இந்துவுடன் இணைந்திருப்போம்!

-ச.சண்முகநாதன்

சந்திரனை ஆராய ‘சந்திரயான் - 3’ கிளம்பிவிட்டது. இது இந்தியர்களின் பெருமிதத் தருணம். இந்திய விஞ்ஞானிகளின் அரிய முயற்சிகள் வெல்ல நாமும் பிரார்த்திக்கிறோம். 
சந்திரயான் -3 விண்கலத்துடன் பாய்கிறது எல்விஎம்3 எம்4 ராக்கெட். (14.07.2023).
நன்றி: இஸ்ரோ.

“சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற திண்ணத்தோடு விண்ணில் சீறிப் பாய்ந்து கிளம்பியிருக்கிறது ‘சந்திரயான்-3’.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் திருப்பதி சென்று, நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாளிடம்  “எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்” வேண்டியது பாரத மண்ணின் மகத்துவத்தைக் கோடிட்டுக் காண்பித்தது.

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”

-என்று பாடி அங்கேயே படியாய்க் கிடக்கும் குலசேகர ஆழ்வார் அருள் சந்திரயானுக்கு பரிபூரணமாகக் கிடைத்திருக்கும்.

விண்ணில் ராக்கெட் செலுத்தப்பட்ட காட்சிகளைக் கண்டு வியந்து கொண்டிருந்த பொழுது சந்திரயானை விட மிகவும் அதிசயமாகப் பார்த்தது சந்திரயானை வடிவமைத்த விஞ்ஞானிகளை.  “நம்ம ஊரு அண்ணன், அக்கா எல்லோரும் கூடி ஒரு ராக்கெட் செஞ்சு விட்டிருக்காங்க” என்ற பெருமிதம் உண்டாயிற்று.

ஆடம்பரமான உடைகள் இல்லை. அளவெடுத்து டைலர் கிட்ட தைச்சு வாங்கின pant, தெருக்கோடியில் இருக்கும் அயர்ன் வண்டிக்காரரிடம் தேய்ச்சு வாங்கின சட்டை, அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டுசேலை, காலையில் பூக்கார அம்மாவிடம் வாங்கி வைத்துக்கொண்ட மல்லிகைப்பூ, கள்ளம் கபடமில்லாத சிரிப்பு – இவை தான் இந்த விஞ்ஞானிகளின் அடையாளம்.

நம்ம படிச்ச அதே பள்ளிக்கூடத்துல பாடம் படித்தவர்கள் இன்றைக்கு நிலாவுக்கு ராக்கெட் விடுகிறார்கள். நம்மைப் போலவே நட்ராஜ் ஜாமெட்ரி பாக்ஸில் காம்பஸ், கவராயம் எல்லாம் வைத்து கணிதம், இயற்பியல் படித்தவர்கள்.

அவர்களிடம் வளவளா கொழகொழா ஆங்கிலம் இல்லை. சாதாரணமான, ஆனால் தீர்க்கமான, ஆங்கிலப் பேச்சு. விஞ்ஞானிகள் பேசிய ஆங்கிலத்தில் கொஞ்சம் தமிழ், மலையாளம், ஹிந்தி இன்னபிற வாசனைகள், இந்தியாவின் பன்முகத் தன்மையை அழகாக எடுத்துக்  கூறியது.  ‘Mission director’  என்று சொல்லும்பொழுது போலியான  ‘டைரக்டழ்’ என்று சொல்லவில்லை.  ‘டைரக்டர்ர்’ என்று இந்திய ஆங்கிலத்தில் பேசியது தேன் வந்து பாயும் சங்கதி. ஜெய்ஹிந்த் சொல்கிறார் ஒரு விஞ்ஞானி.

இந்தியனாகப் பெருமைப்பட வாய்த்த தருணம், இப்படி  ‘down to earth’ விஞ்ஞானிகள் தான்  ‘down to moon’ முயற்சியின் மூளை எனும் பொழுது இந்தியா மீது இன்னும் காதல் அதிகமாகிறது.

மொத்தச் செலவும் ரூ. 615 கோடியாம். ஒரு சாராய அமைச்சர்  ‘பாட்டிலுக்கு 10 ரூபாய்’ அதிகம் வைத்து, ஒற்றை ஆளாக, ஒரு வருடத்தில் ரூ. 400 கோடி சம்பாதிக்கிறாராம். ரூ. 615 கோடி சந்திரயான் அவ்வளவு மலிவான செலவில் செய்யப்பட்டதா, இல்லை,  ‘பாட்டிலுக்கு 10 ரூபாய்’ அதிகம் வாங்கினால் நிலவுக்கு ராக்கெட் விடும் அளவு அதிகமா என்று தெரியவில்லை.

அடுத்த 40 நாட்களில் நிலவுடன் ஒரு தொப்புள்கொடி உறவு ஏற்படப்போவதை எண்ணி மனமெல்லாம் மகிழ்ச்சி.

வாழ்க இந்திய விஞ்ஞானிகள்!

அனுமன் சீதையைத் தேடி இலங்கை வந்தடைந்த பொழுது  ‘ராமனின் தூதன் வந்துவிட்டான். இனி எல்லாம் சுகமே’ என்று முகம் மலர்ந்ததாம் வான் நிலா.

“வந்தனன் இராகவன் தூதன்; வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா,
அந்தம் இல் கீழ்த் திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே’’

Here we come, Moon!

$$$

Leave a comment