-வள்ளலார்
மனுநீதி சாஸ்திரம், சனாதனம் ஆகிய சொற்களைக் கேட்டாலே தமிழகத்தில் ஒரு சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. அதற்கு இவை குறித்த அவர்களது அறியாமையே காரணம். ஆங்கிலேயர் சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியில் எழுதிவைத்த நூல்களின் அடிப்படையில் தமிழகத்தில் இந்த வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்தக் கும்பல் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளை திராவிட இயக்கத்தின் கருத்தியல் முன்னோடியாகக் கொண்டாடுகிறது. இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது.
உண்மையில் திராவிடக் கருத்தியலுக்கு நேர்மாறானவர் மட்டுமல்ல, சனாதனத்தின் காவலராக அவதரித்தவர் வள்ளலார். அவர் மாணவர்களுக்கு பாடம் புகட்ட 1854-இல் எழுதிய ‘மனுமுறை கண்ட வாசகம்’ உரைநடை நூலே இதற்கு ஆதாரம்.
தமிழின் ஆரம்பகால உரைநடை என்பதால் சற்று நிதானமாகப் படிக்க வேண்டிய, நெடும் வாக்கியங்கள் கொண்ட நூல் இது. (வாசகர்களின் வசதிக்காக வள்ளலாரின் நெடிய, கலப்பு வாக்கியங்கள் இங்கே பிரித்துத் தரப்பட்டுள்ளன; அதேபோல நூலும் 5 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது). செய்யுள் உரைநூல்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழின் எழுத்துநடையை ஆற்றொழுக்கான உரைநடைக்கு மாற்றும் முயற்சியில் இந்நூல் முக்கியமான ஒரு மைல்கல்.
மனுநீதி சொல்லும் அறங்களையே வள்ளலார் இந்நூலில் சுட்டிக்காட்டுகிறார். “தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ?” என்று மனுநீதி சோழன் புலம்புவதாக இந்நூலில் ஒரு காட்சி வருகிறது. தெய்வத்தை இகழ்ந்து ஆணவமாகத் திரியும் எத்தர்களுக்கு வள்ளலார் என்ற பெயரைச் சொல்லவே தகுதியில்லை.

காப்பு
நேரிசை வெண்பா
அன்ன வயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு
நேய மிகத்தான் நினைப்போர்க் கருள்புழைக்கைத்
தூய முகத்தான் துணை.
கங்கைச் சடையான்முக் கண்ணுடையான் அன்பர்தம்முள்
அங்கைக் கனிபோல் அமர்ந்திருந்தான் - அங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை.
கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள எல்லாத் தேசங்களிலுஞ் சிறப்புடையதாய், காவிரி என்னுந் தெய்வத்தன்மையுள்ள நதியினால் எந்தக் காலத்திலுங் குறைவுபடாத நீர்வளப்ப முடையதாய் வாழைச் சோலை, பலாச்சோலை, மாஞ்சோலை, தென்னஞ்சோலை, கமுகஞ்சோலை, கருப்பஞ்சோலை முதலாகிய பலனுள்ள சோலைகள் அணியணியாக ஒன்றையொன்று சூழ்ந்தோங்க,
அசோகு, குருக்கத்தி, சண்பகம், பாதிரி முதலான விருக்ஷங்களால் நெருங்கி, வண்டுகள் பாடுகின்ற மலர்ச்சோலைகளும், தாமரைத் தடாகங்களும், நீர் நிறைந்து அல்லி நீலம் முதலான புட்பங்கள் மலர்கின்ற ஓடைகளும், பொய்கைகளும், ஏரிகளும், குளங்களும் பலவிடங்களிலு முள்ளதாய், செந்நெல் முதலாகிய பயிர்கள் மாறாது முப்போகமும் விளைகின்ற குறைவற்ற விளைவையுடைய வயல்கள் நெருங்கி யுள்ளதாய்,
சிதம்பரம், பஞ்சநதம், மத்தியார்ச்சுனம், சம்புகேச்சுரம் முதலான திவ்விய க்ஷேத்திரங்கள் இடையிடையி லுள்ளதாய், இல்லற தருமத்தில் எள்ளளவும் பிழைபடாது செல்வத்திலும் கல்வியிலும் நிறைவுள்ள குடிகளுக்கிடமானதாய், பல வளப்பங்களுங் கொண்டு பூமிதேவிக்கு முகம்போல விளங்குகின்ற சோழதேசத்தில்;
.பாதாளலோகத்தைப் பார்த்திருக்கின்ற ஆழமுள்ள அகழியினாற் சூழப்பட்டு, இந்திரலோகத்தை எட்டிப் பார்க்கின்ற உன்னதமுள்ள கோபுரங்களையுடைய மதிலும், உய்யானம் நந்தவரீளீ பூஞ்சோலை முதலானவைகளும், தெய்வ தீர்த்தம், பிரம தீர்த்தம், வசந்தவோடை, செங்குவளையோடை முதலான நீர்நிலைகளு முள்ளதாய்,
தேர்நிலைகள், யானைக் கூடங்கள், குதிரைப்பந்திகள், சேனையிடங்கள், ஆஸ்தான மண்டபம், அரச மண்டபம், விசித்திர மண்டபம், விநோத மண்டபம், நியாய மண்டபம், நிருத்த மண்டபம், கல்வி மண்டபம், கணக்கறி மண்டபம், பாடல் மண்டபம், பரிசன மண்டபம், சித்திரை மண்டபம், தேவாசிரிய மண்டபம், சித்திரத்தெற்றி, சிலம்பக்கூடம், ஆயுதச்சாலை, அமுதசாலை, அறச்சாலைகளும் உடையதாய்,
ரத்ன பீடிகைகளும், கனக மாளிகைகளும், பளிங்கு மாடங்களும், மணிப்பந்தல்களும், மகரதோரணங்களும், மங்கல கோஷங்களுமுள்ள கடைவீதி, கணிகையர்வீதி, சூத்திரர்வீதி, வைசியர்வீதி, அரசர்வீதி, அந்தணர்வீதி, ஆதிசைவர்வீதி, சைவர்வீதி, வைதிகர்வீதி, தபோதனரிருக்கை, சைவமுனிவர் மடம், உட்சமயத்தார் உறையுள் முதலான வளப்பங்களை உடையதாய்,
தியாகராஜப்பெருமான் எழுந்தருளிய கமலாலயம் என்னும் திருக்கோயிலை உள்ளே உடையதாய், சோழராஜர்கள் பரம்பரையாக அரசாட்சி செய்வதற்கு உரிய ராஜதானியாய், நிலமகள் திருமுகத்திலிட்ட திலகம் போல் விளங்கிய திருவாரூர் என்கிற நகரத்தில்;
