அமெரிக்கப் பெண்ணின் ஆங்கிலக் கவிதையை தமிழில் தந்த மகாகவி

-சேக்கிழான்

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்ட மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற பெண்மணியின் ஆங்கிலக் கவிதையை ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதுவே மகாகவியின் கடைசிக் கவிதையாக இருக்கலாம் என்பது தான்.

சுதேசமித்திரன் இதழில் (துன்மதி- ஆடி 4 / 10 ஜூலை 1921) இந்த மொழிபெயர்ப்புக் கவிதை வெளியாகி இருக்கிறது.  “இஃது யுனைடெட் ஸ்டேட்ஸ், மிஷிகன் மாகாணம், தெத்ருவா நகரத்திலுள்ள ஸ்ரீமத்  மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற ஸ்திரீ எழுதிய இங்கிலீஷ் கவிதையினின்றும் மொழிபெயர்த்தது” என்ற குறிப்புடன் இக்கவிதை வெளியாகி உள்ளது. ஆனால், மகாகவி பாரதியின் கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதை என்ன காரணத்தாலோ சேர்க்கப்படாமல் தொடர்ந்து விடுபட்டு வருகிறது.

இக்கவிதையின் ஆங்கில மூலத்தின் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) தலைப்பு, ‘INDIA’S ROLL CALL’ என்பதாகும். இதனை எழுதியவர், அமெரிக்காவில் இந்தியாவுக்கு ஆதரவான ஆன்மிக, அரசியல் கருத்துகளை உருவாக்கி வந்த, தியாசபிகல் சொஸைட்டியைச் சார்ந்த மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற பெண்மணி.

இக்கவிதையை இயற்றிய பெண்மணியைப் பற்றி அறிந்தால் வியப்பில் நீங்கள் சமைந்து போவீர்கள். அமெரிக்காவில் பிறந்த இப்பெண்மணி, இந்தியா மீதும் ஹிந்து சமயம் மீதும் ஆர்வம் கொண்டு, அதற்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர் என்பது சாதாரண விஷயம் அல்லவே.

மாட் ரால்ஸ்டன் ஷர்மனின் தந்தையும் தியாசபி இயக்கத்தை சார்ந்தவர். மாட் ரால்ஸ்டன், விவேகானந்தர் கலந்துகொண்ட சிகாகோ சர்வ சமய பேரவை மாநாட்டில் கலந்துகொண்டவர்; இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தக்கர் தேவ் ஸர்மன் என்னும் பஞ்சாப் பிராமணரை மணந்தவர்.

அமெரிக்காவில் இயங்கிய தாமரை வட்டம் (லோட்டஸ் சர்க்கிள்) அமைப்பில் தீவிரமாக இயங்கிய மாட் ரால்ஸ்டன், தனது தோழியான லிஸியுடன் இணைந்து 1902இல் ‘ஆத்மா அசோஸியேஷன்’ என்ற அமைப்பை நிறுவினார். இவர்கள் இணைந்து Atma Fairy Stories  என்ற நூலையும் நியூயார்க்கில் இருந்து வெளியிட்டனர். இந்த அமைப்பு இந்தியர்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்டது.

‘யூனிட்டி’ பத்திரிகை

பிரிட்டன் தலைநகரமான லண்டனில், மேற்படிப்பு படிக்க வரும் இந்திய இளைஞர்களுக்காக, தியாஸபிகல் சொஸைட்டியில் தொடர்பு கொண்டிருந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ‘இந்தியா ஹவுஸ்’ என்ற விடுதியுடன் சேர்ந்த இல்லத்தை நிறுவினார். அங்கு தங்கிப் படித்தவர்கள் தான் சாவர்க்கர், சௌரிராஜன், வ.வே.சு.ஐயர், எம்.பி.டி.ஆச்சார்யா, மதன்லால் திங்ரா முதலானோர். இந்திய விடுதலைக்காக அந்த இல்லம் ஆற்றிய அளப்பரிய பணி அனைவரும் அறிந்ததே. சாவர்க்கரின் அழைப்பின் பேரில் 1909 இல் அங்கு மகாத்மா காந்தி சென்று தசரா விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.

