தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 20

-சேக்கிழான்

பகுதி-19: மன்னவர்க்கு அழகு எது?

.

20. அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க!

தமிழ் இலக்கியத்தின் தொன்மைக்கும் நவீனத்திற்கும் பாலமாக அமைந்தவை, ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் (பொ.யு. 1823- 1874) பாடல்கள். பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், கவிஞர், ஆன்மிகவாதி, இயக்க நிறுவனர், பதிப்பாளர், சீர்திருத்தவாதி, சித்த மருத்துவர்  எனப் பன்முகங்களை உடையவர் வள்ளலார். சைவ சமயத்தின் சீர்திருத்தவாதியாக இருந்த அவர், ‘சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்’ என்ற புதிய ஆன்மிக நெறியை வடிவமைத்து, பசிப்பிணி போக்கும் அறச்சாலையையும் வடலூரில் நிறுவினார்.

தமிழ் இலக்கிய- இலக்கணங்களில் செங்கோலைத் தேடும் நமது இலக்கிய யாத்திரையின் நிறைவுப் பகுதி மகாகவி பாரதியே. எனினும் அவருக்கு முன்னோடியாக விளங்கியவர், தமிழகத்தின் தவச்செம்மல், சநாதனம் காக்க உதித்த அறச்செம்மலான வள்ளலாரே.

இவர் இயற்றிய பாடல்கள் மிகவும் எளிமையானவை; யாவரும் புரிந்துகொள்ளத் தக்கவை. இவரது 5,818 பாடல்களும் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு  ‘திருவருட்பா’ என்ற அருட்தொகையாக உள்ளன. ‘மனுமுறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகிய உரைநடை நூல்களையும் வள்ளலார் எழுதி உள்ளார். தமிழ் உரைநடையின் முன்னோடி இவரே. இவரது இருநூறாவது ஆண்டு தற்போது தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் இனிய அறிவுரைகளும், நெறிமுறைகளும் கொண்டவை திருவருட்பா பாடல்கள். இவரது பாடல்கள், உரைகள் சிலவற்றில் செங்கோல் இடம் பெறுகிறது. நல்லாட்சி நிலவ வேண்டும் என்பதே, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த வள்ளலாரின் மனக்குரல். எனவேதான் அக்காலத்தில் அடிமையாக வாழ்ந்த மக்களின் ஆன்மிக விடுதலைக் குரலாக வள்ளலாரின் பாடல்கள் விளங்குகின்றன. வள்ளலாரின் மிக விருப்பமான- சன்மார்க்க உலகின் ஒருமைநிலைக்கான வேண்டுகோள் இதோ:

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
கல்லோர் நினைத்த கலம் பெறுகநன்று நினைந்து
எல்லோரும் வாழ்க இசைந்து.

(திருவருட்பா- ஆறாம் திருமுறை: 136-5 பாடல்:5618)

“இரக்கமில்லாதவருடைய ஆட்சி விரைந்து கெடுவதாக; அருள் நிறைந்த நன்னெறியாளர்கள் ஆள்வார்களாக; அருள் ஞானம் விரும்பும் நன்மக்கள் நினைத்த நலம் பலவும் பெறுவார்களாக; அருளறமே நிறைந்து எல்லோரும் மனமொத்து வாழ்வார்களாக” என்று கூறும் வள்ளலார், ஓர் ஆட்சி என்பது மக்களிடத்தே கருணை காட்டுவதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையை சுட்டிக் காட்டுகிறார். நாட்டில் நல்லாட்சி நிலவ, அருள் மிகுந்த நன்மார்க்கர் ஆள வேண்டுமென்றும் கூறுகிறார்.

நாட்டு மக்களை நற்பாதையில் பயணிக்கச் செய்ய இறைவனே சன்மார்க்கம் என்னும் நீதிச் செங்கோலை தனக்கு ஈந்ததாகவும் பாடுகிறார் வள்ளலார். இதோ அப்பாடல்:

தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

(திருவருட்பா- ஆறாம் திருமுறை- 80-5, பாடல்:4589)

இதனையே, தனது அருட்பெருஞ்சோதி அகவலிலும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார் வள்ளலார். இதோ அந்தப் பாடலின் கவனிக்க வேண்டிய அடிகள்:

…தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே!

தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே!

தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே…

(திருவருட்பா- ஆறாம் திருமுறை- அருட்பெருஞ்சோதி அகவல் 1133- 1138)

இதன் பொருள்:

“தனது அருட்சக்தியின் எல்லையைக் காட்டி, அது நல்கும் திருவருள் ஞானத்தை செங்கோலாகச் செலுத்தி (எங்கும் பரப்பி) பயன் கொள்க என்று எனக்கு அறிவுறுத்தியது தந்தையாகிய சிவம். தனது அருளாட்சிக்குரிய பொருள்களாகிய அங்கங்கள் அனைத்தையும் எனக்கு உரியனவாகத் துணை புரியச் செய்வது ஒப்பற்ற தந்தையாகிய சிவம். அருளாட்சியின்கண் தான் கொள்ளும் சிவவடிவத்தையும் சிவக்கோலத்தையும் திருவருள் ஞான ஆட்சி புரியும்போது எனக்கு நல்கி என்னைச் சிவமாக்குவது எனக்கு ஒப்பற்ற தந்தையாகிய சிவம்….” என்கிறார் வள்ளலார்.

நிலைபெறும் திருவருட் செங்கோல்:

வள்ளலார் ‘சத்திய அறிவிப்பு’என்ற தலைப்பிலே எழுதியுள்ள நான்கு பாடல்களில் ஒன்றில் செங்கோல் என்னும் சொல், மிகவும் அற்புதமான பொருளில் இடம்பெறுகிறது.  “சுத்த சிவ சன்மார்க்க நெறியே எங்கும் விளங்கும்;  திருவருட் செங்கோல் எங்கும் நிலைபெறும்” என்கிறார் வள்ளலார் இப்பாடலில்:

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்,
   சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்.
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்.
   இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்.
   தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்.
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்.
   திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே!

     (திருவருட்பா- ஆறாம் திருமுறை- 6.149.4- பாடல்: 5817)

பொருள்:

தோழி! இது மெய்ம்மை மொழியாதலால் நான் எடுத்துரைக்கின்றேன் என அறிவாயாக;  இதன்மீது உனக்குச் சந்தேகம் வேண்டாம்; இச்செய்தியைக் கேட்டு நீ மகிழ்ச்சி கொள்வாய்; இன்றைய தினமே அருட்சோதியை உடைய பெருமான் நம்மிடம் வந்தருளும் நாளாகும்; இனிமேல் வரும் நாட்கள் எல்லாம் இன்பம் பொருந்திய நாட்களாகும்; சுத்த சிவ சன்மார்க்க நெறியே எங்கும் விளங்கும்; எல்லா உலகங்களும் தூய்மையை அடையும்; நீ சொன்ன சொற்கள் யாவும் உண்மையாகும்; செத்தவர்கள் உலகில் எழுந்து உலகெங்கும் திரிந்து மகிழ்வார்கள்; திருவருட் செங்கோல் எங்கும் நிலைபெறும். 

அதாவது, சன்மார்க்கம் உலகில் பரவி, இறைவனின் அருளாட்சி எங்கும் பரவும் என்பதே வள்ளலாரின் உள்ளக் கிடக்கையாக இருப்பது இப்பாடலின் மூலமாகத் தெரிய வருகிறது.

மனுமுறை கண்ட வாசகம்:

திருவாரூரில் ஆட்சி செய்த சோழ மன்னன் எல்லாளன் (பொ.யு.முன் 205-165), மனுநீதி தவறாமல் ஆண்டதால் மனுநீதிச் சோழன் என்று பெயர் பெற்றவன். இவனைப் பற்றி சங்கப் பாடல்களிலும் பெரியபுராணம், சிலப்பதிகாரம், இலங்கையின்  ‘மகாவம்சம்’ ஆகிய நூல்களிலும் கூறப்பட்டிருக்கிறது.  

இவனது அரண்மனை முன்பு கட்டியிருக்கும் ஆராய்ச்சிமணி, மக்கள் குறைதீர்க்கப் பயன்பட்டது. ஒருமுறை இவனது மகன் வீதிவிடங்கன் தேரில் நகருலா செல்கையில் பசுவின் கன்று துள்ளியோடி வந்து விழுந்து தேர்ச்சக்கரத்தில் சிக்கி மாண்டது. அதனால் துயருற்ற அன்னைப்பசு ஆராய்ச்சிமணியை  ஒலித்து நியாயம் கேட்டது.

பசுவின் கன்று இறக்கக் காரணமானவன் தனது மகனே என்று உணர்ந்ததும், அவனை அதே முறையில் தேர்க்காலில் இட்டுக் கொல்லுமாறு ஆணையிட்டு நிறைவேற்றினான் சோழ மன்னன் என்பதே சரித்திரக் கதை. அதனால் தான் அவனது பெயர் இன்றும் உலகில் நின்று வாழ்கிறது.

