-வள்ளலார்
“மனுநூலில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்தூரம் நீண்ட பெயரைச் சுமந்த நான், என் புத்திரனுக்காக அமைச்சர்களாகிய நீங்கள் சொல்வது போல நடந்தால் உலகம் என்னைப் பழிக்காதா?” என்று கேட்கிறார் மனுநீதி சோழன். வள்ளலார் மனுநீதி நூலைப் போற்றியதற்கான ஆதாரம் ‘மனுமுறை கண்ட வாசகம்’ அல்லவா?

.அச்சொல்லானது வெந்த புண்ணில் வேலுருவியதுபோல் மணியொலி கேட்டு வருந்தியிருந்த செவிகளினுள்ளே சென்றுருவிச் சுருக்கிட்டு வெதுப்ப விழுந்து, விஷந்தலைக்கேறினாற்போல வேதனையடைந்து, அஞ்சுபுலனும் அறிவுங் கலங்கிப் பஞ்சப் பிராணனும் பதைபதைத்தொடுங்க, பேச்சு மூச்சில்லாமற் சோர்ந்து கிடந்து, அருகிலிருந்த அமைச்சர்கள் செய்த சாந்தோபசாரத்தினால் சோர்வு நீங்கி அப்பசுவை யடிக்கடி பார்த்துப் பார்த்து, கண்ணீரிர் கடல்வெள்ளம் போல் பெருகவும் நெருப்பில் விட்ட நெய்யைப் போல் நெஞ்சம் உருகவும்,
“ஐயோ! இந்தப் பசுவுக்கு இப்படிப்பட்ட துக்க முண்டாவதற்கு நானே முக்கிய காரணமாக இருந்தேனே; தன் கன்றுக்கு அபாயமொன்று மில்லாதிருக்கினும் சுபாவத்திலே காணுந்தோறுங் கதறி யுருகுகின்ற அன்பையுடைய இந்தப் பசுவானது தன் கன்று இறந்து கிடக்கின்றதைக் கண்டபோது எப்படி யுருகியதோ! என்ன பாடுபட்டதோ! கன்று சமீபத்திலிராமல் சற்றே தூரத்திலிருக்கினும் பார்த்துப் பார்த்துப் பதைக்கின்றதும், ‘அம்மா! அம்மா!’ என்று அலறுகின்றதுமாகிய சுபாவச் செய்கைகளையுடைய பசுவானது, கன்று இறந்து கண்மறைவிற் கிடக்கின்றதை எண்ணி எண்ணி எப்படிப் பதைக்கின்றதோ! ஐயோ! அடிக்கடி அலறுகின்றதே!
புலி முதலான துஷ்ட மிருகங்களிலொன்று எதிரிடுமானால் முன்சென்று தன்னுயிரைக் கொடுத்தாயினுங் கன்றினுயிரைக் காக்க வேண்டுமென்னுங் கருத்துள்ள பசுவுக்கு, இறந்த கன்றை எதிர்கண்டபோது எப்படி உயிர் பதறியதோ! சிவசிவா! சிறுகன்று தேர்க்காலில் அகப்பட்டபோது எப்படித் துடித்ததோ என்று எண்ணுந் தோறும் என்னுள்ளம் பகீரென்று பதைக்கின்றதே! இந்தப் பசுவானது குள்ளனைக் கொண்டு ஆழம்பார்க்க வந்தது போலவும், பேயைத் தெய்வமென்று பிள்ளைவரங் கேட்க வந்தது போலவும், கொல்லையாள் காட்டியைக் கூலி கேட்க வந்தது போலவும், விழலினிடத்து நிழலுக்கு வந்தது போலவும், என்னைக் கொண்டு தன் துயரைத் தீர்த்துக்கொள்ள எண்ணியல்லவோ இவ்வாராய்ச்சிமணியை அசைத்து இவ்விடத்து நிற்கின்றது! இதற்க என்ன செய்வேன்!
