தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 5

-சேக்கிழான்

பகுதி-4: சிலம்பு காட்டும் நல்லாட்சி

5. மணிமேகலையில் மன்னரின் மாண்பு

.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள். இரண்டின் அடிப்படைக் களமும் காவிரிப்பூம்பட்டினமே. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுவதால் காரணப் பெயர் பெற்ற காப்பியம் இது. இதன் காலம் பொ.யு.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்களின் முடிவு.

சிலப்பதிகாரத்தில், கோவலன் – கண்ணகியின் இல்லற வாழ்வில் இடையூறாக மாதவி வருகிறாள். மணிமேகலையில், கோவலன் மறைவுக்குப் பின், கோவலனுக்கும் தனக்கும் பிறந்த மகள் மணிமேகலையை புத்த பிக்குணி ஆக்குகிறாள் மாதவி. சிலப்பதிகாரக் கதையின் மற்றொரு தொடர்ச்சியாக மணிமேகலை அமைந்துள்ளது.

இக்காப்பியத்தில் 30 காதைகள் உள்ளன. கதையின் போக்கில் பல திருப்பங்கள் அமைந்தாலும், இதனை இயற்றிய புலவர் சீத்தலைச் சாத்தனாரின் (மகாயாண) பௌத்த சமய உணர்வு காப்பியம் முழுவதும் விரவி வருகிறது. சிலப்பதிகாரம் போன்ற பொதுமைக் காப்பியமாக மணிமேகலையைக் கூற இயலாது எனினும், அக்காலத்தில் நிலவிய சமய நம்பிக்கைகள் அனைத்தும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மணிமேகலையை சோழ இளவரசன் உதயகுமாரன் விரும்புதல், அவனிடமிருந்து தப்பி மணிபல்லவத் தீவு செல்லுதல்; அங்கு அமுதசுரபி பாத்திரம் கிடைத்தல், மக்களின் பசிப்பிணி தீர்த்தல், சோழ இளவரசன் கொலைப்பழியால் மணிமேகலை கைதாகுதல், பிறகு விடுதலை அடைந்து, சமயப் பணி ஆற்றுதல் என காப்பியம் முழுவதும் ஒரு விறுவிறுப்பான கதை போல அமைந்திருக்கிறது.

சோழர் குலக்கொடி:

இக் காப்பியத்தின் இடையே, பல இடங்களில் செங்கோன்மையின் சிறப்பு குறித்து கூறப்படுகிறது. ஆயினும், சிலம்பில் கூறப்படுவது போல அதிக அளவிலான செங்கோல் பதிவுகள் மணிமேகலையில் காணக் கிடைப்பதில்லை.

மணிமேகலை காப்பியத்தின் காதைகள் தொடங்கும் முன், காப்பியச் சுருக்கம்  ‘கதைபொதி பாட்டு’ என்ற தலைப்பில் (பதிகம்) வைக்கப்பட்டுள்ளது. அதில், சோழர்தம் குலப்பெருமையும் செங்கோன்மையும் தொடக்கத்திலேயே குறிப்பிடப்படுகின்றன.

சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அப் பெயரும், சம்பாபதி என்னும் பெயரும் உண்டான காரணம் கூறப்படுகிறது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி கடலுடன் கலக்குமிடமே காவிரிப்பூம்பட்டினம். அங்குதான் மணிமேகலையின் தொடக்கம் நிகழ்கிறது. எனவே, காவிரியைப் புகழும் வகையில் சாத்தனார் இப்பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.

செங்கோல் வழுவா சோழர்களின் குலக்கொடி என்று காவிரியை அவர் பாடுகிறார்.  ‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை’  என்றும் பாராட்டிப் புகழ்கிறார்.  இதோ அப்பாடல் வரிகள்:

அன்னை கேளிவ் வருந்தவ முதியோள்
நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை

    (பதிகம் - கதைபொதி பாட்டு- 20-25)

இந்திர விழா:

பழந்தமிழகத்தின் முக்கியமான பண்டிகை இந்திர விழா. தேவர் தலைவன் இந்திரனைப் போற்றி வழிபடும் வசந்தகாலப் பண்டிகை இது. மணிமேகலை காப்பியம், இந்திர விழா தொடர்பான அறிவிப்புடன் ஆரம்பமாகிறது. இந்திர விழாவின் தன்மைகள் இதில் கூறப்படுகின்றன.

