-ச.சண்முகநாதன்

13. வில் ஒக்கும் நுதல் என்றாலும்
கரண் கதை முடிந்தவுடன் நேராக ராவணனிடம் செல்கிறாள் சூர்ப்பணகை. அவன் காலில் விழுந்து அழுகிறாள், “என் நிலையைப் பார்” என்று.
"மன்னன் பொன் திணி கருங் கழல் விழுந்தனள், புரண்டாள்.”
ராவணன் “இது யாவர் செயல்?” என்றான்
“உவமை இல்லா மானிடர்; தடிந்தனர்கள் வாள் உருவி” என்றாள் சூர்ப்பணகை.
அது கேட்டு ராவணன் உட்பட அரசவையில் இருந்த அனைவரும், “ஒரு மானிடன் உன்னை சேதப்படுத்தினானா? யாரப்பா அது?” என்று வயிறு பிடித்து சிரித்தனர், இதுவே உயிரு போகக் காரணம் என்று தெரியாமல்.
“சரி விவரமாகக் கூறு. உன் மூக்கை அவர்கள் அரிய கரணம் என்ன?”
இப்பொழுதுதான் ராமனிடம் “ன் அண்ணன் முதலியோரை வென்று கொல்வதற்கு வழி கூறுவேன்” என்று சொன்னவள், இங்கே அப்படியே plateஐத் திருப்புகிறாள்.
என் குற்றம் என்னவென்றால், நான் உனக்கு நல்லது செய்ய வேண்டி, அழகி சீதையை உனக்காக கொண்டுவர நினைத்துதான்”- சூர்ப்பணகை.
என்ன ஒரு வில்லத்தனம்!
ராவணன் ஆசையில் புருவம் உயர்த்தி “யாரவள்?” என்று அடிக்குரலில் கேட்க சூர்ப்பணகை சீதையின் அழகை வர்ணிக்கிறான்.
மஞ்சு ஒக்கும் அளக ஓதி;
மழை ஒக்கும் வடிந்த கூந்தல்;
பஞ்சு ஒக்கும் அடிகள்;
செய்ய பவளத்தின் விரல்கள்; ஐய!
அம் சொற்கள் அமுதில்
அள்ளிக் கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும்,
கடலினும் பெரிய கண்கள்
(ஆஹா! மனப் பாடச்செய்யுளில் வைக்க வேண்டிய பாடல். இந்தப் பாடலைப் படிக்கும் போது கம்பராமாயணத்தில் கம்பன் பெரிதாகத் தெரிகிறான்)
மேலும்
வில் ஒக்கும் நுதல் என்றாலும்,
வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும்,
பவளத்தை இதழ் என்றாலும்"
என்று சீதையின் அழகை ராவணனின் ஆசையைத் தூண்ட தூபம் போடுகிறாள்.
( ‘வில் ஒக்கும் நுதல் என்றாலும்’ என்ற பாடலை விட ஒரு சிறந்த ‘வர்ணனைப் பாடல்’ இருக்க முடியுமா!).
இப்பேர்ப்பட்ட அழகியை உனக்காக எடுத்து வர முயன்ற பொழுதுதான் நான் அசிங்கப்பட்டேன் என்று நாடகமாட, மெதுவாக அவளுடைய திட்டம் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
உடுப்பதுவும் உண்பதுவும் மறந்தான் சிந்தை உலைமெழுகா னான் ராவணன்.
தம்பி கரண் ஆவி போனதையும் தங்கை நாசி இழந்ததையும் மறந்தான். சீதையைப் பற்றிய வர்ணனனை மட்டும் அவன் அழிவுக்கு அவனை கைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தது.
அவன் மனதுக்குள் மாரீசனை வைத்து ஒரு நாடகம் போடலாம் என்று ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.
$$$
14. வஞ்சக நெஞ்சினன்
சூர்ப்பணகை ராமன் மீதும், ராவணன் சீதை மீதும் ஆசை வளர்த்தனர். சூர்ப்பணகை ராவணனின் எண்ணத்துக்கு தீ ஊற்றுகிறாள். “நீ உலகத்துக்கே அரசன். உனக்கென்ன குறை! போ, அந்த சீதையை தூக்கி வா” என்று நெஞ்சில் இருந்த நஞ்சைக் கக்குகிறாள்.
‘கோமான்! உலகுக்கு ஒரு நீ, குறைகின்றது என்னே? பூ மாண் குழலாள் தனை வவ்வுதி, போதி' என்றாள்
இதற்கு, மாரீசன் உதவி வேண்டும் என்று மாரீசன் இருக்குமிடம் சென்று உதவி கோருகிறான். “மாரீசனே, இரண்டு மானிடர் என் தங்கை மூக்கரிந்து, கரணையும் கொன்று விட்டனர். அவருடன் போர் புரிவது என் தகுதிக்குக் குறைவு. எனவே சீதையைத் தூக்கி வந்து அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு உன் துணை வேண்டும்” என்று தீமொழி பேசுகிறான்.