அதேபோல, அமெரிக்காவுக்குக் கல்வி பயில வரும் இந்திய இளைஞர்களுக்காக, மன்ஹாட்டனைச் சார்ந்த வழக்கறிஞரும் க்ரிஸ்காம் தியாஸபிகல் சொஸட்டியைச் சேர்ந்தவருமான மைரோன் பெல்ப்ஸ், ‘இந்தியர்களின் மேம்பாட்டுக்கான சொஸைட்டி’யை 1908இல் நிறுவினார். அதன் சகோதர அமைப்பாக, 1142, பார்க் அவென்யூ, நியூயார்க்கில் ‘இந்தியா ஹவுஸ்’ என்ற இல்லத்தை லிஸியும் மாட் ரால்ஸ்டனும் அதே ஆண்டில் தொடங்கினர். அந்த இல்லம், இந்தியர்களுக்கு ஆதரவான கருத்து கொண்டவர்கள் கூடுமிடமாக இருந்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடிச் சீடரான சுவாமி பிரேமானந்த தாசரை இங்கு லிஸியும் மாட் ரால்ஸ்டனும் சந்தித்தனர்; அவரிடமிருந்து இந்திய தத்துவஇயல் குறித்து மேலும் தெரிந்துகொண்டனர்.

1909இல் இவர்கள் இருவரும் மிக்ஸிகன் மாகாணத்தின் டெட்ராய்டுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு 1911இல் ‘டெட்ராய்டு நகர தியாஸபிக்கல் சொஸைட்டி’யையும், ’டெட்ராய்டு நகர இந்தியன் சொஸைட்டி’யையும் நிறுவினர். மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் படிக்க வரும் ஹிந்து மாணவர்களுக்கு உறைவிட உதவி செய்வதே இந்த அமைப்பின் பணியாக இருந்தது. இங்கு தான் தனது கணவர் ஷர்மனை மாட் ரால்ஸ்டன் நேரில் சந்தித்து காதல் மணம் புரிந்துகொண்டார்.

பின்னாளில் மகரிஷி அரவிந்தரின் யோகப் பயிற்சி முறைகளில் ஆர்வம் கொண்ட மாட் ரால்ஸ்டன் ஷர்மன், புதுச்சேரியில் இயங்கிய அரவிந்த ஆசிரமத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள காக்கேசிய வெள்ளையினத்துக்கும், தெற்காசியர்களுக்கும் இனரீதியான பிணைப்பு இருப்பதாகவும், அதனை ஆரிய இனத் தொடர்பு என்றும் மாட் ரால்ஸ்டன் ஷர்மன் கருதி இருக்கிறார். இது தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதி இருக்கிறார்.

மகாத்மா காந்தி இந்தியாவில் ராட்டை இயக்கம் தொடங்கிய போது 1922இல் மாட் ரால்ஸ்டன் ஷர்மன் எழுதிய ’சர்க்கா’  என்ற பாடல் மிகவும் பிரபலமானதாகும். அதற்கு முன்னதாகவே இந்திய தேசிய விடுதலை இயக்கத்தை ஆதரித்து இவர் எழுதிய ஆங்கிலக் கவிதையே ‘INDIA’S ROLL CALL’.

இக்கவிதை பாரதியின் இறுதிக்காலமான 1920-21களில் சென்னையில் பிரபலமாக இருந்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் தலைமையை திலகரே ஏற்றுக்கொண்ட நிலையில், பாரதியும் ஏற்கனவே “வாழ்க நீ எம்மான்!” என்று பாடி மகிழ்ந்திருந்த நிலையில்தான், காந்தியத்தை ஆதரிக்கும் மாட் ரால்ஸ்டன் ஷர்மன் எழுதிய இக்கவிதை வெளியாகி இருக்கிறது.

இதனை தமிழில் மொழிபெயர்த்து, தான் பணியாற்றிய ‘சுதேசமித்திரன்’ இதழிலேயே வெளியிட்டு மகிழ்ந்தார் மகாகவி பாரதி.  