.மூன்று சுடர்களிலும் முதற்சுடராகிய மேன்மையடைந்த சூரியகுலத்திற் பிறந்து அரசாட்சி செய்துவந்த சோழராஜர்களில் சிறந்தவராய், அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவராய், உயிருக்கு உறுதியைத் தருகின்ற நல்ல கேள்விகளை யுடையராய், எல்லா உயிர்களுக்கும் இதஞ்செய்கின்றவராய்,
வேதமோதுதலும், யாகஞ்செய்தலும், இரப்பவர்க்கீதலும், பிரஜைகளைக் காத்தலும், ஆயுதவித்தையில் பழகுதலும், பகைவரை அழித்தலும் என்னும் ஆறு தொழில்களும், வீரமுள்ள சேனைகளும், செல்வமுள்ள குடிகளும், மாறாத பொருள்களும், மதிநுட்பமுள் மந்திரியும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டையும் உடையவராய்,
வழக்கை அறிவிப்பவரையும் தங்களுக்குள்ள குறையைச் சொல்லிக்கொள்பவரையும் இலேசிலே தமது சமுகத்துக்கு அழைப்பித்து அந்த வழக்கைத் தீர்த்தும் அக்குறையை முடித்துங் கொடுப்பவராய், பாலொடு பழஞ்சேர்ந்தாற்போல முகமலர்ச்சியோடு இனியவசனஞ் சொல்லுகின்றவராய், பின்வருவதை முன்னே அறிந்துகொள்வதும் உறவினர், அயலார், சினேகர், பகைவர், இழிந்தோர், உயர்ந்தோர் முதலான யாவரிடத்தும் காலவேற்றுமையாலும், குணவேற்றுமையாரும் உண்டாகின்ற நன்மை தீமைகளை உள்ளபடி அறிந்து கொள்வதுமாகிய விவேகமுள்ளவராய், அகங்காரம், காமம், கோபம், லோபம், மோகம், பொறாமை, வஞ்சகம், டம்பம், வீண் செய்கை முதலான குற்றங்களைத் தினையளவுங் கனவிலும் காணாதவராய்,
துர்க்குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல் நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையுஞ் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு செய்யத்தக்க காரியங்களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தும், பகைவலியும் தன்வலியும் துணைவலியும் காலநிலைமையும், இடநிலைமையும் அறிந்து காரியங்களை நடத்தியும்,
அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து அவரவர் தரங்களுக்குத் தக்க உத்தியோகங்களை அவரவர்க்குக் கொடுத்தும், பழமை பாராட்டியும், சுற்றந்தழுவியும், கண்ணோட்டம் வைத்தும், சாதியியற்கை, ஆசிரமவியற்கை, சமயவியற்கை, தேசவியற்கை, காலவியற்கை, முதலான உலகியற்கைகளை அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கபடி ஆராய்ந்து செய்தும் நல்லொழுக்கத்துடன் நடப்பவராய்,
குடிகளுக்கு அணுவளவு துன்பம் நேரிடினும் அதை மலையளவாக எண்ணித் தமக்கு வந்ததுபோல் இரக்கங்கொண்டு மனமுருகுவதனால் தாயை யொத்தவராய், அத் துன்பத்தைவிட்டு இன்பத்தை அடையத்தக்க நல்வழியை அறியும்படி செய்விப்பதனால் தந்தையை யொத்தவராய், அவர்களுக்கு அந்த நல்வழியைப் போதித்து அதிலே நடத்துகின்றபடியால் குருவை யொத்தவராய்,
அந்தக் குடிகளுக்கு இகபர சுகத்தைக் கொடுப்பதற்கு முன்னின்று அது பற்றி முயற்சி செய்யும்போது வரும் இடையூறுகளை நீக்குகின்றபடியாலும் அந்த ஒழுக்க வழியிலிருந்து தவறினால் அந்தக் குற்றத்துக்குத் தக்க தண்டனை யொத்தவராய், குடிகளுக்கு ஆபத்து நேரிடும்போது கட்டிய வஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி காரியமது என்று காட்டுகிறபடியால் கண்போன்றவராய், குடிகளுக்கு அச்சம், அவலம் முதலானவை நேரிடாமல் காத்து வருதலால் உயிர் போன்றவராய்,
குடிகள் தம்மை நினைக்குந்தோறும் ‘இப்படிப்பட்ட நற்குண நற் செய்கைகளையுடைய புண்ணியமூர்த்தியை அரசனாகப் பெற்ற நமக்குக் குறையொன்றும் இல்லை’ என்று களிக்கின்றபடியால் பொன்புதையலை யொத்தவராய், கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தை யொத்தவராய்,
அறிவே ஆயிரங் கண்களாகவும் கைகளே கற்பகமாகவும் கண்களே காமதேனுவாகவும் திருமுகமே சிந்தாமணியாகவும் மனோதிடமே வச்சிராயுதமாகவுங் கொண்டபடியால் இந்திரனை யொத்தவராய், சிங்காதனமே செந்தாமரையாகவும் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு பொருளும் அடைதற்குரிய நான்கு மார்க்கமே நான்கு முகமாகவுங்கொண்டு அந்தந்த மார்க்கங்களில் அந்தந்தப் பொருள்களை விருத்தி பண்ணுகிறபடியால் பிரமனை யொத்தவராய், ஆக்கினா சக்கரமே சக்கராயுதமாகவும், செங்கோலே திருமகளாகவும், சிறந்த பெரும்புகழே திருப்பாற்கடலாகவும், யுக்தமல்லாத காரியங்களை யொழிந்திருப்பதே யோகநித்திரையாகவுங் கொண்டு, மண்ணுலகிலுள்ள உயிர்களைக் காத்து வானுலகிலுள்ள தேவர்களுக்கு யாகங்களால் அமுது கொடுத்து வருகின்றபடியால் திருமாலை யொத்தவராய், சோர்வில்லாமை தூய்மை, வாய்மை என்னும் மூன்றுமே மூன்று கண்களாகவும் துணிவுடைமையே சூலமாகவுங் கொண்டு பாவங்களை யெல்லாம் நிக்கிரஞ் செய்து வருகின்றபடியால் உருத்திர மூர்த்தியை யொத்தவராய், வாட்டத்தை நீக்கி மகிழ்ச்சி செய்கின்ற அருளுள்ள படியால் அமுதத்தை யொத்தவராய்,
சிவபக்தியில் மிகுந்தவராய், பொறுமையில் பூமியை யொத்தவராய், தருமமே உருவாகக் கொண்டு நடுநிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனச்சோழர் என்னும் பெயரையுடைய சக்கரவர்த்தியானவர், கலிங்கர், குலிங்கர், வங்கர், கொங்கர், அச்சியர், கொச்சியர், தெங்கணர், கொங்கணர், தெலுங்கர் முதலான தேசத்தரசர்க ளெல்லாம் திறைகட்டி வணங்க, உலக முழுவதையும் ஒருகுடை நிழலில் வைத்துச் செங்கோல் செலுத்தி அரசாட்சி செய்யுங்காலத்தில்:
.உலகமெங்கும் புலியும் பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும், சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும், பருத்துங் கிளியும் பழகி மகிழ்ந்தும், கூகையுங் காகமும் கூடிப் பறந்தும், பூனையும் எலியும் பொருந்தி யிருந்தும், இந்தப்படி மற்றுமுள்ள விரோதமாகிய உயிர்களும் ஒன்றுக் கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்திருக்கவும், மரங்கள் புல்லுகள் முதலான நடையில்லாத உயிர்களும் வாடுதல், உலர்தல், உதிர்தல், வெட்டுண்ணல் முதலான குறைகளில்லாமல் வளர்ந்தோங்கி வாழ்ந்திருக்கவும்,
பெருங்காற்று, பெருவெள்ளம், பெருமழை, தீப்பற்றல், இடிவிழுதல் முதலான உற்பாதங்கள் சிறிதுமில்லாமல், சுகுணமான காற்றும் மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறாமல் உண்டாயிருக்கவும், பசிநோய் உடம்புநோய் அவமிருந்து உயிரச்சம் முதலான துக்கங்களொன்றும் சேராமல் சுகமே சூழ்ந்திருக்கவும்,
பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்கின்ற ஜாதியாரும், பிரமசாரி, கிரகஸ்தன், வானப்பிரஸ்தன், சந்நியாசி என்கின்ற ஆசிரமத்தாரும், சைவர், வைணவர், வைதிகர் என்கின்ற சமயத்தாரும், தங்கள் தங்களுக்குரிய ஆசாரங்களில் குறைவுபடாமல் வாழ்ந்திருக்கவும்,
அன்னதானம், சொர்ணதானம், கோதானம், பூதானம் முதலான தானங்களும் தேவாலயங் கட்டுவித்தல், திருக்குளமெடுத்தல், செழுஞ்சோலை வைத்தல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், சத்திரங் கட்டுவித்தல் முதலான தருமங்களும், சாந்திராயண முதலான விரதங்களும், தியானஞ்செய்தல், ஜெபஞ்செய்தல் முதலான தவங்களும் தவறுபடாமல் ஓங்கியிருக்கவும், தியாகேசப் பெருமானுக்கும் மற்றுமுள்ள தெய்வங்களுக்கும் திரிகால பூசைகளும் திருப்பணிகளும், திருவிழா முதலான சிறப்புகளும் குறைவில்லாமல் நடக்கவும் அவரது ஆக்கினையே செய்வித்து வந்தது.
.அவர் ஆளுகைக்குட்பட்ட உலகங்களில், பூவே பறிபடுவது, புனலே சிறைபடுவது, காற்றே அலைபடுவது, கல்லே கடின முடையது, மாவே வடுப்படுவது, வாழையே குலைபடுவது, வண்டே மதுவுண்பது, நெற்கதிரே போர்படுவது, வயலே வளைபடுவது, மாதரிடையே குறைபடுவது, தரித்திரமே தரித்திரப்படுவது, துக்கமே துக்கப்படுவது பொய்யே பொய்படுவது.
.இவையல்லாமல், பொருள் பறிக்கப்படுவோரும், சிறைச்சாலையில் வைக்கப்படுவோரும், பகைவரால் அலைக்கப்படுவோரும், கடின மனமுள்ளவர்களும், வடுப்படுவோரும், கட்டுண்போரும், குத்துண்போரும், போரிற்படுவோரும், வளைபடுவோரும், குறைபடுவோரும், தரித்திரப்படுவோரும், துக்கப்படுவோரும், பொய்படுவோரும் வேறேயில்லாமல் மேன்மையே விளங்கியிருந்தது.
.இந்தப் பிரகாரமாக மந்திரி முதலான உறுதிச் சுற்றங்களுடன் உலகாண்டிருந்த அம் மனுச்சோழரென்னும் சக்கரவர்த்தியானவர் புத்திரப் பேறில்லாமல் மனம் வருந்தி அதுபற்றியும் அறுபது வருஷ காலமாக அனேக தானங்களும் தருமங்களும் யாகங்களும் விரதங்களுஞ் செய்தும் புத்திரோற்பத்தி இல்லாமையால்,
“புத்திரச் செல்வம் பெறாதவர் பொருட்செல்வம் பெற்றும் பயனில்லையே; புத்திரன்போல் நமக்கு இந்த அரசச் செல்வம் இம்மை மறுமை இன்பங்களைக் கொடாதே; சந்ததியில்லாவிட்டால் பிற்காலத்தில் கண்களில்லாத முகமும் சூரியனில்லாத பகலும்போல, அரசனில்லாது இவ்வுரகந் தலைதடுமாறிப் போமே; ஆதலால் இனிப் புத்திரனைப் பெற்றுக் கொள்வதற்குத் தக்க முயற்சி நமது ஆண்டவனாகிய தியாகராஜப் பெருமானை வழிபடுதேயல்லது வேறொன்றுமில்லை; ஆனால் மோக்ஷப் பேறு குறித்து நிஷ்காமியமாக இத்தனை நாளும் வழிபட்டு வந்த நாம் இப்போது புத்திரப்பேறு குறித்துக் காமியமாக நமதாண்டவனை வழிபடுவது தகுதியல்ல வாயினும், ‘தீராக் குறைக்குத் தெய்வமே முடிவு’ என்கின்றபடி எவ்விதத்திலும் தீராத புத்திரனில்லாக் குறையைச் சிவ பெருமானது திருவருளாலேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று ஆலோசித்துத் துணிவுகொண்டு,
தமது மனைவியாருடன் ஆகமவிதிப்படி கமலாலயம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பயபக்தியுடன் பூங்கோயிலைப் பஞ்சாவரண வலமுஞ் செய்து உட்புகுந்து, தியாகராஜப் பெருமானது சந்நிதிக்கெதிரே அஷ்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்து, வணங்கிய முடியும், மலர்ந்த முகமும், நீர் பொழிகின்ற கண்ணும், துதிக்கின்ற நாவும், கூப்புகின்ற கையும், புளகமெழும்புகின்ற உடம்புங் கொண்டு நின்று, ‘புத்திரப் பேறில்லாத குறையைத் தீர்த்தருள வேண்டும்’ என்று விண்ணப்பித்துப் பலவிதமாகத் தோத்திரஞ்செய்து தமது அரண்மனைக்குச் சென்று இந்தப் பிரகாரமே நாள்தோறும் போய் வழிபட்டுப் பிரார்த்தித்துக் கொண்டே வந்தார்.
