ஆடிப் பெருக்கும் அன்னை வழிபாடும்!

-திருப்பூர் கிருஷ்ணன்

பிறந்த தேதியை வைத்துப் பிறந்தநாள் கொண்டாடுவது ஆங்கில மரபு. தமிழ் மரபில் பிறந்த நாளை, நட்சத்திரத்தை மையப்படுத்தித் தான் கொண்டாடுவோம். 

  நம் பண்டிகைகளும் கூட நட்சத்திரத்தை மையப்படுத்தியே கொண்டாடப் படுகின்றன. ஆவணி அவிட்டம், கிருத்திகை, மாசி மகம், ஆடிப் பூரம் என்றிப்படி எல்லாம் நட்சத்திரப் பின்னணியைக் கொண்டவைதான். 

  ஆடிப் பெருக்கு மட்டும் விதிவிலக்கு. ஆடிமாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. அதனால் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப் பதினெட்டு என்றெல்லாம் இந்தப் பண்டிகைக்குச் சிறப்புப் பெயர்களும் உண்டு. 

 பதினெட்டு என்ற எண்ணுக்கு நம் ஆன்மிகத்தில் தனிச் சிறப்பு உண்டு. பதினெட்டுப் படியேறித் தான் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியும். காவிரிப் படித்துறையில் பல இடங்களில் பதினெட்டுப் படிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. 

***

  ஆடிப் பதினெட்டு நமக்குத் தண்ணீர் தரும் நதியை வணங்கும் வழிபாடு. நதியை ஒரு பெண்ணாக நினைத்துத் தொழுகிறோம். காவிரி நதி ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு வணங்கப் படுகிறாள். 

  நதிகள் பெண்ணென்றும், மலைகள் ஆணென்றும் கருதும் மரபு இருக்கிறது. இமயமலையை இமவான் என ஆணாகவே கூறுகிறோம். அதில் உற்பத்தியாகும் கங்கை நதியை கங்கா மாதா எனப் பெண்ணாகக் கும்பிடுகிறோம். 

  ஆண் நிலையாகத் தன் வீட்டிலேயே வசிப்பவன். எனவே நிலையாக நிற்கும் மலைகள் ஆண் எனப்பட்டன. 

 பெண் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு ஓரிடம் விட்டு இன்னோரிடம் வருபவள். எனவே நதிகள் பெண்ணெனக் கருதப்பட்டன. 

***

 ஆடிப் பதினெட்டு அன்று ஆற்றங்கரைகளில் உள்ள படித்துறைகளில் பெண்கள் வாழை இலையை விரித்து வைத்து அதன்மேல் அகல்விளக்கை ஏற்றிவைத்து நதிக்கு பூஜை நிகழ்த்துவார்கள். வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி ஆற்று நீரில் மிதக்க விடுவதும் உண்டு. 

  தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்றெல்லாம், கலவை சாதங்களை நிவேதனம் செய்து உண்பது வழக்கம். 

ஆடிப் பதினெட்டு அன்று தாலி மாற்றிக் கொள்வதும் வழக்கத்தில் உண்டு. புதிய தாலியைக் கட்டிக்கொண்டு அதன்பின் பழைய தாலியை அருகிலுள்ள மரங்களில் கட்டிவிடுவார்கள்.  

  கன்னிப் பெண்களும் மஞ்சள் கயிற்றை ஆடிப் பதினெட்டு அன்று கட்டிக்கொண்டு  நல்ல கணவன் அமைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். 

  ஆடிப் பதினெட்டன்று சப்த கன்னிகைகளை வழிபடுவது புண்ணியம் தரும். `பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி` ஆகிய தேவதைகள் சப்த கன்னிகளாகப் போற்றப் படுகிறார்கள். பல கோயில்களில் சப்த கன்னிகைகளுக்கு சன்னிதிகள் இருக்கின்றன.

***

  ஆடிப் பதினெட்டு விழா தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கொண்டாடப் பட்டாலும், காவிரி ஆற்றின் கரைகளில் உள்ள ஊர்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

  இவ்விழா அன்று, திருச்சி திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூடி அம்மனை வழிபடுகிறார்கள்.   

 திருவரங்கத்தில் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்குச் சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது இந்த நாளில்தான். திருவரங்க ஆலயத்திலிருந்து உற்சவ மூர்த்தி தங்கப் பல்லக்கில் உலா வந்து அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளுவார். 

  பெருமாளின் சீதனமாக மங்கலப் பொருட்கள் காவிரியாற்றில் விடப்படும். காவிரித் தாயாருக்குப் பெருமாள் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண பக்தர்கள் திரளாகக் கூடுவது வழக்கம். 

***

  நாமக்கல் அருகே உள்ள ஊர் மோகனூர். அசலதீபேஸ்வரர் என்பது இங்குள்ள கோயிலின் இறைவன் திருநாமம். காசிக்கு நிகரான திருத்தலம் என்ற பெருமை உடைய தலம். இங்கு ஆடிப்பெருக்கு நன்னாளில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் காவிரி நீரால் அபிஷேகம் செய்வார்கள்.  

  கடலூர் மாவட்டத்தில் பனையத்தூர் கிராமத்தில் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் முருகப் பெருமான் திருமுகத்தில் ஆடிப் பெருக்கிற்கு ஒருவாரம் முன்பும் ஒருவாரம் பின்புமாக சூரிய ஒளி விழுகிறது. 

  சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் உள்ள கொல்லங்குடி கிராமத்தில் `வெட்டுடையார் காளியம்மன் கோயில்` உள்ளது. அங்கு ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னிதி முழுவதும் பூக்களால் நிரப்பி பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. 

  இங்கு நாள்தோறும் காலையில் அய்யனார் மீதும் மாலையில் காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழுகிறது. 

***

  சங்க இலக்கியப் பாடல்களில் காவிரியை மையமாக வைத்து ஓர் அழகிய காதல் கதை சொல்லப்படுகிறது. கரிகாலன் மகள் ஆதிமந்தி, ஆட்டனத்தி என்ற நடனக் கலைஞனைக் காதலித்தாள். அவன் காவிரி என்ற பெயருடைய பெண்ணோடு நதியில் நீச்சல் நடனம் ஆடினான். 

  அவன்மேல் காதல்கொண்ட இன்னொரு பெண்ணான அந்தக் காவிரி, தன் கூந்தலில் அவனை மறைத்து நதியோடு இட்டுச் சென்றாள். ஆனால் பெண் காவிரியை நதிக் காவிரி இழுத்துச் சென்றுவிட்டது. 

  ஆட்டனத்தி கரையில் ஒதுங்க அவனைக் காப்பாற்றிய மருதி என்ற மீனவப் பெண் அவனோடு வாழ்ந்துவந்தாள். தன் காதலன் ஆட்டனத்தி இறந்திருக்க மாட்டான் என்று நம்பிய ஆதிமந்தி நதிக் கரையோரம் நெடுநாட்கள் அவனைத் தேடி நடந்தாள். இறுதியில் அவனைக் கண்டுபிடித்தாள். 

  அவளின் தூய காதலை உணர்ந்த மருதி அவளிடம் ஆட்டனத்தியை ஒப்படைத்துவிட்டுக் கடலில் மூழ்கிக் காலமானாள். `ஆட்டனத்தி ஆதிமந்தி` என்ற தலைப்பிலேயே கண்ணதாசன் இந்தக் கதையைக் குறுங்காப்பியமாக எழுதியுள்ளார். 

 சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவி ஊடல் நிகழ்வது காவிரிக் கரையில்தான். அதன் பின்தான் கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியைத் தேடி வருகிறான்.

***

  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆடிப் பதினெட்டுப் பண்டிகை குறித்து அழகிய பாடலை இயற்றியுள்ளார். அந்தப் பாடல் இது…

காவிரியைப் பூசிப்போம்!

ஆடிப் பதினெட்டுப் பண்டிகைக் காவேரி 
     ஆற்றினைப் பூசித்துப் போற்றிடுவோம்!
 கூடிப் பணிந்து குலதெய்வம் காத்திடக்
   கும்பிடு வோமினித் துன்பமில்லை. 

வெள்ளப் பெருக்கினைப் பார்க்கையிலும் - அதன்
  வேகத்தின் சத்தத்தைக் கேட்கையிலும் 
உள்ளம் திகைத்தொரு உண்மை அறிவினை 
   ஊட்டுது தெய்வத்தைக் காட்டுதுபார். 

ஆனை சிறுத்தைகள் அஞ்சிப் பதுங்கிட 
   ஆட்டையும் மாட்டையும் அடித்துக் கொண்டு 
சேனையிலும் கடு வேகத்துடன் வரும் 
   சீக்கிரம் யாருடை ஆக்கினையோ!

மேட்டில் அணையென்று போட்ட சுவர்களில் 
  மெள்ள மெள்ள அதன் கல்லசைக்கும் 
ஓட்டத்துடன் வரும் ஊட்டத்தைக் கண்டு நம் 
  உள்ளத்தில் எண்ணங்கள் துள்ளுதுபார். 

நேற்று நடந்திட்ட மக்களின் பாதங்கள் 
  நீற்று நெருப்பெழக் கொப்பளித்த 
ஆற்றிலே இன்றைக்கு அத்தனைத் தண்ணீர் 
   அப்படி வந்ததும் எப்படியோ. 

ஆனதினாலந்த வானத்திலே ஒரு 
   அற்புத சக்தி இருக்குமென்றே 
வானத்தையே தெய்வம் வாழும் இடமென்று 
   வையகம் சொல்வதும் பொய்யலவே.  

  ***

ஆற்றில் புதுப்புனல் பொங்கிவரும் இந்நாளில் விதை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். 

   எனவே இந்த நன்னாளில் பூஜை செய்து உழவுத் தொழிலைத் தொடங்குவார்கள். உழவர்கள் தங்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு இன்றுதான் விதையிடுவார்கள். `ஆடிப்பட்டம் தேடி விதை` என்ற பழமொழியும் உண்டு. 

  ஆடிப் பதினெட்டை பெண்களின் விழாவாகவும் விவசாயிகளின் விழாவாகவும் கருதலாம். 

  பெண்கள் ஆடிப் பதினெட்டன்று தாலிமாற்றிக் கொண்டு நதிதேவியைப் பிரார்த்தனை செய்வது கணவரின் நலனுக்காகவே. 

  தாய்க்குலமும் உழவர் குலமும் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் எதிர்காலம் அமைய வேண்டும் என நாம் அனைவருமே பிரார்த்திப்போம்.   

  • நன்றி: மாலை மலர்.
  • எழுத்தாளரின் முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

$$$

Leave a comment