அப்போது, வாளேந்திய வீரர்கள், தேர்ப் படையினர், குதிரைப் படையினர், யானைப் படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து வர, முதுகுடிப் பிறந்த வள்ளுவன் (முரசறைவோன்) வச்சிரக் கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே ஏற்றி, குறுந்தடி கொண்டு முரசறைந்து, இந்திர விழா நடைபெற இருப்பதனை புகார் நகர மக்களுக்கு அறிவிக்கிறான்.

முதலில், செல்வத் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்துகிறான். அடுத்து மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்கிறான். ஞாயிறு, திங்கள் முதலிய கோள்கள் தம் நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன் செங்கோல் ஆட்சி நடத்துக என்று  செங்கோலைப் புகழ்ந்து, அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவிக்கிறான். அப்பாடல் வரிகள்:

முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக

    (விழாவறை காதை - 1: 31-34)

இப்பாடல் வரிகளால், முரசறைவோர் நகரத்தையும், மழையையும், செங்கோலையும் முதலில் வாழ்த்திய பின்னரே செய்தி அறிவிப்பது மரபு என்னும் செய்தி உணர்த்தப்படுகிறது.

இளவரசனுக்கு எச்சரிக்கை:

மணிமேகலையின் இளமை அழகால் கவரப்பட்ட சோழர்குல இளவரசன் உதயகுமாரன் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை தருகிறான். அப்போது மணிமேகலா தெய்வம் அவன் முன் தோன்றி அவனை எச்சரிக்கிறது. அப்போது மன்னவரின் செங்கோல் சிறப்பைக் காக்குமாறு அறிவுறுத்துகிறது.

“மன்னர் மகனே! நான் மணிமேகலா தெய்வம். நான் சொல்வதைக் கேள். ஓர் அரசனின் செங்கோல் நிலைமாறினால் ஒன்பது  கோள்களும் தத்தம் நிலையிலிருந்து மாறிவிடும். மழை பெய்ய வேண்டிய பருவங்களில் முறையாகப் பெய்யாது பொய்த்துவிடும். மழைவளம் குன்றினால் இந்த உலகில் உயிர்களுக்கு வாழ வழி ஏது? மன்னுயிர்கள் வாடினால் மன்னனுக்கு அழகாகுமா?  மக்கள் உயிர் மன்னனின் உயிர் அல்லவா? எனவே உயிரினும் ஓம்பப்பட வேண்டிய ஒழுக்கத்திலிருந்து விலகாமல், மாதவியின் புதல்வியும் இளம்வயதில் துறவறம் பூண்டவளுமான மணிமேகலைமீது நீ கொண்ட மோகத்தைக் கொன்றுவிடு” என்கிறது மணிமேகலா தெய்வம். இதோ அப்பாடல்:

பொங்குமெல் லமளியிற் பொருந்தா திருந்தோன்
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே
கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிகென் றவன்வயி னுரைத்தபின்

    (துயில் எழுப்பிய காதை- 7: 6-14)

ஆயினும் மணிமேகலை மீது கொண்ட மோகத்தை உதயகுமாரன் விடுவதாயில்லை. அவனது தாபத் தீயினுக்கு நெய் ஊற்றுகிறாள் சித்ராபதி என்னும் பொதுமகளிர் நங்கை. அப்போது அவளிடம் மணிமேகலா தெய்வம் உரைத்த அறிவுரையைக் கூறுகிறான் உதயகுமாரன்.

பொன்போல விளங்குகின்ற திருமேனியையுடைய ஒருத்தி தோன்றி, மன்னரின் செங்கோன்மையை அறிவுறுத்தி,  தவநெறியிற் செல்லும் மணிமேகலையின்மீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்று கூறினாள் என்கிறான். அந்தப் பாடல் வரிகள்:

இடையிருள் யாமத் திருந்தேன் முன்னர்ப்
பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த
அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றனள்...

