், மாதருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டுமென்ற உள்ளக்கிடக்கை தீவிரமாக வெளிப்படுவதைக் காண்கிறோம்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
(புதுமைப்பெண்: 7)
-என்ற பாடலில் பெண் விடுதலையையும், ஆணுக்கு நிகராக பெண்ணைக் கருதத் துடிக்கும் பாரதியின் தாபத்தையும் காண்கிறோம். பெண்கல்வி ஓங்கும் நாட்டில் அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்கும் என்பதற்கு, இன்றைய பாரதமே சாட்சி அல்லவா?
(தொடர்கிறது)
$$$