தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 15

-சேக்கிழான்

பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகையில் அடங்கிய 11 நீதிநூல்களில் அரசு அறநெறிச் செய்திகள் 9 நூல்களிற் காணப்படுகின்றன. இவற்றில் திருக்குறள் தொடர்பான விரிவான செய்திகளை முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம். பிற 8 நீதி நூல்களின் செங்கோன்மைக் கருத்துகளை இங்கே காண்போம்.

பகுதி-14: மன்னனை உயிர்த்தே மலர்த்தலை உலகம்!

.

15. நீதிநூல்கள் கூறும் செங்கோல் சிறப்பு

பொது யுகத்துக்குப் பிந்தைய மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சி நிகழ்ந்தது. சுமார் 300 ஆண்டுகாலம் நீடித்த இக்காலம், சங்கம் மருவிய காலம் என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் பெரும்பாலும் நீதிநூல்களாகவும் சிறிய அளவிலான அகத்துறை நூல்களாகவும் அமைந்தன.

சங்ககாலத்தைச் சேர்ந்த பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண்மேல்கணக்கு என்று அழைக்கப்படுகின்றன. அதேபோல, சங்கம் மருவிய காலத்தில் எழுந்த 18 நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:

நீதி நூல்கள்-11: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி.

அகத்திணை நூல்கள்- 6: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை.

புறத்திணை நூல்-1: களவழி நாற்பது.

இவற்றில் அகத்திணை நூல்கள் ஆறினுள்ளும், களவழி நாற்பது, நாலடியார், ஆசாரக்கோவை ஆகியவற்றிலும் செங்கோல் குறித்த குறிப்புகள் இல்லை. பிற 9 நீதிநூல்களில் அரசு அறநெறிச் செய்திகள் காணப்படுகின்றன. இவற்றில் திருக்குறள் தொடர்பான விரிவான செய்திகளை முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம். பிற 8 நீதி நூல்களின் செங்கோன்மைக் கருத்துகளை இங்கே காண்போம். நீதிநூல்களை இயற்றியோர் குறித்து முதலில் அறிவோம்.

நீதி நூல்களை இயற்றியோர் விவரம்:

பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் முதல் நூல் நாலடியார். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது; சமண முனிவர்களால் இயற்றப்பட்ட 400 தனிப்பாடல்களின் தொகுப்பு. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். திருக்குறளும் நாலடியாரும் ஒத்த சிந்தனையுடன் திகழ்பவை. எனினும் திருக்குறளில் கூறப்படும் அரசியல் கருத்துகள் நாலடியாரில் இல்லை.  வாழ்க்கையின் எளிமையான விஷயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் மட்டுமே நாலடியார் கவனம் செலுத்துகிறது.

விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நான்மணிக்கடிகை, 101 பாடல்களைக் கொண்டுள்ளது. நான்மணிக்கடிகை என்பது நான்கு ரத்தினங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது.

உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இன்னா நாற்பது. நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறும் 40 பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கபில தேவர். 

வாழ்க்கைக்கு இன்பம் தரும் நான்கு கருத்துக்களைக் கூறும்  40 வெண்பாக்களைக் கொண்டது இனியவை நாற்பது. இதனை இயற்றியவர் பூதஞ்சேந்தனார்.

திருக்குறள், அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால்களைக் குறிப்பதால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முப்பால் என்று குறிக்கப்படுகிறது. இரட்டை அடிகளால் ஆன 1330 குறட்பாக்களால் எழுதப்பட்ட நூல் இது. உலகப் பொதுமறை என்று புகழப்படும் இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல, இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்க்கைக்கு நன்மை செய்யும் என்பதால் இந்நூல் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 100 பாடல்கள் கொண்ட இதனை இயற்றியவர் நல்லாதனார்.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை (ஆசாரங்கள்) எடுத்துக்கூறும் நூல் ஆசாரக்கோவை. வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியுள்ளார். பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல்.

நாலடியால் அமைந்த 401 பாடல்களைக் கொண்டது பழமொழி நானூறு. இது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. 

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவை, சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பவை. இது போன்றே வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை இவற்றின் வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்பர். சிறுபஞ்சமூலம் எனப்படும் வேர் மருந்து உடல்நலம் காப்பது போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறிக்கப்படும் ஐந்து பொருள்களும் வாழ்க்கை நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது. 102 பாடல்கள் கொண்ட இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவராவார்.

முதுமொழி என்பது பழமொழியைக் குறிக்கும் சொல்லாகும். காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலனாகும். பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது. 100 ஒற்றை அடிகளைக் கொண்ட தொகுப்பான இந் நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். 

