வள்ளலார் ஒரு சனாதனியே!

-அரவிந்தன் நீலகண்டன்

வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும்,  ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....

நாம் ஆனந்த சுதந்திரத்தின் அமுதகாலத்தைக் கொண்டாடுகிறோம். விடுதலைப் போராட்டம் என்றவுடன் நம் நினைவில் வருவது வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் வீர சாவர்க்கர் வரை. கோபால கிருஷ்ண கோகலே, கர்மவீரர் காமராஜர், மகாத்மா காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திர போஸும் தான். ஆனால் விடுதலை என்பது அரசியல் விடுதலை மட்டும் அல்ல. ஸ்வராஜ்ஜியம் என்பது பண்பாட்டு விடுதலையையும் நம் ஆன்மிக மரபை மீண்டும் உலக அரங்கில் உயர்த்துவதையும் நிறைவேற்றும் களம்.  அதற்கு நம் சுயத்தை நாம் அடைய வேண்டும்.  

அப்படி பாரதிய சுயத்தை நாம் அறிந்திடவும் உணர்ந்திடவும் அதை நம் வாழ்வில் உயிராகக் கொண்டிடவும் வழிகாட்டியவர்களில் மிக முக்கியமானவர் வடலூர் வள்ளல் பெருமான் என்றும், சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் என்றும் அழைக்கப்படும் வள்ளலார்.

அண்மையில் நம் மேதகு ஆளுநர் சொன்னார், “எப்படி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கும் போதெல்லாம் அவதாரமெடுப்பதாக பார்த்தனிடம் உறுதி சொன்னாரோ அதே போல நம் சமூகம் உய்ய வந்த சனாதன ஆன்மிகப் பேரொளி  வள்ளலார்” என்று. திராவிடக் கூட்டத்துக்கு வந்துவிட்டது ஆத்திரம். அவர்கள் பார்வையில் வள்ளலார் ஈ.வெ.ராமசாமியின் முன்னோடி. அவர் கலகக்காரர் என்றும் அவரது சன்மார்க்கத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்கள்.  நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் இப்படி சமூக ஊடகமான ட்விட்டரில் சொன்னார்கள். வள்ளலார் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கலகக்காரர். சனாதனத்துக்கு எதிரானவர் என்றனர்.

யார் சொல்வது சரி? ஆளுநர் கூறுவதா அல்லது திமுக அமைச்சரும் மார்க்சியவாதியும் சொல்வதா?

முதலில் சனாதன தர்மம் என்றால் என்ன? நவீன காலகட்டத்தில் சாதிக் கொடுமைகளையும் தீண்டாமையையும் கடுமையாக எதிர்த்தவர் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி. பெண்களின் திருமண வயதை உயர்த்துவது தொடங்கி, பெண்கள் கல்வி உட்பட பல விடயங்களில் முற்போக்குச் சிந்தனையுடன் போராடியவர். அவர் தம் மார்க்கத்தை  ‘வேத மார்க்க சனாதன தர்மம்’ என்றே அழைத்தார்.

ஸ்ரீ அரவிந்தர் தமது புகழ்பெற்ற உத்தர்பாரா பேருரையில், நம்முடைய தர்மம் சனாதன தர்மம் என்றும் இது முழுமையான வாழ்வியல் வெறும் நம்பிக்கை சார்ந்த மதமல்ல என்றும், இதில் அனைவருக்கும் இடம் உண்டு என்றும், இதில் பாகுபாடுகளுக்கும் ஒதுக்கி வைப்பதற்கும் இடமில்லை என்றும் உரைத்தார்.   ‘தேசபக்தியே சனாதன தர்மம்’ என்றார் அவர்.

மகாத்மா காந்தி தம்மை ‘சனாதன ஹிந்து’ என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டார். வேத அடிப்படையிலான வர்ணாஸ்ரமத்தையே தாம் நம்புவதாகவும் அதில் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீண்டாமைக்கும் கிஞ்சித்தும் இடமில்லை என்றும் அவர் கூறினார். 

 சமுதாய சீர்திருத்தங்களை எதிர்த்தவர்களும் தம்மை  ‘சனாதன தர்மிகள்’ என்றே கூறிக் கொண்டனர். இந்தச் சூழலில் எது உண்மையான சனாதன தர்மம்?

எதை இந்த தேசத்தை வடிவமைத்த பெரும் ஞானிகள் சனாதன தர்மம் என்று சொல்லியிருக்கிறார்களோ அதையே நாம் சனாதன தர்மம் என்று சொல்ல வேண்டும். மகாயோகி ஸ்ரீ அரவிந்தரும் மகாத்மா காந்தியும் எதை சனாதன தர்மம் என்று சொல்லியிருக்கிறார்களோ அதுவே சனாதன தர்மம்.

மாறாக, சமுதாயத்துக்கு ஒவ்வாத சில கோட்பாடுகள் தாம் சனாதன தர்மம் என்று சொல்லி வாதிடுவது கடந்த காலம் எனும் கிணற்றுள் கிணற்றுத்தவளையாக வாழ்வது போலத்தான். நம் திமுக அமைச்சர் தென்னரசும், மார்க்சிய கட்சியின் வெங்கடேசனும் இறந்த காலத்தின் கிணற்றுத் தவளைகள்.