.“எமன் கையிலகப்பட்ட உயிர் எந்த விதத்தாலுந் திரும்பாதென்று உலகத்தார் சொல்லும் உறுதியான வார்த்தை வீண்போக, முன்னொரு காலத்தில் நமது நகரத்தில் ஓரந்தண னீன்ற சிறுவன் அகாலத்தில் மரணமடைய, அதுபற்றி அவ்வந்தணன் துயர்கொண்டு தமது சமூகத்தில் வந்து, ‘சிவநெறி திறம்பாமற் செங்கோல் செலுத்துகிற உமது காவலைக் கடந்து அகாலத்திலே அந்தகன் வந்து இரவும் பகலுந் தவஞ்செய்து யான் அருமையாகப் பெற்ற ஒரு பேறான புத்திரனை உயிர்கொண்டு போனானே தலைவனே! இது தகுமோ!’ என்று முகமும் மனமுஞ் சோர்ந்து முறையிட்டுக் கொள்ள, அதுகேட்டு மனமுருகி நொந்து, சிவபெருமான் திருவடியன்றி மற்றொன்றிலும் மனம் வையாத தமது வல்லமையால் எமலோகத்திலிருந்த உயிரை மீட்டுக் கொண்டு வந்து முன்னிருந்த உடலில் விட்டு, அவ்வந்தணனை மகிழ்ச்சி செய்வித்து, அன்றுதொட்டு எமனைத் தாமுள்ள வரையிலும் தமது நகரத்திலும் நாட்டிலும் வரவொட்டாமற் செய்த என் குலமுதல்வராகிய சைவச்சோழரைப் போல, அவ்வளவு பெரிதான காரியஞ் செய்யாவிட்டாலும், இப் பசுங்கன்றின் உயிரொன்றை மாத்திரமானாலும் மீட்டுக்கொடுக்க வலியற்றவனாக விருக்கின்றேனே!
.“அவமிருத்து நேரிட்டபோது சஞ்சீவகரணி என்னுந் தெய்வத்தன்மையுள்ள மருந்தைக் கொடுத்துப் பிழைப்பிக்கச்செய்த என் குலத்தலைவர்களிற் சிலர்போல் அம்மருந்தையாயினும் பெற்றுக்கொள்ளத்தக்க தவஞ்செய்தேனோ! தமது அஜாக்கிரதையினால் பிற உயிர்க்குக் கெடுதி நேரிட்டபோது அது பொறாமல் தம்முயிரை விட்டுவிட்ட சில அரசர்களைப் போல என் அஜாக்கிரதையினால் நேரிட்ட இப் பசுங்கன்றின் முடிவைக் கேட்டறிந்த நான் உயிரையாயினும் விட்டேனோ!
அன்னிய தேசத்தரசர் குற்றஞ் செய்தோரைக் கொலை செய்தாரென்று கேட்டாலும் ‘குற்றம் வந்ததென்ன! கொலை செய்ததென்ன!’ என்று குலைநடுங்குகின்ற நல்லோர்கள் மரபில், நான் குற்றம் வரவும் கொலைசெய்யவும் அரசுசெலுத்தி, அந்த நல்லோர்கள் இயல்புக்கு நாணமுண்டாகத் தானோ வீட்டின் வாயிலில் வெள்ளெருக்குப் பூத்ததுபோலத் தோன்றினேன்!
.“நாம் அரசாட்சி செய்ய ஏற்பட்ட நாள்தொட்டு இந்நாள் வரையிலும் எவ்வுயிரும் எவ்விதத்திலும் யாதொரு குறையுமில்லாமல் வாழ்ந்து மகிழ்ந்திருக்க, நீதியுடன் முறை தவறாது செங்கோல் செலுத்தி வரும்படி சிவானுக்கிரகம் பெற்றோமே என்பதுபற்றி ஒருநாழிகைக்கு முன் வரையிலும் உண்டாயிருந்த மனக்களிப்பையெல்லாம் மண்ணிற் கவிழ்த்தேனே!
‘நாமும் பழிபாவங்களுக்கப் பயந்தே அறநெறி தவறாது அரசு செலுத்தி வருகிறோம், பழைய தரித்திரனுக்குப் பணங்கிடைத்ததுபோல் நமக்கும் சிவானுக்கிரகத்தால் ஒரு சிறுவன் பிறந்தான், அவனும் கற்றவர் மகிழக் கல்வி கேள்விகளில் நிறைந்து பண்பும் பருவமும் உடையவனானான்; இனி நமக்கென்ன குறை?’ என்றெண்ணி எண்ணி இறுமாப்படைந்தேனே!
