நினைவு முடிச்சு

-பேரா. இளங்கோ ராமானுஜம்

போருக்குச் செல்லும் வீரனின் கரங்களில் கட்டப்படும் காப்புக்கயிறு போல, நம் வாழ்விலும் சில நினைவு முடிச்சுகள் தேவைப்படுகின்றன. இதோ நமது வாழ்வை வளப்படுத்தும் இனிய வழிகாட்டுதல் கட்டுரை. இதனை வழங்கி இருப்பவர், பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள்...

ஓர் ரம்மியமான மாலைப் பொழுது! கிருஷ்ண பகவானும், அர்ஜுனனும்  காலார நடந்து செல்கிறார்கள். அவர்கள் கண்ணில் அழகிய மாந்தோப்பு தென்பட்டது. சுவையான மாம்பழங்கள் காண்போரின் கண்களையும் நாவையும் வசீகரித்தன. அந்த அழகைக் கண்களால் பருகிக் கொண்டே அர்ஜுனன் கேட்டான், “கிருஷ்ணா! நறுமணம்  கமழும் இந்த மாங்கனிகளைக் காணும்போது  ‘பூரிப்பு’ வருகிறது. இக்காட்சி  ‘நிறைவின்’ அடையாளமாக என் கண்களுக்குத் தெரிகிறதே!” என்றான்.

சிரித்தான் கிருஷ்ணன்.

“சரியான சொற்களைப் பயன்படுத்துகிறாய், அர்ஜுனா! பூரிப்பு! நிறைவு!  அப்பப்பா! இந்தப் பூரிப்பு திடீரென தோன்றி விடவில்லை. அதற்குப் பின்னால் எவ்வளவு செயல்கள் நடைபெற்று இருக்கின்றன தெரியுமா? இதைப்  ‘பரிபாகம்’ எனவும் பகரலாம், அர்ச்சுனா. இந்த நிறைவுக்குப் பின்னால் மறைந்திருக்கும் தியாக உணர்வு, சுயநலமில்லாது, பற்றில்லாது செய்த செயல்களின் உன்னதத்தைக் கொஞ்சம் சிந்திப்பாயாக அர்ஜுனா!”

“என்ன! இந்தப் பழங்களுக்குப் பின்னால் இவ்வளவு வரலாறா? அது என்ன கிருஷ்ணா?”

“இந்த இனிப்பான பழங்கள் கடந்து வந்த பாதையைப் பார் அர்ஜுனா! ஒரு சின்ன விதை பூமியில் புதைக்கப்படுகிறது. புதைந்த விதை சிதைந்து  தன்னுயிரை மாய்த்து ஓர் புதிய உயிரை உண்டு பண்ணுகிறது. அது தியாகம் தானே அர்ஜுனா? ஒரு சிறு செடி பிறந்து பூமிக்கு மேல் வந்து மூச்சு விடுகிறது. புதிய உலகத்தைப் பார்த்து பூரிக்கிறது”.

“உண்மைதான் கிருஷ்ணா!”

“பூரித்துப்போன சின்னஞ்சிறு செடியை இயற்கை அன்னை அணைத்துக் கொண்டு மழை நீரால்  நனைத்து, மண்ணில் உரமேற்றி  மெருகூட்டுகிறாள். இந்தச் செயல்கள் செயல்களுக்காகவே செய்யப்படுகின்றன. யாரும், யாரிடமும் எந்த எதிர்பார்ப்பையும் வைக்கவில்லை. செடி தண்ணீர் கேட்கவில்லை. இயற்கையும் எதையும் எதிர்பார்த்து நீர் கொடுக்கவில்லை…

செடி மரமாகி, மொட்டு எட்டிப் பார்க்கிறது. மொட்டு மலராகி, மலர் காயாகி, காய் கனியாகி, கனிந்த பழங்கள் இன்று நம் கண்களுக்கு நிறைவைத் தருகின்றன, அர்ஜுனா! எத்தனை செயல்கள் விதையில் இருந்து பழம் வரை! இங்கே இயற்கையின் நிறைவை,  பூரிப்பைப் பார்க்கிறோம். பழுத்த பழம் பக்குவத்தின் முழுமைக்கு அடையாளம்! பயன் கருதாது செய்யப்பட்ட செயல்களின் உச்சம் அது!”

 அற்புத விளக்கம் கிருஷ்ணா! என் சிந்தனைக்கு அது எட்டவில்லையே…!”