சித்த மருத்துவத்தில் ஏலாதி என்பது ஆறு மூலிகைப் பொருள்களால் ஆனதாகும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலில் இடம்பெற்றுள்ள 80 பாடல்களும் அறநெறி தொடர்பான ஆறு பொருள்களை உரைக்கின்றன. கணிமேதாவியார் எழுதிய நூல் இது.

***

தாய்ப்பால் போன்றது செங்கோல்!

அன்னையிடம் பெறும் தாய்ப்பாலுக்கு ஏங்கி வாழும் சிறு குழந்தைகள்; மன்னர்களின் செங்கோன்மை ஆட்சிக்கு ஏங்குவோர் மக்கள். வானிலிருந்து வீழும் மழைதுளிக்காக உலகம் காத்திருக்கும்; யமனோ உலக உயிர்களின் முடிவுக்காகக் காத்திருப்பான் என்கிறது, நான்மணிக்கடிகை. இதில்  ‘(செங்)கோல் நோக்கி வாழ்வதே குடி(மக்கள்)’ என்ற கருத்து கவனத்திற்குரியது. அப்பாடல் இதோ…

கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று.

    (நான்மணிக்கடிகை - 26)

கொடுங்கோலும் செங்கோலும்:

அதேபோல, பெரிய ஆற்றைக் கடக்க தெப்பம் அவசியம். அது இல்லாது ஆற்றைக் கடத்தல் அதில் மூழ்கவே வழிவகுக்கும். கொடுங்கோல் அரசனது ஆட்சியில் வாழ்வது அத்தகையதே என்கிறது இன்னா நாற்பது தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம் தரும். வன்சொல் கூறுவோரது உறவு துன்பம் தரும். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம் தரும். கொடுங்கோல் மன்னரின் கீழ் வாழ்தலும் அவ்வாறே என்று கூறும் பாடல் இது:

கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.  

    (இன்னா நாற்பது - 3)

இதற்கு மாறாக இனிய நான்கு அம்சங்களை இனியவை நாற்பது கூறுகிறது. எந்த உயிரையும் கொல்லாமை இனியது. அரசன் நடுவுநிலைமை தவறாத செங்கோலனாக இருப்பது இனியது. நம்மிடமுள்ள திறமையால் பிறரைக் குற்றம் கூறாமை மிக இனியது என்று கூறும் அப்பாடல் இது:

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.

    (இனியவை நாற்பது - 5)

கோடா அரசும் கோல் அஞ்சும் குடியும்:

மூன்று அறநெறிகளைக் கூறும் திரிகடுகம், அரசனின் கோலுக்கு அடங்கி நடக்கும் மக்களைப் பெறுவது மன்னருக்கு அழகு என்று கூறுகிறது. மற்றொரு பாடலில் முறைதவறா, கோல் கோடாத அரசே உயர்ந்த உலகம் என்று கூறப்படும் என்கிறது.

கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ
ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்
கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும்
படை வேந்தன் பற்று விடல்!

    (திரிகடுகம் – 33)

பொருள்: செங்கோலுக்கு (சட்டத்துக்கு) அஞ்சி, கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களையும், குடிமக்களை ஆலம் விழுது போலத் தாங்கும் மந்திரியையும், எல்லையில் உறுதியான மதில் போல நின்று காக்கும் காவல் படையையும்  அரசன் காக்க  வேண்டும்.

மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து
முறை நிலை கோடா அரசும், சிறைநின்று
அலவலை அல்லாக் குடியும் - இம் மூவர்
உலகம் எனப்படுவார்.

    (திரிகடுகம் – 34)

பொருள்: மூவர்க்குக் கடன் செய்த பார்ப்பானும், நீதி நிலையில் நின்று ஆட்சி செய்யும் செங்கோல் வழுவாத அரசனும், கவலையில்லாக் குடிமக்களும் உயர்ந்தோர் எனப்படுவர்.

பெய்யெனப் பெய்யும் மழை:

நல்லரசன் ஆணையிட்டால் மழை பொழியும் என்றும், அரசன் முரையாக ஆளும் நாட்டில் முரை தவறாமல் மழை பொழியும் என்றும் கூறுகிறது திரிகடுகம். இதோ அப்பாடல்கள்:

கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்;  இவர் மூவர்,
'பெய்' எனப் பெய்யும் மழை.

    (திரிகடுகம் – 96)

பொருள்: கணவனுடைய குறிப்பறிந்து நடக்கும் மனைவியும், நோன்புகளை முறைப்படி செய்யும் துறவியும், நாட்டு மக்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் அரசனும் பெய் என்று ஆணையிட்டால் மழை பொழியும்.

செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
பெண்பால் கொழுநன் வழிச் செலவும் - இம் மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து.

    (திரிகடுகம் – 98)

பொருள்: அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக நல்லாட்சி செய்வதும்,  கொண்ட கணவனின் குறிப்பறிந்து நடத்தலும், மாதந்தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும்.

 இதே கருத்தை பிற்கால நீதிநூலான ‘விவேக சிந்தாமணி’யும் கூறுவது குறிப்பிடத் தக்கது. இதோ அப்பாடல்:

வேதம் ஓதிடும் வேதியர்க்கு ஓர்மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

    (விவேக சிந்தாமணி - 26)

நற்செயல்கள் கொண்ட நாடு:

கற்புடைய மகளிர், கற்றதை அடக்கத்துடன் அறிந்தவன், நற்செயல்கள் கொண்ட நாடு, நாட்டுக்கு நல்மழை பொழியும் மேகம் போன்ற வேந்தன், நல்ல சேவகன் ஆகிய ஐந்தும் அமுதத்திற்கு நிகரானவை என்கிறது சிறுபஞ்சமூலம். இதோ அப்பாடல்:

கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;
நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்
ஆகவே செய்யின், அமிர்து.  

    (சிறுபஞ்சமூலம் – 2)

முதுமொழிக்காஞ்சி கூறும் இரு கருத்துகள் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கவை:

முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்.

    (முதுமொழிக்காஞ்சி - பழியாப்பத்து - 26)

இதன் விரிந்த பொருள்: நடுவுநிலை கொண்ட ஆட்சி செய்யாத அரசர் நாட்டின்கண் வாழ்வோர் அவ்வரசரின் நடுவுசெய்யாமையைப் பழியார். அவ்வாறு பழித்தால் ஏற்கனவே கொடுங்கோலனான மன்னனால் ஆபத்து நிகழும் என்பது பெறப்படும் பொருளாகும்.

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று

    (முதுமொழிக்காஞ்சி -  நல்கூர்ந்தபத்து – 81)

இதன் விரிந்த பொருள்: கடலால் சூழப்பட்ட இந்த உலகம்,  எல்லா மக்களுக்கும்  முறைமை (நல்லாட்சி) செய்யாத அரசனால் வறுமையுறும். ஆகவே நல்லட்சியே மக்களின் தேவை என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

சக்கரப்படை கொண்டவன் ஆயினும் பயனில்லை:

ஆழிப்படையை உடைய மாலவன் ஆயினும் செங்கோன்மை தவறினால் பயனில்லை என்கிறது பழமொழி நானூறின் அரசியல்பு அதிகாரம். மக்களிடம் அதிவ வரி வசூலிக்கும் மன்னன், மயிலின் கொண்டையை அறுத்து அதற்கே தீனி போடுபவன் போன்றவன் என்றும் இடித்துரைக்கிறது இந்நூல். மேலும், செங்கோல் ஆட்சி நிலவா மன்ன்னின் கீழ் வாழும் மக்கள் மதங்கொண்ட யானையிடம் சிக்கியவர்கள் போலாவார்கள் என்கிறது மற்றொரு பாடல். இதோ அந்தப் பழமொழி நானூறு பாடல்கள்:

அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறுத்து வாயில் இடல். 

    (பழமொழி நானூறு – 246)

பொருள்: தன்னை நம்பி வாழும் குடிமக்களைத் துன்புறுத்தி, கொடுங்கோல் ஆட்சியால்  அதிக வரி வசூலித்து, தான தருமங்களைச் செய்யும் அரசனின் செயல் மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து அதற்கு உணவாக அதன் வாயில் ஊட்டுவதை ஒத்தது. அதாவது, அரசன் இறைப்பொருளை (வரி) துன்புறுத்தி மிகுதியாகக் கொண்டு பின்னர் எத்துணை நலம் செய்யினும் குடிகள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

வெண்குடைக்கீழட வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல், செய்வது என்?   பொங்கு
படு திரைச் சேர்ப்ப! மற்று இல்லையே, யானை
தொடு உண்ணின், மூடும் கலம். 

    (பழமொழி நானூறு – 247)

பொருள்: மிகுந்த அலைகள் பொங்கி எழுகின்ற கடல் நாடனே!  வெண்மையான கொற்றக்குடை நிழலின்கீழ் உயிர்வாழ்கின்ற குடிமக்களுக்கு அரசன் செம்மையான கோலையுடையவனாக ஆட்சி செய்யாத போது,  அந்த மக்கள் என்ன செய்வது? மதங்கொண்ட யானையால் உருட்டப்பட்ட கலங்கள் போன்ற நிலைமை தானே மக்களுக்கு வாய்க்கும்? கொடுங்கோலரசனின் கீழுள்ள மக்கள் இறந்து படுதலே செய்யத்தக்க செயலாம்  என்பதே இப்பாடலின் கருத்து.

