-பேரா. இளங்கோ ராமானுஜம்
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கிளைக்குத் தாவுவது மனத்தின் இயல்பு. இதனை துரியோதனன் பாத்திரப் படைப்பு விளக்கம் மூலமாக காட்டுகிறார் பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம்....

சஞ்சயன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். “இந்த உலகில் மனிதர்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்கள்? ஏன் அவர்கள் மனது குரங்கு மாதிரி மாறிக்கொண்டே இருக்கிறது? இந்த அரசன் திருதராஷ்டிரனையும், அவன் மகன் துரியோதனையும் பார்! ஒரே மனநிலை அவர்களிடம் இல்லையே! ஒரு கணம் நல்லவனாக… அடுத்த கணம் பொல்லாதவனாக… மாறிக்கொண்டே இருக்கிறார்கள்! கல் ஒன்று காலங்காலமாக கரை புரண்டு ஓடும் ஆற்றில் மூழ்கி இருந்தாலும் அதை எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இருக்காது! அதுபோல, சுயநலமும் பேராசையும் நிறைந்த திருதராஷ்டிரன், துரியோதனன் போன்ற மனிதர்களின் மனதில் நெறிமுறைகளும், ஒழுக்கமும், தர்மமும் இருக்காது போலும்! சரி… பாரதப்போர் குருஷேத்திரத்தில் தொடங்கிவிட்டது. அங்கு நடப்பதை என் ஞானக் கண்களால் பார்த்து இந்த அரசனுக்கு நான் சொல்ல வேண்டும்… இது மந்திரியாகிய என் கடமை அல்லவா!” இப்படி சஞ்சயனின் மனதில் உணர்வுகள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.
சற்று நேரம் சஞ்சயன் திருதராஷ்டிரனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அரசனின் மனதில் ஓடிக்கொண்டிருக்க கூடிய எண்ணங்களை அவனால் கிரஹிக்க முடிந்தது. அவன் மீது கொஞ்சம் பரிதாபமும் வந்தது!
‘ஐயோ நெறி தவறி விட்டானே இந்த அரசன் திருதராஷ்டிரன்! பிள்ளைப் பாசம் அவன் அகவுலகிலும் அதர்மம் என்னும் இருளை நிறைத்திருக்கிறது! வெளி உலகையும் இவனால் பார்க்க முடியாது. வெளி உலகிலும் வெறுமை… இருள். அக உலகிலும் அதே இருள்.’
திருதராஷ்டிரன் சஞ்சயனைப் பார்த்து ஆர்வத்தோடு வினவினான். “மந்திரி சஞ்சயா! நீ மனதையும், புலன்களையும் வென்றவன். சத்தியவான். நேர்மையே வடிவானவன். உனக்குத்தான் வியாச மகரிஷி போர் நடக்கும் குருஷேத்திரத்தில் நடப்பதை ஞானக்கண்ணில் பார்த்து, அங்கே நிகழ்வதைத் துல்லியமாகச் சொல்லும் திறனைக் கொடுத்து இருக்கிறாரே! கொஞ்சம் உன் ஞானக் கண்களால் பார்த்து அங்கே நடப்பதைக் கூறுவாயாக சஞ்சயா…. போரை விரும்பும் என் புதல்வர்களும் இந்தப் பாண்டுவின் பிள்ளைகளும் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்?”
“போரை விரும்பும் என் புதல்வர்கள்” என்று கூறும்போதே பாண்டவர்கள் அமைதியைத் தான் விரும்புகின்றார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டான். இந்த கணத்தில் அவன் மனது நியாயத்தின் பக்கமே இருந்தது. மனச்சாட்சியின் குரல் ஆங்கே ஓங்கி ஒலித்தது. ஆனால் பார்வையற்ற அரசனால் இதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை… பரிதாபம்!
