-சேக்கிழான்
இந்த பரந்த பாரத தேசத்தின் நில எல்லையைத் தீர்மானமாகக் கூறும் புறநானூற்றின் 17ஆம் பாடல், மிகவும் கவனத்திற்குரியது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நம் நாடு ஒன்றுபட்டு இருந்ததன் அடையாளம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளதன் ஆதாரம் இது.

பகுதி-12: கோல் செம்மை அளித்த சேர மன்னவர்
.
13. மன்னனை உயிர்த்தே மலர்த்தலை உலகம்!
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ‘புறநானூறு’, புறத்திணை சார்ந்த சங்கத் தமிழ் நூலாகும். இதிலுள்ள 400 பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 160. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை. ‘புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு’ என்றும் இது அழைக்கப்படுகிறது.
புறநானூற்றின் பாடல்கள், சங்க காலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றன. அக்கால மன்னர்களின் நல்லாட்சி, தானம், வீரம், நடுநிலைமை, மக்களைக் காக்கும் மாண்பு ஆகியவற்றுக்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குகின்றன.
முழுவதும் புறத்திணை சார்ந்த நூலாக மட்டுமே இருப்பதால், மன்னராட்சியின் சிறப்புகள் குறித்த பாடல்களாகவே பெரும்பாலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்…
அக்கால முடியாட்சியில் மன்னவனே சமுதாயத்தின் முதன்மைக் குடிமகனாகக் கருதப்பட்டான். ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது பழமொழி. மன்னனின் முதன்மையை மோசிகீரனார் என்ற புலவர் பாடும் பாடல் இது…
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே!
(புறநானூறு- 186)
மோசிகீரனார்
மன்னனை இறைவனுக்கு நிகராகக் கருதி வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்களின் கொள்கையை இப்பாடல் காட்டுகிறது. இப்பாடலின் பொருள்:
பசியாற்றும் நெல்லும் இவ்வுலக மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அன்று; தாகம் தீர்க்கும் தண்ணீரும் இவ்வுலக மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அன்று; நாட்டைக் காக்கும் மன்னனைத் தான் இவ்வுலகம் உயிராகக் கொண்டிருக்கிறது. ஆதலால் ஆளும் அரசன் ‘நான் தான் இவ்வுலகத்துக்கு உயிர்’ என்பதை மறவாமல் எண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்; இதுதான் படைபலம் பொருந்திய அரசனுடைய கடமையாகும்.
இதனையே, கம்ப ராமாயணத்தில் வேறு வடிவில், மக்களை உயிராகவும் மன்னனை உடலாகவும் கருத வேண்டும் என்று ராமனுக்கு வசிஷ்டன் அறிவுரை கூறுவதாக கம்பர் எழுதி இருப்பதை (அயோத்தியா காண்டம்- மந்தரை சூழ்ச்சிப் படலம்- 2.2.17) இங்கு ஒப்புநோக்கலாம்.
இன்னொரு பாடலில் மன்னனின் கடமை, நாடு காக்க இளைஞருக்கு நற்பயிற்சி அளிப்பதாகும் என்கிறார் புலவர் பொன்முடியார். அற்புதமான அப்பாடல் இதோ:
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
(புறநானூறு- 312)
பொன்முடியார்
இதன் பொருள்:
மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் தாயின் தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்ற சான்றோன் ஆக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான படைக் கருவிகளை உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஒளியுடன் மிளிரும் வாளைக் கையில் ஏந்தி, தடுத்தற்கரிய போரைச் செய்து, பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது, நாட்டைக் காப்பது வீரனின் கடமை.
இனி வரும் பாடல்களில் செங்கோல் குறித்த நேரடியான குறிப்புகளுடன் கூடிய சில பாடல்களைக் காணலாம்.
***
தேசம் முழுவதும் கோல் திருத்தி ஆண்டவன்:
இந்த பரந்த பாரத தேசத்தின் நில எல்லையைத் தீர்மானமாகக் கூறும் புற நானூற்றின் 17ஆம் பாடல், மிகவும் கவனத்திற்குரியது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நம் நாடு ஒன்றுபட்டு இருந்ததன் அடையாளம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளதன் ஆதாரம் இது.