‘மனுநீதி சாஸ்திரம்’ என்பது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்ட அன்றாட வாழ்வியலுக்கான அக்கால சட்ட நெறிமுறைகளே. மனு என்பவர் தொகுத்ததால் அதற்கு ‘மனுநீதி சாஸ்திரம்’ என்று பெயர் வந்தது. இதில் அக்காலத்தில் நிலவிய நடைமுறைகளும், மன்னருக்கான வழிகாட்டுதல்களும் உள்ளன. இதில் குறையில்லாமல் இல்லை. அதே சமயம், இத்தொகுப்பு அக்காலத்திற்கேற்றதாக இருந்ததால் தான் இதனை நமது தமிழ் இலக்கியங்கள் போற்றிப் பாடுகின்றன என்பதையும் நாம் உணர வேண்டும்.

இந்த மனுநீதியைத் தான் தவறாகப் புரிந்துகொண்டு தமிழகத்தில் ஒரு குறுங்குழு மோசமாக மொழிபெயர்த்து, ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் சமயத்தையும் பழிப்பது தொடர்கிறது. அவர்களுக்காகவே, ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற உரைநூலை வள்ளலார் எழுதினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நீதியை நிலைநாட்ட தனது புதல்வனையே கொன்ற மனுநீதிச் சோழனின் கதையில் மயங்கிய வள்ளலார் தனது உரைநடையில் ‘மனுமுறை கண்ட வாசகம்’ நூலை எழுதி இருக்கிறார். இந்நூலில் நல்லாட்சி, செங்கோலின் சிறப்பு, மன்னரின் கடமைகள், அக்கால நீதிநெறி ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகள் இங்கே தேவை கருதிக் கொடுக்கப்படுகின்றன.

நூலின் தொடக்கப்பகுதியில் சோழ மன்னரின் சிறப்புகள் கூறப்படுகின்றன. அவை வள்ளலாரின் வரிகளில்…

