-வள்ளலார்
மகனால் நேரிட்ட பசுக்கொலைக்கு பிராயச்சித்தம் செய்து விடலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் மனுஸ்மிருதியில் கூறி இருப்பதாகவும் கூறும் அமைச்சர்களின் சமாதானத்திற்கு மனுநீதி சோழன் கூறும் பதில் அற்புதமானது. பசுவை வள்ளலார் எங்ஙனம் மதித்தார் என்பதற்கான சான்று ‘மனுமுறை கண்ட வாசகம்’... இதோ பகுதி -4...

.அதுகேட்டு மனங்கலங்கிய மந்திரிகளுக்குள் ஒரு மந்திரியானவர் அரசனை வணங்கித் “தருமநெறி தவறாத தலைவனே! சாவதானமாகத் தயவுசெய்து என் வார்த்தையைக் கேட்டருள வேண்டும். ஆன்மாக்களுக்கு அறிவின் உயர்வு தாழ்வு பற்றியே புண்ணிய பாவங்களும் ஏறிக் குறைந்திருக்கும் என்னுஞ் சுருதி வாக்கியத்தின்படி, தர்மார்த்த காம மோக்ஷங்களைப் பெறுதற்கு யோக்கியமான அறிவுள்ள மனிதப் பிறவியெடுத்த ஜீவர்களுக்குள், ஆனை மதப்பட்டு அடவி அழித்தது என்னும் நியாயம்போல மதத்தினால் காமக்குரோத முதலானவைபற்றி ஒருவரை யொருவர் கொலை செய்தாரானால் அக்கொலைக்கு ஈடாக கொன்றவரைக் கொலை செய்விக்கக் கடவரென்றும்,
அப்படி யன்றிக் காக்கை யேறிப் பனம்பழம் விழுந்தது என்னும் நியாயம்போல் வலிமை பகைமை முதலானவை யில்லாமல் விதிவசத்தால் ஒருவர் இறந்ததற்கு வியாஜமாக முன்னிட்டவர்களை அவ்வாறு இனி முன்னிடவொட்டாமலிருக்கத் தண்டித்து முன்னிட்டதனால் வந்த பாவத்துக்கப் பரிகாரஞ் செய்விக்கக் கடவரென்றும்,
அப்படியன்றி அமுதம் ஊட்டுகின்றபோது அதுவே விஷமாகிக் கொன்றதென்னும் நியாயம்போல் நல்ல வழியில் நிறுத்தும் பொருட்டு அச்சமுறுத்தித் தண்டிக்கும்போது அபாயம் நேரிட்டு இறந்ததற்கு வேறு காரணமாகியிருந்த தந்தை, குரு, அதிகாரி முதலானோர்களை அநசன முதலான அரிய விரதங்கள் தவங்கள் செய்விக்கக் கடவரென்றும்,
மிருகம் பட்சி முதலான மற்ற உயிர்களுக்கு மனிதர்களால் கொலை நேரிட்டால் அந்தந்த உயிர்களின் தரத்துக்கும் அவரவர் குணாகுணங்களுக்குஞ் செய்கைகளுக்குங் காரணங்களுக்குந் தக்கபடி யறிந்து பிராயச்சித்தஞ் செய்விக்கக் கடவரென்றும்,
பொதுவாக அறநூல்களில் விதித்திருக்கப்பட்ட விதியை இன்று கன்றின் கொலைபற்றி நீர் செய்விக்க எண்ணிய அபூர்வமான விதி விலக்குகின்றதே; இது தகுதியைக் கடக்கின்ற குற்றமென்று சொல்வதற்கு இடமுண்டுபண்ணுமே” என்றார்.