“இப்படித்தான் இருக்க வேண்டும் மனிதனது செயல்கள், ஓர் விதையைப் போல! பயன் கருதாது மனிதன் செய்யும் செயல்கள் அவனை பிரம்மஞானத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இதுவே கர்மயோகத்தின் உச்சம். எப்படி செயல்கள் செய்ய வேண்டும் என்பதை ஒரு சிறு விதை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது அல்லவா? உன் மனதில் தெளிவு பிறந்து விட்டது என்றே நினைக்கிறேன்! எனவே சோர்வையும், சஞ்சலத்தையும் மனதில் இருந்து அகற்றி,  செயலாற்று. உன் எண்ணத்தில் சுயநலம் இருக்க வேண்டாம். சமுதாயத்தின் நலனுக்காக,  நீ செய்யும் செயல்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்து செயலாற்று. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது இருப்பது போன்று செயலாற்று அர்ஜுனா. நீ தன்னம்பிக்கையோடு செயலாற்று! நீ பூமியில் பிறந்தது ஒரு உன்னத லட்சியத்தை அடைவதற்காக. இவ்வுலகில் தீமையை அகற்றி நன்மையைக் காக்க வேண்டாமா அர்ஜுனா!”

கிருஷ்ணனின் அறஉரை அர்ஜுனனை சற்று சிந்திக்க வைக்கிறது.

இப்படியெல்லாம் தன்னலம் கருதாது, எதையும் எதிர்பார்க்காது செயல்கள் செய்ய முடியுமா என்று மனித  மனம் யோசிக்கிறது. அதற்கு விடை அளிக்கிறார் குருமகராஜ் ராமகிருஷ்ணர்.  “முடியும் மனிதா! உன்னால் முடியும்!  அதற்கு நீ பகவான் சிந்தனை எனும் நினைவூட்டும் முடிச்சை உன் கைக்குட்டையில் போட்டுக் கொள். அது சதா இறைச் சிந்தனையை உனக்கு நினைவூட்ட வேண்டும். அந்தச் சிந்தனையோடு உலக வாழ்வில் உன்னை ஈடுபடுத்திக் கொள். கையில் எண்ணெயைத் தடவிக்கொண்டு பலாச்சுளையை எடுத்தால் கையில் கறையோ பசையோ ஒட்டாது” என்கிறார்.

சுவாமி விவேகானந்தர் நரேந்திரனாக, சிறுவயதில் அவரின் அன்னை புவனேஸ்வரி மாதாவின் மடியில் தன் குருகுலக் கல்வியை ஆரம்பிக்கிறார். அவரின் தாயார் அவர் ஆடையில் மூன்று நினைவு முடிச்சுகளைப் போட்டுவிட்டு கூறுகிறாள்,  “இந்த மூன்று முடிச்சுகளும்  ‘சத்தியம், தூய்மை, தியாகம்’  என்பதைக் குறிக்கும். இவை கர்ணனின் கவச குண்டலங்களைப் போல உன்னை என்றென்றும் காக்கும் மகனே!” என்கிறார். அவர் வாழ்க்கையில் தடுக்கி விழப்போன தருணங்களில் எல்லாம்,  மாயை அவரை மயக்க முற்பட்ட போதெல்லாம் இந்த மூன்று நன்னெறிகளும் அவரைக் காத்தன.

ஆம்! அது உண்மைதான்!

செப்டம்பர் 11,  1893. சிகாகோவில் சர்வ மத மகாசபையில் இந்து மதத்தின் பிரதிநிதியாக உரையாற்ற சுவாமிஜி சென்ற நாள். ஆங்கே கற்றறிந்த அறிஞர்களும், தத்துவ ஞானிகளுமாகக் கிட்டத்தட்ட 6000 பேர் கூடி இருந்ததைக் கண்டு இந்த 29 வயதே நிரம்பிய இளம் இந்துத் துறவிக்கு மனதில் அச்சம் கவ்வியது. இதுகாறும் இவர் இவ்வளவு பெரிய கூட்டத்தில் பேசியது இல்லை. இவருக்கு முன்னதாகப் பேசிய இவரது நண்பர்கள் மஜும்தார்,  சக்கரவர்த்தி போன்றோர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த உரைகளை வாசித்து எளிதாகக் கரவொலி வாங்கிச் சென்றதைப் பார்த்து இவரின் உடலில் நடுக்கம்.

நெஞ்சு படபடத்தது; நாக்கு வறண்டது; ஆயினும்  பேச அழைத்தபோது இந்த இளஞ்சிங்கம் எழுந்தது. அன்னையின் மூன்று முடிச்சுகள் நெஞ்சம் முழுதும் நிறைந்து அச்சத்தை அகற்றி தைரியத்தைத் தந்தன.

தேவி சரஸ்வதியைத் தியானித்து,  ‘சகோதரிகளே,  சகோதரர்களே’ என்று  விவேகானந்தர் கர்ஜித்தபோது கூட்டம் எழுந்து நின்று பல நிமிடங்கள் கரகோஷம் எழுப்பியது. அன்னையின் மூன்று முடிச்சுகள் தந்த உத்வேகம், பராசக்தியின் அருள் அவருக்கு அளப்பரிய சக்தியைக் கொடுத்தது.  அருமையான ஆங்கிலம் அரங்கத்தை நிறைத்தது.