‘புத்திரப்பேறு பெற்றுப் புனிதனானோம்’ என்று பூரித்திருந்தேனே! ‘நமது புத்திரன் இளவரசுப் பட்டத்திற்கேற்றவனானான், இனிக்கல்யாணஞ் செய்விப்போம்’ என்று கனவு கண்டிருந்தேனே! ‘நமது புத்திரன் நற்குணங்களை யுடையவனாக விருக்கின்றான், பெற்றெடுத்த நமது பேர் கொண்டுவருவான்’ என்று மனோராச்சியம் பண்ணி மகிழ்ந்திருந்தேனே!
இளங்கன்று எதிர்வரவுங் கண்கெட்டுக் கருத்தழிந்தவன்போல் தேரை நடத்தித் தீராப்பழிபூண்டானே! ஐயோ! இவன் என் செங்கோலைப் பிடிக்கத்தக்க செல்வப்பிள்ளை யாகாமல் தென்னம்பிள்ளை யானானே!
.“சிவதரிசனஞ் செய்யப் போகிறவன் தேரூர்ந்தே போகப்படாது; அவ்வாறு போயினும் நாற்புறத்திலும் நடப்போர்களை விலக்கும்படி ஆள்விலக்கிகளைவிட்டு, முன்னே பரிக்காரர் வரவு குறித்துப் போகப் பின்னே மெல்லெனத் தேரை விடவேண்டும்; அப்படிச் செய்யாமல் பாலியப்பருவம் பயமறியாது என்பதற்குச் சரியாகப் பரபரப்பாகத் தேரை நடத்திப் பசுங்கன்றைக் கொன்றான்!
ஐயோ! இவன் கல்வியறிவுள்ளவனாக விருந்தும் அறிவழிந்து அரசன் பிள்ளையாகாமல் அணிற்பிள்ளை யானானே! கொடிய பாதகங்களிலெல்லாம் கொலைப் பாதகமே தலையென்று வேதமுதலாகிய கலைகளில் தானும் படித்தறிந்தான், சான்றோர் சொல்லவுங் கேட்டறிந்தான்; அப்படி யறிந்திருந்தும் அப்பாதகஞ் சேரவொட்டாமல் தன்னைக் காத்துக்கொண்டு பட்டப்பிள்ளை யாகாமல் பழிப்பிள்ளையானானே; ஐயோ! புதல்வனைப் பெற்றால் புண்ணியம் பெறலாம் என்றெண்ணிய எனக்கு மலடாயிருந்தாலும் வாழ்வுண்டென்று நினைக்கும்படி நேரிட்டதே! நான் நெடுநாளாகத் தியாகராஜப் பெருமானை வேண்டிக்கொண்டது இப்படிப்பட்ட பெரிய பழிக்காளாகிய பிள்ளையைப் பெறத்தானோ!
.“பிள்ளையென்ன செய்யும்! பெருமான் என்ன செய்வான்! ‘மாதா பிதாக்கள் செய்தது மக்களுக்கு’ என்னும் பெரியோர் வார்த்தையின்படி நான் செய்த தீவினையே என் புத்திரனுக்க நேரிட்ட தென்று நினைத்து என்னை வெறுத்துக்கொள்ள வேண்டுமென்றாலும், இந்தப் பிறப்பில் என் புத்தியறிந்து ஒரு தீங்குஞ் செய்ததில்லையே! இந்தப் பிறப்பில் இல்லாவிட்டாலும் முற்பிறப்பிலே…
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
“ஐயோ! இந்தப் பசுவின் சோர்ந்த முகத்திற் கண்ணீர் ததும்புகின்றதைக் கண்ட என் கண்களை நுங்கு சூன்றெடுப்பதுபோலப் பிடுங்கி யெறியேனோ! ‘இதன் கன்றை உன்புத்திரன் தேர்க்காலில் ஊர்ந்து கொன்றான்’ என்று சொல்லக்கேட்ட என் செவிகளைச் செம்பு நீருருக்கிவிட்டுச் செவிடாக்கேனோ! இந்தப் பசு ஆராய்ச்சிமணியினால் தன் குறையை யறிவித்த நாழிகை தொட்டு இந்நாழிகை வரையிலும் அக்குறையைத் தீர்ப்பதற்கு வேண்டிய உறுதிமொழியைக் கூறாதிருக்கிற என் நாவைச் சூடுள்ள நெருப்பாற் சுட்டுவிடேனோ!