அதிலே (திருவாரூரிலே) மூன்று சுடர்களிலும் முதற்சுடராகிய மேன்மையடைந்த சூரியகுலத்திற் பிறந்து அரசாட்சி செய்துவந்த சோழராஜர்களில் சிறந்தவராய், அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவராய், உயிருக்கு உறுதியைத் தருகின்ற நல்ல கேள்விகளை யுடையராய், எல்லா உயிர்களுக்கும் இதஞ்செய்கின்றவராய், வேதமோதுதலும், யாகஞ்செய்தலும், இரப்பவர்க்கீதலும், பிரஜைகளைக் காத்தலும், ஆயுதவித்தையில் பழகுதலும், பகைவரை அழித்தலும் என்னும் ஆறு தொழில்களும், வீரமுள்ள சேனைகளும், செல்வமுள்ள குடிகளும், மாறாத பொருள்களும், மதிநுட்பமுள்ள மந்திரியும், அன்புள்ள நட்பும், பகைவரால் அழிக்கப்படாத கோட்டையும் உடையவராய், வழக்கை அறிவிப்பவரையும் தங்களுக்குள்ள குறையைச் சொல்லிக்கொள்பவரையும் இலேசிலே தமது சமுகத்துக்கு அழைப்பித்து அந்த வழக்கைத் தீர்த்தும் அக்குறையை முடித்துங் கொடுப்பவராய், பாலொடு பழஞ்சேர்ந்தாற்போல முகமலர்ச்சியோடு இனியவசனஞ் சொல்லுகின்றவராய், பின்வருவதை முன்னே அறிந்துகொள்வதும் உறவினர், அயலார், சினேகர், பகைவர், இழிந்தோர், உயர்ந்தோர் முதலான யாவரிடத்தும் காலவேற்றுமையாலும், குணவேற்றுமையாரும் உண்டாகின்ற நன்மை தீமைகளை உள்ளபடி அறிந்து கொள்வதுமாகிய விவேகமுள்ளவராய், அகங்காரம் காமம் கோபம், லோபம் மோகம் பொறாமை வஞ்சகம் டம்பம் வீண் செய்கை முதலான குற்றங்களைத் தினையளவுங் கனவிலும் காணாதவராய், துர்க்குணங்களையுடைய சிறியோர்களைச் சேர்த்துக் கொள்வதை மறந்தாயினும் நினையாமல் நற்குணங்களில் நிறைந்து செய்வதற்கு அரிதான செய்கைகளையுஞ் செய்து முடிக்கவல்ல பெரியோர்களைச் சகாயமாகக் கொண்டு செய்யத்தக்க காரியங்களைத் தெரிந்து செய்தும், செய்யத்தகாத காரியங்களைத் தெரிந்து விடுத்தும், பகைவலியும் தன்வலியும் துணைவலியும் காலநிலைமையும், இடநிலைமையும் அறிந்து காரியங்களை நடத்தியும், அடுத்தவர்களது குணம் வல்லமை ஊக்கம் முதலான தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து அவரவர் தரங்களுக்குத் தக்க உத்தியோகங்களை அவரவர்க்குக் கொடுத்தும், பழமை பாராட்டியும், சுற்றந்தழுவியும், கண்ணோட்டம் வைத்தும், சாதியியற்கை, ஆசிரமவியற்கை, சமயவியற்கை, தேசவியற்கை, காலவியற்கை, முதலான உலகியற்கைகளை அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கபடி ஆராய்ந்து செய்தும் நல்லொழுக்கத்துடன் நடப்பவராய், குடிகளுக்கு அணுவளவு துன்பம் நேரிடினும் அதை மலையளவாக எண்ணித் தமக்கு வந்ததுபோல் இரக்கங்கொண்டு மனமுருகுவதனால் தாயை யொத்தவராய், அத் துன்பத்தைவிட்டு இன்பத்தை அடையத்தக்க நல்வழியை அறியும்படி செய்விப்பதனால் தந்தையை யொத்தவராய், அவர்களுக்கு அந்த நல்வழியைப் போதித்து அதிலே நடத்துகின்றபடியால் குருவை யொத்தவராய், அந்தக் குடிகளுக்கு இகபர சுகத்தைக் கொடுப்பதற்கு முன்னின்று அது பற்றி முயற்சி செய்யும்போது வரும் இடையூறுகளை நீக்குகின்றபடியாலும் அந்த ஒழுக்க வழியிலிருந்து தவறினால் அந்தக் குற்றத்துக்குத் தக்க தண்டனை யொத்தவராய், குடிகளுக்கு ஆபத்து நேரிடும்போது கட்டியவஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல் உடனே அந்த ஆபத்திலிருந்து நீங்கும்படி காரியமது என்று காட்டுகிறபடியால் கண்போன்றவராய், குடிகளுக்கு அச்சம் அவலம் முதலானவை நேரிடாமல் காத்து வருதலால் உயிர் போன்றவராய், குடிகள் தம்மை நினைக்குந்தோறும் ‘இப்படிப்பட்ட நற்குண நற் செய்கைகளையுடைய புண்ணியமூர்த்தியை அரசனாகப் பெற்ற நமக்குக் குறை யொன்றும் இல்லை’ என்று களிக்கின்றபடியால் பொன்புதையலை யொத்தவராய், கைம்மாறு வேண்டாது கொடுத்தலால் மேகத்தை யொத்தவராய், அறிவே ஆயிரங் கண்களாகவும் கைகளே கற்பகமாகவும் கண்களே காமதேனுவாகவும் திருமுகமே சிந்தாமணியாகவும் மனோதிடமே வச்சிராயுதமாகவுங் கொண்டபடியால் இந்திரனை யொத்தவராய், சிங்காதனமே செந்தாமரையாகவும் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கு பொருளும் அடைதற்குரிய நான்கு மார்க்கமே நான்கு முகமாகவுங்கொண்டு அந்தந்த மார்க்கங்களில் அந்தந்தப் பொருள்களை விருத்தி பண்ணுகிறபடியால் பிரமனை யொத்தவராய், ஆக்கினாசக்கரமே சக்கராயுதமாகவும் செங்கோலே திருமகளாகவும் சிறந்த பெரும்புகழே திருப்பாற்கடலாகவும் யுக்தமல்லாத காரியங்களை யொழிந்திருப்பதே யோகநித்திரை யாகவுங் கொண்டு மண்ணுலகிலுள்ள உயிர்களைக் காத்து வானுலகிலுள்ள தேவர்களுக்கு யாகங்களால் அமுது கொடுத்து வருகின்றபடியால் திருமாலை யொத்தவராய், சோர்வில்லாமை தூய்மை வாய்மை என்னும் மூன்றுமே மூன்று கண்களாவும் துணிவுடைமையே சூலமாகவுங் கொண்டு பாவங்களை யெல்லாம் நிக்கிரஞ் செய்து வருகின்றபடியால்,

உருத்திர மூர்த்தியை யொத்தவராய், வாட்டத்தை நீக்கி மகிழ்ச்சி செய்கின்ற அருளுள்ள படியால் அமுதத்தை யொத்தவராய், சிவபக்தியில் மிகுந்தவராய், பொறுமையில் பூமியை யொத்தவராய், தருமமே உருவாகக் கொண்டு நடுநிலையிலிருந்து மனுநீதி தவறாது விளங்கிய மனுச்சோழர் என்னும் பெயரையுடைய சக்கரவர்த்தியானவர், கலிங்கர் குலிங்கர் வங்கர் கொங்கர் அச்சியர் கொச்சியர் தெங்கணர் கொங்கணர் தெலுங்கர் முதலான தேசத்தரசர்க ளெல்லாம் திறைகட்டி வணங்க, உலக முழுவதையும் ஒருகுடை நிழலில் வைத்துச் செங்கோல் செலுத்தி அரசாட்சி செய்யுங்காலத்தில்:

