-ச.சண்முகநாதன்

15. ஆரென்று ராகவனை எண்ணினீரம்மா?
“சீதா, லக்ஷ்மணா” என்ற அரற்றல் எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைக்கிறது. சீதை செவிகளில் அந்த அலறல் சத்தம் விழுந்தவுடன் அவளுக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது.
“பிடித்து நல்கு, இவ் உழை” என, பேதையேன் முடித்தனென், முதல் வாழ்வு
“மான் பிடித்துக்கொடு என்று என் வாழ்வை முடித்துவிட்டேனே, கடவுளே” என்று கலக்கம் சீதையின் மனதில்.
சீதை, தனக்கு காவல் இருந்த லக்ஷ்மணனைப் பார்த்து “ராமனுக்கு ஆபத்து. நீ போய் காப்பற்றாமல் இங்கேயே நிற்கிறாயே?” என்று பதட்டப் படவும், லக்ஷ்மணனோ “ஏன் இவ்வளவு பதட்டம்? ஆரென்று ராகவனை எண்ணினீரம்மா? இதை அறிந்து சொன்னீரோ, இல்லை அறியாமையில் உரைசெய்தீரோ? எட்டுத்திசையிலும் இருந்து மன்னர்கள் படையெடுத்து வந்தாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ, அவர்களை வீழ்த்த? ராமனுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த உலகம் நிலைகொள்ளாது. ராமன்னா யாருன்னு தெரியுமா? என்ன நினச்சு இப்படி ராமனுக்கு ஆபத்து என்று கவலைகொள்கிறீர்கள்?” என்கிறான்.
“கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்?”
“ராமன் ஒரு அரக்கனிடம் தோற்று நம்மை துணைக்கழைப்பானா? நீங்கள் இப்படி சொன்னது, ராமனுக்கு இழுக்கைத் தரும் ஒரு வசைச்சொல் அல்லவா! வேடிக்கை! சிவதனுசை எப்படி இற்றுப்போகச் செய்தான் என்று பார்த்தீர்கள் தானே? பின்னர் ஏன் இப்படி நினைக்கத் தோன்றுகிறது?”
“நம் ராமன் எபோழுதும் தோற்க மாட்டான். இது தோற்றுப்போன அந்த அரக்கனின் குரல். கொஞ்சம் கவலை விடுத்தது அமைதியாக இருக்க வேண்டுகிறேன்” என்று லக்ஷ்மணன் ராகவன் பெருமை பேசுகிறான்.
“...தொலைந்து சோர்கின்ற அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான்; அதற்கு இரக்கம் உற்று இரங்கலிர்; இருத்திர் ஈண்டு” என்றான்.
சீதை மனம் இருப்புகொள்ளவில்லை. ராமனின் குரலில் அலறல். எப்படி அவளால் அமைதியாக இருக்க முடியும்? “அவர் குரல் கேட்டும் நீ காப்பாற்றப் போகவில்லை என்றால் நான் தீயில் விழுவேன்” என்று படபடக்கப் பேசுகிறாள்.
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு
லக்ஷ்மணன் துணுக்குற்று. “அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். நானே செல்கிறேன். விதியை வெல்ல யாரால் முடியும்?” என்று சீதையிடம் சொல்லிவிட்டு, “இங்கே இருந்தால் சீதை தீயில் விழுவார். நான் நீங்கினால் கேடு வரும். என்ன செய்ய நான்?” என்று புலம்பிக்கொண்டே சீதையை விட்டு நீங்குகிறான்.
நடந்ததை எல்லாம் ஒரு ஜோடிக்கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. அறமிழந்த ராவணனின் அரக்கக்கண்கள் அவை. ராவணனின் திட்டம் சரியாகச் செயல்படுகிறது. காற்று அவன் பக்கம் வீசுகிறது. மனதுக்குள் வெற்றியை பக்கத்தில் பார்த்த மகிழ்ச்சி அவன் மனதுக்குள். அவனுக்கு இப்பொழுது சீதையைக் கவர்வது சுலபம். மனதுக்குள் அவனுடைய வஞ்சம் முற்றுகிறது.