.அவர் செய்யும் வழிபாட்டுக்கும் வந்தனைக்கும் இரங்கித் தியாகராஜப் பெருமான் புத்திரப் பேறுண்டாகும்படி அனுக்கிரகஞ்செய்ய, அந்த அனுக்கிரகத்தால் மகாராஜனுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி வலம்புரிச் சங்கு விலையுயர்ந்த வெண்முத்தினைக் கருப்பங்கொண்டதுபோலத் தேவியார் தமது திருவயிற்றில் கருப்பங்கொண்டு, பத்து மாதமுஞ் சென்று நல்ல சுபதினத்தில், தர்மதேவதை தாண்டவமாடவும் வானகத்தார் மலர் சொரிந்து வாழ்த்தவும் வையகத்தார் மனங் களிக்கவும், அதிதியாரானவர் ஆதித்தனைப் பெற்றதுபோலவும் மல்லிகைக்கொடி மணமுள்ள மலரைப் பூத்ததுபோலவும், எவ்வௌர்களும் அதிசயிக்கத் தக்க சர்வ லட்சங்களும் நிறைந்த வடிவுள்ள ஒரு புத்திரனைப் பெற்றார்.
.புத்திரன் பிறந்த சந்தோஷமான சமாசாரத்தைப் பாங்கிகள் அதிசீக்கிரமாக வந்து தம்மை மறந்த மனக் களிப்புள்ளவர்களாக எதிர் நின்று “ஆண்டவனே! எங்கள் தலைவியார் திருவயிற்றிலிருந்து தேவரீர் புகழே வடிவாகவும் புண்ணியமே உயிராகவும் கொண்டு பொன்னலகத்தைக் காக்கின்ற புரந்தரனும் நாணமடையப் பூவுலகத்தைக் காக்கத் தக்க வல்லமையுள்ள புத்திர சிகாமணி உதயஞ்செய்தது” என்று விண்ணப்பஞ்செய்யக் கேட்ட மனுச்சக்கரவர்த்தியானவர், தூரதேசத்திற் போயிருந்த கப்பல் துறைமுகத்தில் வந்ததென்று சொல்லக்கேட்ட வர்த்தகனைப் போலவும், கூடிப் பிரிந்த மங்கையின் குரலோசை கேட்ட நாயகனைப்போலவும், தாகங்கொண்டு தவிக்குங் காலத்தில் சமீபத்தே தண்ணீருண்டென்று சொல்லக்கேட்ட தேசசஞ்சாரியைப் போலவும், மனங்குளிர்ந்து உடல் பூரித்து அளவிடப்படாத களிப்புடையவராய்,
அந்தப் பாங்கிகளுக்கு விலையுயர்ந்த ஆடையாபரணங்களை வெறுப்படையும்படி பரிசு கொடுத்து, தாம் நீராடி நியமங்கள் முடித்து, வேதவித்துக்களாகிய பிராமணர்களுக்கு விதைதானம், சொர்ணதானம், கன்னிகாதானம், அசுவதானம், கஜதானம், பூதானம், கோதானம் முதலான தானங்களைக் கொடுத்து,
புத்திரன் பிறந்த நாள்தொட்டுப் பன்னிரண்டு வருஷமட்டுங் குடிகள் வரிகொடாமல் சர்வ மானியமாகத் தாமே அனுபவித்துக் கொள்ளவும், திறை கட்டி வரும் அரசர்கள் ஏழு வருஷமட்டும் அந்தத் திறைகளைக் கட்டாமல் தாங்களே எடுத்துக்கொள்ளவும், சிறைச்சாலையிலிருந்த சத்துருக்களை விட்டுவிடவும், பொக்கிஷசாலையைத் திறந்துவிட்டு நகரிலும் நாட்டிலும் உள்ளோர் யாவரும் தங்கள் தங்களுக்க வேண்டிய மட்டில் ஏழு நாள் வரையில் எடுத்துக்கொண்டு போகவும், தேவாலயங்களிலெல்லாம் புதிதாகத் திருப்பணிகளும் திருவிழா முதலான சிறப்புகளும் செய்விக்கவும் கட்டளையிட்டு,
பின்பு தாம் முன் தேடிவைத்த திரவியத்தைத் தெரியக் கண்டு கொண்டவனைப்போலத் திரை மறைவிலிருந்த அச்செல்வக் குழந்தையை வெளிப்படக்கண்டு மனமகிழ்ச்சியடைந்து இளஞ் சூரியோதயம்போல இந்தப் புத்திரன் இவ்விடத்தில் உதயஞ்செய்தது சிவானுக்கிரகமேயல்லது வேறல்லவென்று வியப்படைந்து, சோதிட சாஸ்திரங்களில் வல்லமையுள்ள பெரியோர்களைக் கொண்டு ஒப்பற்ற செல்வம், கல்வி, வெற்றி முதலிய அதிர்ஷ்டங்கள் நடனஞ் செய்கின்ற சாதக பலனைக் கணித்து,
தியாகராஜப் பெருமானது திருவருளால் வந்ததுபற்றி அக்கடவுளின் திருப்பெயர் கொண்டு வீதிவிடங்கன் என்னும் நாமகரணமும் அன்னப்பிராசனம், சௌளம் முதலான சடங்குகளும் மிகுந்த விபவமாகவும் வேதயுக்தமாகவும் அது அது செய்யத்தக்க பருவங்களில் செய்வித்து,
அந்தப் புதல்வனை வாச நீராட்டுவித்தும், இனிய உணவுகளை ஊட்டுவித்தும், பொன்னாலும் இரத்தினங்களாஞ் செய்த பூஷணங்களைப் பூட்டுவித்தும், மார்மேலும் தோள்மேலும் மடிமேலும் வைத்து வைத்து முத்தாடியும் திருந்தாத குதலைச் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தும்,
கற்பக விருக்ஷத்தின் கனியைக் கேட்கினும் அந்தக் கணமே தருவித்துக் கொடுத்தும், சிறிய விளையாடல்களைச் செய்யக் கண்டுகளித்தும், கற்புள்ளவள் கணவனை உபசரிப்பதுபோல் உபசரித்தும், படிப்பில் ஆசையை வைத்தவன் பாடத்தைப் பாராட்டுவது போலப் பாராட்டியும், தன்னை உயர்ந்தவனாக்க நினைத்தவன் தருமத்தை வளர்ப்பதுபோல வளர்த்தும், முன் சிறுமையடைந்து பின் செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தைப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தும், புத்திரசம்பத்தினால் வரும் பயனை அடைந்தவரா யிருந்தார்.