‘...உடன் வாழும் துப்பு அழி செவ் வாய் வஞ்சியை வௌவ, துணை கொண்டிட்டு, இப் பழி நின்னால் தீரிய வந்தேன்’ என்றான்.
மாரீசன் “சீச்சீ“ ” என, தன் மெய்ச் செவி பொத்தி, “என்ன இது கேவலமான திட்டம்?” என்று நல்ல அறிவுரை கூறுகிறான். மேலும் “ஆரென்று நினைத்தாய் ராமனை! கரண் அப்பேர்ப்பட்ட வீரன். அவனையே சொல்லிச் சொல்லி அடித்தவன் ராமன். உன் எண்ணமும் திட்டமும் ராமனுக்கு தெரிந்தால் உன் மரபையே ஒழித்துக் கட்டிவிடுவான். ஒழுங்கா பிழைக்கிற வழியைப் பார். இதெல்லாம் ராமனிடம் வைத்துக்கொள்ளாதே” என்று நற்சிந்தனை சொல்கிறான்.
ராவணன் எந்நாளும் நல்ல சிந்தனைகளை உள்ளிழுக்க மாட்டானே! இதையா கேட்பான்? “நான் சொன்னதைக் கேட்கவில்லையென்றால் உன்னைக் கொன்று விடுவேன்” என்று மிரட்டுகிறான் ராவணன்.
“மறுத்தனை எனப் பெறினும், நின்னை வடி வாளால் ஒறுத்து, மனம் உற்றது முடிப்பென்”
மாரீசனுக்கு, ஒத்துக் கொள்வதை தவிர, வேறு வழி இல்லை.
“என்ன செய்ய வேண்டும்?” – மாரீசன்.
“மாயையால் வஞ்சித்து அவளைக் கடத்த வேண்டும்” – ராவணன்.
வேண்டாவெறுப்பாக மாரீசன் ஒத்துக்கொண்டு
“....ஓர் பொன் மான் உருவம் கொடு போயினனால்- நன் மான் அனையாள்தனை நாடுறுவான்”
ராமன் இருக்குமிடம் வந்து சீதை முன் பொன் மானாகத் தோன்றுகிறான் மாரீசன். மானைக் கண்ணால் கண்டால் மனத்தால் விரும்பாதவர் யார்? அதுவும் இது கண்ணைக் கவரும் பொன் மான். இதுவரை ராமனிடம் எதுவும் கேட்காத சீதை அந்த மானைப் பிடித்துத் தருமாறு வேண்டுகிறாள்.
சீதை முதன்முதலில் கேட்டதாலோ என்னவோ, ராமன் சீதை சொல்லுக்கு மறுசொல் தெரிவிக்கவில்லை.
லக்ஷ்மணனோ “இப்படியெல்லாம் ஒரு உயிரினம் இருக்கவே முடியாது. இது மாய மான்” என்று சொல்ல ராமனோ “come on, there are thousands of species in this world, இது ஒரு அரியவகை மான் என்று தோன்றுகிறது” என்று மாயையின் பால் ஈர்க்கப்படுகிறான்.
லக்ஷ்மணன் எவ்வளவு சொல்லியும் சீதை “இந்த மானை நான் அயோத்திக்கு எடுத்துச் செல்வேன் எனக்கு நீயே பிடித்து தர வேணும்” என்று ராமனிடம் வேண்ட, ராமன் மானின் பின் செல்ல, லக்ஷ்மணன் சீதைக்கு காவல் இருக்கிறான்.
மானின் செயல் எதுவும் சரியில்லை என்று ராமனுக்கு வெகுதூரம் வந்த பின் புரியத் தொடங்கியது. தான் ஒரு மாய வலையில் சிக்கி இருக்கிறோமோ என்ற ஐயம் எழுகிறது. ராமன் ஐயமுற்றான் என்றறிந்த மாரீசன், இனி நம்மைப் பிடிக்க வர மாட்டன் , அம்பு எய்து விடுவான் என்று நினைத்த அதேசமயம் ராமனின் அம்பு மாரீசனை வீழ்த்தியது. “சீதா, லக்ஷ்மணா” என்று பொய்யாக அலறி கீழே விழுகிறான் மாரீசன்.
ராவணனின் வஞ்சம் செயல்படத் தொடங்குகிறது.
(தொடர்கிறது)
$$$