-சேக்கிழான்
பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து, ஆற்றுப்படை நூல்கள். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகியவை. இந்த ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும், மலைபடுகடாமிலும் மன்னரின் / நாட்டின் சிறப்புகள் குறித்த செய்திகள் இருந்தாலும், செங்கோல் தொடர்பான நேரடியான குறிப்புகள் இல்லை. பிற மூன்று ஆற்றுப்படை நூல்களிலும் காணப்படும் செங்கோல் குறித்த பாடல்களை இங்கு காண்போம்...

பகுதி-7: சிந்தாமணியில் சீர்மிகுகோல்
.
8. ஆற்றுப்படை நூல்களில் செங்கோல்
சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். இவை ‘பதினெண் மேல்கணக்கு நூல்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் ‘பத்துப்பாட்டு’ எனப்படுபவை, நெடிய ஒற்றைப் பாடல்களால் ஆனவை. ‘எட்டுத்தொகை’ எனப்படுபவை, முறையாகத் தொகுக்கப்பட்ட, குறைந்த அடிகளைக் கொண்ட செய்யுள்களால் ஆன எட்டு தொகைநூல்கள்.
பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து, ஆற்றுப்படை நூல்கள். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகியவை.
இவை அனைத்தும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டவை; மன்னரின் புகழைப் பாடும் பாடாண்திணையில் பாடப்பட்டவை. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல்லுக்கு வழிப்படுத்தல் என்று பொருள். எளிய புலவன், பாணன், பொருநன், விறலி அல்லது கூத்தனிடம் வள்ளல் ஒருவனின் சிறப்பைக் கூறி, அவரிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படைத் துறையில் அமைந்த இந்தப் பாடல்களாகும்.
பத்துப்பாட்டு நூல்களுள் முதலாமாவது, மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரரால் பாடப்பட்ட திருமுருகாற்றுப்படை. நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இப்பாடலின் தலைவன், செந்தமிழ்க் கடவுளான முருகன். இந்நூல் 317 அடிகளைக் கொண்டது. சைவப் பன்னிரு திருமுறைப் பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை, அறுபடைவீடுகளின் சிறப்புகளைக் கூறி, பக்தனுக்கு வீடுபேறு அடையும் வழியைக் காட்டுகிறது.
அடுத்ததாக, உறையூரை ஆண்ட கரிகால் சோழனைப் புகழ்ந்து அவரிடம் சென்று அரும்பொருள் பெற பொருநர் ஒருவரை ஆற்றுப்படுத்தும் பாடலே, பொருநராற்றுப்படை. இதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். இதன் மொத்த அடிகள்: 248.
அதேபோல, காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனின் புகழ் பாடி, பேரியாழ் வாசிக்கும் பாணனை ஆற்றுப்படுத்துவதே, பெரும்பாணாற்றுப்படை. இதன் மொத்த அடிகள்: 500. இதனை இயற்றியவர், கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
ஓய்மான் நாட்டுச் சிற்றரசன் நல்லியக்கோடனின் புகழைப் பாடி, அவரிடம் சென்று பரிசில் பெற சீறியாழ் வாசிக்கும் பாணனை ஆற்றுப்படுத்துவது, சிறுபாணாற்றுப்படை. இதன் மொத்த அடிகள்: 269. இதனை இயற்றியவர், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
மலைபடுகடாம், கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படுகிறது. பாரம் (தற்போதைய செங்கம்) என்னும் நாட்டை ஆண்ட சிற்றரசன் நன்னன் வேண்மானின் சிறப்புகளைப் பாடி, கூத்தன் ஒருவனை ஆற்றுப்படுத்துவதே மலைபடுகடாம். இதன் மொத்த அடிகள்: 583. இதனை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்.
இந்த ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படையிலும், மலைபடுகடாமிலும் மன்னரின் சிறப்புகள் குறித்த செய்திகள் இருந்தாலும், செங்கோல் தொடர்பான நேரடியான குறிப்புகள் இல்லை. பிற மூன்று ஆற்றுப்படை நூல்களிலும் காணப்படும் செங்கோல் குறித்த பாடல்களை இங்கு பயில்வோம்.
