-உத்பல் குமார்

சுவாமி விவேகானந்தரின் 150வது அவதார ஆண்டை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் படித்தவர்களில் ஒரு பகுதியினர், அவரைக் குறிவைத்து சாடி வருகின்றனர். அவர் ஒரு ஹிந்து மேன்மைவாதி (Hindu supremacist) போல தன்னைக் காட்டிக் கொள்வதாகக் கூட அவர்களில் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இன்னும் சிலரோ அவரை ‘ஜாதியை ஆதரிப்பவராக’ சித்திரிக்கின்றனர். இந்த நிலையில் சுவாமி விவேகானந்தர் யார் என்பதை நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
அவருடைய 150வது அவதார தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த வேளையில் சுவாமி விவேகானந்தர் திடீர்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு எதிராக, கத்திகள் வெளிப்படையாகத் தீட்டப்படுகின்றன. அவர் ஒரு துறவி. ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக, அவருடைய இதயம் கண்ணீர் வடித்தது. ஆனால் திடீரென அவரை ஒரு ‘ஹிந்து மேன்மைவாதி’, ‘ஜாதீய ஆதரவாளர்’ என்று சித்தரிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு பாஜக முதலமைச்சர் (நரேந்திர மோடி) மிகவும் வெற்றிகரமான தேர்தல் பிரசாரத்தை செய்து வென்றுள்ளார். இது சமீப சில மாதங்களில் நடந்துள்ளது. இதன் பின்னால் சுவாமி விவேகானந்தரை அவர் உயர்த்திப் போற்றிக் கொண்டாடியது காரணமாக அமைந்துள்ளது. எனவே இப்போது ஒரு கேள்வி எழுகிறது. சுவாமி விவேகானந்தர் ‘மதசார்பற்ற கும்பல்களின்’ குறியாக ஆகிவிட்டாரா ? ஒரு இந்திய மாநிலத்தின் முதலமைச்சர் (நரேந்திர மோடி )அவரை நேர்மறையாகப் பயன்படுத்தியதால், சுவாமி விவேகானந்தரை மதச்சார்பற்ற கும்பல்கள் தாக்கத் தொடங்கி உள்ளனவா?
நரேந்திர மோடி தனது பெயரின் முதல் பகுதியில் சுவாமி விவேகானந்தரின் முதல் பெயரான ‘நரேந்திர’ என்பதைக் கொண்டிருப்பதால், சுவாமிஜியை மதச் சார்பற்ற கும்பல்கள் குறி வைத்துள்ளனவா?
இதில் இருந்து நமக்கு அடுத்த கேள்வி பிறக்கிறது. இன்று மதச் சார்பின்மை, வகுப்புவாதம் குறித்து சூழ்நிலையை சுடுகாடு ஆக்கி விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த இன்றைய அளவுகோல்களை வைத்துக்கொண்டு 150 வருடங்களுக்கு முன்னால் பிறந்த ஒரு துறவியை எடை போடுவது எந்த விதத்திலாவது நியாயமாக உள்ளதா ?
இன்று நம் நாட்டில் நேருவின் சமூகஅறிவியல் சித்தாந்தம் உருப்பெற்றுள்ளது. இந்த நிலையில் சுவாமி விவேகானந்தரின் பங்கு பணிகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதை இயலபான ஒன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேருவிய மனப்பான்மை நிலவும் சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரை ஓரம் கட்டி பின்னுக்குத் தள்ள முயற்சிகள் நடக்கின்றன. ஏனென்றால் சுவாமி விவேகானந்தர் தேசத்தின் ஆன்மிக அடிப்படையில் அமைந்த புனருத்தாரணத்திற்கு தன்னை கொஞ்சம் கூட வெட்கப்படாமல் ஆட்படுத்திக் கொண்டிருந்தார். தன்னுடைய சொந்த ஹிந்து உருவகத்தை சிறிதும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொண்டு சுவாமி விவேகானந்தா இதைச் செய்தார்.