தன் பிள்ளைகளின் அதர்மப் போக்கை அவன் கணித்துச் சொல்லும்போது, நியாயமான தந்தையாகவே இருந்தான். ஆனால் அந்த நல்லுணர்வு அவன் மனத்தில் நெடுநேரம் நீடிக்கவில்லை. மனம் ஒரு குரங்கு தானே!
சலனப் புத்தி உடையது குரங்கு! அதை பேய் பிடித்துவிட்டால் சொல்ல வேண்டியதே இல்லை! திருதராஷ்டிரன் மனது பேய் பிடித்த குரங்கு போல குதியாட்டம் போட ஆரம்பித்து விட்டது. தர்மத்தை மறந்தான், துஷ்டனை மகனாகப் பெற்றவன். ஆனால் அவன் மீது அளவற்ற பாசம்… பகுத்தாயும் தன்மையைக் கூட அவன் இழந்து விட்டான். தன் மகன் துரியோதனன் மீது எந்தப் பழியும் வந்துவிடக் கூடாது. அவனை உலகம் உத்தமன் என அழைக்க வேண்டும். ராஜ்ஜியம் முழுதும் அவன் மகன் துரியோதனனுக்கே வந்துவிட வேண்டும் என திருதராஷ்டிரனின் கள்ள மனம் துள்ளியது.
சஞ்சல மனத்தோடு மந்திரி சஞ்சயனைப் பார்த்தான் திருதராஷ்டிரன். “சஞ்சையா என் மனதில் ஒரு ஆசை… அது விபரீத ஆசையாகக் கூட இருக்கலாம். உலகம் கூட அதை பார்த்து எள்ளி நகையாடலாம்! ஆனால் எனக்கு கவலை இல்லை அது பற்றி…”
“அது என்ன விபரீத ஆசை, அரசே?”
“குருஷேத்திரம் புண்ணிய பூமி தானே?”
“ஆமாம் அரசே! எத்தனையோ முனிவர்கள் அங்கே தவம் செய்து இருக்கிறார்கள் அதற்கு என்ன?”
“எவ்வளவு யாகங்கள் இங்கே நடந்திருக்க வேண்டும்! எத்தனை சீலம் மிகு ஞானியர் தவம் செய்திருக்க வேண்டும்! குருஷேத்திரம் முழுவதும் புனிதம் நிறைந்து இருக்கிறது அல்லவா? அந்த புனித உணர்வுகள் பாண்டவர்களில் மூத்தவனான தர்மராஜாவின் உள்ளத்தில் நிறைந்துவிட வேண்டும். இதுவே என் ஆசை. அவன் போரைத் துறந்து நாடு முழுவதையும் துரியோதனன் கையில் கொடுத்துவிட்டு மீண்டும் கானகத்திற்கே செல்ல வேண்டும்! பின்பு இந்த நாட்டை பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டவன் எனும் அவப்பெயர் துரியோதனனுக்கு வந்து விடாதல்லவா சஞ்சயா?
என் மகன் உத்தமன் ஆகி விடுவான். அதன் பின் எளிதாக தேசம் முழுவதும் அவன் கையில். எதிரியான பாண்டவர்கள் கானகத்தில்! இது நடக்குமா சஞ்சயா?” என்று சற்று அச்சத்தோடு வினவினான்.
‘விவேகம் இழந்தவன் மனதில் அச்சம் புகுந்துவிடும்’ என்று சஞ்சயன் மனது அசைபோட்டது.
ஞானக்கண்ணால் சஞ்சயன் இப்போது போர்க்களமாக மாறி இருக்கும் குருஷேத்திர புண்ணிய பூமியை உன்னிப்பாகப் பார்த்தான். இன்னும் சற்று நேரத்தில் இந்த புண்ணிய பூமி ரணகள பூமியாக மாறப் போகிறது என்று மனது சொன்னது. அவன் கண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் துரியோதனனைப் பார்த்தன. மரண பயத்தில் துரியோதனன் தொடை நடுங்குவதை அவன் கண்கள் காணத் தவறவில்லை.