சனாதனம் என்றால் அழியாதது என்று பொருள். அழியாத வாழ்வின் விஞ்ஞானத்தை நமக்கு அளிப்பது சனாதன ஹிந்து சமயம் என்பது அருட்பிரகாச வள்ளலாரின் வார்த்தைகள். அவை வருமாறு:

ஹிந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி, ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்த சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை.  ஒருவேளை அப்படியிருக்கிறதாகக் காணப்படுமாகில் அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது உண்மை.

எனவே ஹிந்து வேதாகமங்கள் சாகாக் கல்வியை கொடுக்கின்றன என்பதை வள்ளலார் சொல்லுகிறார் என்பதுடன், அதே சாகாக்கலையை அளிக்கும் சாதனையை சுத்த சமரச சன்மார்க்கம் என்றும் சொல்லுகிறார் என்றால், சனாதன தர்மமும் சன்மார்க்க நெறியும் கூறுவது ஒன்றே என்பது தெளிவாகிறது அல்லவா?    

வள்ளல் பெருமானார் வாழ்ந்த காலம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தென்னகத்தில் ஆழக் காலூன்றி நாட்டை ஆள ஆரம்பித்துவிட்ட காலம். இக் காலகட்டத்தில் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி வள்ளலார் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கும்பெனியார் தொடர்ந்து பல போர்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே அவர்களுக்கு ராணுவம் தேவைப்பட்டது. ராணுவத்துக்கு சாப்பாடு வேண்டும். பாரதத்தின் கால்நடைச் செல்வங்களின் மீது பிரிட்டிஷ் கண்கள் படர்ந்தன. அருமையான இறைச்சி.  ஆனால் பசுவதை என்பது தவறு என்ற எண்ணம் பாரத பண்பாட்டில் ஆழ்ந்து ,  பசுவை தாயாக வழிபடும் மனப்பான்மையைச் சிதைக்க வேண்டுமென்று நினைத்தனர். மெல்ல மெதுவாக நம் மக்களிடம் பிரிட்டிஷ் புரோட்டஸ்டண்ட் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசி என கல்வி மூலம் புகுத்தினர். பசு மற்றொரு விலங்குதானே அதைத்  தின்றால் என்ன? அதைக் கொன்றால் என்ன என்பது போன்ற சிந்தனைகள் படித்த மக்களிடையே மெல்ல எழ ஆரம்பித்தன. பிரிட்டிஷாரின்  இலக்கு, ஊரெங்கும் மாட்டுக்கறிக் கடைகளும் மாட்டு மாமிச உணவுச் சாலைகளும்.

இதனைக் கண்ணுற்றார் வள்ளல் பெருமான்.  இதன் விளைவுகளை எண்ணி வருந்தினார்.  இதனால், முதன்மையாக நம் பண்பாட்டின் முக்கிய அம்சமான ஜீவகாருண்யம் அழிந்துவிடும். இரண்டாவதாக நம் விவசாயம் மிக மோசமான க்ஷீண தசையை அடையும்.  ஏற்கனவே பிரிட்டிஷார் நம் விவசாய முறைகளை மாற்றி அமைத்து வந்தனர். ஒரு வேள்வியாகச் செய்யப்பட்ட விவசாயம் நிலவுடமையாளர்களால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வரிகள் செலுத்தி தம்முடைய லாபத்தை மட்டுமே பார்க்கும் செயலாக மாறிக் கொண்டிருந்தது. இவை எல்லாம் எங்கே கொண்டு செல்லும்? பஞ்சங்களையும் பட்டினி சாவுகளையும் நோக்கி.

இந்தத் தருணத்தில் 1854ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சபாபதி முதலியார் வள்ளல் பெருமானைச் சந்திக்கிறார். குழந்தைகள் படிக்க உரைநடை இயற்றமிழ் நூல் வேண்டுமென்றும் அதை வள்ளலார் எழுதித்தர வேணுமென்றும் சொல்கிறார். சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளும் இதற்கு இசைந்தார். அதன் விளைவுதான் ‘மனுநீதி கண்ட வாசகம்.’  பசுவின் கன்றுக்காக, தாய்ப்பசு நீதி பெற்றிட தேர்க்காலில் தன் மகனையே தியாகம் செய்யும் சோழ சக்கரவர்த்தியின் வரலாறு அது.   பிரிட்டிஷ் கல்வியால் பசு வெறும் மிருகம்தானே என்று கேட்கப்பட்ட கேள்வியை இந்த நூலில் வள்ளலார் அரசவைப் பண்டிதர்களும் அமைச்சர்களும் கேட்பதாக முன்வைக்கிறார். அதற்கு அரசன் பதிலளிக்கிறார். பசு எல்லாப்‌  பிறப்பிலும்‌ உயர்வு உள்ளதென்றும்‌ அதன்‌ கொம்பின்‌ அடியிலே பிரம விஷ்ணுக்கள்‌ இருக்கின்றார்களென்றும் அதில் தெரிவித்தார்.‌

1857இல் வட பாரதமெங்கும் முதல் விடுதலை போர் எழுந்த போது பசுப் பாதுகாப்பு அதன் முக்கியத் தொடக்கப்புள்ளியாக இருந்தது. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் வள்ளல் பெருமான் முன்வைத்த இந்த உணர்ச்சிகர இயற்றமிழ் நூல் தமிழரை பசுப்பாதுகாப்புக்காக மன திண்மையை அளித்தது எனலாம்.