.“இதற்குத் துன்பமுண்டாக்கினவன் இன்னானென்று அறிந்தும், அவனை இன்னும் தண்டனை செய்யாது தாழ்த்திருக்கின்ற என் கைகளைக் கத்தியைக் கொண்டு கண்டித்து விடேனோ! இதன் கன்றைப் பிழைப்பிப்பதற்குத் தக்க நன்முயற்சியைத் தேடி நாலுதிக்குகளிலும் நடவாத என் காலைக் கோடரிகொண்டு குறுக்கே வெட்டேனோ! இதன் மெலிவை யடிக்கடி கண்டும் வற்றியொடுங்காத மலபாண்டமாகிய என் உடம்பை வாளாயுதங்கொண்டு மடித்துக் கொள்ளேனோ! இதன் பரிதாபத்தையும் நமக்கு நேரிட்ட பழியையும் எண்ணி உருகியழியாத உள்ளத்தை வலிய விஷத்தையிட்டு மாய்த்து விடேனோ!
.“நிலையிலா உயிர்க்கஞ்சி இவைகளில் ஒன்றுஞ் செய்யாது உயிர் வைத்திருக்கின்றேனே! என்ன செய்வேன்! பாவிக்குத் தீர்க்காயுள் என்பதற்குச் சரியாகப் பெரும் பாவியாகிய என்னுயிர் தனக்குத் தானேயும் போகின்றதில்லையே! ‘நல்ல பூஜாபலத்தினால் தெய்வபக்தியுடன் செங்கோல் செலுத்தி வருகின்றான் மனுச்சோழன்’ என்று மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் புகழ்ந்த புகழெல்லாம் பொய்யாய்ப் போய்விட்டதே! நான் அப்புகழை வேண்டினவனல்ல; ஆதலால் அது போகட்டும்; உயிரினும் ஒன்பது பங்கு அதிகமாகத் தேடிவைத்த புண்ணியமும் போகின்றதே!
.“ஆ! நான் நீதி தவறாது அரசு செய்கின்றேன் என்பதை நினைத்தால் எனக்கே ஏளனமாக விருக்கின்றதே! சேங்கன்றைத் தெருவிற் சிதைக்கவும் ஒருமித்த என் செங்கோலை அளவுகோலென்பேனோ! அஞ்சனக்கோ லென்பேனோ! எழுதுகோ லென்பேனோ! ஏற்றக்கோ லென்பேனோ! கத்தரிக்கோ லென்பேனோ! கன்னக்கோ லென்பேனோ! குருடன்கோ லென்பேனோ! கொடுங்கோ லென்பேனோ! துடைப்பங் கோலென்பேனோ! வைக்கோலென்பேனோ! அல்லது இன்று இறந்த பசுங்கன்றாகிய பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோ லென்பேனோ! என்ன கோலென்று எண்ணுவேன்!
.“இளங்கன்றைக் கொலை செய்யவுஞ் சம்மதித்திருந்த என் ஆக்கினா சக்கரத்தைக் கிரகச்சக்கர மென்பேனோ! வருஷ சக்கர மென்பேனோ! தண்டசக்கர மென்பேனோ! அல்லது இச்சேங்கன்றைச் சிதைத்த தேர்ச்சக்கர கன்றுக்கு அபாயம் நேரிடக் காத்திருந்த என் காவலைச் சிறு பெண் காக்கின்ற தினைக்காவ லென்பேனோ! குருடன் காக்கின்ற கொல்லைக் காவலென்பேனோ! புல்லாற் செய்த புருடன் காக்கின்ற புன்செய்க் காவலென்பேனோ! வரும்படி யில்லான் காக்கின்ற வாயிற்காவ லென்பேனோ! பயிரைக் காக்க வைத்த பண்ணைக் காவலென்பேனோ! வேலை வேண்டிக் காக்கின்ற வெறுங்காவ லென்பேனோ! அல்லது இக்கன்றை அடக்கஞ் செய்யக் காத்திருக்கின்ற அரிச்சந்திரன்காவ லென்பேனோ! என்ன காவலென்று எண்ணுவேன்!