அச்சம் கொண்ட குழந்தை தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்குவதைப் போல் துரியோதனன் கட்டுக்கோப்பான பாண்டவர் படையைப் பார்த்து மிரண்டு போய், தந்தையைப் போன்ற தன் குருவான துரோணரிடம் அடைக்கலம் புகுந்தான்.
பவ்யமாகத் தன் அருகில் நிற்கும் துரியோதனனை வாஞ்சையாகப் பார்த்து மெல்ல அரவணைக்கும் துரோணர்! அச்சம் கொண்ட துரியோதனனுக்கு அந்த அன்பான பாதுகாப்பு அப்போது தேவைப்பட்டது. ஆனால் அடுத்த நொடி வஞ்சனையும், அழுக்காறும் அவனிடம் தலைதூக்கியது. “குருவே! பாரும்! நீங்கள் விற்பயிற்சி கொடுத்த பாண்டுவின் புதல்வர்களும், துருபதனும் வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப் போல அம்புக்கணைகளை உங்கள் மீது பாய்ச்சத் தயாராகிவிட்டனர்! தவறு செய்து விட்டீர்கள் குருவே! இவர்களுக்கு மட்டும் நீங்கள் போர்ப் பயிற்சி கற்றுக் கொடுத்திராவிடில் இன்று இவர்களைத் தூள் தூளாக்கி இருப்பேன்!” என்று அச்சத்தோடு சொன்னான் துரியோதனன்.
அவன் மனதில் தோல்வியின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. இது வரப்போகும் நிரந்தரத் தோல்விக்கு அஸ்திவாரம் போலக் காணப்படுகிறது. கட்டில் அடங்காத கௌரவப்படையையும், கட்டுக்கோப்பான பாண்டவர் படையையும், அவன் கண்கள் எடை போடுகின்றன. கட்டுக்கோப்புதான் கடைசியில் ஜெயிக்கும் என உள்மனது சொல்கிறது. அப்போதே தோற்றுவிட்டான் துரியோதனன்.
தோல்வி சினத்தைச் சீண்டியது. அவன் கோபம் கொந்தளிக்கிறது. வெஞ்சினத்தோடு துரோணரைப் பார்க்கிறான். “ஓய்! பிராமண குருவே! நீர் போர்க்கலையில் வேண்டுமானால் வல்லவராக இருக்கலாம். ஆனாலும் நீர் அமைதியை நாடும் அந்தணர் தானே! சாந்தத்தை விரும்பும் மனது படைத்தவர் தானே! பாண்டவர்களின் தைரியத்தை உம்மிடம் நான் எப்படி ஐயா எதிர்பார்ப்பது! சரி… என்ன செய்வது… அஞ்ச வேண்டாம்!”
உள்மனது ஓலம் விட்டது. ஆனாலும், அடுத்த நொடி தன் தவறைப் புரிந்து கொண்டு துரோணரைப் பார்த்து உரக்க முகஸ்துதி செய்ய ஆரம்பித்து விட்டான். “குருவே தாங்களும், தங்கள் மைத்துனர் இருவரும் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை? உங்களோடு பீஷ்மரும், கர்ணனும், அஸ்வத்தாமனும், விகர்ணனும் வேறு இருக்கிறார்கள்” என்று முதலில் துரோணர் பெயரைச் சொல்லி அவரைப் புகழ ஆரம்பிக்கிறான்.
துரியோதனன் மனது ஒரு நிலையில் இல்லை. துரோணரை வசைபாடிய நாக்கு அடுத்த நொடியே அவரைத் துதி பாடுகிறது. ஏமாற்றி ஆதாயம் தேடுபவன் இறுதியில் பயன்படுத்தும் அஸ்திரம் முகஸ்துதி தானே!
மனிதர்களைத் துல்லியமாக எடை போடும் சஞ்சயன், பீஷ்மாச்சாரியாரை பக்தியோடு பார்க்கிறான். ‘எவ்வளவு பெரிய ஞானி! தியாகசீலர்! உத்தமர்! ஆனாலும் அதர்மத்தின் பக்கம் நின்று தர்மத்தை எதிர்த்துப் போரிடுகிறாரே… அதற்குக் காரணம் இருக்கிறதா?’ சிந்திக்கிறான் சஞ்சயன் விடை கிடைத்துவிட்டது.