பொருநராற்றுப்படை:
ஏழ்மை நிலையில் இருக்கும் பொருநன் (தடாரிப் பறையுடன் பாடுபவன்) ஒருவனுக்கு மற்றொரு பொருநன், கரிகால் பெருவளத்தானின் சிறப்புகளைக் கூறி, அவரது நாட்டிற்குச் சென்று செல்வம் பெற்று வறுமையைப் போக்கிக்கொள்ள உபாயம் கூறுகிறான். இதில், 214 முதல் 232 வரையிலான அடிகள், நில மயக்கமும் நல் ஆட்சியும் குறித்துப் பேசுகின்றன.
அக்கால செய்யுள் மரபில் ஒவ்வொரு திணைக்கும் உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்கள் அந்தந்தத் திணை தொடர்பான செய்யுள்களில் அமைவது முறைமையாகும். ஆனால் கரிகால் சோழனின் ஆட்சியில் இந்த திணைக் கட்டுப்பாடு மாறிவிடுகிறது. ஏனெனில் அவனது நல்லாட்சியால், மக்கள் நாடு முழுவதும் பரந்து சென்றிருக்கிறார்கள். எனவே உறையூர் நாட்டில் நில மயக்கம் ஏற்படுகிறது. இதனைக் குறிப்பிடும் அடிகளின் பொருள் இதோ…
பண் பாடுவதிலும் மயக்கம் நேரும். நெய்தல் நிலத்துப் பரதவர் (மீனவர்) குறிஞ்சிப்பண் பாடுவர். குறிஞ்சி நிலத்துக் குறவர் நெய்தல் பூவைச் சூடுவர். முல்லை நிலத்துக் கானவர் மருதப்பண் பாடுவர். மருத நிலத்து அகவர் முல்லைத்திணைப் பண்ணைப் பாடுவர். கானக்கோழி மருத நிலத்து நெற்கதிர்களைக் குத்தித் தின்னும். மருத நிலத்து மனைக்கோழி முல்லை நிலத்துத் தினைக்கதிர்களைக் கவர்ந்துண்ணும். மலையில் வாழும் மந்தி கடலோர உப்பங்கழிகளில் குளிக்கும். உப்பங்கழி நாரை மலைமரங்களில் இருக்கும். இப்படி எங்கும் நீரின் தண்மை (குளிர்ச்சி) வளம் மிக்க நாடு காவிரி நாடு. மண்ணின் தண்மையால் குறை இல்லாதது. காவிரி நாடு என்னும் பெயரோடு அது ஒன்றுபட்டிருந்தது. இதனை நட்பும் அறனும் பூண்டு ஒருகுடைக் கீழ் செங்கோல் செலுத்தி ஆள்பவன் கரிகால் சோழன். அவன் வாழ்க!
இந்தப் பாடலின் அடிகள் இவை:
தேனெய்யொடு கிழங்குமாறியோர்
மீனெய்யொடு நறவுமறுகவுந்
தீங்கரும்போ டவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவுந்
குறிஞ்சி பரதவர் பாட நெய்த
னறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட வகவர்
நீனிற முல்லைப் பஃறினை நுவலக்
கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர
வரைமந்தி கழிமூழ்க
கழிநாரை வரையிறுப்பத்
தண்வைப்பினா னாடுகுழீஇ
மண்மருங்கினான் மறுவின்றி
யொருகுடையா னொன்றுகூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ
லன்னோன் வாழி வென்வேற் குரிசில்!...
(பொருநராற்றுப்படை- 214-231)
பெரும்பாணாற்றுப்படை:
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டைநாட்டை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனின் புகழ் பாடி, பேரியாழ் வாசிக்கும் பாணனை மற்றொரு பாணன் ஆற்றுப்படுத்துகிறான். இதில், 29வது அடி முதல் 37வது அடி வரை, இளந்திரையனது சிறப்பை பாணன் பாடுகிறான். இதோ அந்த அடிகளின் பொருள்:
திரையன் திருமாலின் வலம்புரிச் சங்கம் போன்றவன். அவன் திரையர் குடியில் தோன்றிய திரையன். பலவகையான வேல்களை பல்வேறு விசைப் பாங்குகளில் வீசக் கூடியவன். அவன் திருமாலின் வாரிசு. திருமால் நிலத்தைக் கடந்தவர். செல்வத் திருமகள் அமர்ந்து மணம் வீசும் மார்பினை உடையவர். கடல் நிறத்தில் காட்சி தருபவர்.