.அதுகேட்ட அரசன் “மந்திரியே, நீர் பயனைத் தரும் விருக்ஷத்திலுள்ள பழத்தைப் பாராது பிஞ்சைப் பிடித்ததுபோல் பிடித்தீர். நன்றாயிருந்தது உமது வார்த்தை! அறிவின் உயர்வு தாழ்வுகளைப் பற்றிப் புண்ணிய பாவங்கள் ஏறிக் குறையுமென்று பூர்வபாகத்திற் சொல்லிய சுருதி, உத்தரபாகத்தில் பரமேசுவரன் ஆன்மாக்கள் தோறும் விகற்பமில்லாமல் நிறைந்திருக்கின்றபடியால், மாயையின் காரியமாகி வேறுபட்ட அறிவை நோக்காமல், அப்பரமேசுவரனை நோக்கி எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி நடக்க வேண்டும் என்ற உத்தரபாகத்தின்படி, பிறப்பு, குணம், சாதி, தொழில் முதலான விகற்பங்களை நாடாது உயிர்க் கொலையினிடத்துச் சமானமாகத் தண்டிப்பதே தகுதி;
என் புத்திரன் தேரிலேறிக் கொண்டு செல்வச் செருக்கினால் மறதி பற்றியே இப் பசுவின் கன்றைக் கொன்றான், ஆதலால் இவன் காக்கை ஏறிப் பனம்பழம் விழுந்தது போல வியாஜமானவனுமல்லன், அமுதமூட்டி விஷமானதுபோல் நன்மை செய்விக்கப்போய்க் கொலைக்குக் காரணமானவனுமல்லன், ஆனை மதப்பட்டு அடவி யழித்தது என்று நீர் சொல்லிய நியாயத்துக்குச் சரியாக விருக்கின்றான், ஆதலால் இவனைக் கொல்வதே முடிவு” என்று சொன்னார்.
.அதுகேட்டு மற்றொரு மந்திரியானவர் அரசனைத் தொழுது “மகாராஜனே! சுருதியில் எல்லா உயிர்களையும் உயர்வு தாழ்வு நோக்காது சமனாக நோக்க வேண்டுமென்று உத்தரபாகத்தில் விதித்திருக்கின்றது, அந்தணரொழுக்கத்துக் கன்றி அரசரொழுக்கத்துக்குப் பொருந்தாதே; அது பொருந்துமானால், பிராமணர் முதலான குலாசாரமும் பிரமசாரி முதலான ஆசிரம ஆசாரமும் பெரியோர்- சிறியோர், நல்லவர்- தீயவர் என்கிற கிரமப்பாடுகளும் வேறுபட்டு உலகநிலை தவறி அரசாட்சி மழுங்கிவிடுமே, இது ஒழுக்கத்தைக் கடக்கின்ற குற்றமென்று சொல்வதற்கு இடங் கொடுக்குமே, ஆதலால் பூர்வபாகத்தில் விதித்த விதிப்படி அறநூல்களிற் குறித்த நியாயங்களைக் கொண்டு தீர்ப்பிடுவதே நெறியாகும்” என்று சொன்னார்.
.அதுகேட்டு மனுச்சோழர் நகைத்து, “அமைச்சரே! நீர் வழிக்குத் துணையாக வருவான்போல் வந்து நடுக்காட்டிற் பயங்காட்டிப் பணம் பறிக்கின்றவன் போலப் பயம் காட்டுகின்றீர். பரமேசுவரன் அவ்வவ்வுயிர்களிடத்திலும் வேறுபடாமல் விளங்குகின்றபடியால் எவ்வுயிர்களையும் பொதுவாக நோக்க வேண்டும் என்ற உத்தரபாகத்தின் விதியை நான் அனுசரித்துக்கொண்டது உயிர்க்கொலையாகிய பாவநிவர்த்திக்கு மாத்திரமே யல்லது மற்றெதன்றிலுமல்ல. இக் கருத்தை அறிந்து கொள்ளாமல், ‘கருத்தறியாதவன் சொன்னமே கொள்வான்’ என்பதுபோலக் கொண்டு ஒழுக்கங்கடந்த குற்றம் வருமென்று கூறினீர்.