.இந்தப்படி இணையில்லாத செல்வப் பெருக்கத்தினால் வளர்க்க வாழையிளங் குருத்துப் போல வளர்ந்து வருகின்ற புத்திரனுக்கு, ஐந்தாம் வயதில் அட்சராப்பியாசஞ் செய்வித்து, ஏழாம் வயதில் சகல தேசத்தரசர்களுக்குந் தெரிவித்து, நகரை அலங்காரஞ் செய்வித்து, பத்மராகம், கோமேதகம், வயிரம், வைடூரியம் முதலான இரத்தினகசிதமான கல்யாண மண்டபத்தில்
வேத வேதாங்கங்களில் வல்லவரான பிராமணர்களும் சாபானுக்கிரக சாமர்த்தியமுள்ள தபோதனர்களும் ஆசீர்வதிக்கவும், மன்னர், மண்டலீகர், பட்டவர்த்தனர், மகுடவர்த்தனர், அமைச்சர், உறவினர், சினேகர் முதலானவர்கள் கண்டு களிக்கவும், சுமங்கலப் பெண்கள் சோபனம் பாடவும் பேரி, சங்கம், மிருதங்கம் முதலான மங்கல வாத்தியங்கள் முழங்கவும் நல்ல சுப முகூர்த்தத்தில் வேதவிதிப்பிரகாரம் உபநயன கல்யாணஞ் செய்வித்து, பலவகைத் தானங்களும் செய்து சகல வேதாகம சாஸ்திரங்களிலும் வல்லமையுள்ள ஆசாரியரைக் கொண்டு வித்தியாரம்பஞ் செய்வித்தார்.
.சில நாள்களுக்குள்ளே வீதிவிடங்கனென்னும் அப்புத்திரனானவன் வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள் முதலான கலைகளில் ஆசாரியனைப் பார்க்கிலும் எண்மடங்கு வல்லமையுள்ளவனாகி, யானையேற்றம், குதிரையேற்றம், ரதாரோகணம், வில்வித்தை, வாள்வித்தை, இந்திரஜாலம், மகேந்திரஜாலம் முதலான ஸமஸ்த வித்தைகளையுங் குறைவறக் கற்றுக்கொண்டு,
ஆதிசேடனைப்போல் அறிவும், காமனைப்போல் கட்டழகும், ஆண்சிங்கம் போல் ஆண்மையும், மதயானைபோல் நடையும், மார்த்தாண்டன்போல் வாய்மையும், கற்பகவிருக்ஷம்போல் கொடையும் உடையவனாகி; சிவபக்தி, சீவகாருண்ணியம், பொறுமை, அன்பு, ஆசாரம், ஒழுக்கம் ஊக்கம், சாந்தம், சற்சனநேயம் முதலான நற்குணங்களுடன்
உயிர்க்கு முடிவு நேரிடுமானாலும் உண்மையே பேசுவதும், உறுதியே சொல்லுவதும், இன்சொல்லே கூறுவதும், இதமே செய்வதும், பயனுடளள காரியங்களை பாராட்டுவதும், பிராமணர் தவத்தோர் முதலான பெரியோர்களைக் கண்டால் அன்போடும் அச்சத்தோடும் எதிர்கொண்டு தலையால் வணங்கி வாயால் வாழ்த்துவதுமாகிய நற்செய்கைகளைப் பெற்று, மாதா பிதாக்களது மனக்குறிப்பறிந்து அவர் இச்சையின்வழி நடந்து மகிழும்படி செய்வித்து, இளமைப் பருவத்திற்றானே எல்லாம் அறிந்தவனாகி, கண்டோர் கொண்டாடவும் கேட்டோர் மனங் களிக்கவும், இளவரசுப் பட்டத்துக்குத் தகுந்த பருவத்துட னிருந்தான்.
.அப்படியிருந்த நாள்களில் ஒருநாள் அவ் வீதிவிடங்கனென்னும் இராஜபுத்திரன் தன் பருவத்துக்கொத்த இராஜகுமாரர்களும் மந்திரிகுமாரர்களும் சூழ்ந்துவர தன் பிதாவாகிய மனுச்சோழருடைய சமுகத்துக்கு வந்து பிதாவினது திருவடிகளுக்கு அஷ்டாங்க பஞ்சாங்கமாகத் தண்டனிட்டு எழுந்து தூசொதுக்கியும் உடம்பொடுக்கியும் கைகட்டியும் வாய்புதைத்தும் எதிரே நிற்க,
அப்போது மனுச்சக்கரவர்த்தியானவர் நெடுநாள் பிரிந்திருந்த கன்றினைக் கண்ட பசுவைப்போலவும் இடந் தெரியாதிருந்த புதையலை யெதிர்ப்படக் கண்டவனைப் போலவும் கண்கள் களிகூரக் கண்டு, உள்ளமும் உடலும் பூரித்துக் தமது இரண்டு கைகளாலும் தழுவி அணைத்தெடுத்து மடிமேல் வைத்து உச்சிமோந்து முதுகைத் தடவி
“எனக்கு நெடுநாளாக விருந்த மனக்குறையைத் தவிர்த்து இம்மை மறுமைப் பயனைக் கொடுக்கும்படி பிறந்த அருமையாகிய அமுதத்தை யொத்த என் புத்திரனே! உன் மனதில் ஏதோவொரு எண்ணமுண்டானதாகத் தோன்றுகின்றது; அவ்வெண்ணம் இன்னதென்று வெளிப்படுத்த வேண்டும்” என்று கேட்க,
அது கேட்ட வீதிவிடங்கன் “மூன்றுலகத்திலுங் கேடில்லாத கீர்த்தியை நாட்டிய பெருந்தன்மையுடைய தேவரீரைப் பிதாவாகப் பெற்ற அடியேனுக்கு எண்ணங் கொள்வதற்கு என்ன குறையிருக்கின்றது? நமது குலதெய்வமாகியும் இஷ்ட தெய்வமாகியும் கமலாலயத்தில் எழுந்தருளிய தியாகராஜப் பெருமானைத் தரிசித்துவர வேண்டுமென்னும் எண்ணம் ஒன்றுமாத்திரமுண்டு; இவ்வெண்ணம் இடையூறில்லாமல் நிறைவேறும்படி தேவரீர் திருவுள்ளங் கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தான்.
.அது கேட்டு அரசானாவர் “சர்வ வல்லமையுள்ள சுயம்புவாகியும் கருணைக்கடலாகிய கடவுளாகியும் பிள்ளைக்கலி தீர்த்த பெருமானாகியும் விளங்கிய தியாகராஜப் பெருமானைச் சேவிப்பதற்குத் தடையுண்டோ? தனக்கிணையில்லாத தரும மூர்த்தையைத் தரிசிக்க வேண்டுமானால் தடுப்பவர் யார்? புண்ணியந் தேடப் புத்திரன் தொடங்கினால் தந்தை தடை செய்வானோ? நானே கற்பிக்கவேண்டிய நல்விஷயத்தை நீயே தெரிந்து செய்யத் தொடங்குவது நான் பூர்வஞ்செய்த புண்ணியமல்லவோ? ‘பிள்ளை தேடும் புண்ணியம் பிதாவுக்கும் உண்டு’ என்று பெரியோர் சொல்வது பிழைபடாதென்பதை நானறியனோ?
