ராமாயண சாரம் – 21

-ச.சண்முகநாதன்

21.  Countdown starts!

“தாயே. நான் ராமனிடம் போய்  ‘சீதையைக் கண்டேன். அங்கே சிறையில் இருக்கிறாள்’ என்று வெறும் செய்தியாக சொல்வதில் என்ன பயன்? எனவே என் தோளில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களை அப்படியே கடல் கடந்து ராமனிடம் சேர்த்து விடுகிறேன்” என்று யோசனை சொல்கிறான் அனுமன் .

சீதையோ,  “இல்லை. நான் அப்படிச் செய்வதால் ராமனுக்கு களங்கம் ஏற்படும். என் நாயகன் ராமன் வர வேண்டும். ராவணன் செய்த அநீதிக்கு அவன் ராமன் கையால் தண்டிக்கப்பட வேண்டும். என்னை வஞ்சித்த நாய் ராவணன். அவன் ராமன் வில்லுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று சுத்தமான க்ஷத்ரிய தர்மம் பேசுகிறாள் சீதை.

“பஞ்சு ஒக்கும் அடிகள்; செய்ய பவளத்தின் விரல்கள்” கொண்டவள்தான் சீதை. ஆனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்க்க தீயெனப் பொங்குகிறாள்.

மேலும்  “என் சொல்லால் இந்த நாயை எரித்திருப்பேன். ஆனால் உலகம் ராமன் காப்பாற்ற வரவில்லை; அதனால் சீதையே தன்னைக் காப்பாற்றிக் கொண்டாள் என்ற அவச்சொல் ஏற்படும் ராமனுக்கு. எனவே ராமன் வந்து போரில் வென்று எனை அழைத்துச் செல்லட்டும். அதுதான் முறை” என்று நிறுத்தி நிதானமாகச் சொல்கிறாள். பார்வையை வானத்தில் நிறுத்துகிறாள்

“எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்”

சீதை பேசுவதை, கண்களில் கண்ணீருடனும், மனதில் பெருமையுடனும், கேட்டுக்கொண்டிருந்த அனுமன்,  ‘அப்படியே ஆகட்டும் தாயே’ என்று கண்ணீருக்கிடையில் விழிகளால் பேசுகிறான்.

பொதுவாக விழிகள் பேசும்போது வார்த்தைகளை விட வலிமை மிக்கதாக இருக்கும். அதே விழிகளின் வார்த்தை கண்ணீரில் கரைந்து வந்தால் அதன் வலிமைக்கு நிகர் எதுவுமில்லை.

சீதையும் அனுமனும் விழிகளில் இருந்து துளிகள் விழ ஒருவருக்கொருவர், தாயும் மகனுமாக, பேசிக்கொண்டிருந்தனர்.

“சரி தாயே, அப்படியே ஆகட்டும். ராமனுக்கு நீங்கள் ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா?” – அனுமன்

“மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம்
அருளுவாய்' என்று, அடியின் இறைஞ்சினான்”

என்ன சொல்வாள் ஜானகி! ராமனுக்கு என்ன சேதி சொல்ல வேண்டும்? ஒரே ஒரு செய்தி மட்டுமே இருக்கிறது அவளிடம்.

“சனகி இலங்கைச் சிறையில்
 தனது உயிரை தானே தின்று
மனதில்ராமாமிர்த சீதனம்
 செய்து கொண்டிருக்கிறாள்”

என்று மட்டும் சொல் ராமனிடம்.

அனுமன் விக்கித்துப் போகிறான்.

சீதை ஒரு பெருமூச்சு   விட்டு உறுதியாகச் சொல்கிறாள்.  “இன்னும் ஒரு மாதம் உயிரோடிருப்பேன். ராமன் வரவில்லையென்றால் என் உயிர் மாய்ப்பேன் நான். இதையும் சொல் ராமனிடம்.”

“இன்னும், ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னை நோக்கிப் பகர்ந்தது, நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை; இதனை மனக் கொள் நீ.”

அனுமன் இறுக்கமான மனத்துடன், தீர்க்கமாகச் சொல்கிறான்.  “இன்னும் எட்டுநாளையிலே பாரும், அம்மா ராவணன் பேரும் இவன் ஊரும்” என்று திடமாக நம்பி, சீதைக்கு நம்பிக்கை ஊட்டுகிறான், இன்னும் நடக்கப்போவதை அவள் முன்னே காட்டுகிறான்.

அதன் பின், சீதை, தன் கசங்கிய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூளாமணியைக் கொடுத்து  “எப்பொழுதெல்லாம் ராமனின் நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சூளாமணியைப் பார்த்து ஆறுதல் அடைவேன். நீ என்னைப் பார்த்ததற்கான அடையாளமாக இதைக் கொண்டு செல்” என்று சொல்கிறாள்.

அனுமன் அதை  “தொழுது வாங்கினன்”.

The stage is set for ராம – ராவணப் போர்.

The beautiful art (attached picture) is by Chitramitra.

(தொடர்கிறது)

$$$

Leave a comment