ஆனால் மற்றவை யெல்லாம் நிற்க, கொலைப்பாதக நிவர்த்திக்கு மாத்திரம் எவ்வுயிர்களையுஞ் சமமாகக் கொள்ள வேண்டுமென்பது எவ்வகையாலென்பீரேல்: உயிர்களெல்லாஞ் சிற்சத்தியினுருவமாகலானும் எல்லா உயிர்களுக்கும் இறைவனே தனுகரணங்களைக் கொடுத்தலானும், அவனது சிற்சத்தியாகிய உயிர்களை அவன் கொடுத்தருளிய உடம்பினின்றும் நீக்குதல் நினைக்கப்படாத அபராதமாகவானும், எந்தெந்த உயிர்களும் இயல்பினால் அல்லாமல் இம்சையினால் உடம்பை விட்டுப் பிரியும்படி நேரிட்டால் அந்தந்த உயிர்களுக்கும் அவ்வவ் வுடம்பை விட்டு நீங்கும்போதுண்டாகும் வருத்தம் பெரிதாக இருக்கமாகலானும்,
அன்றியும் கொலை செய்யுமிடத்து, கரும்பையும் எள்ளையும் ஆலையிலுஞ் செக்கிலும் வைத்தாட்டும்போது நெருக்கிலகப்பட்டு அரைபட்டு நசுக்குண்டு சின்னாபின்னப்பட்டு அக்கரும்பிலும் எள்ளிலுமிருந்து ரசமும் நெய்யும் எப்படிக் கலங்கி வருமோ அப்படியே, உடல் நசுக்குண்டு அரைபட்டுச் சின்னமாக அதிலிருந்து நடுநடுங்கி அறிவுகெட்டுத் திகைப்படைந்து கலங்கி வருவது எவ்வுயிர்களுக்கும் பொதுவாகலானும்,
தமக்குக் கொலை நேரிடுவதை அறிந்தபோது உடம்பு நடுங்கியும், பதைத்தும், வியர்த்தும் தடதடத்துந் தள்ளாடியும், கால்சோர்ந்தும், கண்கலங்கியும், இருளடைந்தும், காதுகள் கும்மென்று அடைபட்டும், நாசி துவண்டும், வாய்நீருலர்ந்தும், நாக்குழறியும், வயிறு பகீரென்று திகிலடைந்தும், மனம் திகைத்துப் பறை யடித்தாற்போற் பதபதவென்று அடித்துத் துடித்துத் துக்கமுஞ் சோர்வுங் கொண்டு மயங்கவும்,
பாய்மரச் சுற்றி லகப்பட்ட காக்கை போலவும், நீர்ச்சுழியி லகப்பட்ட வண்டு போலவும், சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும், உயிர் சுழன்று சுழன்று அலையவும் உண்டாகின்ற பயங்கரம் எவ்வுயிர்களுக்கும் இயல்பாகலானும், இறந்தவுடன் அவ்வுயிர்கள் இழப்பினாற்பட்ட இம்சையுமன்றி உடனே பிறப்பினாலும் வருத்தமடைந்து துக்கப்பட வேண்டுமாகலானும்,
நாம் வேண்டி ஓருயிரைப் பிறப்பிப்பதற்கும் சுதந்தரமில்லாதபடியால் நாம் வேண்டி ஓருயிரை இறப்பிப்பதற்கும் சுதந்திரமில்லை; இறப்பிப்பதற்கும் பிறப்பிப்பதற்கும் இறைவனே சுதந்தரமுள்ளவனென் றெண்ணாமல் ஆகாமியத்தால் கொலை செய்வதனால் மீளாநரகம் நேரும் என்றறிந்து கொள்வீர்; ஆதலால் எவ்வுயிர்களிடத்துங் கொலைப்பாதகத்தைச் சமமாகக் கொள்ளவேண்டும். இந்த நியாயத்தின்படி என்புதல்வனைப் பழிக்குப் பழியாகக் கொன்று விடுவதே முடிவு” என்று சொன்னார்.
.அதுகேட்டு வேறொரு மந்திரியானவர் மனுச்சோழரை வணங்கி “அரசனே! உமது பெயரினால் விளங்கும் மனுநூலிற் குடுமியையும் முகரோமத்தையும் க்ஷவரஞ் செய்து, தான் கொன்ற பசுத்தோலைப் போர்த்துப் பசுமந்தையினிடத்தில் வாசஞ் செய்து, கோசலத்தினால் ஸ்நானம் பண்ணி, இந்திரியங்களை அடக்கியிருத்தல், கஞ்சி குடித்தல், அவிசு பண்ணியுண்டல், பட்டினியிருத்தல், பசுமந்தையினுடன் போதல், பசுக்களுக்கு உபசாரஞ் செய்தல், பசுதானஞ் செய்தல் முதலான செய்கைகளைப் பசுக்கொலை செய்தோர்க்குப் பிராயச்சித்தமாகச் செய்விக்க வேண்டுமென்று விதித்திருக்கின்றதே; அதற்கு மாறாகப் புதல்வனைக் கொலை செய்வீரானால் விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்றதே” என்று சொன்னார்.
.அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் “மந்திரி! நீர் சொன்னது பால் வேண்டியழுகின்ற குழந்தைக்குப் பழத்தை எதிர்வைத்துப் பராக்குக் காட்டுவது போலிருக்கின்றது, விதிமாறாட்டமென்னுங் குற்றம் வருவதாகத் தோன்றுகின்ற தென்று சொன்னீர். அந்த மனுநூல் அநித்தயமாகிய தேகத்தில் அபிமானமும் அசுத்தமாகிய பிரபஞ்சபோகத்தில் ஆசையும் வைத்த கர்மிகளுக்கே அவ்விதி கூறிய தல்லது, நித்தியமாகிய சிவத்தில் அபிமானமும் சுத்தமாகிய சிவபோகத்தி லாசையும் வைத்த என்பிதா மூதாதை முதலானவர்களுக்குக் கூறியதல்ல.
உயிர்க்கொலை நேரிட்டால் உயிர்விடக் கடவரென்றே குறிப்பினாற் கூறியிருக்கின்றது. என் பிதா மூதாதைக்கு எவ்விதியோ அவ்விதியே எனக்கும் என் புத்திரனுக்கும் வேண்டத்தக்கது. ஆதலால் விதிமாறாட்ட மாகாது. இந்த நியாயத்தால் என் புத்திரனை யிழந்து விடுவதே முடிவு” என்று சொன்னார்.
.அதுகேட்ட மற்றொரு மந்திரியானவர் மகாராஜனை வணங்கி “உலகந் தோன்றியது முதல் இது பரியந்தம் தெய்வ கடாக்ஷத்தினாலும் வல்லமையினாலும் நீதியுடன் உலகாண்ட அரசர்கள் தாங்கள் ஆளுங்காலங்களிற் பசு முதலான மிருகவர்க்கங்களுள் ஒவ்வொன்றை அகங்காரத்தால் அடித்துக் கொன்ற அந்நியமானவர்களையும் பிராயச்சித்தஞ் செய்வித்தார்களே யல்லது, கொலை செய்வித்தவர்கள் உண்டென்று கேட்டதில்லை. அப்படியிருக்க, உமது புத்திரன் இந்தப் பசுவின் கன்றைக் கொல்ல வேண்டுமென்று கறுவுகொண்டு கொன்றவனல்லன். நீரெப்படி அவனைக் கொலை செய்யும்படி தீர்ப்பிடலாம்? அவ்வாறு தீர்ப்பிட்டால் முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்ற முண்டாகுமே?” என்றார்.
.அதுகேட்டு மனுச்சோழரானவர் “மந்திரி! நீர் மரபறியாதவன் மணம் பேச வந்ததுபோற் பேசவந்தீர். முன்னோர் செய்கைக்கு முரணான தென்னுங் குற்றம் வருமே யென்றீர். ஆனால் நான் சொல்வதை நன்றாகக் கேளும். பூர்வம் என் முன்னோர்கள் ஆளுங் காலங்களில் இப்படிப்பட்ட கொலை நேர்ந்ததேயில்லை. ஏகதேசங்களில் ஒவ்வொரு கொலைப்பாதகம் நேரிட்டபோது தம்முயிரையுங் கொடுத்துப் பழிக்கு ஈடுகட்டி யிருக்கின்றார்கள். அவர்கள் நிற்க, மற்ற அரசர்களோ வென்றால் தாங்கள் ஆளுங் காலங்களில் தேசாசார முதலான கற்பனைகளைப்பற்றி நூதன நூதனமாக நியாயங்களை யேற்படுத்திக்கொண்டு அவைகளின்படி நடத்தினார்கள். அவ்வரசர்கள் என்னொடு சேர்க்கப்பட்டவர்களல்லர். ஆதலால் என் தீர்ப்பின்படி நடத்துவதே துணிவு” என்றார்.
.அதுகேட்டு மற்ற மந்திரிகளெல்லாம் சேர்ந்து வணங்கி நின்று, “மஹாராஜனே! கூறியதே கூறுகின்றார்களென்று கோபஞ் செய்யாமல் யாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருள்வீராக; இந்தப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்துள் ஒன்று; இது பெற்ற கன்றோ பால் கொடுத்தற்குரிய பசுவாகத் தக்கதன்று. ஏருழுதற்குரிய எருதாகத்தக்க சேங்கன்று; உமது புத்திரனோ ஆறறிவுள்ள ஆண்மக்களிற் சிறந்த நல்லறிவுடையவன்; அவனோ அக்கன்றைக் கொல்ல வேண்டுமென்று கொன்றவனல்லன்; இக்கொலையோ கன்றினுடைய ஊழ்வினையென்று உலகமெல்லாஞ் சொல்லும்; ஆதலால் இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதே முறை” என்று சொன்னார்கள்.