நெல் முதலான பயிர்க்கு நீர்விடுவோரையும், குருடர்க்குக் கோல் கொடுப்போரையும், இரவில் வந்தவர்க்கு இடங் கொடுப்போரையும், அஞ்சி வந்தடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், தாகங் கொண்டோர்க்குத் தண்ணீர் கொடுப்போரையும், பசிகொண்டு பரிதபிப்போர்க்கு அன்னங் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரங்கட்டித் தருமஞ் செய்வோரையும் தடுத்தாலும், குருதரிசனம், சிவஞானி தரிசனம், சிவதரிசனம் செய்வோரை ஒருகாலுந் தடுக்கப்படாது; ஆதலால் புத்திரனே உனக்கு வேண்டிய சிறப்புக்களுடன் சுகமாய்ப்போய் ஆண்டவனைத் தரிசனஞ் செய்து சிவஞானமும் தீர்க்காயுளும் பெற்று வருவாய்” என்று கட்டளையிட்டார்.
.அந்தக் கட்டளையை அன்புடன் தலைமேற்கொண்டு வணங்கி விடைபெற்று, மாதாவினிடத்தில் போய்ப் பக்தியுடனே பணிந்தெழுந்து கைகூப்பி நின்று “அநேக விரதங்களை அனுஷ்டத்து அடியேனைப் பெற்றெடுத்து, கண்களை இமைகள் காப்பதுபோற் காத்து வளர்த்த தாயே! அடியேன் தெய்வ சிகாமணியாகிய தியாகராஜப் பெருமானைத் தரிசனஞ் செய்யவேண்டும்; இதற்குத் தந்தையாருடைய சம்மதம் பெற்றுக்கொண்டேன்; இனி உமது உள்ளமும் ஒருமித்தருள வேண்டும்” என்று குறையிரந்து கொண்டான்.
.அதுகேட்ட தாயானவர் உருக்கத்துடன் மனமகிழ்ச்சி கொண்டு முகமலர்ந்து முலைகளிலிருந்து பால் பீரிடவும் கண்களில் ஆசை நீரரும்பவும் தம் அருமைத் திருமகனை நோக்கி “இறைவனையும் என்னையும் நற்கதியிற் சேர்க்கவந்த நாயகமே! நாங்கள் முன்செய்த தவப்பயனாலே கிடைத்த முத்தமே! எங்கள் வருத்தமெல்லாந் தீர்க்கவந்த மாணிக்கமே! சிறந்த கண்மணியே! சுந்தர வடிவமுள்ள சூரியனே! சாந்தகுணமுள்ள சந்திரனே! பேரறிவுடைய பிள்ளாய்! நெடுநாளாகப் பலவிதமான தருமம் தானம் தவம் முதலானவைகளைச் செய்தும் பெற்றுக்கொள்ளாமல், தியாகேசர் சந்நிதிக்கு நடந்து அந்தக் கடவுளின் அனுக்கிரகத்தால் உன்னைப் பெற்றுக் கொண்டோம். அப்படிப்பட்ட பெருங்கருணையுள்ள பெருமானை நீ தரிசிக்க வேண்டுவது அடுத்த காரியந்தான். ஆதலால் நீ போய்க் கண்குளிரக் கண்டு தரிசித்து, ‘உபநயனம் முதலான மங்கலக் கோலங்கண்ட நமது கண்கள் மணக்கோலமுங் கண்டு களிப்படைய வேண்டும்!’ என்று எண்ணியிருக்கிற என்னெண்ணம் விரைவில் முடியும்படி ஒரு வரத்தையும் பெற்றுவரக் கடவாய்” என்று விடை கொடுத்தார்.
.அவ்விடையைப் பெற்றுக்கொண்ட வீதிவிடங்கன் தன் அரண்மனைக்கு வந்து, தைலம், சந்தனம், கஸ்தூரி, பால், தயிர், நெய், பழம் முதலான அபிஷேக திரவியங்களும்; மாணிக்கமாலை, மரகதமாலை, முத்துமாலை, பவளமாலை, பொன்மாலை, வச்சிரமுடி, இரத்தின குண்டலம் முதலான திருவாபரணங்களும்; கொன்னைமாலை, தும்பைமாலை, வில்வமாலை, சண்பகமாலை, முல்லைமாலை, மல்லிகைமாலை முதலான திருமாலைகளும்; வெண்பட்டு, கோசிகப்பட்டு, பீதாம்பரம் முதலான திருவாடைகளும், மற்றும் வேண்டிய திரவியங்களெல்லாமும் தியாகேசர் கோயிலுக்குக் காரியக்காரர்கள் வசத்தில் முன்னதாக அனுப்புவித்து,
பின்பு தான் மஞ்சனச்சாலையில் வாச நீராடி வெண்பட்டுடுத்துச் சிவத்தியானத்துடன் திருநீறு தரித்துத் திலகமணிந்து கிரீடம், குண்டலம், கண்டசரம், வாகுவலயம், பதக்கம், சரப்பளி, கடகம், ஆழி, பொற்பூணூல், பொன்னரைஞாண், உதரபந்தனம், வீரகண்டை முதலான பூஷணங்களும், பூண்டுகொண்டு, ஜோதிமயமான பீதாம்பர உத்தரியம் மேலே தரித்துக்கொண்டு நவரத்தின மிழைத்தவொரு பொற்பிரம்பைக் கையில் பிடித்துக்கொண்டு, அரண்மனைவாசலை விட்டு வெளியே புறப்பட்டு,
வேத பாரகராகிக வேதியர் முதலானவர்களுக்குப் பலபலதானங்கள் செய்து, மனோவேகமும் பின்னடையத்ததக்க வேதமான நடையுள்ள நான்கு குதிரைகளைக் கட்டிய மகாமேருவைப் போல உயர்வுள்ள ரத்தின கசிதமாகிய ரதத்தின்மேல் ஆரோகணித்துக்கொண்டு
வேதவேதியர், மீமாம்சகர், தார்க்கீகர், வையாகரணர், சோதிடர், ஆயுள்வேதியர், வேதாந்தியர், ஆகம சித்தாந்தர், புராணிகர், சமய சாஸ்திரப் பிரசங்கர் முதலான காரியத் தலைவர்களும்; சினேகர், உறவினர், புரோகிதர் முதலானவர்களும்; மன்னர், மண்டலீகர், பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர் முதலான அரசர்களும் தங்கள் தங்கள் பெருமைக்குத் தக்க வாகனங்களிலேறிச் சூழ்ந்துவரவும்,
