-ச.சண்முகநாதன்
பழந்தமிழ் இலக்கியத்தின் பாடல்களை இளம் தலைமுறைக்குச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி சமகாலக் காட்சிகளுடன் விளக்கியாக வேண்டி இருக்கிறது. இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட தொழில் துறையில் பணிபுரிந்தாலும், மனதைப் பண்படுத்தும் இலக்கியத்தை மென்மையாக எடுத்துச் சொல்கிறார், எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன். இதோ அவரது குறுந்தொகை பற்றிய குறுங்கட்டுரை...

.
இன்று அலுவலகத்தில் teabreak எடுக்க eCafe சென்ற பொழுது ஒரு அழகான யுவதி யாரையோ (அவனைத் தான்) தொலைபேசியில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். “இதுதான் நீ என்னைப்பார்த்துக்கிற லக்ஷ்ணமா? என்னைக்காவது ஒரு நாள்…” என்று துவங்கி “கெட் lost”ஐ நோக்கிப் போய்க்கொண்டிருந்தது உரையாடல்.
‘உரைஊடல்’ என்று சொல்லலாம். முன்னாடி இருந்திருந்தால் ரெண்டு அப்பு அப்பியிருப்பாள் போல, அந்த ஜீன்ஸ் சின்னப்புயல்.
பையன் பாவம்!
பெண்கள் take extreme stand. அதுவும் காதல் விஷயத்தில், காதலர் விஷயத்தில் – ஒரு நாள் வடதுருவம், மறுநாள் தென்துருவம் என்று இருப்பர் என்று இலக்கியம் சொல்கிறது. (நமக்கென்ன தெரியும்?)
இதைத்தான் விளையாட்டாக கண்ணதாசனும் “கம்பன் ஏமாந்தான். இளம் கன்னியரை ஒரு மலரென்றானே!” என்று பாடியிருப்பார் போல.
கண்ணனின் காதலியில் பாரதியும், ஒரு சிறு மனஸ்தாபத்துக்குப் பின், “என்னுடன் நெருங்கி காதல் மொழி பேசிய கதையெல்லாம் இந்த நகரெல்லாம் முரசு கொட்டி சொல்லிவிடுவேன்” என்று மிரட்டுகிறாள்.
“ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை அழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம் தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம்”
இதே பாரதி, காதலனாய், ஆண் உருவாய் மாறிய பொழுது, பார்த்திருந்தால் வருவேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றிய காதலியைப் பார்த்து, பொறுமையாகப் பாடுகிறான்:
“வார்த்தை தவறிவிட்டாய்- அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! பார்த்த விடத்திலெல்லாம்- உன்னைப்போலவே பாவை தெரியுதடீ"
“வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!”- இவ்வளவுதான் ஆணின் கோபம், விரக்தி. ஊடலுக்குப் பின்னான கூடலுக்குக் காத்திருக்கிறான்.
சங்கத் தமிழச்சி ஒருத்தி இதேபோல கோபம் கொண்டு கோபம் தலைக்கேறி குதிக்கிறாள். “உன் சங்காத்தமே வேண்டாம் ஜாமி” என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் she goes to the extreme.
“உன்னைப் பார்த்து சிரித்த என் பற்கள் கல்லைக் குத்திய யானைத் தந்தம் போல முறிந்து சிதைந்து போகட்டும்” என்று பேசுகிறாள். ப்ப்பா! என்னவொரு கோபம்!
“உன்னுடன் சேராத என் உயிர், பாணர் பாத்திரத்தில் திறந்து வைத்த மீனைப்போல அழுகிப் போகட்டும்”. Extreme!
“சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே:
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே”
(குறுந்தொகை -169)
எதற்கு இவளுக்கு இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை.
இப்பொழுதெல்லாம் whatsappஇல் ‘ப்ளூ டிக்’ வரவில்லையென்றால் காதலிகள் கோபம் கொள்வதாய் கேள்விப்படுகிறேன். ஒரு வேளை அது மாதிரி ஏதாவது இருக்குமோ?
எதுவாக இருந்தாலும் “யாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறு, யானை கல் உறு கோட்டின் தெற்றென இறீஇயர்” என்பதெல்லாம் too much.
$$$