சுவாமி விவேகானந்தரின் உலகக் கருத்து நேருவின் சமூக சித்தாந்தத்துக்கு சவால் விடுப்பதாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களில் ஒரு சிலர் கூட இத்தகைய சூழ்நிலையில் சுவாமிஜியின் கருத்துகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அது இயல்பானதே. அவரை புறக்கணிக்க முடியவில்லை; எனவே ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அவரை மறக்கடிக்க முயல்கின்றனர்.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு சுவாமிஜியை எல்லோரும் ஆவலாக போற்றிப் புகழ்ந்தனர். ‘பாசிச வலதுசாரி’களில் இருந்து, ‘தீவிர இடதுசாரிகள்’ வரை அனைவருக்கும் சுவாமி விவேகானந்தர் அப்போது தேவைப்பட்டார். எவருமே அவரை பிறருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அல்லது அவரை தவறாக சித்திரிக்கும் உரிமையையும் எவரும் பிறருக்கு விட்டுத் தர விரும்பவில்லை.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்ட காலகட்டத்தில் ஆவேசமாக உணர்வுகள் கொந்தளித்த நிலையில் தான் இது நடந்தது. அப்போதிருந்த காங்கிரஸ் அரசாங்கம் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நிகழ்த்திய சரித்திரப் புகழ் வாய்ந்த சொற்பொழிவின் நூற்றாண்டைக் கொண்டாட மிகுந்த ஆர்வம் காட்டியது. சுவாமி விவேகானந்தர் என்னும் துறவியை அந்த அரசு ‘மதசார்பின்மைப் போர்வை’ போர்த்தி, நேருவின் சமூக விஞ்ஞான சித்தாந்தத்துக்கு பாதுகாவலனாகச் சித்திரித்தது. அப்போது தான் வலதுசாரிகள், குறிப்பாக பாரதீய ஜனதா கட்சி அரசியல் ரீதியாக வளர்ந்துகொண்டு இருந்தது. அவர்கள் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகவே, அப்போதிருந்த காங்கிரஸ் அரசு இப்படி எல்லாம் செய்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இடதுசாரிகள் விஷமத்தனமாக மகாத்மா காந்தியை சுவீகரித்துக் கொண்டனர். அம்மாதிரியே நேருவிய அடிவருடிகள் சுவாமி விவேகானந்தரை ஆர்வமுடன் அரவணைத்துக் கொண்டனர். அவரை தங்களுக்கு உரித்தாக்கி கொண்டனர். தங்களுடைய சொந்தத் திட்டங்களைச் செயல்படுத்தவே அவர்கள் இவ்வாறு செய்தனர்.
அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனும் அவர்களுக்கு ஆதரவளித்தது. ஏனென்றால் அப்போது தனக்கு ‘சிறுபான்மை ஸ்தாபனம்’ என்னும் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ராமகிருஷ்ண மிஷன் ஒரு சட்ட வழக்கை சந்தித்துக் கொண்டு போராடி வந்தது. ஹிந்து ஸ்தாபனமான ராமகிருஷ்ண மிஷன் இவ்வாறு கோரியது நகைப்பிற்கு இடமானது. ஆனால் 1990களில், உச்ச நீதிமன்றம் ராமகிருஷ்ண மிஷனின் அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டது.
ஆனால் சுவாமி விவேகானந்தர், காந்திஜி மாதிரி சுலபமாக கபளீகரம் செய்யகூடிய ஒரு சரித்திரம் அல்ல. சுவாமி விவேகானந்தர், கையாள்வதற்கு மிகக் கடினமான நிகழ்வாக அமைந்து இருந்தார். சுவாமி விவேகானந்தரை இந்த ‘அதிகாரம் குவிக்கப்பட்ட, செயல்படாது ஜடமான’ ஆட்சிபீடத்தால் ஜீரணிக்க முடியவில்லை.
உலகம் முழுவதிலும் சுவாமி விவேகானந்தர் பரப்ப விரும்பிய ஆன்மிக உலக கண்ணோட்டத்திற்கும், இந்த ஆட்சி அதிகாரத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் உள்ளது. அதனால் தான் தற்போது சுவாமி விவேகானந்தர் பற்றி அலட்சியம் காட்டப்படுகிறது. அவரைப் பற்றி அவதூறு கூறவில்லை என்றாலும், அவர் மீது அலட்சியம் காட்டுவதற்கு இதுவே பின்னணி.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்:
ஏழைகளில் இறைவனைக் கண்டவர் சுவாமி விவேகானந்தர். சங்கர் என்பவர் வங்காளத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற நாவலாசிரியர். அவர் ‘மனிதராக ஒரு துறவி: சுவாமி விவேகானந்தரின் தெரியாத வாழ்க்கை’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில் சங்கர் பின்வரும் கேள்வியை எழுப்புகிறார்:
“கடந்த 150 வருடங்களில் பட்டினிப் பட்டாளங்களின் அவஸ்தையை கண்டு அவர்களுக்காக மிகவும் உருகியவர் யார்?” என்பது தான் சங்கர் எழுப்பிய கேள்வி. இந்த கேள்விக்கு சுவாமி விவேகானந்தரையே சங்கர் விடையாகச் சொல்கிறார். இதற்காக பஞ்சாபில் பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் கூறியதை சங்கர் மேற்கோள் காட்டுகிறார்:
“இந்த தேசத்தில் ஒரே ஒரு நாய் கூட பசியோடு இருக்கும் பட்சத்தில் என்னுடைய புனிதக் கடமை அதற்கு உணவு கொடுப்பது தான் என்று நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். வேறு எதை செய்தாலும் அது பாவம் மட்டுமே”.