அணையா அடுப்பின் மூலம், நில்லாத அன்னதானத்தை வடலூரில் உருவாக்கினார் வள்ளலார். அன்னதானம் என்பது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான அம்சம்.  ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்பது புறநானூறு. பிரம்மத்திலிருந்து ஆகாயம். ஆகாயத்திலிருந்து காற்று. காற்றிலிருந்து நெருப்பு. நெருப்பிலிருந்து நீர். நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து தாவரங்கள். தாவரங்களிலிருந்து அன்னம். அன்னத்திலிருந்து மனித உடல்- உயிர் என்பது உபநிடதம். இப்படி பாரதத்தின் சனாதனப் பண்பாடு அன்னத்தின் முக்கியத்துவத்தையும் அன்னத்தைப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலின் இன்றியமையாத்தன்மையையும் வலியுறுத்தியபடியே உள்ளது.   

அன்னதானம் ஒரு சமூக கடமையாகவும் நிறுவனத்தன்மை கொண்டும் செய்யப்பட வேண்டும். வள்ளலார் அதை செய்தார். அன்ன தானத்துக்கு புத்துயிர் ஊட்டினார். அதற்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தினார்.  1876-78 வரை தட்சிண பாரதம் வரலாறு காணாத கொடும் பஞ்சத்தைக் கண்டது. அக்காலத்தில் சத்திய ஞான சபையின் அணையா அடுப்பு எத்தனையோ ஆயிரமாயிரம் பாரத உயிர்களை காப்பாற்றியதென்பது சத்தியம்.

வள்ளல் பெருமானார் ஜோதியில் கலந்த (1874) பின்னர் ஏற்பட்ட பஞ்சங்களுக்கும் கூட, தனது ஆத்மசக்தியால் ஒரு அரணை ஏற்படுத்தி அருளினார் என்றே சொல்ல வேண்டும்.  இந்த அன்னதானத்தையும், வள்ளலார் வலியுறுத்திய பசுப் பாதுகாப்பையும் இணைத்து பார்க்க வேண்டும்.

வள்ளலாரின் சன்மார்க்கம் சனாதன தர்மம் என்பது மட்டுமல்ல; காலத்தைக் கடந்த சனாதன தர்மம். காலத்தின் தேவைக்கேற்ப தன்னை வெளிப்படுத்தும் ஒரு உன்னத உச்சமாக அருட்பிரகாச வள்ளலாரின் சன்மார்க்கத்தை நாம் உணர முடியும்.

இன்று புவிவெப்பமேறுதல் தொடங்கி, பெருவெள்ளங்கள், கடும் வெப்பக் கோடைகள் என இயற்கை மாற்றத்தால் நம் உணவு உற்பத்தி முறை மிக மோசமாக மாறி வருகிறது. நம் உயிரிப்பன்மை அழிந்து வருகிறது. லாபத்தை மட்டுமே நினைக்கும் முதலாளித்துவம் ஒரு புறம் என்றால் நாட்டையே அடிமை முகாமாக்கி, பஞ்சம், பட்டினி மூலம் மக்களைக் கொடுமைப்படுத்தி  ‘பொலிட்பீரோ’ என்கிற சிறு கூட்டத்தின் அதிகார வெறிக்கு நாட்டையும் அதன் சூழலையும் பலி கொடுக்கும் கம்யூனிச சீனா மறுபுறம். சு.வெங்கடேசன் போன்ற கம்யூனிஸ்ட்கள் அவர்களின் புனித பூமியான பீஜிங் செல்லும் போது அங்குள்ள மார்க்சிஸ்ட்களை சன்மார்க்க ஒளி காட்டி நல்வழிப்படுத்தலாம்.  ஜீவ காருண்ய உணவுமுறை இருந்திருந்தால் கொரோனா அழிவு வந்திருக்காது என்பதையும் அங்குள்ள தோழர்களுக்குச் சுட்டிக்காட்டலாம்.

இத்தகைய சூழலில் சனாதன ஒளியாக வள்ளல் பெருமானின் சன்மார்க்கம் உலகுக்கே வழிகாட்டும் தன்மை கொண்டது. அதை உலக அரங்கில் உரக்கச் சொல்லவும் வள்ளல் பெருமான் வழி வாழ்ந்து ஜீவகாருண்ய பண்பாட்டை ஏற்படுத்தவும் அமிர்தகாலம் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும். 

  • நன்றி: விஜயபாரதம்

$$$

One thought on “வள்ளலார் ஒரு சனாதனியே!

Leave a comment