.“என்ன செய்வேன்! ஐயோ! இப்படிப்பட்ட பாவியாகிய என்னை மனு வென்று பேரிட்டழைப்பது காராட்டை வெள்ளாடென்றும், அமங்கள வாரத்தை மங்கள வாரமென்றும், நாகப்பாம்பை நல்ல பாம்பென்றும் வழங்குகின்ற வழக்கம் போன்றதல்லது உண்மையல்லவே! இனி, இப்பசுங்கன்று உயிர்பெற்றெழுந்திருப்பதற்கு உபாயம் என் புத்திரனுயிரையன்றி யென்னுயிரையும் என் மனையாளுயிரையும் என்னரசாட்சியும், எனக்கு உரித்தாகிய எல்லாப் பொருள்களையுங் கொடுத்துவிட்டால் நேரிடுமென்று சொல்வோருண்டானால், இதோ கொடுத்துவிடுகிறேன். அவ்வாறு சொல்வோரு மில்லையே! இதற்கு நேரிட்ட துக்கமும் எனக்கிதனாலுண்டாகிய துயரமும் எப்படித் தீருமோ! இப்படி யென்றறியேனே! என்ன செய்வேன்!” என்று பலவிதமாகப் பரிதபீத்திருந்தார்.
.இந்தப் பிரகாரம் பரிதபித்து வருந்துகின்ற மனுச்சக்கரவர்த்தியை அருகிலிருந்த அமைச்சர்கள் நோக்கிக் கைகுவித்துத்தொழுது நின்று, “ஓ மனுநீதி தவறாத மஹாராஜனே! விதி வசத்தாலே வலிய வந்து மடிந்த இளங்கன்றைக் குறித்து நீர் துன்பப்படுவது உயிர்களிடத்து உமக்குள்ள காருண்ணியத்துக்கு இயல்பேயென்று எண்ணி இதுவரையும் எதிரொன்றுஞ் சொல்லாது சும்மா இருந்தோம்; இனிக் காரியக் கெடுதியில் வாய்மூடிக் கொண்டிருப்பது மந்திரிகளுக்கு அழகல்லவென்றபடியால், நாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டருள வேண்டும்.
உமது புத்திரன் சீவகாருண்ணியமே தேகமாகக் கொண்டவன். தான் பூமியதிராது எந்தச் செந்துக்கள் எதிர்வந்து அகப்பட்டுக் கொள்ளுமோவென்று கீழ்நோக்கி அஞ்சியஞ்சி மெல்லென நடக்கின்றபோது, வேறோர் அதிர்ச்சியினால் நடுங்கிச் சிற்றெறும்புகள் விரைவாக ஊர்ந்து போகின்றதைப் பார்த்துத் திடுக்கிட்டு, ‘ஓகோ என்ன பாவம்! இந்த உயிர்களுக்கு நடுக்கம் உண்டாக நடந்தோமே’ என்று எண்ணி முகஞ்சோர்ந்து பிரமைகொண்டு நிற்க நாங்கள் அனேக முறை பார்த்திருக்கின்றோம். அப்படிப்பட்ட கிருபையுள்ளவன் இந்தக் கன்றை அசாக்கிரதையினால் கொன்றானென்று எண்ணுவதற்கு இடமில்லை.
