-ச.சண்முகநாதன்
துக்கத்தையும் ரசிக்க வைப்பது இலக்கியம். நாம் அசூயையாக நினைக்கும் ஒன்றையும் நகைச்சுவையாக மாற்றுவதும் இலக்கியம் தான். இதோ எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் அவர்களின் கம்ப ராமாயணக் கைவண்ணம்...

அமலனின் முயற்சியால் அமலாக்கத் துறை வருகிறது. ரெய்டு வந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உருண்டு பிரண்டு நடிப்பதெல்லாம் சுதந்திர இந்தியாவில் கண்டுபிடித்ததாக இருக்கலாம். ஆனால் ரெய்டு வந்தவுடன், அல்லது, ஒரு வீரனைப் பார்த்தவுடன் ஆடையில் ஈரம் செய்வதெல்லாம் திரேதாயுகம் முதலே நடந்து வருவது தான்.
இந்த ‘Pant இல் ஒன்னுக்குப் போவது’ என்பது வீரக்குறைவைச் சொல்லும் ஒரு வழக்காகிப் போய்விட்டது. இது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் கூட ஏராளம். ஆனால் இதற்கெல்லாம் முன்னோடி கம்ப ராமாயணம் என்றால் நம்பவா போகிறீர்கள்? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் (கம்பனுக்கு முன் இதை சொல்லி இருக்கிறார்கள் என்று வேறு யாரும் கண்டுபிடிக்கும் வரை ).
ஒரு வகையில் ராவணனும் மண் அள்ளியவன் தான்.
சீதையை மண்ணோடு பெயர்த்து எடுத்தவன் தானே. 11.05 மணிக்கா என்று தெரியவில்லை, ஆனால் ராவணன் மண் அள்ளியவன் தான். “கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல்” – (நிலத்தை கீழோடு மேலாக ஒரு யோசனை நிலத்தைப் பேர்த்தெடுத்தான்)
அஹங்காரம் கண்ணை மறைக்க “எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்று திமிருடன் சுற்றிக்கொண்டு திரிந்தவர்கள் ராவண சேனை. அனுமன் என்றொருவன் வந்தான், அவர்களின் திமிரை அடக்க. அவர்கள் இடத்துக்கே சென்று மிரட்டுகிறான்.
பேருருவம் எடுத்து அனுமன் அசோகவனத்தை துவம்சம் செய்கிறான். அவன் உருவத்தையும் உக்கிரத்தையும் பார்த்து பயந்த காவலர்களைத்தான் ‘ஆடையிலேயே அசிங்கம் செய்கிறவர்கள்’ என்கிறான் கம்பன்.
“நீர் இடு துகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப் பீரிடும் உருவர்; தெற்றிப் பிணங்கிடு தாளர்;"
(பொருள்: உச்சா போனவர், பய நெருப்பு பற்றிக்கொண்ட நெஞ்சர், ரத்தம் பீரிட்டு வரும் உருவர் மற்றும் அச்சத்தில் கால்கள் பின்னிக் கொண்டவர்களான காவலர்கள் ராவணனை அடைந்தனர்)
இந்த லுச்சா பசங்களுக்கு இலக்கியப் பெயர் ‘நீர் இடு துகிலர்’.
முழுப் பாடல் இது…
நீர் இடு துகிலர்; அச்ச நெருப்பு
இடு நெஞ்சர்; நெக்குப்
பீரிடும் உருவர்; தெற்றிப்
பிணங்கிடு தாளர்; பேழ் வாய்,
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர்;
ஓடி உற்றார்;-
பார் இடு பழுவச் சோலை
பாலிக்கும் பருவத் தேவர்.
(சுந்தர காண்டம், பொழிலிருத்த படலம் - 56)
$$$