-ச.சண்முகநாதன்
எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவரும் இனிய தொடர் இது. ஆடிமாதம் முழுவதும் வெளியாகவுள்ள இத்தொடரின் பகுதிகள் நமது தளத்திலும் அவ்வப்போது வெளியாகும்…

‘கர்க்கிட மாஸம்’ என்ற ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதமாகக் கொண்டு, ராமாயணக் கதை வாசிப்பார்களாம் கேரளாவில். உன்னதமான செயல். நாமும் ஏன் இதை செய்யக் கூடாது என்றெண்ணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக முகநூலில் கம்ப ராமாயணத்தில் இருக்கும் முக்கியமான சுவாரஷ்யமான பகுதிகளை தொடராக, ‘ராமாயண சாரம்’ எழுதி வந்தேன். ஆற்றுப்படலம் முதல் திருமுடி சூட்டு படலம் வரை.
இந்த ஆண்டும் மீண்டும் அந்தப் பதிவுகளை முகநூலில் பதிவிடலாமா, வேண்டாமா என்று யோசித்து நாணயத்தைச் சுண்டியதில் ‘பதிவிடலாம்’ என்று தலை விழுந்தது. பூ விழுந்திருந்தாலும் இதே முடிவுதான் எடுத்திருப்பேன். 🙂
எனவே. ஆடி மாதம் முழுவதும் நாமும் ராமாயணம் படிப்போம், கம்பன் கவிதையில்…
$$$
1. உலகம் யாவையும்…
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் - அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
ஒரு காவியம் பாடும் பொழுது முதல் அடியை மங்கலச்சொல்லால் தொடங்குவது வழக்கம். ‘உலகம்’ என்பது மங்கல சொல்லாகக் கருதப்பட்டது. “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு” என்று துவங்குகிறது, நக்கீரதேவ நாயனார் படைத்த திருமுருகாற்றுப்படை.
கம்பன் “உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்” என்ற அடியில் தொடங்குகிறான்.
அகிலம் போற்றும், குற்றமற்ற, ராமனின் கதையை தன்னுள் எழுந்த ஆசையால் சொல்ல விழைகிறான் கம்பன்.
“ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்றுஇக் காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ”
ஆசையால் 10000 + பாடல்களில் தெய்வமாக்கதை பாடிய பெரியவன் அவன். அவன் பாடியதில் இருந்து பாடல்களையும் நிகழ்வுகளையும் இந்த ஆடி மாதம் முழுவதும் கண்ணுறுவோம்.
தர்மத்தின் வழி நின்று ஆட்சி செய்தவன் தசரதன். ஆனாலும், தனக்கு புத்திரர்கள் இல்லாத குறையைப் போக்க அசுவமேத யாகம் செய்து, அதன் பின் புத்திர காமேஷ்டி யாகம் செய்து புத்திர பாக்கியம் வேண்டுகிறான், வஷிஷ்டனின் வழிகாட்டுதலின் படி.
வஷிஷ்டனுக்கு அப்பொழுது ஒரு தேவநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
Flashback:
அரக்கர்கள் தொல்லையினால் தங்களுக்கு இன்னல் ஏற்படுவதாக நல்லவர்கள் சிவனிடம் முறையிட்டு தொழுது நிற்க, சிவபெருமானோ ‘யாம் இனி அடுகிலோம், மாயனோடு அறைதிர்’ என்று ‘My hands are full, கொஞ்சம் விஷ்ணுகிட்ட சொல்றீங்களா இந்த பிரச்சினையை?’ என்று விஷ்ணுவுக்கு அந்த வேலையை delegate செய்கிறார்.
விஷ்ணுவின் இருப்பிடம் செல்கின்றனர் நல்லவர்கள். விஷ்ணு காட்சி தருகிறார்.
அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அனைவரும்
“ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய் ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்”…
‘வீடினர் அரக்கர்’ என்று ஆனந்தம் கொள்கின்றனர்.