இன்னொரு நிகழ்ச்சியையும் சங்கர் சுட்டிக் காட்டுகிறார். ஒரு வேதாந்த அறிஞர் சுவாமி விவேகானந்தரை வாதத்திற்கு அழைத்தார். அப்போது சுவாமி விவேகானந்தா பின்வருமாறு சொன்னார் :
“படித்த அறிஞரே, பசியால் செத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு முதலில் ஏதாவது உதவி செய்யுங்கள். அதன்பிறகு வேதாந்தம் குறித்து என்னுடன் விவாதிக்க நீங்கள் வரலாம்!”
இது தான் சுவாமி விவேகானந்தர். சன்யாசம் என்றால் தன்னிலை மறுப்பு; சுயநல மறுப்பு; உலகத்தை மொத்தமாக விட்டுவிடுவது அல்ல என்று அவர் செய்கையில் காட்டினார். கடவுளைத் தேடுவதை ‘தனிப்பட்ட ஒரு விஷயமாக’ பல ஹிந்து சன்யாசிகள் ஆக்கி வைத்திருந்தனர்; ஆனால் தேசத்திற்கு தொண்டு செய்வது, அதனுடைய உழைக்கும் மக்களுக்கு தொண்டு செய்வது- இதைத் தான் சுவாமி விவேகானந்தர், தன்னுடைய ஆன்மிகத் தேடலின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
ஒடுக்கப்பட்டவர்கள் பால் அவர் காட்டிய அன்பு அளவிடற்கு அரியது. எந்த அளவுக்கு என்றால், அப்போது இருந்த மத வழக்கங்களைக் குறித்து சுவாமி விவேகானந்தர் கேள்விகள் எழுப்பினார்.
“காசியிலும், பிருந்தாவனிலும், ஆலயக் கதவுகள் திறக்கப்படும் போதெல்லாம், மூடப்படும்போதெல்லாம், நாளெல்லாம் ஒலி எழும்பும். இதற்காக லட்சக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப் பட்டுள்ளன. இப்போது இறைவன் குளிக்கிறார்; இப்போது அவர் உணவு அருந்துகிறார்; இப்போது வேறு ஏதோ வேலை விஷயத்தில் அவர் மும்மரமாக உள்ளார் என்றெல்லாம் சொல்கின்றனர். அதே சமயத்தில் ‘வாழும் இறைவன்’ உணவு கிடைக்காமல், கல்வி கிடைக்காமல் செத்துக் கொண்டுள்ளான் “
ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக விவேகானந்தர் காட்டிய அக்கறை பரிபூரணமானது. அவர் சமூகம் ஒட்டுமொத்தமாக மாற வேண்டும், அது இங்கு கொஞ்சம் சீர்திருத்தம், அங்கு கொஞ்சம் சீர்திருத்தம் என்று துண்டு துக்கடாக்களாக அல்ல என்று விரும்பினார்.
சமூகம் ஏழ்மையில் வதங்கும்போது, எழுத்தறிவு இல்லாமல் இருக்கும்போது, கொடுமையானதாக இருக்கும்போது, விதவைகள் மறுமணத்திற்கு மிகவும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதை சுவாமி விவேகானந்தர் கண்டித்தது இயற்கையே.