அன்றியும் அவருடன் சூழ்ந்து போன பிராமணர் முதலானோர்களுக்கும், தேரைக் சூழ்ந்துபோன எங்களுக்கும், தேர்க்குமுன் நடந்த ஜனங்களுக்கும், தெருவில் நின்று பார்த்திருந்த பிரஜைகளுக்கும் இலேசமுந் தெரியாதபடி அக்கன்று மாயமாகக் குதித்துவந்து மடிந்தது;
அன்றியும் தேர்க்கு முன்னே யானைவீரத் குதிரைவீரர் முதலானோர் அணியணியாக யூகம் வகுத்ததுபோல நெருங்கிப்போக, விருது பிடிப்போர், எச்சரிக்கை சொல்வோர், கட்டியங் கூறுவோர், பட்டாங்கு படிப்போர், சோர்வு பார்ப்போர், ஆள்விலக்கவோர் முதலானவர்கள் நடக்க, இத்தனை பேரையுங் கடந்து, தேர்க்குச் சமீபத்தில் சிங்கக்குட்டியாயிருந்தாலும் வர மாட்டாது; இதுவோ கோல்பிடித்தவனைக் கண்டால் கூப்பிடுதூரம் ஓடுகின்ற இயல்பையுடைய இளங்கன்று; இந்தக் கன்று அந்தக் காவலை யெல்லாங் கடந்து தேர்க்குச் சமீபத்தில் எதிரே துள்ளியோடி வந்ததென்றால், இந்திரசால மென்றுதான் எண்ண வேண்டுவதாக விருக்கின்றது!
.“ஆதலால் அக்கன்றை அதன் விதியே இப்படிப்பட்ட ஆச்சரிய மரணஞ் செய்வித்ததன்றி உமது புத்திரன் செய்வித்ததல்ல, இந்தக் காரியம் இப்படியிருக்க, புத்திரன் கொன்றானென்று அவனை நோவதும் அவனைப் பெற்றதனாற் பழி வந்ததென்று உம்மை நீர் நோவதும், எய்தவன் இருக்க அம்மை நோவது போலவும் அம்பு செய்து கொடுத்த கருமானை நோவது போலவும் அல்லவோ இருக்கின்றது?
நீர் சகல கலைகளையுங் கற்றுக் கேள்வியில் மிகுந்து, அரசர்களெல்லாம் புகழ்ந்து கொண்டாடத்தக்க தன்மையை யுடையவர்; உமக்கு இது விஷயத்தில் நாங்கள் விரித்துச் சொல்ல வேண்டுவதென்ன? இனித் துன்பப்படுவதை விட்டு, ‘உயிர்க் கொலை தம்மை யறியாது நேரிட்டாலும் பிறர் செய்யக் கண்டாலும் அதற்குத்தக்க சாந்தி செய்துகொள்ள வேண்டும்’ என்னும் விதிப்படி வினைவசத்தால் நேரிட்ட இந்தக் கன்றின் கொலைக்கு முன்னிலையாகவிருந்த உமது புத்திரனையும் பெரியோர்களைக் கொண்டு இதற்குத் தக்க பிராயச்சித்தத்தை யறிந்து செய்விக்க வேண்டுவதே உமக்கு முறை” என்று சொன்னார்கள்.
.அதுகேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர் வியர்வு, துடிப்பு, நகை முதலான கோபக்குறிகள் தோன்ற மந்திரிகளைப் பார்த்து, “அமைச்சர்களே! உங்கள் நியாயம் நன்றாயிருந்தது; நீங்கள் சொல்லிய நீதி உங்களுக்கே ஒப்பாகுமல்லது தருமதேவதை சம்மதிக்குமோ! கன்றையிழந்து வருந்துகின்ற இப்பசுவின் சஞ்சலத்தையாவது சாந்தப்படுத்துமோ?
இப்படி நீங்கள் சொல்லியது என் முகத்தைக் குறித்தோ? என் புத்திரன் உயிருக் கிரங்கியோ? அல்லது உங்கள் ஜீவனத்தை எண்ணியோ? எது பற்றியோ? உலகத்தையாளும் அரசன் ஆசை பற்றியாவது வெகுளி பற்றியாவது, தாட்சண்ணியம் பற்றியாவது, உறவு பற்றியாவது, நடுநிலையாக நியாயங்கண்டு சொல்லாமல் மாறுபட்டால், அதை மறுத்து, ‘இது விஷயத்தில் அரசன் நம்மைக் கொல்லுவானாயினுங் கொல்லட்டும், அவனுக்கு உறுதி கூறுவதே நமக்குக் கடன்’ என்று நிச்சயித்துக்கொண்டு, நியாயங்கண்டு நடுநிலையாகச் சொல்வது மதியுடைய மந்திரிகளக்குத் தருமமாக விருக்க, நீங்கள் அதை நினையாமல் இப்படிச் சொல்லியது என்ன நினைத்தோ?