இளையவன் ஏகலும், இறவு பார்க்கின்ற வளை எயிற்று இராவணன், வஞ்சம் முற்றுவான்
மீண்டும் ஒரு வஞ்சம் செய்கிறான் ராவணன். ஒரு உலர்ந்த மேனி கொண்ட வயதான முனிவர் வேடம் தரித்து சீதை இருக்கும் பன்னசாலையின் வாயில் வருகிறான். மனதில் காமம் சிறகடிக்க, உதட்டில் சாமவேதம் படித்துக்கொண்டே “யாரவது இருக்கீங்களா உள்ளே?” என்று குரல் கொடுக்கிறான்.
“யாவர் இவ் இருக்கையுள் இருந்துளீர்?”
சீதை வெளியே வருகிறாள்.
ராவணன் “பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை, கற்பினுக்கு அரசியை, கண்ணின் நோக்கினான்.”
ராவணன் முதன்முதலில் சீதையைப் பார்க்கிறான். ராவணனை அவன் அழிவு ஆசையுடன் நோக்குகிறது.
$$$
16. கபட சந்நியாசி
”நீ யார்?” என்று பரஸ்பரம் குசலம் விசாரித்த பின்னர், சீதைக்கும் ராவணனுக்கும் ஒரு சிறிய வாக்குவாதம்.
வாக்குவாதத்தில் இறுதியில், கோபப்பட்டு, ராவணன் தன் சுயரூபம் காட்ட, சீதை பயந்து போய் நிற்கிறாள்.
ராவணன் தன் ஆசையை சீதையிடம் சொல்கிறான்: “உன்னை என் தலைமீது வைத்துத் தாங்குவேன். அழகான மாந்தர்கள் உனக்கு அடிமை செய்யும் வாழ்வைத் தருவேன். ஈரேழுலகாளும் ராணி நீ. என்னுடன் வா.”
தலைமிசை மகுடம் என்ன, தனித்தனி இனிது தாங்கி, அலகு இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய, உலகம் ஈர்-ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி
ராவணன் சொன்னது கேட்டு அளவில்லா கோபம் கொள்கிறாள் சீதை. “தேவர்களுக்காகப் படைக்கப்பட்ட தேவருணவை நாய்க்கு இடுவதா? சீச்சீ! உனக்கு உயிர்மேல் ஆசையிருந்தால் ஓடி விடு”.
“புனிதர் ஈயும் அவியை நாய் வேட்டதென்ன, என் சொனாய்?”
அதுகேட்ட ராவணன், தன் அரக்க குணத்தை வெளிப்படுத்தி, பன்னசாலையைப் பெயர்த்து சீதையைக் கவர்ந்து செல்கிறான். சீதை செய்வதறியாது திகைத்து உயிர் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நா குழறுகிறது.
கண்ணில் படும் உயிரற்ற /உயிருள்ள எல்லாவற்றிடமும் “மலையே! மரனே! மயிலே! குயிலே! கலையே! பிணையே! களிறே! பிடியே! என் ராமனிடம் என் நிலை சொல்லுங்கள்” என்று ஒரு வேண்டுகோள் வைக்கிறாள்.
இதற்குள் ஜடாயு இருக்கும் சேர்ந்துவிட்டான் ராவணன். காட்சியைப் பார்த்த ஜடாயு “எங்கு அடா போவது? நில் நில்” என்று பின்னால் வந்தபடியே,
“பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின் மாதா அனையாளை மனக்கொடு, நீ யாது ஆக நினைத்தனை?”
-என்று எச்சரிக்கை செய்கிறான்.