இந்த மூல ஆங்கிலக் கவிதை, பின்னாளில் சிகாகோவில் இருந்து வெளியான ‘யூனிட்டி’ என்ற பத்திரிகையில் (UNITY – Established 1878 – A Journal of the Religion of Democracy) வெளியாகி இருக்கிறது. அந்த ஆங்கிலக் கவிதை இது…


INDIA'S ROLL CALL

Dear India, thou Mother of nations, creeds and men,
Who gave the world religion in days beyond our ken,
Who sent thy blessed saviours to serve in every clime,
And raised up peerless Walis and Gurus for all time:
Come forth, reveal thy wisdom, unveil that hidden face
We need for our salvation, thy features we would trace,
Come forth unto the nations and settle their disputes,
With love rebuke their hatred, reclaim their war-recuits.

We need such men as Krishna, Mohammed, Buddha, Ram,
We ask, some mighty Rishi may answer: "Here I am"
Some Moses, Jesus, Nanak, men hunger to adore,
Hark! do we hear the answer, who is it in our midst
Confounding worldly councils with the simple words Thou bidst?
Who preaches non-resistance, non-violence, non-hate,
While ceasing to co-operate with a degenerate state?

Hail Gandhi! soul of Asia, who works for Dharma's rule
And calls upon a Higher Self, man's lower self to school,
Who raises high the standard of India's Avatars
That shine in matchless splendour from a galaxy of stars,
Who wakens the discerment, and sets aflame the heart
To melt and fuse those differences that keep mankind apart:
In thee, Mahatma Gandhi, we find the man we seek,
Through thee, the Mother answers, we hear "All-India" speak.

We answer to the Roll Call, arise upon our feet,
And pledge ourselves to Gandhi, his life-work to complete,
Elect to be sufficient to meet our daily needs,
And throne a reign of plenty where Independence leads;
United, free in spirit, we move despite our chains,
And wield for war's blunt weapons, fine moral force and brains:
And though we're bound in dungeons, our bodies doomed to die,
Unshackled and triumphant, "We'll live again," we cry.

               MAUDE RALSTON SHARMAN
               (Published on June 1, 1922 in UNITY, a Journal from Chicago)
               (UNITY  Weekly - Volume LXXXIX - Number 14; Chicago)
   

மகாகவி பாரதியால் தமிழக்கம் செய்யப்பட்டு, சுதேசமித்திரன் இதழில் வெளியான இக்கவிதையின் தமிழ் மொழியாக்கம் தான் ‘இந்தியாவின் அழைப்பு’. இக்கவிதை வெளியான இரு மாதங்களில் மகாகவி பாரதி அமரராகி விட்டார் (1921 செப். 21). இதோ அக்கவிதை…

இந்தியாவின் அழைப்பு

-மகாகவி பாரதி

[இஃது யுனைடெட் ஸ்டேட்ஸ், மிஷிகன் மாகாணம், தெத்ருவா நகரத்திலுள்ள ஸ்ரீமத் மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற ஸ்திரீ எழுதிய இங்கிலீஷ் கவிதையினின்றும் மொழிபெயர்த்தது.]

வேண்டுகோள்

அன்பிற் கினிய இந்தியா! அகில
மதங்கள், நாடுகள், மாந்தருக் கெல்லாம்
தாயே! எங்கள் உணர்வினைத் தூண்டிய
சேய் நெடுங் காலத்தின் முன்னே சிறந்தொளிர்
குருக்களை யளித்துக் குவலயங் காத்தனை. 5
திருக்கிளர் தெய்வப் பிறப்பினர் பலரை
உலகினுக் களித்தாய். உனதொளி ஞானம்
இலகிட நீயிங் கெழுந் தருளுகவே!
விடுதலை பெறநாம் வேண்டிநின் மறைவு
படுமணி முகத்தைத் திறந்தெம் பார்வைமுன், 10
வருக நீ! இங்குள மானுடச் சாதிகள்
பொருகளந் தவிர்ந்தமை வுற்றிடப் புரிக நீ!
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக!
செற்றவர் படைகளை மனையிடந் திருப்புக!