சந்திரசூரியர் திசை மாறினாலும், சமுத்திரந் தடை மீறினாலும், மகாமேரு நிலைகுலைந்தாலும் மனங் கலங்காது விவகாரங்களிற் பழுதுவாராது பாதுகாக்கின்ற குணத்தையுடைய நீங்கள்,
இன்று நீதியில்லாத சில குறும்பரசனைக் கூடி, அவ்வரசர் தூளியென்றால் நிர்த்தூளியென்றும், கரும்பு கசப்பென்றால் எட்டிக்காய்போற் கசப்பென்றும், தாயைக் கொலைசெய்வது தக்கதென்றால் வேதத்தின் முதற்காண்டத்தில் விதித்திருக்கின்ற தென்றும், வெள்ளத்திற் கல் மிதக்கமோவென்றால் ஆற்றில் அம்மி மிதக்கக் கண்டோமென்றும், காக்கை வெளுப்பென்றால் நேற்றைப்பொழுதில் நிற்கக் கண்டோமென்றும், கல்லின்மேல் நெல்லு முளைக்குமென்றால் கொத்தாலாயிரங் குலையாலாயிர மென்றும்,
கள்ளனைப் பிடிக்கலாமோ வென்றால் பிடித்தால் பெரும் பாவசமல்லவோ வென்றும், பொய் ஆயிரமட்டுஞ் சொல்லலாமோ வென்றால் ஐயாயிரமட்டுஞ் சொல்லலாமென்று விதியிருக்கிறதென்றும், பெண்சாதியுள்ளவனுக்குப் பிள்ளை கொடுப்பது ஆரென்றால் ஐயா! பெண் கொடுத்தவனே பிள்ளை கொடுக்க வேண்டுமென்றும், ஒருவன் மனையாள் மற்றொருவனைக் கூடலாமோ வென்றால் அடக்கத்தில் ஆயிரம் பேரோடு கூடினாலுங் குற்றமில்லை யென்றும், இந்தக்கழுவில் இவனை யேற்றலாமோ வென்றால் கழுவுக்குத்தக்க கனமில்லை யென்றும்,
என் பிள்ளையும் எச்சரிக்கைக்காரன் பிள்ளையும் ஒருவனை யொருவன் உதாசினமாகத் திட்டினாராம் இதற்கென்ன செய்யலா மென்றால் உமது சற்புத்திரன் வாய்க்குச் சர்க்கரையிட வேண்டும், மற்றவன் வாய்க்கு மண்ணிட வேண்டுமென்றும் சொல்லுகின்ற துர்மந்திரிகளைப் போல, நியாயம் பாராது, நயிச்சிய வார்த்தைகளைச் சொன்னீர்கள்; இது காலவேற்றுமையென்றே யெண்ணுகிறேன்.
.“தன்னைக் கொடுத்தாவது தருமத்தைத் தேட வேண்டுமென்னும் பெரியோர் வார்த்தையைப் பிடிப்பது சற்குணமுடையோர்க்குத் தகுதியென்றும், தாய் தந்தை யிடத்திலாயினுந் தராசுக்கோல்போலச் செப்பமாக நின்று தீர்ப்புக்கொடுக்க வேண்டுவது அரசர்க்கு அவசியம் வேண்டிய சற்கருமமென்றும் எனக்கு அடிக்கடி அறிக்கையிட்ட நீங்கள், இன்று, அதோகதியில் தள்ளிவிடத்தக்க அநியாயத் தீர்ப்பை யங்கீகரிக்கப் போதிக்கின்றீர்கள். இது உங்களிடத்து நேரிட்ட அவஸ்தை வசமென்றே யெண்ணுகிறேன்.