இப்பாடலில், தீய செயல்களை அழித்து, செங்கோல் ஆட்சியை தெளிவாக நடத்திய சேர மன்னன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையைப் பாடுகிறார் புலவர். இப்பாடலின் ஆரம்ப வரிகள் இதோ…
தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல…
(புறநானூறு- 17: 1-8)
குறுங்கோழியூர் கிழார்
இதன் பொருள்:
தென்திசையில் குமரி, வடதிசையில் இமயமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல் ஆகியவையே எல்லையாக இடைப்பட்ட குன்றுகளும், மலைகளும், காடுகளும், நாடுகளும் என இவற்றை ஆள்வோர் ஒன்றுபட்டு வழிமொழிய, தீய செயலைப் போக்கி, செங்கோலைத் திருத்தமாகக் கொண்டு, குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் வரியால் உண்டு, நடுவுநிலையாக ஆண்டு, இனிய, ஒளியையுடைய ஆட்சிச்சக்கரத்தால் நிலம் முழுதையும் ஆண்டோரின் மரபில் வந்தவனே!
என்று பாடுகிறார் புலவர். இங்கு வட பெருங்கல் என்பது இமய மலையையே குறிக்கிறது. இமயம் குறித்து வரும் சங்கப் பாடல்களை மட்டுமே தொகுத்து ஆராய்ந்தால் மேலும் பல தகவல்களைப் பெற முடியும் என்பது திண்ணம்.
வரியைக் குறைத்த புலவன்:
அடுத்து, மக்கள் மீதான வரி குறைக்கப்பட வேண்டி, சோழ மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிய பாடலைக் காண்போம். அப்பாடலின் சாராம்சம்:
மன்னனே, மூவேந்தர் ஆட்சியில் உன் அரசே ‘அரசு’ எனப் போற்றுதலுக்கு உரியது. நாடு எனப் போற்றப்படுவது உன் காவிரி நாடே. என்றாலும் ஒன்று கூற விரும்புகிறேன்.
உன்னிடம் முறை வேண்டும்போது எளிமையாகக் காட்சி தந்து சரியான தீர்ப்பைப் பெற்றால் விரும்பும்போது மழை பொழிவது போன்று மக்கள் மகிழ்வர்.
உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று; குடிமக்களின் துயரைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே.
உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது. மழை பொய்த்தாலும் வருவாய் குறைந்தாலும் இயற்கை அல்லாத செயற்கை தோன்றினாலும், உலகம் அதனைக் காக்கும் அரசனைத்தான் பழிக்கும்.
இதனைப் புரிந்துகொண்டு உனக்கு வேண்டியவர்களின் சொல்லைக் கேளாமல், காளை மாடுகளைப் போற்றி உழவு செய்யும் குடிகளின் வரிச் சுமையைக் குறைத்து அவர்களைப் பேணினால், அடங்காத உன் பகைவரும் உன்னிடம் அடிபணிவர்.
-இந்தப் பாடலைக் கேட்டவுடன், அதிகமான நிலவரியைத் தள்ளுபடி செய்தான் மன்னன் என்பது பாடலின் விளைவாகும். இதோ அப்பாடல்:
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.
(புறநானூறு- 35)
வெள்ளைக்குடி நாகனார்
***
வள்ளல் அதியனின் செங்கோல் சிறப்பு:
அடுத்து, போர்க்களத்தே மாய்ந்த தகடூர் (இன்றைய தருமபுரி) அதியமான் எழினியின் செங்கோல் சிறப்பைக் கூறும் பாடலைக் காண்போம்.
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,
களம்மலி குப்பை காப்பில வைகவும்,
விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்,
பொய்யா எழினி பொருதுகளம் சேர-
ஈன்றோர் நீத்த குழவி போலத்,
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்,
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி
நீ இழந் தனையே, அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்,
வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்,
நேரார் பல்லுயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே.
(புறநானூறு- 230)
அரிசில் கிழார்.
இப்பாடலின் பொருள்:
செங்கோல் ஆட்சியிலும், வாட்போரிலும் பொய்மை சேராமல் செயலாற்றிய அதியமான் எழினி தகடூர்ப் போரில் களத்திலேயே மாண்டான்.
தனது ஆட்சியில் ஆடுமாடுகள் தம் கன்றுகளுடன் மேயும் காட்டிலேயே தங்கும்படியாகவும், வெளியிடங்களுக்குச் செல்லும் புதியவர்கள் விரும்பிய இடங்களில் தங்கும்படியாகவும், காட்டு விலங்குகளின் பகைமையைப் போக்கிக் காவல் காத்துச் செங்கோல் ஆட்சி புரிந்தவன் இந்த எழினி.
இந்தக் காவலுக்காக இவன் பயன்படுத்திய வாளாண்மையை உலகமே புகழ்ந்தது. இவன் மாண்டதனால் இவனது சுற்றத்தார் தாயை இழந்த பச்சிளம் குழந்தை போல ஆங்காங்கே வருந்தினர். பசியால் வாடும் உடல் போல உலகமே துன்ப நெஞ்சத்தோடு கலங்கியது.