    (உதயகுமரன் அம்பலம் புக்க காதை- 18: 80-83)

மன்னனின் ராஜநீதி:

ஆயினும், மோகத்தால் குருடனான உதயகுமாரன் மணிமேகலையைப் பின்தொடர்ந்து செல்கிறான். ஆங்கே விஞ்சையன் (கந்தர்வன்) வித்யாதரனால் தவறுதலாகக் கொல்லப்படுகிறான். இச்செய்தியை மன்னரிடம் கூறுகிறார் மாதவர்.

அதனைக் கேட்டவுடன், சோழ நாட்டின் தளபதியைப் பார்த்து,  “சோழ இளவரசன் புரிந்த குற்றத்திற்காக நானே அவனுக்குத் தண்டனை அளித்திருக்க வேண்டும். எனக்குப் பதிலாக விஞ்சையன் அந்தச் செயலைப் புரிந்து விட்டான். அறம் புரிபவர்களின் தவத்தையும், கற்புடைய பெண்களின் கற்பையும் காப்பாற்ற வேண்டியது அரசனின் கடமை. கன்றின்மேல் தேரோட்டிக் கொன்றவன் தன் மகன் என்றும் பாராமல் தாய்ப்பசுவின் வேண்டுகோளை ஏற்றுத் தேர் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழனின் பரம்பரையில் வந்தவன் என்று கூறிக்கொள்ளும் பெருமையை இழந்து நிற்கிறேன்.  நடந்தது நடந்துவிட்டது. இந்தச் சேதியை வேற்று அரசர்கள் அறியும் முன்னர் உதயகுமாரனின் ஈமைக் கிரியைகளைச் செய்யுங்கள். அந்த இளந்துறவி மணிமேகலையை விசாரணைக்காகக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள்!“ என்றார் மன்னர்.

இதோ அந்தப் பாடல் வரிகள்:

மாதவர் நோன்பும் மடவார்க் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்:
மகனை முறைசெய்த மன்னவன் வழியோர்
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம்
ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக்
கணிகை மகளையுங் காவல் செய் கென்றனன்.  

    (சிறை செய்த காதை- 22: 208-214)

செங்குட்டுவனின் சிறப்பு:

காப்பியத்தின் இறுதியில் சேரன் செங்குட்டுவனைச் சந்திக்க தவமுனிவர் வேடத்தில் செல்கிறாள் மணிமேகலை. அப்போதைய காட்சி விளக்கத்தில் சேரனை செங்கோல் வேந்தன் என்று புகழ்கிறார் சாத்தனார்.

 “கடவுளர் கோயிலும் வேதிகையும் சாலையும் அழகியபூஞ் சோலையுங் வாவியும் நெருங்கி, நற்றவம் புரிந்த முனிவரும் மறைநூல் பயின்று அதனான் அமைந்த அறவோரும் அறநெறி கடைப்பிடித்த பண்டைநூற் பயிற்சி மிக்க புலவரும் எங்கும் இருந்து விளங்கிய,  புறமதிலின் புறத்துள்ள இருக்கையினையுடைய  செங்குட்டுவன் என்னும் செங்கோலரசனாகிய சேரர் பெருமான் வஞ்சிப்பூ சூடி வீற்றிருக்கிறான்… ” என்று வர்ணிக்கும் பாடல் வரிகள் இவை:

தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய…

    (வஞ்சி மாநகர் புக்க காதை- 26: 72-79)

                இளமை நிலையாமை, யாக்கை (உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் மணிமேகலை காப்பியம் அழுத்தமாகக் கூறுகிறது. பௌத்த சமயத்தின் ஆணிவேரான துறவையும் தொண்டையும் போற்றிப் பரவுகிறது இக்காப்பியம். என்றபோதும் மன்னனின் செங்கோல் உயர்வை காப்பியம் ஆங்காங்கே முன்வைப்பது, செங்கோல் வீழின் துறவும் நிலையாது என்பதால் தான்.

(தொடர்கிறது)

$$$

2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 5

Leave a comment