“நம்முடைய நவீன சீர்திருத்தக்காரர்கள் விதவை மறு மணத்தைப் பற்றி மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட விஷயத்தில் நானும் கவனம் செலுத்துபவனே; ஆதரவுக் கரம் நீட்டுபவனே. ஆனால் ஒரு தேசத்தின் தலைவிதி அதன் விதவைகள் எவ்வளவு கணவன்மார்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை வைத்துத் தீர்மானிக்கப் படுவது இல்லை. மாறாக அந்த நாட்டு மக்களின் நிலைமை எப்படி உள்ளது என்பதை வைத்தே அந்த தேசத்தின் தலைவிதி தீர்மானிக்கப் படுகிறது”
-என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார் .
இம்மாதிரி விதவா விவாகத்தை ஆதரித்தவர்களில் சிலரது நடவடிக்கை கேள்விக்குரியதாக இருந்தது. உதாரணத்துக்கு, ரானடே என்பவர் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்தார். ஆனால் அவருடைய மனைவி இறந்த பிறகு அவர் ஒரு விதவையை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. மாறாக அவர் 10 வயது நிரம்பிய ஒரு சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி ராணடேயை விமர்சனம் செய்தார்கள். தன்னுடைய தந்தையின் விருப்பத்தால் தான் அவ்வாறு 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ரானடே லேசாக சொல்லி விட்டார்! தன்னுடைய தந்தையின் விருப்பத்தை தன்னால் தட்ட முடியவில்லை என்று அவர் சொல்லிவிட்டார்!
அவர் காலத்தில் மதம் இருந்த கீழ்மை நிலையே பசி, பட்டினி, வறுமை, லௌகீக சௌகரியங்கள் இல்லாமை ஆகியவற்றுக்குக் காரணம் என்று சுவாமி விவேகானந்தர் கருதினார். இந்த நிலையை ‘சாதுக்களின் கொடுங்கோன்மை, ஆன்மிகவாதிகள், புத்திமான்கள், அறிவுஜீவிகள் ஆகியோரின் கொடுங்கோன்மை’ என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார். இந்த கொடுங்கோன்மை, விஷயம் தெரியாதவர்களின் கொடுங்கோன்மையை விட அதிக சக்தி வாய்ந்தது என்று சுவாமிஜி சொன்னார்.
அவரைப் பொருத்தமட்டில் இந்தியாவின் கதை ‘அளவு மீறிய குணநலன்களால் ஆனது’. சாத்வீகமும் மதமும் நம்நாட்டில் அளவுக்கு அதிகமாக உள்ளதாக அவர் சொன்னார். ரஜோ குணமும், இக வாழ்க்கை நலன்களும் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டன என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார். ”நீங்கள் பகவத் கீதையைப் படிப்பதைக் காட்டிலும், கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள்” என்று இந்திய வாலிபர்களுக்கு சுவாமிஜி சொன்னார். ஏனெனில் “தங்களுடைய தோள்கள் வலிமையாக இருக்கும்போது வாலிபர்கள் பகவத் கீதையை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்” என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார்.
இளம் ஹிந்துக்கள் மதத்தை பின்னுக்குத் தள்ளி ‘ரஜோ குணத்தை’ அடைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். “உங்களுடைய உடம்பு வலிமையாக உங்கள் பாதங்களின் மீது நிற்கும்போது, நீங்கள் மனிதர்கள் என்று உணரும்போது உங்களுக்கு உபநிஷதங்களின் சிறப்பும் ஆத்மாவின் மகிமையும் புரியும்” என்று சுவாமி விவேகாநந்தர் இந்திய வாலிபர்களுக்கு அறைகூவல் விடுத்தார் .
விவேகானந்தர் என்ற மாமனிதர் காவியுடை தரித்திருந்தார். அவர் ஆன்மிகத்தை போதித்தார். இருந்தும் அவர் காலத்தில் மதம் பின்பற்றப்பட்ட முறையை அவர் கண்டித்தார்; கண்டனம் செய்தார். அவர் துறவி. ஆனால் பகவத் கீதையை மறந்துவிட்டு மண்ணுலக நலன்களை அடைய கவனம் செலுத்துமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் சித்தாந்தங்களின் இரு முனைகளில் இருந்தவர்களின் கோபத்திற்கும் சுவாமிஜி ஆளானார். அர்த்தமற்ற சடங்குகளை சுவாமிஜி கண்டித்தார். தீண்டாமையை வலியுறுத்தியவர்களை சுவாமிஜி சாடினார். இதனால் மத குருமார்களின் வெறுப்புக்கும் சுவாமிஜி ஆளானார்.