.அதுகேட்டு அரசன் “மந்திரிகளே! நீங்கள் உண்மையைக் கண்டறிந்து சொல்வதற்குச் சக்தியற்றவர்கள்போல் இலேசாகக் சொல்லுகின்றீர்கள்; நல்லது, நான் சொல்லுகின்றதைக் கேளுங்கள். ‘இப் பசுவோ ஐயறிவுள்ள மிருகவர்க்கத்தி லொன்று’ என்று சொன்னீர்கள். நன்றாயிருக்கின்றது உங்கள் நியாயம்! உயர்வு தாழ்வுகளை உயிர்களின் அறிவினிடத்து வைத்துத் தாழ்ந்த அறிவுள்ள மிருகங்களைக் கொன்றால் பிராயச்சித்த மென்றும் உயர்ந்த அறிவுள்ள மனிதர்களைக் கொன்றால் கொலை செய்வதென்றும் சொல்லுகின்ற உங்கள் வார்த்தையின்படியே, இப்பசு மனிதரறிவைப் பார்க்கினும் உயர்ந்த அறிவுள்ளதாகவிருக்கின்றது.
எவ்வாறெனில், எந்த உலகத்தில் எந்தக் காலத்தில் எந்தப்பசு இந்தப் பசுவைப்போலக் கன்று இறந்ததைக் குறித்து ஆற்றப்படாத துக்கத்தோடும், அதிகாரிகளாலும் பகைவராலும் அயலாராலும் மற்ற உயிர்களாலும் ஒருவர்க்கக் கறை நேரிட்டால் அக்குறையை அரசன் தனக்கத் தெரிவிப்பதற்கு அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டுவித்திருக்கிறானென்று சாதாரண மனிதர்களாலும் அறியப்படாத இந்தக் காரியத்தை அறிந்து வந்து அந்த மணியைக் கொம்பினா லடித்துச் சத்தமெழுப்பிக் கதறிக் கண்ணீர் வடித்துக்கொண்டு நின்றது? இதனை யெப்போதாவது கேட்டிருக்கின்றீர்களோ? இல்லையே, இந்தப் பசு மாத்திரம் அப்படி அறிந்து செய்ததை யின்று பார்த்து நின்றீர்கள்,
ஆதலால் இது முன் தவக்குறையால் பசுவுடம்பெடுத்த தாயினும், மனிதப் பிறப்பில் உயர் குலத்தில் மேலான அறிவோடு பிறந்திருக்கின்றாதாகவே கொள்ள வேண்டும்.
அன்றியும் பசு எல்லாப் பிறப்பிலும் உயர்வுள்ளதென்றும் அதன் கொம்பினடியில் பிரம விஷ்ணுக்கள் இருக்கின்றார்க ளென்றும், காவிரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் அந்தக் கொம்பி னுனியில் இருக்கின்றன வென்றும், சிவபெருமான் சிரசிலும் சிவசக்தி நெற்றியிலும் இருக்கின்றார்களென்றும், சுப்பிரமண்யக் கடவுள் நாசியிலும், அசுவினிதேவர் காதுகளிலும், சந்திரசூரியர் கண்களிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி குரலிலும், கந்தருவர் மார்பிலும், இந்திரன் கழுத்திலும், உருத்திரர் முதுகிலும், சத்தமாதர்கள் குறியிலும், இலக்குமி குதத்திலும், கங்கை மூத்திரத்திலும், பூமிதேவி வயிற்றிலும், யமுனை சாணத்திலும், திருப்பாற்கடல் முலையிலும், யாகாக்கினி வயிறு, முகம், இதயம் என்னும் உறுப்புக்களிலும், அருந்ததி முதலான கற்புள்ளவர்கள் உடம்பிலும் இருப்பார்களென்றும் சொல்லியிருக்கின்றதே.