அம் கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும்,
செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவரால்,
வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிது எனினும்;
தண் கோல் எடுப்புமாம் மொய்.

    (பழமொழி நானூறு – 250)

பொருள்: அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடைய மன்னனே! அரசன் பகையரசர்மாட்டு கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினானாயினும், தன்னிழற்கீழ் வாழும் மக்களிட்த்தே செங்கோன்மை உடையவனாகவே இருத்தல் வேண்டும். அவ்வாறு நிகழாதபோது,  அந்த மன்னன் ஆழிப்படையை (சுதர்சனச் சக்கரம்) உடைய திருமாலேயாயினும் அவனைச் சாந்தவர்களே இகழ்வார்கள்; தண்கோல் – தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே உண்மையாக வெற்றியைத் தோற்றுவிக்கும். அரசனது வெற்றிக்கு அவனது செங்கோலே காரணமாகும்.

செங்கோலின் சிறப்பைக் கூற வந்த முன்றுரை அரையனார், தேர்க்காலில் நசுங்கி பலியான் இளங்கன்றின் மணியோசைக்காக, தனது சொந்த மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனின் கதையை 242-வது பாடலில் கூறுகிறார். இதோ அப்பாடல்:

சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;
முறைமைக்கு மூப்பு இளமை இல்.

    (பழமொழி நானூறு – 242)

பொருள்: அறிவு நிரம்பிய அமைச்சர்கள் மிகுதியானவைகளைக் கூறி இது பெருங் குற்றமல்லவென்று மறைத்தபோதும், அன்றிரவு கழிந்த பின்னர் முன்னாள் பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தின தன் மகனின் மீதே அவன் தந்தையும் தனது தேரைச் செலுத்தினான். அதை அவனது மகனும் ஏற்றுக்கொண்டான். (ஆகையால்) செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒரு நீதி என்பதில்லை.

இப்பாடலில் மனுநீதி சோழனும் அவனது மகன் வீதிவிடங்கனும் குறிப்பிடப்படுகின்றனர். செங்கோலின் மாட்சிக்காக பெற்ற மகனையே கொல்லவும் துணிந்த மன்னர் வாழ்ந்த மண் இது.

அமைச்சரின் குண்நலன் கூறும் பழமொழி நானூறு- 259வது பாடலும் செங்கோல் என்ற கருத்துடன் மிளிர்கிறது. 

செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;  துகிர் புரையும்
செவ்வாய் முறுவல் நற்சின்மொழியாய்! செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்.

    (பழமொழி நானூறு - 259)

பொருள்: பவளத்தை ஒக்கும் சிவந்த வாயினையும் புன்முறுவலையும் இனிய சிலவாகிய மொழியினையும் உடையாய்! குற்றமற்ற செங்கோலையும் சினத்தையும் உடைய அரசனது தீமையை  பக்கத்திலுள்ள அமைச்சர்களே முன்நின்று ஏற்றுக்கொள்ளக் கடவர். அரசன் செய்யும் தீமை அமைச்சர்களையே சாரும்.

ஏலாதி கூறும் நுட்பப்பொருள்:

நம்மால் அறிய இயலா விதியின் நுட்பமான சூழலை விளக்கும் ‘ஏலாதி’ பாடலிலும் செங்கோலும் வெங்கோலும் பயின்று வருகின்றன…

செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா
வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல்
அமைச்சர், தொழிலும், அறியலம் - ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான். 

    (ஏலாதி - 10)

செங்கோலனது செல்வமும், அவன் கீழ்வாழுங் குடிகளது செல்வமும், வெங்கோலனது கேடும், அவன் கீழ் வாழுங் குடிகளது கேடும், வெங்கோல் அமைச்சரது தொழிலும் கேடும் நம்மால் அறிய இயலாதது ஆகும். நல்லோரும் வீழ்கின்றார், தீயோரும் வீழ்கின்றார். எனவே, இவற்றில் ஏதோ நம்மால் அறிய இயலாதது ஒன்று உள்ளது.

மேற்கண்ட நீதி நூல்கள் கூறும் செங்கோன்மைக் கருத்துகள், தமிழகத்தில் நல்லரசு தவறிய காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 15

Leave a comment