ஜடாயு, எவ்வளவோ முயற்சித்து, இறுதியில், கடுமையான சண்டைக்குப் பிறகு, ராவணனின் வாளால் வீழ்த்தப்படுகிறான். சீதை, ஜடாயு நிலைக்கு இறங்கி “நல்லவன் தோற்பதே? நரகன் வெல்வதே? வெல்வதும் பாவமோ? வேதம் பொய்க்குமோ? இல்லையோ அறம்?” என்று கண்ணீர் வடிக்கிறாள்.
அங்கே ராமனைத் தேடிச் சென்ற லக்ஷ்மணன் ராமனை உயிரோடு கண்டு, ஒருவருக்கொருவர் நடந்ததைப் பரிமாறிக்கொண்டு, பன்னசாலைக்கு விரைகின்றனர். அங்கே சீதையை, தன் ஆருயிரைக் காணாமல் தலை சுற்றுகிறது ராமனுக்கு.
ராமனுக்கு தலை சுற்றியதால்,
மண் சுழன்றது; மால் வரை சுழன்றது; மதியோர் எண் சுழன்றது; சுழன்ற அவ் எறி கடல் ஏழும்; விண் சுழன்றது; வேதமும் சுழன்றது; விரிஞ்சன் கண் சுழன்றது; சுழன்றது, கதிரொடு மதியும்
பின்னர் இருவரும் சுதாரித்து என்ன செய்வது என்று ஆலோசிக்கின்றனர். லக்ஷ்மணனின் ஆலோசனையின்படி தேரின் தடம் சென்ற வழி செல்ல runway போல சிறிது தூரம் சென்றவுடன் தேரின் தடம் ஏதும் இல்லை. Rama was heartbroken. “இருந்த ஒரே தடமும் மறைந்துவிட்டதே. இனி என்ன செய்வது லக்ஷ்மணா” என்று கண்ணீர் உகுக்கிறான்.
புண்ணினூடு உறு வேல் என, மனம் மிகப் புழுங்கி எண்ணி, ‘நாம் இனிச் செய்வது என்? இளவலே!’ என்றான்
தேர் தெற்கு நோக்கிப் போயிருக்கிறது எனவே நாமும் தெற்குத் திசையில் பயணம் செய்வோம் என்று விரைகின்றனர். வழியெங்கும் கிடக்கும் தடயங்கள் ஜடாயு சண்டையிட்டு விழுந்து கிடக்கும் இடம் நோக்கி இழுத்துச் செல்கிறது.
ஜடாயு விழுந்து கிடப்பதைப் பார்த்த ராமன், கண்ணீர் வடிக்கிறான். அயோத்தியில் என் தந்தை இறக்க நானே காரணமானேன். இங்கு என் தந்தை போன்ற நீயும் இறக்க நானே காரணமானேன்.
எந்தாயே! எற்காக நீயும் இறந்தனையால்; அந்தோ! வினையேன் அருங் கூற்றம் ஆனேனே
போதும் இந்தப்பிறவி. “வேண்டேன், இம் மா மாயப் புன் பிறவி வேண்டேனே” என்று புலம்பும் வேளையில் ஜடாயு கண்விழித்து ஆறுதல் கூறி “வடுக் கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும் எடுத்தனன். நான் தடுத்து நிறுத்தியபோது என்னை இங்கனம் செய்துவிட்டான்” என்று சொல்லி சில ஆறுதலான வார்த்தையையும் சொல்லிவிட்டு பரமபதம் அடைகிறான்.
ராமன், ஜடாயுவுக்கு அந்திமக்கிரியை செய்துவிட்டு, “தந்தையை இழந்தேன். இப்பொழுது சீதையும் பிரிந்து விட்டாள்” என்று வருந்தி, நெஞ்சில் கோபக்கனலுடன கையில் வில்லுடனும் மனதில் அரக்கர் கூட்டத்தை அழிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் தெற்கு நோக்கி, ராவண சாம்ராஜ்யம் முடியப்போகும் என்பதற்கான முதல் அடியை ராமன் எடுத்து வைக்கிறான்.
(தொடர்கிறது)
$$$