தாயே, நின்றன் பண்டைத் தநயராம் 15
மாயக் கண்ணன், புத்தன், வலிய சீர்
இராமனும், ஆங்கொரு மஹமது மினையுற்ற
விராவுபுகழ் வீரரை வேண்டுதும் இந்நாள்!
“தோன்றினேன்” என்று சொல்லி வந்தருளும்
சான்றோன் ஒருமுனி தருகநீ எமக்கே! 20
மோசே, கிறிஸ்து, நானக் முதலியோர்
மாசற வணங்கி மக்கள் போற்றிடத்
தவித்திடுந் திறத்தினர் தமைப் போலின்றொரு
பவித்திர மகனைப் பயந்தருள் புரிக நீ!
எம்முன் வந்து நீதியின் இயலைச்
செம்மையுற விளக்குமொரு சேவகனை அருள்கநீ. 26

உத்தரம்

கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடை
யாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?
உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்
விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான். 30
மலிவு செய்யாமை; மனப்பகை யின்மை;
நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை;
தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;
ஆச்சரியப்பட உரைத்தனன் - அவையெலாம்.
வருக காந்தி! ஆசியா வாழ்கவே! 35
தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.
ஆன்மா அதனால் ஜீவனை யாண்டு
மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்!
பாரத நாட்டின் பழம்பெருங் கடவுளர்
வீரவாள் கொடியை விரித்துநீ நிறுத்தினாய்! 40
மானுடர் தம்மை வருத்திடும் தடைகள்
ஆனவை யுருகி அழிந்திடும் வண்ணம்
உளத்தினை நீ கனல் உறுத்துவாய்! எங்கள்
காந்தி மஹாத்மா! நின்பாற் கண்டனம்!
மாந்தருட் காண நாம் விரும்பிய மனிதனை! 45

நின்வாய்ச் சொல்லில், நீதி சேர் அன்னை
தன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்
தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம்யாம்
எழுந்தோம்; காந்திக் கீந்தோம் எமதுயிர்.
இங்கவன் ஆவிக் கொள்கை வென்றிடவே. 50
அன்றைக் குணவுதான் அகப்படு மாயின்
நன்றதில் மகிழ்வோம்; விடுதலை நாடி
எய்திடுஞ் செல்வ எழுச்சியிற் களிப்போம்;
மெய்திக ழொற்றுமை மேவுவோம்; உளத்தே
கட்டின்றி வாழ்வோம்; புறத்தளைக் கட்டினை 55
எட்டுணை மதியா தேறுவோம்; பழம்போர்க்
கொலைத் தொழிற் கருவிகள் கொள்ளா தென்றும்
நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும்
அறிவும் கொண்டே அரும்போர் புரிவோம்;
வறியபுன் சிறைகளில் வாடினும்; உடலை 60
மடிய விதிப்பினும்; “மீட்டு நாம் வாழ்வோம்” என்
றிடியுறக் கூறி வெற்றி யேறி,
ஒடிபடத் தளைகள், ஓங்குதும் யாமே. 63

இந்திய அரசியலில் மகாத்மா காந்தியின் உருப்பெருக்கத்தை அமெரிக்காவில் இருந்த பெண்மணியான மாட் ரால்ஸ்டன் ஷர்மனால் உணர முடிந்திருக்கிறது என்பதை இக்கவிதையில் நாம் காண்கிறோம். இதனை உச்சிமோந்து, தமிழில் பெயர்த்து மகிழும் மகாகவி பாரதியின் தேசபக்திக் கனலையும் நாம் அறிந்து மகிழ்கிறோம்.

‘இந்தியாவின் அழைப்பு’ கவிதை வெளியான இதழ்: சுதேசமித்திரன் (19-7-1921)
 (ஆதாரம்: பாரதி தமிழ் - பெரியசாமித் தூரன் - பக்கம் 467-468).

$$$

Leave a comment