உலகமெங்கும் புலியும்பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும், சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும், பருத்துங் கிளியும் பழகி மகிழ்ந்தும், கூகையுங் காகமும் கூடிப் பறந்தும், பூனையும் எலியும் பொருந்தி யிருந்தும், இந்தப்படி மற்றுமுள்ள விரோதமாகிய உயிர்களும் ஒன்றுக் கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்திருக்கவும், மரங்கள் புல்லுகள் முதலான நடையில்லாத உயிர்களும் வாடுதல் உலர்தல் உதிர்தல் வெட்டுண்ணல் முதலான குறைகளில்லாமல் வளர்ந்தோங்கி வாழ்ந்திருக்கவும், பெருங்காற்று பெருவெள்ளம் பெருமழை தீப்பற்றல் இடிவிழுதல் முதலான உற்பாதங்கள் சிறிதுமில்லாமல் சுகுணமான காற்றும் மிதமான வெள்ளமும் பருவமழையும் தவறாமல் உண்டாயிருக்கவும், பசிநோய் உடம்புநோய் அவமிருந்து உயிரச்சம் முதலான துக்கங்களொன்றும் சேராமல் சுகமே சூழ்ந்திருக்கவும், பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்கின்ற ஜாதியாரும், பிரமசாரி கிரகஸ்தன் வானப் பிரஸ்தன் சந்நியாசி என்கின்ற ஆசிரமத்தாரும், சைவர் வைணவர் வைதிகர் என்கின்ற சமயத்தாரும், தங்கள் தங்களுக்குரிய ஆசாரங்களில் குறைவுபடாமல் வாழ்ந்திருக்கவும், அன்னதானம் சொர்ணதானம் கோதானம் பூதானம் முதலான தானங்களும் தேவாலயங் கட்டுவித்தல் திருக்குளமெடுத்தல் செழுஞ்சோலை வைத்தல் தண்ணீர்ப்பந்தல் வைத்தல் சத்திரங் கட்டுவித்தல் முதலான தருமங்களும், சாந்திராயண முதலான விரதங்களும், தியானஞ்செய்தல் ஜெபஞ்செய்தல் முதலான தவங்களும் தவறுபடாமல் ஓங்கியிருக்கவும், தியாகேசப் பெருமானுக்கும் மற்றுமுள்ள தெய்வங்களுக்கும் திரிகால பூசைகளும் திருப்பணிகளும் திருவிழா முதலான சிறப்புகளுடன் குறைவில்லாமல் நடக்கவும் அவரது ஆக்கினையே செய்வித்து வந்தது.

மகன் செய்த குற்றத்தால் மன்னன் கலங்குதல்:

ஆராய்ச்சிமணியை ஒலித்த பசுவின் துயரம், தனது மகனால் ஏற்பட்டது என்பதை அறிந்து புலம்பும் மன்னன், பாசத்தையும் நீதியையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். இதோ வள்ளலாரின் வரிகள்…

…எமன் கையிலகப்பட்ட உயிர் எந்த விதத்தாலுந் திரும்பாதென்று உலகத்தார் சொல்லும் உறுதியான வார்த்தை வீண்போக, முன்னொரு காலத்தில் நமது நகரத்தில் ஓரந்தண னீன்ற சிறுவன் அகாலத்தில் மரணமடைய, அதுபற்றி அவ்வந்தணன் துயர்கொண்டு தமது சமூகத்தில் வந்து,  ‘சிவநெறி திறம்பாமற் செங்கோல் செலுத்துகிற உமது காவலைக் கடந்து அகாலத்திலே அந்தகன் வந்து இரவும் பகலுந் தவஞ்செய்து யான் அருமையாகப் பெற்ற ஒரு பேறான புத்திரனை உயிர்கொண்டு போனானே தலைவனே! இது தகுமோ!’ என்று முகமும் மனமுஞ் சோர்ந்து முறையிட்டுக் கொள்ள, அதுகேட்டு மனமுருகி நொந்து, சிவபெருமான் திருவடியன்றி மற்றொன்றிலும் மனம் வையாத தமது வல்லமையால் எமலோகத்தி லிருந்த உயிரை மீட்டுக் கொண்டு வந்து முன்னிருந்த உடலில் விட்டு, அவ்வந்தணனை மகிழ்ச்சி செய்வித்து, அன்றுதொட்டு எமனைத் தாமுள்ளவரையிலும் தமது நகரத்திலும் நாட்டிலும் வரவொட்டாமற் செய்த என் குலமுதல்வராகிய சைவச்சோழரைப்போல, அவ்வளவு பெரிதான காரியஞ் செய்யாவிட்டாலும், இப் பசுங்கன்றின் உயிரொன்றை மாத்திரமானாலும் மீட்டுக்கொடுக்க வலியற்றவனாக விருக்கின்றேனே!