சுவாமி விவேகானந்தர் அதே சமயம் ஹிந்து தர்மத்தின் உள்ளார்ந்த வலிமையை, மேன்மையை சுட்டிக்காட்டினார். இதனாலும் சுவாமி விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையாலும் , அவருடைய ஆன்மிகப் பிரசங்கங்களாலும், சுவாமிஜியை இடதுசாரிகளும், அறிவு ஜீவிகளும் வெறுத்தனர்; அவர் மீது அவநம்பிக்கை கொண்டனர்.
சுவாமி விவேகானந்தரின் இறப்புக்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இந்த இரங்கல் கூட்டத்திற்கு தலைமை தாங்க இரண்டு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர். அது மட்டுமல்ல. தங்களை அழித்ததையே அவர்கள் முற்றிலும் அலட்சியப்படுத்தினர். வங்கத்திற்கு ஒரு ஹிந்து அரசர் இருந்திருந்தால், அவர் சுவாமி விவேகானந்தரை தூக்கிலிட்டு இருப்பார் என்று சொல்லும் எல்லைக்கு அவர்களில் ஒருவர் போனார்!
இந்த நிகழ்வை சங்கர் தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். சுவாமி விவேகானந்தர் இறந்தபோது அவர் பிறந்த வங்கத்தில் அவருக்கு பெருமளவு ஆதரவு இருக்கவில்லை. சுவாமி விவேகானந்தர் பிறந்த பகுதியை விட, நம் நாட்டுக்கு வெளியில் தான் அவருக்கு அதிகமான ஆதரவாளர்களும், அவரைப் போற்றிப் புகழ்பவர்களும் இருந்தனர்.
அவர் தகனம் செய்யப் பட்ட இடத்தில் அவருக்கு ஒரு சிறிய கோவில் எழுப்ப அவருடைய சகாக்களும், பின்பற்றுவோரும் முயன்றனர். இதற்காக அவர்கள் நிதி திரட்ட முயன்றனர். ஆனால் இதில் அவர்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்ப்பட்டன. 1907ம் ஆண்டுக்கு முன்னால் இந்த பணியைத் துவக்கக் கூட முடியவில்லை. பல வருடங்கள் கழித்து 2-1-1924 ல் தான் இந்தப் பணி முடிவடைந்தது .
சுவாமிஜி ஓர் உலகமாந்தர்; ஜாதி வெறியர் அல்ல…
சுவாமி விவேகானந்தர் சிறுவனாக இருந்தபொழுது அவருக்கு ‘நரேந்திரா’ என்று பெயர். தன்னுடைய தந்தையின் அலுவலகத்தில் விதவிதமான ஹூக்காக்கள் (புகை பிடிக்கும் கருவி) வைக்கப்பட்டிருப்பதை அவர் ஒரு சமயம் கவனித்தார். அவருடைய தந்தையின் அலுவலகத்திற்கு வரும் வேறு வேறு ஜாதியினர் புகைப்பதற்காக வேறு வேறு விதமான ஹூக்காக்கள் வைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்களுக்கு என தனி ஹூக்கா இருந்தது. இது விவேகானந்தருக்கு விசித்திரமாக இருந்தது. எல்லா ஹூக்காக்களையும் ஒவ்வொன்றாக அவர் சுவைத்துப் பார்த்தார். இதை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பார்த்து நரேந்திரரைக் கடிந்து கொண்டனர். ஆனால் நரேந்திரர் அமைதியாக சொன்னார்: “எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை!”
இத்தகைய பகுத்தறிவுப் பூர்வமான விசாரணை தான் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் நிரம்பியுள்ளது. அவர் ஹிந்து தர்மத்தைக் கொண்டாடினார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இதனால் அவர், மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பவராக மாறிவிடவில்லை. உண்மையில் சுவாமி விவேகானந்தர் அடிக்கடி இப்படி சொல்வார்:
“உலகில் பல்வேறு குழுக்கள் உள்ளதை நான் புறக்கணிக்கவில்லை; அந்தக் குழுக்களை விரும்பாதவனாகவும் நான் ஆகி விடவில்லை. இன்னும் இரண்டு கோடி குழுக்கள் அதிகமாக இருந்தாலும் கூட பிரச்னை இல்லை. அப்போது தேர்ந்தெடுக்க இன்னும் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஒரே ஒரு மதத்தை அனைவருக்கும் பொதுவாகப் புகுத்துவதையே நான் எதிர்க்கிறேன்”.
