பாரதி போற்றும் தேசியக் கல்வி- 2

-சேக்கிழான்

2. எது கல்வி?

கல்வி என்பது என்ன? முதலில் இதனை நாம் வரையறை செய்தாக வேண்டும். அறியாமை இருள் அகற்றுவதே கல்வி என்பது பொதுவான விளக்கம்.

அறியாமையை அகற்றும் ஆசானை நாம்  ‘குரு’ என்கிறோம். குரு என்ற சொல்லுக்குப் பொருள் மனத்திருள் அகற்றுபவர் என்பதே. அதனால் தான் அவரை நாம் “ஆச்சாரிய தேவோ பவ” என்று கடவுளுக்கு நிகராகப் போற்றுகிறோம். “மாதா பிதா குரு தெய்வம்” என்ற படிநிலையில் தாய், தந்தையருக்கு அடுத்ததாக கல்வி பயிற்றுவிக்கும் ஆசானையே நாம் வணங்குகிறோம்.

அந்தக் கல்வி எத்தகையதாக இருக்க வேண்டும்? இதற்கு மகத்தான நமது நாட்டின் தவப்புதல்வர்களான திருவள்ளுவரும் சுவாமி விவேகானந்தரும் அற்புதமான வழி காட்டுகிறார்கள்.

உலக சமயப் பேரவையில் பாரதத்தின் பெருமையையும் ஹிந்து சமயத்தின் மகிமையையும் நிலைநாட்டிய இளம் துறவி சுவாமி  விவேகானந்தர். அவர் கூறுகிறார்:

மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை  வெளிப்படுத்துவது தான் கல்வி.

      (ஞான தீபம்- 9.240)

அதாவது, கல்வி என்பது வெளியிலிருந்து மூளைக்குள் திணிப்பதல்ல; மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் அறிவை மேம்படுத்துவது தான் கல்வி. அக்கல்வி, மனிதனின் முழுமையை மேலும் சிறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல்  உள்ளிருந்து  தொந்தரவு  தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை  ஜீரணம் செய்யக்கூடிய  கல்வியே  நாம்  வேண்டுவது.

     (ஞான தீபம்- 5.239)

1330 குறட்பாக்களில் உலகம் புகழும் நூலை அளித்த திருவள்ளுவர், கல்வி, கல்லாமை என்ற இரு அதிகாரங்களில், இருபது குறட்பாக்களில் கல்வியின் சிறப்பை விளக்குகிறார். கல்விக்கான அவரது நுண்மையான விளக்கம் இது:

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

    (திருக்குறள்- 391)

அதாவது, “கற்கத் தகுதியான நூல்களை சந்தேகம் அற்ற வகையில் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பின் அதற்குத் தகுந்தவாறு நடக்கவும் வேண்டும்” என்பது வள்ளுவர் வாய்மொழி. அது மட்டுமல்ல,  “எண்களும் (கணிதமும்) எழுத்துகளும் (மொழி) ஆகிய இரண்டுமே மக்களின் இரு கண்கள் போன்றவை” என்றும் திருவள்ளுவர் கூறுகிறார்:

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

    (திருக்குறள்- 392)

இக்கல்வி எத்தகையது தெரியுமா? ஒருவன் இப்பிறப்பில் கற்கும் கல்வியானது அவனது எழு பிறவிகளிலும் உதவும் தன்மையுடையது என்கிறார் செந்நாப்போதார்:

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

    (திருக்குறள்- 398)

திருவள்ளுவரையும் சுவாமி விவேகானந்தரையும் தனது ஆதர்ஷ நாயகர்களாகக் கருதியவர் மகாகவி பாரதி. இது, அவரது படைப்புகளில், சிந்தனைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பாரதியின் கல்விச் சிந்தனைகள் பலவும் வள்ளுவரும் விவேகானந்தரும் கூறியவையே. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட நாயகரான பாரதி, இக்கருத்துகளையே தனது பாணியில் முன்வைக்கிறார்.

இன்று நாம் உலக அளவில் மாபெரும் மக்கள்தொகையுடன் வளர்ந்திருக்கிருக்கிறோம். பல துறைகளிலும் வளர்ந்து உலகின் வல்லரசு வரிசையில் இடம் பிடித்திருக்கிறோம். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்னம் நமது நாட்டின் கல்வி, அடிமைப்பட்ட ஆட்சியில் சீரழிந்து கிடந்தது. எனவேதான், சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பலரும் கல்வியை வலியுறுத்தினர். பாரதியும் இதில் விதிவிலக்கல்ல.

“ஒரு நாட்டில் உள்ள எல்லாவிதமான குறைகளுக்கும் புத்திக் குறையே ஆதாரம். இது படிப்புக் குறைவினால் உண்டாவது. இந்தக் குறையை நீக்குவதில் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தல் மிகவும் அவஸரம்.”

      (குழந்தைகள்- சுதேசமித்திரன் 25.10.1917 கட்டுரை)

-என்கிறார் பாரதி.

“கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயிர் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும்” என்று கூறுவார் இத்தாலி விடுதலை வீரர் மாஜினி (1805- 1872).

நூற்றாண்டுக்கு முந்தைய இத்தாலி என்பது இன்றைய பல ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பழமையான ரோமப் பேரரசின் அங்கமாக அது இருந்தது. ஆனால் பிற்காலத்தில் அந்நாடு வீழ்ச்சி கண்டு அடிமைப்பட்டது. அடிமைப்பட்ட இத்தாலியின் பல பகுதிகளை விடுவிக்கவும், அவற்றில் மக்களாட்சியை நிறுவவும், ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியமைத்து குடியரசாக்கவும் தம் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து உழைத்தவர் ஜோசஃப் மாஜினி. “மாஜினியின் பிரதிக்கினை” என்று அவரது லட்சிய சபதத்தை கவிதையாகத் தீட்டிய மகாகவி பாரதி, விடுதலைக்கு கல்வியின் தேவையை உணராமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம்.

(தொடர்கிறது)

$$$

Leave a comment