ஒருவரிடத்துத் தண்டனை விதிக்கும்போது எவ்வுயிர்களும் தன்னுயிர்போல் எண்ணுவதும், எந்தப்பொருள் எந்தப்பிரகாரமாயிருந்தாலும் அந்தப் பொருளினுண்மையை யறிந்து கொள்வதும், உருவுநோக்காது அறிவை நோக்குவதும், ஊழ்வினை நோக்காது செய்வினை நோக்குவதுமாகிய இப்படிப்பட்ட இலக்கணங்களுக்குப் பொருந்த விதிக்க வேண்டுமென்று எனக்கு அறிவித்துவந்த நீங்கள், இன்று என் புத்திரன் இரக்கமுள்ளவனென்றும், அதவன் அசாக்கிரதையினால் கொன்றதல்லவென்றும், பழவினையாற் பசுங்கன்று மடிந்ததென்றும், அதனால் அதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்விக்க வேண்டுமென்றும், வாதியை மாத்திரம் வரவழைத்துக் கொண்டு நடுக் கொள்ளைக்காரன் நியாயந் தீர்த்தா னென்பது போற் சொல்லி நின்றீர்கள்.
ஓஹோ! அமைச்சர்களே! உங்களை, ‘அந்நாளிருந்த அமைச்சர்களல்ல, இந்நாளில் என்னைக் கெடுக்க நினைத்துக்கொண்டு எங்கேயிருந்து வந்தவர்களோ!’ என்று எண்ணுகின்றேன். ஐயோ! எனக்கு இப்படிப்பட்ட அநியாயத்தைக் கற்பித்தோ இம்மை மறுமை யின்பங்களை வருவிப்பீர்கள்!
என்றும் மீளாத சிவகதியை யடையத் தக்க உறுதி வார்த்தைகளைப் பேசிய நீங்கள், இன்று, என்றும் மீளாத அவகதியை யடையத்தக்க இழிவுள்ள வார்த்தைகளைப் பேச எங்கே கற்றுக்கொண்டீர்களோ! ஆ! ஆ!! இந்த ஓரவஞ்சனையை உற்று நினைக்குந்தோறும் நெஞ்சந் திடுக்கிடுகின்றதே!
உங்கள் சொற்படி இது காரியத்தில் உடன்பட்டேனானால் தருமமும் தவமும் சலிப்படையுமே! இக்காலத்தில் எனக்கு மேற்பட்டவர்களில்லை யென்று வழக்கழிவு செய்து வஞ்சித்துப் பேசுவேனானால், காலம் போகும் வார்த்தை நிற்குமே!
மனுநூலில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்தூரம் நீண்ட பெயரைச் சுமந்த நான் இதற்குச் சம்மதித்தேனானால், எழுத்தறியாதவன் ஏட்டைச் சுமந்தது போலவும், கண்ணில்லாதவன் கண்ணாடியைச் சுமந்தது போலவும், வாசனையறியாதவன் மலரைச் சுமந்ததுபோலவும் வீணாகவே இந்தப் பெயரை எடுத்துக்கொண்டானென்று ஏழுலகத்தாரும் இகழ்ந்து பேசுவார்களே!
இன்றைக்கு என் புத்திரன் செய்த இந்தக் கொடுங் கொலையாகிய பாதகத்துக்குப் பரிகாரஞ் செய்து, இலேசாக விட்டு, நாளைக்கு மற்றொருவன் இதைப் பார்க்கினுஞ் சிறிய கொலை யொன்று செய்யக் கண்டு, அவனைக் கொலை செய்விப்பேனானால், ‘தருமமறியாத இவ்வரசன் தனக் கொன்று பிறர்க்கொன்று செய்கின்றான் என்று பார்த்தவர்களெல்லாம் பழித்துப் பேசுவார்களே;
அல்லது ‘தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாது விடாது’ என்பது போல என் புத்திரன் செய்த கொலையென்று ஆசையால் அடக்கிக் கொள்வேனானால், அது பற்றி வரும் பழிபாவங்கள் என்னை யடையாமலிருக்குமோ?
ஆதலால், இப் பசுவானது அருமையான இளங்கன்றை இழந்து வருந்துகின்றதைத் தவிர்க்க வழியில்லாதவனாகிய நானும், இந்தப் பசுவைப்போல நெடுநாளாக வருந்தி அருமையாகப் பெற்ற என் புத்திரனைப் பழிக்குப் பழியாகக் கொன்று வருத்தங் கொள்வதே தகுதி” என்று சொல்லினார்.
$$$
3 thoughts on “மனுமுறை கண்ட வாசகம்- 3”