நெற்றிப்பட்டம் கிம்புரி முதலான அணிகளை அணிந்து அலங்காரஞ் செய்து மதயானைகள் கர்ச்சித்து வரவும், முத்துக்குஞ்சம், முத்துவடம், முத்துவாளி, கிண்கிணிமாலை, பொற்கலனை முதலான அணிகளால் அலங்கரித்த வலியுள்ள குதிரைகள் கனைத்து வரவும், வீரபட்டம் வீரசங்கிலி வீரகண்டை முதலான அணிகளை யணிந்த வீரர்கள் ஆரவாரித்து வரவும்,
மங்கலப்பாடகர் பாடவும், வந்தியர் மாகதர் புகழவும், மங்கல மங்கையர் வாழ்த்தவும், நாடகக் கணிகையர் நடனஞ்செய்யவும், பட்டாங்கு படிக்கவும், கட்டியங் கூறவும், அஷ்டமங்கலங்களை ஏந்திச் சுமங்கலிகள் சூழ்ந்து போகவும், வெள்ளை வட்டக் குடைகள் நிழற்றவும், வெண்சாமரை வீசவும், மயிற்குஞ்சங்கள் சுழற்றவும், பூந்தட்டேந்தவும்,
பேரிகை, தம்பட்டம், தக்கை, உடுக்கை, சச்சரி, தாளம், மத்தளம், தாரை, சின்னம், மல்லரி, சங்கம், எக்காளம், ருத்திரவீணை, நாரதவீணை, தும்புருவீணை, இராவணாஸ்தம், கின்னரி, புல்லாங்குழல் முதலான தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி, நரப்புக்கருவி என்கின்ற ஐவகையான முப்பத்திரண்டு வாத்தியங்களும் முழங்கவும்,
தேரிற்கட்டிய மணிகளினோசை கணீர்கணீரென்று சத்திக்கவும், ஆடுகின்ற மாதரது அடிகளிற் பூண்ட சிலம்போசை கலீர்கலீரென்று ஒலிக்கவும், சகல மங்கல சம்பிரம ஆடம்பரங்களுடன்,
மாளிகைகளின் வாயில்கள்தோறும் மலர்ப்பந்தரிட்டு மணிமாலைகள் தூக்கி வாழை கமுகுகள் நாட்டி மெழுகிக் கோலமிட்ட திண்ணைகளில் பூரண கலசங்களும் பொற்பாவைகளும் முளைப்பாலிகைகளும் முகவிளக்குகளும் வெண்சாமரைகளும் இணைக்கயல்களும் கண்ணாடிகளும் பூந்தட்டுகளும் மங்கலமாக வைத்து அலங்கரித்தும் பரிமள திரவியங்களைக் கலந்த பனிநீர் தெளித்துத் தூளியெழும்பால் களஞ்செய்தும் ஆடல்பாடல் முதலான விநோதங்களைக் கொண்டு விளங்கிய வீதியினிடத்து தேவேந்திரன் தியாகராஜ தரிசனஞ் செய்யப்போவது போல அவ் வீதிவிடங்கனென்னும் இராஜகுமாரன் தேரை நடத்தினான்.
.அப்பொழுது, இரதி இந்திராணி முதலான தேவமாதர்களை யொத்த அவ்வீதியிலுள்ள ஸ்திரீ ஜனங்களெல்லாம் அப்புத்திரனைக் கண்டு மணமுள்ள மலரை வண்டுகள் சூழ்ந்ததுபோலவும் இனிய சுவையுள்ள தேனை ஈக்கள் சுற்றியதுபோலவுஞ் சூழ்ந்துகொண்டு, கலை நெகிழ்ந்தும், கைவளை சோர்ந்தும், கண்ணீர் ததும்பியும், குழல் அவிழ்ந்தும், கொங்கைகள் விம்மியும், பசலைபோர்த்தும் மையலடைந்த மனத்தவர்களாய்,
“கரும்பை வில்லாகவுடைய காமனைப் பார்க்கிலும் எண்மடங்கு அழகுடைய இளவரசே! கன்னிகைப் பருவம் உள்ளவளே நான்; என்மேற் கடைக்கண் செய்யாயோ?” என்றும், “எழுதப் படாத சுந்தர வடிவமுள்ள இளங்காளையே! புருஷர் முகம் பாராத பூவையே நான்; என்னைப் புணர்ந்து போகாயோ?” என்றும் “கண்களுக்கு நிறைந்த கட்டழகனே! காவல் அழியாத காரிகையே நான்; என்னைக் கலந்து போகாயோ?” என்றும்,
“சுபலக்ஷணங்கள் நிறைந்த சுந்தர வடிவனே! கல்யாணமில்லாத கன்னிகையே நான்; என்மேல் கருணை செய்யாயோ?” என்றும், “மனுச்சக்கரவர்த்தி பெற்ற மதயானையே! சிறுவயதுள்ளவளே நான்; என்னைத் திரும்பிப் பாராயோ?” என்றும், “அதிசயிக்கத்தக்க அழகனே! நிறையழியாத நேரிழையே நான்; சற்றே நின்று போகாயோ?” என்றும், “இந்த நாஜபுத்திரனுக்கு வீதிவிடஙகனென்று பெயரிட்ட பெரியோர்க்கு அனந்தந்தரம் அடிக்கடி தெண்டனிட்டாலும் போதாதே” என்றும்,
“வாசமுள்ள தைலம் பூசி மணமுள்ள மலர்மாலை சூழ்ந்து வாழைப்பூ இதழ்போல் வகிர்ந்து குயில்முகம் போல முடியிட்டுப் பளிங்குச் சிமிழ்க்குள்ளிருந்து தோன்றுகின்ற பருத்த நீலக்கல்போல் தாவள்ளியமான தலைச்சாத்துக்குள்ளிருந்து சிறுகித் தோன்றுகின்ற குடுமியும், பார்க்கின்றவரது பார்வைக்கு இன்பந்தருகின்ற தோற்றமும் மாறாத மலர்ச்சியும் மனோரஞ்சிதமான அழகும் குளிர்ச்சியும் ஒளியும் பெற்றுச் செந்தாமரை மலர்போல் விளங்கும் முகமும், கருமை மிகுந்து செம்மை கலந்து காருண்ணியந் ததும்பி இங்கிதமறிந்து சிறிதே இமைத்து மனோலம்மியமாய் மலர்போன்று நீண்ட கண்களும் ஒளிகொண்டு உயர்ந்த நீண்ட நாசியும், குண்டலமணிந்து நீண்டு அகன்ற செவியும், திரிபுண்டரந் தரித்துத் திலகந்தீட்டி அழகு பெற்று அகன்று உயர்ந்த நெற்றியும், பவளம்போற் சிவந்து திரண்ட உதடும், முல்லை யரும்புகள் போலச் சிறுகி நெருங்கி ஒளிவீசும் பற்களும், குறுகி மென்மையாகிச் சிவப்பேறிய நாவும்,