“வீடினர் அரக்கர்” (=செத்தாண்டா எதிரி) என்று பேருவகை கொள்கின்றனர்.
விஷ்ணுவும் “வருந்தல்; வஞ்சகர் தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு” என்று சொல்லி பின் நான் அரக்கர்களை அழிக்க, கடல் போல, யானை, தேர், குதிரை காலாட்படை கொண்டு ஆள்கின்ற தசரதனின் மகனாகப் பிறப்பேன். கவலையை விடுங்கள்” என்று அருள்மொழி சொல்கிறார்.
“கச ரத துரக மாக் கடல்கொள் காவலன், தசரதன், மதலையாய் வருதும் தாரணி”
Flashback ends.
வஷிஷ்டன், விஷ்ணு பகவான் அருளியது நிகழும் காலம் வந்துவிட்டது என்று மனதில் உவகை கொண்டவனாய், வேள்விக்குத் தயார் செய்கிறான். வேள்வியின் பயனாக கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் கருவுருகின்றனர்.
ராமாவதாரம் நிகழ்கிறது. பிரபஞ்சத்தை தன் வயிற்றுள் அடக்கியவனும், வேதங்களாலும் விளக்க முடியாதவனுமாகிய, கரிய நிறமுடைய திருமாலை திருவுறப் பயந்தனள் கோசலை.
“ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து, அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக் கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை, திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை”.
“ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து” = பிரளயத்தின்போது
எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி. Before Big Bang? The big-bang theory says that it began when a tiny but dense mass of energy exploded.
dense mass of energy = ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து. அறிவியல்!
“அஞ்சனக் கரு முகிற் கொழுந்துஎழில் காட்டும் சோதியை, திரு உறப் பயந்தனள் – திறம் கொள் கோசலை”.
பன்னிரண்டு நாட்கள் அயோத்தி மாந்தர் கொண்டாடித் தீர்த்தனர். பின்னர் பிறந்த மெய்ப்பொருளுக்கு வஷிஷ்டன் “இராமன் எனப் பெயர் ஈந்தனன்”.
ராமன் அவதரித்தான்.
$$$
2. ராமனின் முதல் போர்
சுகேதுவின் மகளாக, அழகாக ஆயிரம் யானை பலம் கொண்டவளாக தாடகை பிறக்கிறாள். அவளுக்கும் சுந்தனுக்கும் திருமணம் நடந்து இரண்டு மகன்கள் பிறக்கிறார்கள். அவர்கள் நன்றாக திறமையுடன் வளர்வதைக் கண்டு சுந்தனுக்கு செருக்கு தலைக்கேறி தமிழ் தந்த அகத்திய முனிவரின் ஆசிரமத்தில் உள்ள மரங்களையெல்லாம் பறித்து எறிகிறான். கோபம் கொண்ட அகத்தியர் அவனை எரித்து விடுகிறார், பார்வையால். அது கேட்டு தாடகை தன் மகன்களுடன். கோபத்துடன் “தமிழ் எனும் அப்பரும் சலதி தந்த” அகத்தியரிடம் சென்று அழிச்சாட்டியம் செய்கின்றனர்.
அகத்தியர் “அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே இழிக” என்று சபிக்கிறார். தமிழ் முனி சொன்னது பலிக்காமல் போகுமா? அரக்கியாகிறாள் தாடகை. “அப்படி அரக்கியாகியவள் தான், இன்று இராவணன் கட்டளையை ஏற்று, அரக்கத்தனமாக, நான் செய்யும் யாகத்தைக் கெடுகின்றாள்” என்று விஷ்வாமித்திரர் தாடகை வரலாற்றை ராமனுக்குச் சொல்கிறார்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தாடகை அங்கே வந்து விழிகள் பிதுங்க விழித்து, அரக்கத்தனம் செய்து, “இது என் ஏரியா. இங்கே எதற்காக வந்தீர்கள்?” என்று சூலத்தை எறிந்து கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறாள். விசுவாமித்திரர் அவளைக் கொல்ல நினைத்தாலும், ராமன், ”இவள் பெண் என்பதால் இவள் மீது அம்பு எய்ய மாட்டேன்” என்று முதலில் தயங்குகிறான்.
“அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், ‘ஆவி உண்’ என, வடிக் கணை தொடுக்கிலன்”
விசுவாமித்திரர்: “இக் கொடியாளையும், மாது என்று எண்ணுவதோ?- மணிப் பூணினாய்!”
“ராமா, இவள் செய்யாத தீங்கு இல்லை. எங்களைத் தின்னாதது ஒன்று தான் குறை. இவளையெல்லாம் பெண் என்ற கணக்கில் சேர்க்காதே. இவள் பெண்மையற்றவள்; அறமற்றவள்; அரக்கத்தனம் கொண்டவள். இனிமேல் காலம் தாமதிக்க வேண்டாம். இவளை முடித்து மனித குலம் உய்ய வழி செய்” என்று கட்டளை இடுகிறார்.
“ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக் கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான்.”
அதுகேட்ட ராமன், ‘உன் உரை எனக்கு வேதம்’ என்று சொல்லி, இனியும் தாமதித்தல் தக்கதல்ல என்று உணர்கிறான்.
“மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்”
அதே சமயத்தில் தாடகை மலைகளை எறிகிறாள் அவர்கள் மீது. அதை அம்பு மழையால் தவிடு பொடியாக்கினான் ராமன்.
ராமன் விடுத்த அம்பு மின்னல் வேகத்தில் சென்று தாடகை நெஞ்சில் நுழைந்து முதுகு வழி வந்து தாடகை எனும் தீயவளை சாய்க்கிறது.
இதற்கு கம்பன் பாடும் பாடல் ‘அப்பப்பா’ ரகம். “ராமன் விடுத்த வில் முனிவர்களின் சாபம் போல மின்னல் வேகத்தில் சென்றது. அப்படிச் சென்ற அம்பு, கல்லாத மூடர்களுக்கு கற்றவர் சொன்ன அறிவுரை போல அவர்களிடம் நில்லாமல் போனது”.
“சொல் ஒக்கும் கடிய
வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள்
மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,
அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என, போயிற்று அன்றே”
எவ்வளவு அழகான தத்துவத்தை எப்படிக் கோர்த்து விடுகிறான் கம்பன்! “கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று!”
ராமனின் முதல் போர், தாடகை வதம். ராமனின் கடைசி வதத்திலும் ராமன் விடுத்த அம்பு ராவணனின் மார்பில் புகுந்து பின்புறம் வந்தது. நல்லோர்களின் சிந்தனை போல, ராமனின் வில்லாற்றல் என்றும் மாறாமல் இருந்தது.
ராமன் கதை கேட்போம்.
$$$
3. ராமனின் will power
ராமன் சீதையை முதன்முதலில் பார்த்த பொழுதில் இருந்து சீதா கல்யாண வைபோகம் வரை கம்பன் வடித்திருக்கும் பாடல்களைப் பார்க்கும் பொழுது ஒரு நல்ல ‘marriage album’ பார்த்த திருப்தி நிலைக்கும் மனதில். ஆத்ம திருப்தி என்று சொல்லும் அளவுக்கு, மிதிலையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் தித்திப்பானவை. ஆல்பத்தின் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு அழகான நிகழ்வுகளை அப்படியே படம் போட்டுக் காட்டுகிறது.
காதலியை/ மனைவியை முதன்முதலில் பார்த்த தித்திப்பான நினைவுகள் பவித்ரமானவை. அந்த ‘கண்ணோடு கண் கவ்வும்’ இன்பத்துப்பால் சுரக்கும் நேரம் விலைமதிப்பில்லாதது. முதன்முதலில் சேர்ந்து coffee குடித்த அனுபவம் என்றென்றும் மனதில் தங்கிவிடும். அப்படியாக ராமன் முதன்முதலில் சீதையைப் பார்த்ததை கம்பன் சொல்லும் பாடல்.
