-இசைக்கவி ரமணன், மரபின்மைந்தன் முத்தையா, பத்மன், வ.மு.முரளி
கவியரசு கண்ணதாசன் பிறந்த நள் இன்று. காவியத் தாயின் இளையமகனான அன்னாருக்கு நான்கு கவிஞர்களின் கவிதாஞ்சலி இது…

கவியரசருக்கு வாழ்த்து
-இசைக்கவி ரமணன்
நீண்ட பயணத்தில் கால்கள் களைக்கையில்
நின்வரி கள்தான் நிழலாகும்.
நினைவு கனவெனும் மனதின் வழிகளில்
நின்கானம்தான் துணையாகும்.
தாண்ட முடியாத தடங்களில் உன்றன்
பாடல் எனக்குச் சிறகாகும்.
வேண்டுவா ரின்றிநான் வீழும் வேளை, உன்
வேதாந் தம்தான் உறவாகும்.
என்ன பாடினாய், எதற்குப் பாடினாய்
என்னுமோர் கேள்வியே இல்லை, நீ
எனக்காய்ப் பாடினாய், எனக்குள் பாடினாய்
என்பதே காதலின் எல்லை.
அன்பால், தமிழால், வானையும் கோளையும்
எத்தனை எளிதாய்க் கடந்தாய்!
என்பால் எதற்கோ இரக்கம் கொண்டாய்?
என்னிலோர் அங்கமாய் ஆனாய்!
காதலின் வீச்சினில் கண்ணனைத் தழுவிய
கவியரசே நீ வாழ்க!
பாரதி கனவுகள் பலிக்கப் பிறந்த
பாவலனே நீ வாழ்க!
போதையின் மயலைப் போதியின் நிழலாய்ப்
புதுமை செய்தவா வாழ்க! இந்த
பூமியில் பூத்தெழும் புண்ணியமே, உன்
புகழென் பொறுப்பு, நீ வாழ்க!
$$$
கவியரசர் வந்த தினம்
– மரபின்மைந்தன் முத்தையா
தேன் வணங்கும் சொற்களினைத் தேர்ந்து தேர்ந்து
தலை வணங்கும் விதமாக கவிதை தந்தான்!
ஏன் வணங்க வேண்டும் என்று கேட்டவன் தான்-
எப்போதும் கண்ணனையே வணங்கி நின்றான்!
வான் வணங்கும் தன்மையிலே ஆற்றல் கொண்டும்
வாழ்வெல்லாம் பணிவோடு விளங்கி நின்றான்!
நான் வணங்கும் கவியரசர் கண்ணதாசன்
நானிலத்தே வந்த தினம் இன்றே அன்றோ!
$$$
திரும்பி வந்த கம்பனோ?
-பத்மன்
திரும்பிவந்து கம்பனவன் திரைத்துறையில் புகுந்தானோ?
விரும்பிவந்து கண்ணதாசன் என்றுருவம் எடுத்தானோ?
கரும்பினிய கவிதைகளைக் கணக்கின்றி பொழிந்தானே,
அரும்பிய பாடலெல்லாம் அருந்தமிழ்ச் சோலையன்றோ?
சோலையிலே பலமலர்கள் சொரிந்திடும் அழகதனை
சொற்களிலே கட்டமைத்து சொக்கவைக்கும் பாட்டிசைத்தான்,
மாலையாய்த் தமிழன்னை மகிழ்வுடனே சூடிநின்றாள்-
நற்கருத்துப் பேழைநம் முத்தையா கவிதைகளை!
கவிஞர்களின் கவிஞரிவன், விரல்கேளா துரோணனிவன்!
புவிமீதில் நிலைத்திருக்கும் புகழ்மிக்க புலவனிவன்!
பாரதிக்குப் பின்னாலே பாட்டுக்கோர் தலைவனிவன்!
பார்த்தன்போல் இன்னொரு பரந்தாமன் தொண்டனிவன்!
தொண்டுகளில் சிறந்தது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’!
தொலைதூர நாட்டினிலும் அலைபாய்ந்து புகழோதும்
தென்றலின் கட்டுரைகள், தேனருவி மழையாகும்!
தெவிட்டாத அவர்கவிதை எவ்விதம் இனித் திரும்பும்?
$$$
செம்மொழியின் காதலன்
-வ.மு.முரளி
கண்ணனின் தாசனாய்ப் பெயர் புனைந்து
கடவுளின் தத்துவம் விளங்க வைத்து,
.கன்னலின் சாறெனக் கவி புனைந்து
.காவிய கண்ணியம் உணரச் செய்து,
திண்ணிய நூல்களை எழுதிவைத்து
திகைப்புறு தன்கதை நிலைகள் சொல்லி,
.மண்டிய அரசியல் சேற்றினிலே
.மலர்ந்திடு பங்கய மணம் பரப்பி,
தன்னது வாழ்வினைச் சுட்டிக்காட்டி
தவறான துணிச்சலை மறுக்கவைத்து,
.தென்றலின் தேரென பவனி வந்து
.தெவிட்டாத நற்றமிழ்க் கவிதை பெய்து,
மின்னலின் வேகமாய்ப் பிறந்திறந்து
மிளிர்ந்திடு ரத்தின ஒளி விரிந்து,
.சென்றவர் புகழினை நினைந்து காண
.செழிப்புறு பற்பல நூல் பிறக்கும்!
$$$