பெருமிதத்தோடு சொல்கிறான், “எவ்வளவு ஆற்றல் படைத்தவனாக இருந்தாலும் அவனால் தர்மத்தை ஜெயிக்க முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தவே துரியோதனனோடு தோள் நின்று தோற்றுப் போவதில் இப் பெருமகனார் உவகை கொள்கிறார். எத்தனை மகத்தான தியாகத்தை இந்தப் பெரியவர் செய்கிறார்! தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது இருப்பது போன்று உலகியல் வாழ்வில் பற்றற்று வாழ்ந்து காட்டுகிறார் பீஷ்மர்.”
True Sportsman Spirit- என்னும் சொற்றொடர்க்கு இணங்க வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாது, முழு பலத்தோடு, உற்சாகத்தோடு, ‘விளையாட்டிற்காகவே விளையாட்டு’ எனும் கோட்பாட்டை பீஷ்மர் போர்க்களத்தில் கடைப்பிடிக்கிறார். அதர்மத்தின் அணியில் இருந்தாலும் முழுத் திறமையையும் பயன்படுத்தி, போர் புரிந்து, தோற்றுப் போனாலும் கூட அது ஒரு வெற்றி தான். காரணம், உலகம் ஒரு உன்னதப் பாடத்தை இதன்மூலம் இவரிடம் கற்றுக் கொள்கிறது.
சஞ்சயன் எனும் பாத்திரத்தைப் படைத்து அவன் மூலம் வாழ்க்கைத் தத்துவத்தை நமக்குக் கற்றுத் தருகிறார் வியாச மஹரிஷி.
சஞ்சயன் சம்பவங்களுக்குச் சாட்சியாக மட்டுமே இருக்கிறான். சம்பவங்களைப் பற்றின்றிப் பார்க்கிறான். நன்மையும் தீமையும் அவனைப் பாதிக்கவில்லை. தூர நின்று திருதராஷ்டிரன், துரியோதனனின் குணங்களை எடை போடுகிறான். சஞ்சயன் எனும் பெயருக்கு ஏற்றபடி அவன் மனது வாடாச் சமநிலையில் வீற்றிருக்கிறது.
சஞ்சயனைப் போன்று ஒவ்வொரு மனிதனும் புவியுலக வாழ்வில் நன்மை, தீமைகளுக்கு அப்பாற்பட்டு அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளில் பற்றின்றி, பங்கு பெற்று சாட்சியாக நின்று, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போன்று வாழ்ந்து நிறைநிலை அடைய வேண்டும் என்பதே வியாச மகரிஷியின் நோக்கம்.
“வந்ததையும் போனதையும் வைத்து வைத்துப் பார்த்திருந்தால் சிந்தை ஹிதம், அஹிதம் சேரும் பராபரமே”
-எனும் தாயுமானவரின் வாக்கிற்கு ஏற்ப, சஞ்சயன் குருஷேத்திரப் போர்க்களத்தில் வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்த மனிதர்களையும், அவர்தம் செயல்களையும் தானே சாட்சியாக இருந்து பார்த்து, தற்கால தொலைக்காட்சி வர்ணனையாளரைப் போன்று தெளிவாகப் படம் பிடித்து திருதராஷ்டிரனுக்கு விளக்குகிறான்.
வர்ணனையாளன் சாட்சியாக இருந்து பேசுவதால், அவன் மனதில் சலனம் இல்லை. சஞ்சயன் சாட்சியாக இருப்பதால் அவன் வார்த்தைகளில் சத்தியம் மிளிர்கிறது.
- (சுவாமி சித்பவானந்தரின் கருத்துக்களை அஸ்திவாரமாகக் கொண்டது இந்தக் கட்டுரை).
$$$