ராமாயண சாரம் (4-5)

-ச.சண்முகநாதன்

4.  சீதா கல்யாண வைபோகமே!

தர்மத்தின் தலைவனும்,  “தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார்” எனும்படியான, கருப்பு நிற அழகனுமான ராமன், சீதையை திருமணம் செய்யும் நாள் வந்தது.

மிதிலை மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து ஆடிப் பாடுகின்றனர்.  “மாப்பிள்ளை யார்?” என்ற கேள்விக்கு  “தயரதன் புதல்வன்’ என்பார்;  ‘தாமரைக் கண்ணன்’என்பார்; ‘புயல் இவன் மேனி’ என்பார்;  ‘பூவையே பொருவும்’ என்பார்”. மேலும்  “அவன் மனிதப்பிறவி அல்ல, கடவுளே பிறந்து வந்தது போல இருக்கிறான்” என்று பூரிப்படைந்தனர்.

கம்பன் நம் கண் முன் ஒரு marriage album ஒன்றை விரித்து வைக்கிறான். யார் யாரெல்லாம் வந்தனர் என்று மூச்சு விடாமல் சொல்கிறான்.

“தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும்,
முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம்பொற் பலகலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரிகுழல் அணிவாரும்,
சித்திர நிரை தோயும் செந்துகில் புனைவாரும்…”

என்று பட்டியல் இன்னும் நீளுகிறது.

மங்கல முரசு இசைக்க, தாரை, பேரிகை முழங்க, மறையவர் நான்மறை ஓத, நகரம் விழாக்கோலம் பூணுகிறது.

ராமன் நீராடி, திருமண் இட்டுக்கொண்டு கோயிலுக்குச் சென்று வழிபட்டு தேரில் ஏறி வருகிறான். ஆனந்தக் களிப்பில் நகரத்தவர்  “சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்; விரிந்து ஒளிர் காசு, பொன் தூசு, வீசினர்.”

சீதையும் மண்டபத்துக்கு வருகிறாள்.

“அன்னை சானகி வந்தாளே - ராசாதிராசர்
அனைவர்க்கும் காட்சி தந்தாளே” 

    (அருணாச்சல கவிராயர்).

வஷிஷ்டன் தலைமையில் திருமணச் சடங்குகள் நடக்கின்றன.

“பூமி உள்ளோர்க்கெல்லாம் ஆவியை - நல்ல
பூவை எனும் சீதா தேவியை
சாமி அருகினில் தந்தார் - வ
திஷ்டரும் தருப்பைக்கொண்டு வந்தார்” 

   (அருணாச்சல கவிராயர்)
“பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி” 

-என்று ஜனகன் ராமனுக்கு சீதையை தாரை வார்த்துக் கொடுக்கிறான்.

தீ வலம் வரும்போது சீதை ராமனைத் தொடர்ந்து வந்தது ‘உடம்பு உயிரைத் தொடர்கின்றதை’ப் போல இருந்தது.

ராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம் நடந்தேறியது.

“ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல்கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை”

எல்லோர் மனமும் மகிழ்ச்சியால் நிறைந்தது. அனைவரும் மகிழ்ச்சியின் எல்லை மீறினர்.

பரதகண்டத்தில் நடைபெற்ற திருமணங்களில் மிகச் சிறந்த திருமணம் இதுவாகத் தான் இருக்க முடியும்.

கம்பன் கவிபோலவே, சீதா கல்யாண வைபோகத்தை தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய கீர்த்தனை  “சீதா கல்யாண வைபோகமே!”. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் மனதுக்குள் அந்தக் காட்சிகள் அப்படியே தெரியும்.

சீதா கல்யாண வைபோகமே!

ராம கல்யாண வைபோகமே!

$$$

5. நீ பாராளும் கோலம் காண வேணும், ராமா!

தசரதனுக்கு, தன்னுடைய முதுமையின் அறிகுறி தெரிகிறது.

காலம் தாழ்த்தாமல், ராமனுக்கு முடிசூடி அவனை அரசனாக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. மந்திரிசபையைக் கூட்டி மந்திரிகளிடம்  “உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்கிறான்.

“இதுவரை மக்களுக்காக வாழ்ந்தேன். இனி என் உயிர் சிறக்க தவ வாழ்வு வாழப் போகிறேன்” என்று தனக்குத் தோன்றிய எண்ணத்தை மந்திரிகளுக்குத் தெரிவிக்கிறான்.

“மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;
என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்”

யாருக்குத்தான் ராமனைப் பிடிக்காது!

“மன்னும் மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை” என்றும்  “இந்த உலகத்தார்க்கு அவர்களின் கண்களை விட சிறந்தவன். எல்லோருக்கும் அவன் மீது பாசம்” என்றும் தெரிவித்தனர்.

 “....பேருலகின் -
கண்ணினும் நல்லன்; கற்றவர், கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார்”

ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி.

“அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான்.”

56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.

உடனே, ராமனிடம் தசரதன்  “உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பதாய் முடிவெடுத்துள்ளோம்” என்று கூற, ராமனோ “அரசன் நீ! என்ன சொன்னாலும் செய்வது என் கடன்” என்று பணிவோடு ஏற்றுக்கொள்கிறான்.

‘யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ,
நீதி எற்கு?’ என நினைந்தும், அப் பணி தலைநின்றான்.

இதை அறிந்த மற்ற மன்னர்களெல்லாம் மகிழ்ச்சியால்  “கார் மழை பொழியவும் கழனி பாய்நதி வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்?” இதைவிட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியுமா என்று மனமகிழ்ந்தனர்.

 ‘56’ தேசத்து அரசர்களும் இந்தச் செய்தியைக் கொண்டாடினர்.  “ஐம்பத்தாறு தேசத்து ராசரும் மன்றாடி மன்றாடிக் கொண்டாடி கொண்டாடி வந்தனர் எங்கள் கலியாண ராமசந்திரன் திருவடி காண” என்று அருணாச்சலக் கவிராயர் பாடுகிறார்.

நகரத்தவரும் செய்தி கேட்டு ஆடுகின்றனர், பாடுகின்றனர், கரம் சூடுகின்றனர். அனைவருக்கும் தானே முடிசூட்டிக்கொள்வது போல மட்டற்ற மகிழ்ச்சி.

ராமராஜ்யம் வேண்டாம் என்று சொல்வாரும் உண்டோ!

(தொடர்கிறது)

$$$

Leave a comment