அவமிருத்து நேரிட்டபோது சஞ்சீவகரணி என்னுந் தெய்வத்தன்மையுள்ள மருந்தைக் கொடுத்துப் பிழைப்பிக்கச்செய்த என் குலத்தலைவர்களிற் சிலர்போல் அம்மருந்தையாயினும் பெற்றுக்கொள்ளத்தக்க தவஞ்செய்தேனோ! தமது அஜாக்கிரதையினால் பிற உயிர்க்குக் கெடுதி நேரிட்டபோது அது பொறாமல் தம்முயிரை விட்டுவிட்ட சில அரசர்களைப் போல என் அஜாக்கிரதையினால் நேரிட்ட இப் பசுங்கன்றின் முடிவைக் கேட்டறிந்த நான் உயிரையாயினும் விட்டேனோ!

அன்னிய தேசத்தரசர் குற்றஞ் செய்தோரைக் கொலை செய்தாரென்று கேட்டாலும் ‘குற்றம் வந்ததென்ன! கொலை செய்ததென்ன!’ என்று குலைநடுங்குகின்ற நல்லோர்கள் மரபில், நான் குற்றம் வரவும் கொலைசெய்யவும் அரசுசெலுத்தி, அந்த நல்லோர்கள் இயல்புக்கு நாணமுண்டாகத் தானோ வீட்டின் வாயிலில் வெள்ளெருக்குப் பூத்ததுபோலத் தோன்றினேன்!

‘நாம் அரசாட்சிசெய்ய ஏற்பட்ட நாள்தொட்டு இந்நாள் வரையிலும் எவ்வுயிரும் எவ்விதத்திலும் யாதொரு குறையுமில்லாமல் வாழ்ந்து மகிழ்ந்திருக்க, நீதியுடன் முறை தவறாது செங்கோல் செலுத்தி வரும்படி சிவானுக்கிரகம் பெற்றோமே’ என்பதுபற்றி ஒரு நாழிகைக்கு முன் வரையிலும் உண்டாயிருந்த மனக்களிப்பையெல்லாம் மண்ணிற் கவிழ்த்தேனே!

‘நாமும் பழிபாவங்களுக்குப் பயந்தே அறநெறி தவறாது அரசு செலுத்தி வருகிறோம், பழைய தரித்திரனுக்குப் பணங்கிடைத்தது போல் நமக்கும் சிவானுக்கிரகத்தால் ஒரு சிறுவன் பிறந்தான், அவனும் கற்றவர் மகிழக் கல்வி கேள்விகளில் நிறைந்து பண்பும் பருவமும் உடையவனானான்; இனி நமக்கென்ன குறை’ என்ற எண்ணி எண்ணி இறுமாப்படைந்தேனே!  ‘புத்திரப்பேறு பெற்றுப் புனிதனானோம்’ என்று பூரித்திருந்தேனே!  ‘நமது புத்திரன் இளவரசுப் பட்டத்திற்கேற்றவனானான், இனிக் கல்யாணஞ் செய்விப்போம்’ என்று கனவு கண்டிருந்தேனே!

‘நமது புத்திரன் நற்குணங்களை யுடையவனாக விருக்கின்றான், பெற்றெடுத்த நமது பேர் கொண்டுவருவான்’ என்று மனோராச்சியம் பண்ணி மகிழ்ந்திருந்தேனே! இளங்கன்று எதிர்வரவுங் கண்கெட்டுக் கருத்தழிந்தவன்போல் தேரை நடத்தித் தீராப்பழி பூண்டானே! ஐயோ! இவன் என் செங்கோலைப் பிடிக்கத்தக்க செல்வப்பிள்ளை யாகாமல் தென்னம்பிள்ளை யானானே!

