-ச.சண்முகநாதன்

24. தேவியை விடு. இல்லை, ஆவியை விடு!
கரை கடந்து வந்த ராமனுடைய சேனையில், ராவணனின் ஒற்றர் புகுந்துவிட விபீஷணன் அதைக் கண்டுபிடித்து அவர்களை ராமன் முன்பு நிறுத்துகிறான்.
அவர்களிடம் ராவணனுக்கு “இனி அந்த ஆண்டவனே வந்தாலும் அவனைக் காப்பாற்ற முடியாது. அவன் ஆணவம் அழியும் நேரம் நெருங்கி விட்டது என்று போய் சொல்லுங்கள்” என்ற செய்தி சொல்லி அனுப்புகிறான். ராமனுக்கும் ராவணனுக்கும் இதுதான் வித்தியாசம். ராவணன், ராமதூதனை வாலில் தீ வைத்து நகர்வலம் செய்யவைத்து அசிங்கப் படுத்துகிறான். ராமனோ “நாம் பிழை செய்யலாமோ? நலியலீர்; விடுமின்!” என்று தூதுவரை தூதுவராக மட்டும் பார்க்கிறான்.
அதன் பின்னர் ஒரு சிறு குன்றின் மீதேறி இலங்கையின் அழகைக் கண் குளிர காண்கிறான் ராமன்.
“பொன் நகர் காண்பான் போல, பெருந் துணை வீரர் சுற்ற, தம்பியும் பின்பு செல்ல, இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன்”
அங்கே ராவணனின் அறிவாலயத்தில் “மானிடர்கள் தாங்களாக வந்து வலையில் வீழ்ந்துள்ளனர். தாமதிக்க வேண்டாம். அவர்களை அழித்துவிட வேண்டும்” என்று அமைச்சர்களை கூட்டி தீர்மானம் போடுகிறான்.
அரசவை ஆலோசனைக் கூட்டத்தில், ராவணன் தனக்கு விருப்பமானதைப் பற்றி மட்டும் கேட்க விரும்புகிறான். மாற்றுக் கருத்துக்கு அங்கே இடமில்லை.
ராவணனின் பாட்டனும், மந்திரியுமான மாலியவன் மனம் நொந்து “சீதையை விட்டுவிடு. இல்லையென்றால் நம் வம்சமே அழிந்து விடும்” என்று அறிவுரை சொல்ல, ராவணன் செவியில் அறிவுரை எதுவுமே ஏறவில்லை. ஏற்கனவே விபீஷணன் “சீதையை விடு” என்று சொன்னதற்கு கோபப்பட்டு வெளியேற்றியவன், இதையா கேட்கப் போகிறான்?
“வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன்; சீதையை விடுதி ஆயின், தீரும் இத் தீமை”
– என்று மாலியவான் சொன்ன அறிவுரைக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை. குரங்குப் படையுடன் வந்த ராமனை வென்றே தீருவேன் என்று அலட்சியம் செய்துவிட்டு அவனும் ஒரு மலையில் மீது ஏறி ராம சேனை இருக்கும் திசை நோக்கிறான்.
ராமனோ எதிர்ப்பக்கத்தில் இருந்து இலங்கையின் அழகை லக்ஷ்மணனுடன் இருந்து நோக்குகிறான். கண்களில் அழகை ரசித்தவன், நெஞ்சினில் அனல் வளர்கிறான்.
ராவணன் சபையில் கர்வத்துடன், “குரங்குகளை கூட்டி வந்து நம்முடன் போரிட்டு வெற்றி பெறப் போகிறானா, ராமன்? நல்ல ஆளுயா” என்று நகைக்கின்றனர். (“குரங்கு வந்து வெறுங் கையால் கொள்ளும் வென்றி?”)
அன்றைய இரவு, மனித குலத்தின் ஓரு பெரும்போரை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. இலங்கையின் இரண்டு முனைகளில் இரண்டு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டு வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பொருதற்குக் காத்திருந்தனர். அடிபட்ட புலிபோல, தர்மத்தை நிலைநாட்ட வேண்டி ராமன் ஒரு முனையில். அதர்மியாக, அதீத ஆசை கொண்டு, யார் பேச்சையும் மதிக்காமல் திமிர் பிடித்த ராவணன் மறுமுனையில்.
உலகம் உறங்கினாலும், உள்ளம் உறங்கவில்லை இருவருக்கும்.
இரவு கழிந்து பொழுது புலர்ந்தது. ராமசேனை முன்னே புறப்பட்டுச் சென்று இலங்கையை வளைக்கிறது,
வலையில் அகப்பட்டுக்கொண்டது போல இருந்தது ராவண சேனை, முதல் சுற்றிலேயே.