எந்த சந்தர்ப்பத்திலும் , பிற மதங்களின் தேவையை , சுவாமிஜி கேள்வி கேட்கவில்லை. “எனக்கு ஆறு விரல்கள் இருந்து, வேறு எவருக்கும் அவ்வாறு இல்லை என்றால், இது ஒரு அசாதாரணம் என்று நீங்கள் சொல்லலாம். ஒரே ஒரு மதம் தான் உண்மையானது, பிற மதங்கள் அனைத்தும் பொய்யானவை என்று சொல்லும் விவாதத்திற்கும் இதே மேற்சொன்ன உதாரணம் பொருந்தும். உலகில் ஒரே ஒருவருக்கு மட்டுமே ஆறு விரல்கள் இருந்தால் அது எப்படி இயற்கைக்கு மாறாக இருக்குமோ, அதேமாதிரி தான் ஒரே ஒரு மதம் தான் உண்மையானது என்று வாதிப்பதும் இருக்கும்”.
எனவே ஒரு மதம் உண்மை என்றால், எல்லா மதங்களும் உண்மை தான் என்பது நமக்குத் தெரிய வேண்டும்; புரிய வேண்டும். தாஜ்மஹாலைப் பார்த்தவுடன் சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அஹமதாபாத்தில் ஒரு மசூதியின் விசாலமான இடத்தில் நின்றிருந்தபோதும் அவருக்கு அதே மாதிரி உணர்வுகள் தான் மீண்டும் தோன்றின. அவர் வெறும் ‘ஹிந்து மேன்மைவாதியாக’ மட்டுமே இருந்திருந்தால், அவருக்கு இத்தகைய உணர்வுகள் தோன்றி இருக்குமா?
ஜாதி பிரச்னையில் சுவாமி விவேகானந்தர் தன் காலத்தில் இருந்த சீர்திருத்தவாதிகளிடம் இருந்து மாறுபட்டார். ஜாதியை ஒரு சமய அமைப்பாக உருவகப் படுத்தும் முயற்சிகள் மிகவும் தவறானவை என்று அவர் கண்டார். ‘புத்தர் காலத்தில் இருந்து ராஜாராம் மோகன்ராய் வரை அனைவருமே மதம் மற்றும் ஜாதியை கீழே குப்புறத் தள்ள முயன்று அதில் தோல்வி அடைந்தனர்’ என்று சுவாமிஜி சொன்னார். இது ஒரு மகத்தான பிழை என்றும் விவேகானந்தர் சொன்னார். ஒருவருடைய ஜாதியை அறிவிப்பது, அவரின் ‘சுதந்திரம்’ என்று சுவாமிஜி சொன்னார். அவருக்கு அது சமூக தனித் தன்மையை அளிக்கிறது என்று விவேகானந்தர் சொன்னார்.
“இப்போதுள்ள ஜாதி உண்மையான ஜாதி அல்ல. மாறாக ஜாதி முன்னேறுவதற்கு இப்போதுள்ள ஜாதி தடையாக உள்ளது“ என்று சுவாமிஜி சொன்னார். ஜாதி தன்னுடைய முழு வீச்சை, பரிமாணத்தை அடைவதற்கு இப்போதுள்ள பரம்பரை வகுப்புக் குழுக்கள், சலுகைகள் ஒன்று திரட்டப்பட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவை தடையாக உள்ளன என்று விவேகானந்தர் சொன்னார்.
எப்போதெல்லாம் ஒரு தேசம் விதவிதமான ‘பன்முகத்தன்மை’யை உருவாக்கவில்லையோ, அப்போது அது மடிந்தே தீர வேண்டும். முடமாக்கப்பட்ட செல்வச் செழிப்பும், சலுகைகளை அனுபவிக்கும் குழுக்களும் ஜாதிக்கு அடி கொடுக்கின்றன. அவை ஜாதியே இல்லை என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார்.
சுவாமி விவேகானந்தர் ஜாதியை எவ்வாறு உருவகப்படுத்தினார் என்பதை லண்டனில் 12-11-1896 இல் அவர் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் இருந்து புரிந்து கொள்ளலாம். அவர் அந்த சொற்பொழிவில் சாந்தோக்கிய உபநிஷத்தில் இருந்து ஒரு கதையை மேற்கோள் காட்டி சொன்னார். அந்தக் கதை அவரது மொழியிலேயே….