அறம் இல்லாத கூற்றமே (யமனே)! விவசாயம் அறியாத உழவன் தான் வீழும் காலத்தில் தன்னிடமுள்ள விதையையே உணவாக்கிக் கொண்டது போல, எழினியின் உயிரை நீ உணவாக்கிக் கொண்டுவிட்டாய். இவ்வாறு இவனை உணவாக்கிக் கொள்ளாமல் இருந்திருந்தால், இவன் போரிடும் களத்தில் மாளும் பல உயிர்களை வயிறார நீ பருகி இருக்கலாம் அல்லவா? அவனை இழந்த இந்த உலகைக் காட்டிலும் நீயே பேரிழப்பை அடைந்திருக்கிறாய்!
-இது ஒருவகையில் வஞ்சப் புகழ்ச்சி அணியாகும். அதியமான் எழினியை கூற்றுவன் கொல்லாதிருந்திருந்தால், அவனது போர்த்திறத்தால் மடியும் பகைவர் பலரது உயிரை கூற்றுவன் பெற்றிருக்க முடியும் என்பதே பாடலின் மறைமுகக் கருத்து. பாடலின் இடையே, அதியமான் எழினியின் செங்கோல் சிறப்பும் கூறப்படுகிறது.
***
குருளையைப் புலி காப்பது போல…
வனவிலங்கான புலி, தனது குருளைகளை (குட்டிகளை) கண்ணிமை காப்பது போலக் காக்கும். பிற பகை விலங்குகளிடத்திருந்தும், இயற்கைச் சீற்றத்திலிருந்தும் தனது குட்டிகளைக் காப்பது தாய்ப் புலியின் கடமை. அதுபோல, நாட்டு மக்களைக் காப்பவன் செங்கோல் மன்னன் என்கிறார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளனைப் புகழ்ந்து பாடும் புலவர் இடைக்காடனார். இதோ அப்பாடல்:
ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின்
யானையும் மலையின் தோன்றும்; பெருமநின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
புரைதீர்ந் தன்றுஅது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ! என்றுநின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
புலிபுறங் காக்கும் குருளை போல
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.
(புறநானூறு- 42)
இடைக்காடனார்.
வாகைத்திணையில் இயற்றப்பட்ட இப்பாடலின் திரண்ட பொருள்:
குறையாது கொடுக்கும் ஈகையும் வெல்லும் போரும் உடைய தலைவனே! உன் யானை, மலை போலத் தோன்றுகிறது. பெருமானே! உன் படைகளோ கடல் போல் முழங்குகிறது. உன்னுடைய கூர்மையான நுனியையுடைய வேல் மின்னலைப் போல ஒளியுடன் விளங்கும். நீ உலகத்து அரசர்களெல்லாம் நடுங்கச் செய்யும் ஆற்றல் உடையவன். ஆதலால், உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. இது உனக்குப் புதியது அல்ல.
ஆறுகளில் சலசலவென ஓடும் குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் ஒலியைத் தவிர, உன் வீரர்கள் வருந்தி, “எம் துயரத்தைக் களைக, வளவனே” என்று போர்முனையில் ஒலி எழுப்புவதை, நீ கனவிலும் கேட்டதில்லை. புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல செங்கோல் செலுத்தி நீ உன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றாய்.
உன் நாடு மிகச் சிறந்த புது வருவாயை உடையது. அங்கு, கடைமடையில் நெல் அறுப்போர் பிடித்த வாளைமீன், உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமை, கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கருப்பஞ் சாறு, பெரிய நீர்த்துறையிலிருந்து நீர் கொண்டுவரும் மகளிர் பறித்த குவளை மலர்கள் ஆகியவற்றை, மலை மற்றும் காடு போன்ற வலிய நிலங்களிலிருந்து வருபவர்களுக்கு விருந்தாக அளிக்கும் மருத வளம் மிகுந்த நல்ல நாட்டின் தலைவனே!
மலைகளிலிருந்து வரும் ஆறுகளெல்லாம் பெரிய கடலை நோக்கிச் செல்வது போல புலவரெல்லாம் உன்னையே நோக்கி வருகின்றனர். நீ, கணிச்சி என்னும் ஒப்பற்ற ஆயுதத்தைச் சுழற்றிச் சினந்து கொல்லும் யமன் போன்ற வலிமையோடு மற்ற இரு வேந்தர்களின் (சேர, பண்டியர்களின்) நிலத்தை நோக்குகிறாய்.
-இவ்வாறு கூறி, தனது மன்னனின் போர்த் திறனை வெளிப்படுத்துகிறார் புலவர்.
புறநானூறு கூறும் செங்கோல் சிறப்புகள் மேலும் தொடர்கின்றன…
(தொடரும்)
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 13”