அன்றியும் பரமசிவன் திருமுடிக்க அபிஷேகஞ் செய்ய யோக்கியமான பால் முதலான திரவியங்களைக் கொடுக்கின்றதே. அன்றியும் திருவெண்ணீற்றின் காரணமான திரவியம் பிறப்பதற்கும் இடமாக விருக்கின்றதே. அன்றியும் நான்கு வேதமும் கால்களாகவும், கருமமும் ஞானமும் கண்களாகவும், ஆகமங்களும் சாத்திரங்களும் கொம்புகளாகவும், தருமமே உடலாகவும், தவமே நடையாகவுங் கொண்டு பரமேசுவரனுக்கு வாகனமாக விளங்கிய தருமவிடபத்துக்கு இனமாகவும் இருக்கின்றதே. இப்படிப்பட்ட மேன்மையுள்ள பசுவை ஐயறிவுடைய மிருகவர்க்கத்துள் ஒன்றென்று சொல்லப்படுமோ?
. “இதன் கன்றோ பால்கொடுத்தற்குரிய பசுவாவதில்லை, ஏருழுதற்குரிய எருதாகத் தக்க சேங்கன்று என்று சொன்னீர்கள். தேவர்களெல்லாம் பிறப்பதற்குத் தவஞ் செய்கின்ற மகத்துவ முள்ள இந்தத் திருவாரூரிலே பிறந்த எல்லா உயிர்களும் சிவகணங்க ளென்கிற சித்தாந்தப்படி, இந்த க்ஷேத்திரத்திலே பிறந்த இக்கன்றைச் சிவகணமென்று கொள்வதை விட்டு, சேங்கன்றென்று சொல்லப்படுமோ? ‘புத்திரனோ ஆறறிவுள்ள ஆண் மக்களிற் சிறந்த நல்லறிவுள்ளவன்’ என்றீர்கள். சிவதரிசனஞ் செய்யத் தேரூர்ந்து போய்ச் செல்வ மறைப்பினாற் கண்மறைந்து கன்றைக் கொன்றவன் நல்லறிவுள்ளவனென்று சொல்லப் படுவனோ?
கன்றிறந்ததை ஊழ்வினையென்று உலகஞ் சொல்லு மென்றீர்கள்; பிராரத்துவ வாதிகளுக்கல்லாமல், காமக் குரோதாதிகளாற் பாவங்களைச் செய்வதற்குச் சீவனே ஆகாமிய கர்த்தாவென்று கொள்ளுகிற உத்தம மார்க்கத்தை யுடையோர்க்கு ஊழ்வினை யென்று சொல்லத் தகுமோ?
‘இதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விப்பதே முறை’ யென்றீர்கள்; மலையை யெடுத்துண்டு வயிறு நோகின்றவனுக்குச் சுக்கிடித்துக் கொடுத்துச் சொஸ்தப் படுத்துவார்களோ? அதுபோலக் கொலைப்பாதகஞ் செய்தோர்க்குப் பிராயச்சித்தஞ் செய்வித்துப் பாவநிவர்த்தி செய்யப்படுமோ? அவ்வாறு செய்வேனானால் என்றும் மீளா நரகத்தில் என் புத்திரனை விழுத்துவதுமன்றி, யானும் விழுந்து வருந்துவேன்; இவ்வுலகத்தினும் மீளாத பழிக்கு ஆளாகச் சமைவேன்; அன்றியும் எண்ணிறந்த பெருமை பெற்ற இரவி குலத்திற்கம் என்னை யடுத்திருக்கின்ற உங்களுக்கும் ஓரிழுக்கு வார்த்தையும் உண்டாகும். ஆதலால், இனி என் சொல்லுக்கிரண்டில்லை; இந்தப் பசுவின் கன்றைக் கொன்ற பழிக்கு ஈடாக என் புத்திரனைக் கொலை செய்வதே நிச்சயமாகிய தீர்ப்பு”
-என்று சொல்லிவிட்டு, பின்பு மந்திரிகளுக்குள் கலாவல்லபன் என்கிற மந்திரியைப் பார்த்து “மந்திரி! என் புத்திரனை யழைத்துப்போய் அந்தக் கன்று இறந்து கிடக்கின்ற வீதியிற் கடத்தி, நீ தேரிலேறிக் கொண்டு அவனுடம்பின்மேற் தேர்ச்சக்கர மேறும்படி செய்து கொலை செய்து வருவாய்” என்று கட்டளையிட்டார். அப்போது மற்ற மந்திரிகளெல்லாம் கைநெரித்துக் கொண்டு கண்களிலே நீரரும்ப மனங்கலங்கிப் பிரமைகொண்டு நின்றார்கள்.