“சத்யகாமன் என்ற ஒரு சிறுவன் இருந்தான். அவனுடைய தாயின் பெயர் ஜபாலா. ‘என்னுடைய தந்தையின் பெயரையும் என்னுடைய ஜாதியையும் சொல்’ என்று சத்யகாமன் தன் தாய் ஜாபாலாவிடம் கேட்டான். ஆனால் அவனுடைய தாய்க்கு கல்யாணம் ஆகவில்லை. அவள் பல மனிதர்கள் வீட்டில் அடிமையாக இருந்தவள். எனவே சத்யகாமனின் தந்தை யார் என்று அவளுக்கு சரியாகத் தெரியவில்லை… அதன்பிறகு வேதம் படிக்க விரும்பிய சத்யகாமன் ஒரு முனிவரிடம் சென்று, தன்னுடைய தந்தை யார் என்பது தனக்கு தெரியாது என்று உண்மையைச் சொன்னான். அந்த முனிவர் உடனே சொன்னார்: ‘ஒரு பிராமணனைத் தவிர வேறு யாரும் இத்தகைய உண்மையை தனக்கே அவமானமாக இருந்தாலும் சொல்ல மாட்டார்கள். எனவே சத்யா காமா, நீ (குணத்தால்) பிராமணன்; உனக்கு நான் வேதம் சொல்லித் தருகிறேன்’ என்று அந்த முனிவர் சொன்னார்”.
இத்தகைய ஜாதிமுறையில் தான் சுவாமி விவேகானந்தா நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே அவரை ஜாதி ஆதரவாளர் என்று அழைப்பவர்கள் காமாலைக் கண்ணர்கள்; விவேகானந்தர் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டவர்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் சமமான, ஒரே மாதிரி அதிகாரம் கொண்ட, ஒரே மாதிரி பொறுப்புகளையும், சமூக அந்தஸ்தையும் கொண்ட ஒரு சமூகத்தை கனவு காண்பவர்கள். ஆனால் ஒவ்வொருவரும் சமமாக இருக்க இயலுமா? அப்படிப்பட்ட நிலை கடுமையாக உழைக்கும் பிறரைக் காட்டிலும் திறமைசாலியாக உள்ள ஒருவனுக்கு அநீதி இழைப்பதாக ஆகாதா? ஒருவன் புத்திசாலியாக இருந்தால் அவன் உயர்வதர்க்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. எவரும் ஆரம்பத்தில் கீழ்நிலையில் இருந்து ஆரம்பித்து இருக்கலாம். அது ஒரு பொருட்டல்ல. இது தான் சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியது ஆகும்.
சுவாமி விவேகானந்தரின் 150வது அவதார தினத்தை நாம் இப்போது கொண்டாடிக் கொண்டுள்ளோம். ஆனால் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட ஒரு துறவியாக அவர் உள்ளார். அவரை ஹிந்து மேன்மைவாதி, அல்லது ஜாதீய ஆதரவாளர் என்று அழைப்பது விவேகானந்தருக்கு இழைக்கும் அநீதி ஆகும்.
அம்மாதிரிச் செய்வதால் அவர் காட்டிய பாதையை விருப்பு வெறுப்பின்றி பார்க்க தேசத்திற்கு இயலாததாகிவிடும். முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது தான் நமக்கு சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் அதிகமாக தேவைப்படுகின்றன. ஏனென்றால், இப்போது நாம் ஜாதி, மற்றும் வகுப்புவாத விஷயங்களில் பிளவுண்டு கிடப்பது போல் இதறகு முன்பு எப்போதும் இருந்ததே இல்லை!
குறிப்பு: ஆங்கில நாளிதழான ‘தி பயனீர்’ 10.02.2013 தேதியிட்ட இதழில் பத்திரிகையாளர் திரு. உத்பல்குமார் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. இதனை தமிழில் வழங்கியுள்ள திரு. எல்.நரசிம்மமூர்த்தி (ல.ரோகிணி), ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். வாசகர் கடிதங்கள் எழுதுவதன மூலமாக விழிப்புணர்வுள்ள வாசக சமுதாயத்தை உருவாக்கும் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர்.
$$$
மிக அருமை சார், ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அம்சம் இது.
LikeLike