 ‘சிவதரிசனஞ் செய்யப் போகிறவன் தேரூர்ந்தே போகப்படாது’ அவ்வாறு போயினும் நாற்புறத்திலும் நடப்போர்களை விலக்கும்படி ஆள்விலக்கிகளைவிட்டு, முன்னே பரிக்காரர் வரவு குறித்துப் போகப் பின்னே மெல்லெனத் தேரை விடவேண்டும்; அப்படிச் செய்யாமல் பாலியப்பருவம் பயமறியாது என்பதற்குச் சரியாகப் பரபரப்பாகத் தேரை நடத்திப் பசுங்கன்றைக் கொன்றான்! ஐயோ! இவன் கல்வியறிவுள்ளவனாக விருந்தும் அறிவழிந்து அரசன் பிள்ளையாகாமல் அணிற்பிள்ளை யானானே! கொடிய பாதகங்களிலெல்லாம் கொலைப் பாதகமே தலையென்று வேதமுதலாகிய கலைகளில் தானும் படித்தறிந்தான், சான்றோர் சொல்லவுங் கேட்டறிந்தான்; அப்படி யறிந்திருந்தும் அப்பாதகஞ் சேரவொட்டாமல் தன்னைக் காத்துக்கொண்டு பட்டப்பிள்ளை யாகாமல் பழிப்பிள்ளையானானே; ஐயோ! புதல்வனைப் பெற்றால் புண்ணியம் பெறலாம் என்றெண்ணிய எனக்கு மலடாயிருந்தாலும் வாழ்வுண்டென்று நினைக்கும்படி நேரிட்டதே!

நான் நெடுநாளாகத் தியாகராஜப் பெருமானை வேண்டிக்கொண்டது இப்படிப்பட்ட பெரிய பழிக்காளாகிய பிள்ளையைப் பெறத்தானோ! பிள்ளையென்ன செய்யும்! பெருமான் என்ன செய்வான்!  ‘மாதா பிதாக்கள் செய்தது மக்களுக்கு’ என்னும் பெரியோர் வார்த்தையின்படி நான் செய்த தீவினையே என் புத்திரனுக்கு நேரிட்ட தென்று நினைத்து என்னை வெறுத்துக்கொள்ள வேண்டுமென்றாலும், இந்தப் பிறப்பில் என் புத்தியறிந்து ஒரு தீங்குஞ் செய்ததில்லையே! இந்தப் பிறப்பில் இல்லாவிட்டாலும் முற்பிறப்பிலே…

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

ஐயோ! இந்தப் பசுவின் சோர்ந்த முகத்திற் கண்ணீர் ததும்புகின்றதைக் கண்ட என் கண்களை நுங்கு சூன்றெடுப்பதுபோலப் பிடுங்கி யெறியேனோ!  ‘இதன் கன்றை உன்புத்திரன் தேர்க்காலில் ஊர்ந்து கொன்றான்’ என்று சொல்லக் கேட்ட என் செவிகளைச் செம்பு நீருருக்கிவிட்டுச் செவிடாக்கேனோ! இந்தப் பசு ஆராய்ச்சிமணியினால் தன் குறையை யறிவித்த நாழிகை தொட்டு இந்நாழிகை வரையிலும் அக்குறையைத் தீர்ப்பதற்கு வேண்டிய உறுதிமொழியைக் கூறாதிருக்கிற என் நாவைச் சூடுள்ள நெருப்பாற் சுட்டுவிடேனோ! இதற்குத் துன்பமுண்டாக்கினவன் இன்னானென்று அறிந்தும், அவனை இன்னும் தண்டனை செய்யாது தாழ்த்திருக்கின்ற என் கைகளைக் கத்தியைக் கொண்டு கண்டித்து விடேனோ! இதன் கன்றைப் பிழைப்பிப்பதற்குத் தக்க நன்முயற்சியைத் தேடி நாலுதிக்குகளிலும் நடவாத என் காலைக் கோடரிகொண்டு குறுக்கே வெட்டேனோ! இதன் மெலிவை யடிக்கடி கண்டும் வற்றியொடுங்காத மலபாண்டமாகிய என் உடம்பை வாளாயுதங்கொண்டு மடித்துக்கொள்ளேனோ! இதன் பரிதாபத்தையும் நமக்கு நேரிட்ட பழியையும் எண்ணி உருகியழியாத உள்ளத்தை வலிய விஷத்தையிட்டு மாய்த்து விடேனோ! நிலையிலா உயிர்க்கஞ்சி இவைகளில் ஒன்றுஞ் செய்யாது உயிர் வைத்திருக்கின்றேனே! என்ன செய்வேன்!

பாவிக்குத் தீர்க்காயுள் என்பதற்குச் சரியாகப் பெரும் பாவியாகிய என்னுயிர் தனக்குத் தானேயும் போகின்றதில்லையே!  ‘நல்ல பூஜாபலத்தினால் தெய்வபக்தியுடன் செங்கோல் செலுத்தி வருகின்றான் மனுச்சோழன்’ என்று மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் புகழ்ந்த புகழெல்லாம் பொய்யாய்ப் போய்விட்டதே! நான் அப்புகழை வேண்டினவனல்ல; ஆதலால் அது போகட்டும்; உயிரினும் ஒன்பது பங்கு அதிகமாகத் தேடிவைத்த புண்ணியமும் போகின்றதே!