மாடத்தில் இருக்கும் சீதையும் வீதியில் நின்றிருக்கும் ராமனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள் “கண்ணொடு கண் இணை கவ்வி”.
“கார் உலாவும் சீர்உலாவும் மிதிலையில் கன்னிமாடந்தன்னில் முன்னே நின்றவர் ஆரோ, இவர் ஆரோ, என்ன பேரோ அறியேனே”
ராமன் ஆச்சர்யம் கொள்கிறான். “யார் இவள்!” என்ற பிரமிப்புடன் சீதையை மனத்தில் நிறுத்துகிறான். அவள் நினைவு ராமனை ஆக்கிரமிக்கிறது.
அதே நேரத்தில் ஜனக மஹாராஜா, விசுவாமித்திரர் மூலம் ராமனின் ஆற்றலைக்கேட்டு, “என் மகள் சீதையை கல்யாணம் செய்ய வைத்த பரீட்சையில் இதுவரை யாரும் தேறவில்லை. வில்வீரன் ராமன் அந்த சிவதனுசுவில் நாணேற்றினால் என் துயர் தீங்கும்” என்று கேட்டுக்கொள்ள, விசுவாமித்திரரும் ராமனும் ஒத்துக்கொள்கின்றனர்.
சபையில் சிவதநுசுவை கொண்டு வரச்செய்கிறார் ஜனகர். யானையை ஒத்த மேனியர் பலர் மிகவும் சிரமப்பட்டு சிவதநுசுவை மேடைக்குக் கொண்டு வருகின்றனர்.
அதைப் பார்த்த மக்களெல்லாம் “இவ்வளவு பெரிய வில்லை யார் தூக்கி நாணேற்ற முடியும்? இந்த அரசனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? இவ்வளவு கடினமான போட்டி வைத்தால் சீதைக்கு எப்படி கல்யாணம் நடக்கும்?” என்று கவலை கொள்கின்றனர்.
“இதனைத் தீண்டுவான் எங்கு உளன் ஒருவன்?” என்று வியந்துவிட்டு “வெள்ளை மணத்தவன் வில்லை எடுத்து, இப் பிள்ளை முன் இட்டது பேதைமை” என்று ஜனகனை நொந்து கொள்கின்றனர்.
ராமன் எழுகிறான். யானையைவிட கம்பீரமாக, மெதுவாக வில் இருக்குமிடம் செல்கிறான். எல்லோரும், எங்கே, தங்கள் கண் இமைத்தால் ராமன் வில் முறிக்கும் காட்சியைக் காண முடியாமல் போகுமோ என்று கண்கொட்டாமல் ராமனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராமன் வில்லை எடுத்து, அதன் முனையை காலால் மிதித்து நாண் ஏற்றுகிறான். நொடிப்பொழுதில் அந்த வில் முறிந்து போகிறது. “கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.”
“தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில் மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.”
ராமனின் will power மற்றும் வில்லாற்றல் ஈடு இணையில்லாதது.
“ராமன் கையால் துங்கமுள்ள அந்தவில்லை வளைவுகாணத் தொடக் கண்டார் இரண்டு துண்டாய் விடக் கண்டாரே”
-என்று அருணாச்சலக் கவிராயர் அழகாகப் பாடுகிறார்.
“கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்” – கம்பன்
“தொடக் கண்டார் இரண்டு துண்டாய் விடக் கண்டாரே”- அருணாச்சலக் கவிராயர்.
தசரதராமனை, சீதாராமன் என்றும் அறியப்பட வைத்த இந்த நிகழ்ச்சியால் அனைவர் உள்ளமும் மகிழ்ச்சி கொள்கிறது. சீதையும் மகிழ்கிறாள். ஜானகியின் காதல் எண்ணம் நிறைவேறியது.
அடுத்து சீதா கல்யாண வைபோகம் பற்றிப் பார்ப்போம்.
(தொடர்கிறது)
$$$