கண்டசரம் முதலான ஆபரணங்களை அணிந்து வலம்புரிச்சங்குபோல் திரண்ட கண்டமும், மத்தளம் போலத் திரண்டு மந்தர மலைபோல உயர்ந்து கண்டோர் கண்களையுங் கருத்தையுங் கட்டுகின்ற சுகந்தமாலை யணிந்த வெற்றியுள்ள தோளும், வீணைத்தண்டுபோல நீண்டு தாழ்ந்து கடகமணிந்த கையும், தாமரை மலர்போற் சிவந்து மிருதுவாகி மழைபோற் சொர்ணம் பொழிகின்ற முன்கையும், விளக்கமிகுந்து பதக்க முதலானவை அணிந்து களபகஸ்தூரிகள் பூசிக் கண்ணாடிபோல அகன்று மலைபோல உயர்ந்த மார்பும், சிறுகி உயர்ந்த வயிறும், ஆழ்ந்து அழகு பெற்ற உந்தியும்,
யானைத் துதிக்கை போன்று திரண்ட தொடையும், வட்டந் தோன்றாது தசைகொண்டு செழிப்புள்ள முழங்காலும், திரண்ட நீண்ட கணைக்காலும், தாமரை மலர் போன்று வீரகண்டை யணிந்த கால்களுடத, வரம்பு கடவாத வடிப்பமுள்ள வடிவமு முடைய இந்த இராஜபுத்திரனைக் கண்டு களிப்பதற்கு நானென்ன தவஞ் செய்தேனோ!” என்றும்,
“இராஜ சிங்கமாகிய இந்தக் குமரனைச் சிருஷ்டித்தவன் பிரமதேவனே யானால் இவனழகுக்குத் தக்க மாதினை இனி எங்கே உண்டுபண்ணுவானோ!” என்றும், “இவ்வழகனது வடிவைக் கண்டால் உருகாத கருங்கல்லும் உருகுமானால் பேதைமையுள்ள பெண்கள் மனம் உருகாதிருக்குமோ!” என்றும் “இவனது பூர்ணசந்திர பிம்பம் போன்ற புன்னகையொன்றுமே மூன்றுலகத்திலுமுள்ள பெண்களுக்கெல்லாம் பித்தேற்றுமே!” என்றும் பலவிதமாகத் தனித்தனி சொல்லி மோகங்கொண்டு நின்றார்கள்.
.அவ்வீதியிலுள்ள வாலிபர் வார்த்திபர் முதலான புருஷ ஜனங்களெல்லாங் கண்டு, “ஆ! ஆ!! இந்தப் புத்திரனே இராஜ புத்திரன்; இவனுக்குமுன் மற்ற இராஜ புத்திரரெல்லாம் இராக்ஷச புத்திரரே” என்றும், “இவன் வடிவே வடிவு; இவன் வடிவுக்குமுன் மற்றவர் வடிவெல்லாம் மர வடிவே” என்றும், “இவன் கற்ற வித்தையே வித்தை; இவனுக்கு முன் மற்றவர் கற்ற வித்தையெல்லாம் மாயவித்தையே” என்றும்,
“இவன் குணமே குணம்; இவனுக்குமுன் மற்றவர் குணமெல்லாம் வில்லின் குணமே” என்றும், “இவனே இளவரசு; இவனுக்கு முன் மற்ற இளவரசெல்லாம் பூவரசே” என்றும், “இவனே சீமான்; இவனுக்குமுன் மற்றச் சீமான்களெல்லாங் கலைமான்களே” என்றும், “இவன் வீரமே வீரம்; இவன் வீரத்துக்குமுன் மற்றவர் வீர மெல்லாம் சவ்வீரமே” என்றும், “இவன் யௌவனமே யௌவனம்; இவன் யௌவனத்துக்கு முடன மற்றவர் யௌவனமெல்லாம் வெவ்வனமே” என்றும்,
“இவன் பாக்கியமே பாக்கியம்; மற்றவர் பாக்கியமெல்லாம் நிர்ப்பாக்கியமே” என்றும், “இவனைப் பெற்றவரே பெற்றவர்; மற்றவரெல்லாம் பெண் பெற்றவரே” என்றும், “இந்தக் குணரத்தினமான புதல்வனைப் பெறுதற்கு நமது மகாராஜனும் அவரது மனைவியாரும் என்ன நோன்பு நோற்றாரோ” என்றும்,
“வெற்றியையுடைய வீரசிங்கம் போன்ற இந்தப் புத்திரனது திருமுகமண்டலத்தில் சாந்தந் ததும்புகின்றதே” என்றும், “இவனது வடிவில் அழகு ஒழுகுகின்றதே” என்றும், “நெடுநாளாகக் கண்டுகளிக்க வேண்டுமென்று எண்ணி எதிர்பார்த்திருந்த நமக்கு இன்று தியாகராஜப் பெருமான் திருவருளல்லவோ இந்த இராஜ புத்திரனை இவ் வீதியில் வரும்படி செய்தது? இனி அவ்வருளுக்கு என்ன கைம்மாறு செய்வோம்” என்றும்,
“இந்தப் புத்திரன் தியாகேசப் பெருமான் வரத்தினால் தோன்றினான் என்பதை இவனது அற்புதமான வடிவமே காட்டுகின்றதே” என்றும், “நமதரசனுக்குச் சந்ததி யில்லாமையால் பிற்காலத்தில் உலகம் என்ன பாடுபடுமோ என்று எண்ணி இளைத்திருந்த நமது துன்பத்தையெல்லாம் நீக்கி இன்பத்தைக் கொடுத்த இப்புத்திரனுக்கு நாம் செய்யும் உபகாரம் ஒன்றுமில்லையே” என்றும்,
மனுச்சோழ மகாராஜனைப்போல நம்மையெல்லாம் பாதுகாத்து வருவானென்பதற்கு வேறே அடையாளம் வேண்டுமோ? இவனிடத்திற் கருணை துளும்புகின்ற கடைக்கண்களே காட்டுகின்றன” என்றும் பலவிதமாகத் தனித்தனி சொல்லிக் கொண்டு சூழ்ந்து நின்றார்கள்.
(தொடர்கிறது)
$$$
4 thoughts on “மனுமுறை கண்ட வாசகம் -1”