ஆ! நான் நீதி தவறாது அரசு செய்கின்றேன் என்பதை நினைத்தால் எனக்கே ஏளனமாக விருக்கின்றதே! சேங்கன்றைத் தெருவிற் சிதைக்கவும் ஒருமித்த என் செங்கோலை அளவுகோலென்பேனோ! அஞ்சனக்கோ லென்பேனோ! எழுதுகோ லென்பேனோ! ஏற்றக்கோ லென்பேனோ! கத்தரிக்கோ லென்பேனோ! கன்னக்கோ லென்பேனோ! குருடன்கோ லென்பேனோ! கொடுங்கோ லென்பேனோ! துடைப்பங்ககோ லென்பேனோ! வைக்கோ லென்பேனோ! அல்லது இன்று இறந்த பசுங்கன்றாகிய பிரேதத்தைப் புரட்டிச் சுடுகின்ற பிணக்கோ லென்பேனோ! என்ன கோலென்று எண்ணுவேன்!

இளங்கன்றைக் கொலை செய்யவுஞ் சம்மதித்திருந்த என் ஆக்கினா சக்கரத்தைக் கிரகச்சக்கர மென்பேனோ! வருஷ சக்கர மென்பேனோ! தண்டசக்கர மென்பேனோ!

அல்லது இச்சேங்கன்றைச் சிதைத்த தேர்ச்சக்கர கன்றுக்கு அபாயம் நேரிடக் காத்திருந்த என் காவலைச் சிறு பெண் காக்கின்ற தினைக்காவ லென்பேனோ! குருடன் காக்கின்ற கொல்லைக் காவலென்பேனோ! புல்லாற் செய்த புருடன் காக்கின்ற புன்செய்க் காவலென்பேனோ! வரும்படி யில்லான் காக்கின்ற வாயிற்காவ லென்பேனோ! பயிரைக் காக்க வைத்த பண்ணைக்காவ லென்பேனோ! வேலை வேண்டிக் காக்கின்ற வெறுங்காவ லென்பேனோ! அல்லது இக்கன்றை அடக்கஞ் செய்யக் காத்திருக்கின்ற அரிச்சந்திரன்காவ லென்பேனோ! என்ன காவலென்று எண்ணுவேன்! என்ன செய்வேன்! ஐயோ!

இப்படிப்பட்ட பாவியாகிய என்னை மனு வென்று பேரிட்டழைப்பது காராட்டை வெள்ளாடென்றும், அமங்கள வாரத்தை மங்களவாரமென்றும், நாகப்பாம்பை நல்லபாம்பென்றும் வழங்குகின்ற வழக்கம் போன்றதல்லது உண்மையல்லவே! இனி, இப்பசுங்கன்று உயிர்பெற் றெழுந்திருப்பதற்கு உபாயம் என் புத்திரனுயிரையன்றி யென்னுயிரையும் என் மனையாளுயிரையும் என்னரசாட்சியும், எனக்கு உரித்தாகிய எல்லாப் பொருள்களையுங் கொடுத்துவிட்டால் நேரிடுமென்று சொல்வோருண்டானால், இதோ கொடுத்துவிடுகிறேன். அவ்வாறு சொல்வோரு மில்லையே! இதற்கு நேரிட்ட துக்கமும் எனக்கிதனாலுண்டாகிய துயரமும் எப்படித் தீருமோ! இப்படி யென்றறியேனே! என்ன செய்வேன்!" என்று பலவிதமாகப் பரிதபீத்திருந்தார்…

(மனுமுறை கண்ட வாசகம்- வள்ளலார்)

இறுதியில் தனது தவப்புதல்வனையே தேர்க்காலில் இட்டுக் கொன்று, கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன். அதுகண்டு இறைவன் சிவனே நேரில் தரிசனம் தந்தார் என்று முடிகிறது மனுமுறை கண்ட வாசகம்.

தமிழின் ஆரம்பகால உரைநடை கடினமாக இருந்ததை இந்தக் கதையில் காண முடிகிறது. ஆயினும் ஊன்றிப் படித்தால் எளிதில் புரியும்.

இந்த உரைநடை நூலில் ‘செங்கோல்’ என்ற சொல்லை வள்ளலார் பல இடங்களில் புகுத்தி, அதன் முக்கியத்துவத்தை விளங்கச் செய்கிறார். வள்ளலாரின் ஆதர்ஷ  நாயகர் மனுநீதி சோழனே என்பது தெளிவு.

‘அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க!’ என்ற வள்ளலாரின் வேண்டுகோளில் தொனிப்பது, செங்கோல் செலுத்தி ஆண்ட மனுநீதிச் சோழன் போன்றோரை மனதில் இருத்தியே என்பது புரிகிறல்லவா?

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 20

Leave a comment