எந்நேரமும் போர் தொடங்கலாம். ராமன் கடைசியாக ஒருமுறை தூது விட்டுப் பார்க்கிறான். “சண்டை வேண்டாம். சீதையை விடு, இல்லையேல்…” என்று எச்சரிக்கை விட வேண்டும் என்று நினைக்கிறான். அங்கதனை தூது அனுப்புகிறான் ராமன்.
வாலியின் மைந்தன், அங்கதனும், ராவணனிடம் சென்று “தேவியை விடு. இல்லை உன் ஆவியை விடு” என்று, போர் துவங்கும் முன், இறுதி எச்சரிக்கை விடுக்கிறான்.
“தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து எதிர்ந்து, தன்கண் ஆவியை விடுக”
ராவணன் சினம் கொண்டு அங்கதனை அவமதிக்கிறான். அங்கதன் அவனிடம் இருந்து மீண்டு வந்து “ராமா. இவன் மண்டையில் எதுவும் ஏறுவதாகத் தெரியவில்லை. இவனுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். போர் ஒன்றே வழி” என்று போருக்குக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறான் அங்கதன், வாலியின் மைந்தன்.
“முற்ற ஓதி என்?மூர்க்கன், முடித் தலை அற்றபோது அன்றி, ஆசை அறான்”
Thats it!
$$$
25. Faceoff between ராமன் and ராவணன்.
அங்கதன் மூலம் விடுத்த “தேவியை விடு, இல்லை உன்ன ஆவியை விடு” என்ற எச்சரிக்கையை ராவணன் நிராகரிக்க, “ராவணன் போரிட்டு வீழ்த்தப்பட வேண்டியன்” என்று ராமனிடம் அங்கதன் “பூசலே; பிறிது இல்லை” என்று சொல்ல, வேறு வழியில்லாமல் போர் தொடங்கியது.
ராமனின் சமாதான முயற்சிகள் இதுவரை எல்லாம் தட்டிக் கழிக்கப்பட்டன, ராவணனால். போரின் போதும் கூட ராவணனை வீழ்த்தி, “போதும் நிறுத்திக்கொள்” என்று திருந்த, போரை நிறுத்த, சந்தர்ப்பம் கொடுக்கிறான். ராவணன் கேட்கவில்லை.
கடலில் அணை கட்டி வந்த வானரசேனை ராவணனின் மாளிகையில் சுற்றி இருக்கும் அகழியைத் தூர்த்துப் போகச் செய்கின்றன. பின்னர் நான்கு வாயில்களிலும் நான்கு பிரிவுகள் சுற்றி வளைக்கின்றன.
ராவணனின் நால்வகை சேனைகளும் போரிட எழுந்தன.
அரக்க குணம் படைத்தவர் அழியவும், நல்லவர்கள் வாழவும் நடக்கும் போர். அறத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் யுத்தம். எல்லோரையும் அரவணைக்கும் ராமனுக்கும், அஹங்காரம் பிடித்த ராவணனுக்கும் நடக்கும் தர்ம யுத்தம்.
“அரக்கர் தொல் குலம் வேர் அற, அல்லவர் வருக்கம் யாவையும் வாழ்வுற”
-நடக்கும் போர்.
முதல் சுற்றில் ராவணசேனையின் கை ஓங்கி இருக்கிறது.
“நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால், குரக்கு இனப் பெருந் தானை குலைந்து”
-போனது.
கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட வானரசேனை திருப்பித் தாக்கத் தொடங்கியவுடன் அரக்கர் படை கொஞ்சம் கதி கலங்கிப் போனது.
நான்கு வாயில்களிலும் வானரசேனை தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவிக்கிறது. ராவணனுக்கு செய்தி போகிறது. “நம் படை பின்வாங்குகிறது.”
இந்தச் செய்தி தீயாய்ச் சுடுகிறது ராவணனை. “இனி நாமே போரில் நேரடியாக இறங்க வேண்டியதுதான்” என்று, சினம் கொப்பளிக்க, தேரில் ஏறுகிறான்.
ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேர், ராவணன் தேர் ஏறும் பொழுது எழுந்த ஆரவாரம் பெருங்கடல் அலைகள் எழுப்பிய சத்தம் போல இருந்தது.
“ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல் மா இருங் கடல் போன்றது”.
ராவணனின் வீணைக்கொடி விண்ணில் பறக்க போருக்குக் கிளம்பி, போர்க்களத்தில் தோன்றுகிறான்.
ராவணன் சுக்ரீவனுடனும், அனுமனுடனும் போரிட்டு அவர்களை நலியச் செய்தான். அதன் பின் லக்ஷ்மணனும்.
விஷயம் ராமனுக்குத் தெரிவிக்கப்பட, ராமன், “அவனை அழித்து சீதையை மீட்பேன்” என்று தோள்கள் புடைக்க போருக்குத் தயாராகிறான்.
இனி ராமன் ராவணனுடன் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலை.
Faceoff between ராமன் and ராவணன்.
(தொடர்கிறது)
$$$