கலாவல்லப னென்கிற மந்திரியானவன், கடுந்தவம் புரிந்து பெற்ற கவுத்துவ மணியைக் கடலிலெறிந்து விட்டு வாவென்றும், பலநாள் வருந்தி வளர்த்த பஞ்சவர்ணக் கிளியைப் பருந்துக் கிரையிட்டு வாவென்றும், செய்தற்கரிய தவஞ் செய்து பெற்ற தேவாமுதத்தைச் சேற்றிற் கழித்த வாவென்றும் சொல்லக் கேட்டவன்போல் திடுக்கிட்டு உணர்வழிந்தும், திகைப்பூண்டு மிதித்தவன்போல் மயங்கி நின்றும், சற்று உணர்வுதோன்ற அது விஷயத்தில் மனமில்லாதவனா யிருந்தும் அரசன் ஆணையைத் தடுப்பதற்கு அஞ்சி வணங்கி விடைபெற்றுக் கொண்டு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டுத் தளர்ந்த நடையோடு முகங்கருகி நெடுமூச்ச விட்டுக்கொண்டு,
“சிவசிவா! சம்போ! சம்போ! இந்தப் பாதகஞ் செய்யத்தானோ நான் மந்திரியாக ஏற்பட்டேன்! கொலையென்று சொல்லுகின்றோர்களைப் பார்த்தாலும் பயங் கொள்ளுகின்ற எனக்குத் தானோ இப்படிப்பட்ட விதி வர வேண்டும்! இந்தக் காரியத்தைச் செய்யாது விடுவோ மென்றால் அரசன் கட்டளையைக் கடந்தா னென்னுங் குற்றம் நேரிடுமென்றும், அல்லது செய்வோமென்றால் நமது உயிர்போற் சிறந்த வீதிவிடங்கன் விஷயத்தில் எப்படிக் கொலைசெய்யத் துணிவு உண்டாகுமென்று எண்ணி யெண்ணி என் மனம் இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்புபோல் திகைக்கின்றதே! இதற்கு என்ன செய்வேன்! என்ன செய்வேன்!” என்று வருந்தி வருந்தி ஒரு கால் முன் வைப்பதும் மற்றொரு கால் பின் வைப்பதுமாகி ஊசலாடுகின்றவனைப் போல் அலைந்தும்,
வேந்தன் விஷமுண்ணென்று கட்டளையிடினும் உண்ண வேண்டிய உரிமை நமக் கிருக்கிறபடியால் போய்த் தொலைப்போம் என்று சற்றே நடந்து, ‘எண்ணுதற்கும் யோக்கியமல்லாத இப்பாதகத்தை யெப்படிச் செய்வோம்’ என்று சற்றே நின்று நடைத்தூக்கங் கொண்டவன்போல் தெளிந்தும் மயங்கியும், பித்தம் பிடித்தவன்போல் பிதற்றியும், கண்ணீர் சொரிந்து கலங்கினாவனாகிப் பின்பு தெளிந்து,
‘அரசன் நமக்கும் தந்தையாதலால் வீதிவிடங்கன் செய்த குற்றத்தை நாமேற்றுக் கொண்டு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்’ என்று துணிவுகொண்டு, அக்கன்று இறந்து கிடக்கிற வீதியினிடத்து அணைகடந்த வெள்ளம்போல் அதிவேகமாக வந்து நின்று, தன்னரையி லிருந்த உடைவாளை உறையிலிருந்துருவியெடுத்துக் கொண்டு, தனது கழுத்தில் வைத்து ஊட்டியை அரிந்துகொண்டு உயிரிழந்து விழுந்தான்.
.அதுகண்டு சில ஒற்றர்கள் அதிசீக்கிரமாகப்போய் மனுச்சோழரிடத்தில் “ஆண்டவரே! தேவரீர்க்குக் கண்போல் விளங்கிய கலாவல்லபனென்னும் மந்திரியானவர் சேங்கன்றிறந்து கிடக்கின்ற தெருவிற்போய் அரையிலிருந்த உடைவாளைக் கொண்டு தமது கழுத்தை யரிந்துகொண் டிறந்துவிட்டார்” என்று விண்ணப்பஞ் செய்தார்கள்.