கடலின் அலையில் மிதந்து வந்து அரசுக்கட்டில் ஏறிய அரச மரபினரின் கொடிவழியினர் திரையர் எனப்பட்டனர். அம்மரபில் வந்தவர்களில் உயர்ந்தோங்கிய யானை போன்றவன், தொண்டைமான் இளந்திரையன். உலகிலுள்ள உயிரினங்களைக் காக்கும் மூவேந்தர்களை சங்கு என்றால், இந்த இளந்திரையன் சங்குகளிலே சிறந்து விளங்கும் வலம்புரிச் சங்கு போன்றவன். மறப்போரை விலக்கிவிட்டு அறத்தை மட்டுமே செய்யும் செங்கோல்தான் அவன் ஆட்சி. நீங்கள் அவனை நினைத்துக்கொண்டு செல்லுங்கள்; வறுமை தீரும் வளங்களைப் பெறலாம்.
இந்தப் பாடலின் அடிகள்:
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர்
திரை தரு மரபின் உரவோன் உம்பல்
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின்...
(பெரும்பாணாற்றுப்படை- 29 – 37)
இவ்வாறு பாடும் பெரும்பாணன், மேலும் கூறுகிறான்:
தொண்டைமான் இளந்திரையனின் நல்லாட்சியைப் பற்றிச் சொல்கிறேன் கேள். உன் உள்ளம் ஊக்கமடையட்டும்; உன் அவல நிலை ஒழியட்டும். அவனது காவல் நிலத்தில் வழிப்போக்கர்களை அலறும்படி தாக்கி வழிப்பறி செய்யும் திருட்டுக் கூட்டம் இல்லை. ஏனெனில், இளந்திரையனின் காவலர்கள் வழிப்போக்கர்களுக்குத் துணை வருவர். அதற்கான ஆணையைப் பிறப்பித்திருக்கிறான் மன்னன்.
அவன் ஆட்சியில் உள்ள பகுதியில் இடி தாக்காது; பாம்பு பயம் இல்லை;காட்டு விலங்குகளாலும் துன்பம் இல்லை; எங்கும் தங்கலாம்; எங்கும் பாதுகாப்பு; களைப்புத் தோன்றும்போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம். பின்னர் பயணத்தைத் தொடரலாம் என்கிறான். இதுவே செங்கோல் செலுத்தும் நல்லாட்சியின் அடையாளம். இதே போன்ற பொருளுடன் சிலப்பதிகாரத்திலும் பாடல் உண்டு.
இதற்கான பாடல் அடிகள்:
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்
அத்தம் செல்வோர் அலற தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம்
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழி தங்கி
சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம்
(பெரும்பாணாற்றுப்படை -38 – 45).
சிறுபாணாற்றுப்படை:
ஓய்மான் நாட்டுச் சிற்றரசன் நல்லியக்கோடனின் புகழைப் பாடி, அவரிடம் சென்று பரிசில் பெற சீறியாழ் வாசிக்கும் பாணனை ஆற்றுப்படுத்துகிறான் மற்றொரு சிறுபாணன். அவன் மன்னனைப் புகழ்ந்து பாடுகிறான்…
“பெரியவர்களுக்குக் குவித்த கையுடையன் நீ; மறவர்களுக்கு மலர்ந்த மார்பையுடையவன் நீ; உழவர்களுக்கு நிழல் தருகின்ற செங்கோலை உடையவன் நீ; தேரினை உடைய அரசர்களுக்கு வெம்மையான வேலை உடையவன் நீ” என்று, நல்லியக்கோடனை புகழ்ந்து நீ பாட வேண்டும் என்கிறான்.
இதோ அப்பாடல் அடிகள்:
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீ சில மொழியா அளவை…
(சிறுபாணாற்றுப்படை -231 – 235).
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஐந்தும் பிற பத்துப்பாட்டு நூல்கள். அவற்றை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 8”