“உலகின் மிகப் புராதனமான முனிவர்களின் சார்பாகவும்,  எல்லா மதத்திற்கும் தாய்மதமாக விளங்கக்கூடிய இந்து மதத்தின் சார்பாகவும்,  லட்சக்கணக்கான இந்துக்களின் சார்பாகவும் நன்றி சொல்லி” பாரதத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டினார் உலகிற்கு. இது மூன்று நிமிட சுனாமியைப் போன்ற ஆன்மிக உரை.  உலகைப் புரட்டிப்போட்டு பாரதத்தைப் பற்றி சிந்திக்க வைத்த தருணம் அது.

அவர் பேசியது மொத்தம் 18 வாக்கியங்கள்; 475 சொற்கள்; மூன்றே மூன்று நிமிடங்கள். பேசி முடித்த பின்னர், முக்கியமாக பெண்கள் கூட்டம் கிட்டத்தட்ட 2000 பேர் இவரை நோக்கிப் படையெடுத்தனர். அனைவரும் கற்றறிந்த அழகிகள். அவரைத் தொட்டுப் பார்க்கத் துணிந்தனர். 29 வயதே ஆன, நடுத்தர உயரமும், அகன்ற தோள்களும், விரிந்த மார்பும்,  தீட்சண்யமான கண்களும், நீண்ட கைகளும், மல்யுத்த வீரனின் சக்தியும், வங்காளத்தின் கோதுமை நிறமும், அப்பொழுது பிரபலமாக இருந்த இத்தாலிய நடிகரைப் போன்ற தோற்றமும் அனைவரையும் வசீகரித்தன.

அவர் மீது மையல் கொண்ட பெண்கள் அவரைக் கட்டி அணைக்க விழைந்தனர். அதில் ஒரு பெண்மணி  ‘நாம் தம்பதியர் ஆனால் நமது குழந்தை உங்களது ஞானத்தையும், அழகையும், என் அழகையும் சேர்த்து ஒரு மாமனிதனாக இருப்பானே’ என்று கூறிய போதும், அவரது அன்னையிட்ட மூன்று நினைவு முடிச்சுக்கள் தான் அவரைக் காப்பாற்றின.

“பராசக்தியின் மறு உருவமாக என் கண்களுக்குத் தெரிகின்றீர்கள் தாயே! என்னையே தங்கள் புதல்வனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி அவரது காமக் கண்களை மூடினார் சுவாமிஜி.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த எஸ்.கே.பிளாட் ஜெட் என்ற பெண்மணி,  “இளைஞனே! இந்தப் பெண்களின் தாக்குதல்களிடமிருந்து தப்பித்து விட்டால் நீ உண்மையிலேயே கடவுள் தான்” என்றார். தாயாரின் மூன்று நினைவு முடிச்சுக்கள் அவருக்கு ’கடவுள்’ என்ற ஸ்தானத்தைப்பெற்றுத் தந்தது.

“சத்தியம், தூய்மை, தியாகம் ஆகிய மூன்றும் என்னைக் காக்கும் கவசங்களாக என்னோடு வலம் வருகின்றன. இந்த மூன்று ஆயுதங்களும் என் கையில் இருக்கும் வரை என்னை எந்த தீய சக்தியும் வெல்ல முடியாது. இதை என் சொந்த அனுபவத்தில் கூறுகின்றேன்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

அதிசயித்துப் போனார்கள் சுற்றி இருந்தவர்கள்.

அமெரிக்காவில் அவர் சந்தித்த அவமானங்கள், துன்பங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. கையில் பணம் இன்றி புகைவண்டி நிலையத்தின் குப்பைக் கிடங்கில் இரவுப் பொழுதைக் கழித்தது; செய்தித்தாள்களில் அவரைப் பற்றியும், பாரதத்தைப் பற்றியும் கேலிச்சித்திரங்கள்;  மஜும்தார் என்ற இவரின் பழைய கல்கத்தா நண்பர் இவரது ஒழுக்கத்தைச் சந்தேகித்து பொறாமையில் பரப்பிய அவதூறுகள்;   பாரதத்தின் பெண்கள் குழந்தை பெற்று உணவளிக்க இயலாது  ஆற்றில் உள்ள முதலைகளுக்கு இரையாகப் போடுவது போன்ற கேலிப் படங்கள் பத்திரிகைகளில் – இவையெல்லாம் இவர் மனதை வாட்டி வதைத்தன.

அவரை அழுத்தித் துன்புறுத்திய சூழ்நிலைகளில் அவர் துவண்டுவிடாது அவரைக் காத்து அவருக்கு ஆற்றல் கொடுத்து, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உதவிய மூன்று மந்திரச் சொற்கள், ‘சத்தியம்,  தூய்மை, தியாகம்’. அவரின் அன்னையிட்ட மூன்று நினைவு  முடிச்சுக்கள் மட்டுமே.

நன்னெறிகள் தான் நினைவு முடிச்சுக்கள். நம் மனது முழுதும் நன் நெறிகளால் நிரம்பட்டும். நினைவு முடிச்சுகளோடு நாம் நம் உலக வாழ்வில் முழு மனதோடு ஈடுபட்டு, நம்மை மயக்கும் மாயையை  வென்று அறவாழ்வு வாழ்வோம்!

$$$

Leave a comment