.அதுகேட்ட அரசன் அளிந்த புண்ணில் அம்பு பட்டதுபோல் துடிதுடித்து மிகவும் மனங் கலங்கி “ஓஹோ இதென்ன பாவம்! இதென்ன பாவம்! ஐயோ! கலாவல்லபனென்கிற மந்திரியானவன் நானிட்ட ஏவலைச் செய்வதற்குச் சம்மதித்தவன்போல் சென்றது ‘நம் அரசனுக்குக் கன்றைப்பற்றி வந்த பழி மாத்திரம் போதாது, நாமும் பழி சுமத்துவோம்’ என நினைத்துத்தானோ! எனக்கு நேரிட்ட இடரை யறிந்தும் எரியுங் கொள்ளியை யேறத் தள்ளுவது போலவும், நீண்டெரியும் நெருப்பில் நெய்விடுவது போலவும், அவ்விடருக்குமே லிடருண்டாகும்படி செய்தானே!
கப்பல் உடைந்து கலங்கும்போது மந்திரி பழியும் வளைத்துக் கொண்டதே! எனக்கு வந்த துன்பமெல்லாந் தனக்கு வந்ததாக வெண்ணி, என்னை இரவும் பகலும் காத்திருந்த மதியுள்ள மந்திரியை யினி எக்காலத்திற் காண்பேன்! இதைக் கேட்டவர்களெல்லாம் ‘இதென்ன கொடுமையோ! கொள்ளை கொண்டவனை விட்டுக் குறுக்கே வந்தவன் மேற் குற்றம் நாட்டியதுபோலவும், கொண்ட மனையாளிருக்கக் கூலிவாங்க வந்தவளைத் தாலிவாங்கச் சொன்னது போலவும், பசுங்கன்றைக் கொன்ற தன் புதல்வனிருக்கவும், அவனைவிட்டு அப்பழியை அமைச்சன்மேல் வைத்து அவனுயிரை வாங்கச் சொன்ன இவ்வரசன் அநியாயக்காரன்’ என்று இகழ்ச்சி செய்வார்களே!
அறிவில்லாதவன் செய்த காரியம் பயன்படாதது மாத்திரமோ? பழியும் பாவமும் கொடுக்குமென்ற பெரியோர் வார்த்தைக்கு இலக்காயினேன்! ஐயோ! நான் என்ன காரியஞ் செய்தேன்! என்ன காரியஞ் செய்தேன்!” என்றும்,
“திருவாரூர்ப் பூங்கோயிலினிடத்தெழுந்தருளிய தெய்வமே! அடுத்தவர்களுக்கு அருள்செய்கின்ற ஆண்டவனே! உன்னை நம்பியிருக்கின்ற அடியேனை இப்படிப்பட்ட சோதனையுஞ் செய்யலாமோ! உன் திருவடிகளுக்கு ஆளாகியிருக்கிற அடியேனை இப்படிப்பட்ட பழிக்கும் ஆளாக்கலாமோ!” என்றும் பலவிதமாகப் புலம்பிப் பரிதபித்துக்கொண்டு,
“பின்னே துக்கம் தருவதான காரியங்களை முன்னே அறிந்து அக்காரியத்தைச் செய்யாதுவிட வேண்டும்; ஆலோசித்தறியாது செய்துவிட்டால் அதுபற்றித் துயரப்படாமல் மேல் செய்யத்தக்க காரியங்களை ஆலசியப்படுத்தாமல் செய்ய வேண்டுமாதலால், வருவது தெரியாது மந்திரியை யனுப்பிய நாம் துக்கப்படுவதிற் பயனென்ன? இனி நாமே போய்ப் புத்திரனைத் தேர்க்காலி லூர்ந்து, மந்திரி பழிக்கு நம்முயிரைக் கொடுத்துவிடுவோம்” என்றெண்ணி, அரண்மனைக்குப் புறத்தில் வந்து, தமது புத்திரனை யழைத்து வரும்படி காவற்காரர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர்கள் கண்ணீர் வடிந்த முகத்துடன் “ஐயோ! மனுநீதி தவறாத மன்னவனுக்கும் இப்படிப்பட்ட ஆபத்து நேரிடலாமோ! நமது இளவரசனாகிய வீதிவிடங்கனிடத்திற் சென்று ‘ஐயா! உம்மை அரசன் அழைத்துவரச் சொன்னார்’ என்று எவ்வாறு சொல்வோம்! என்ன செய்வோம்!” என்று துயர்கொண்டு வீதிவிடங்கன் இருக்கும் அரண்மனைக்குச் சென்றார்கள்.
$$$
2 thoughts on “மனுமுறை கண்ட வாசகம்- 4”