-சேக்கிழான்
‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ ஆகிய மூன்று அறவுரைகளை முன்னிறுத்தி, கற்பின் கனலி கண்ணகியின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோ அடிகள். இக்காப்பியத்தில் ஆங்காங்கே, செங்கோல் குறித்தும், நல்லாட்சி குறித்தும் இனிய செய்திகள் தொடர்ந்து பயின்று வருகின்றன. அவற்றை இங்கு காண்போம்…

பகுதி- 3: கம்பன் காட்டும் செங்கோன்மை
4. சிலம்பு காட்டும் நல்லாட்சி
தமிழின் முதன்மைக் காப்பியம் சிலப்பதிகாரம். சங்ககாலத்தை அடுத்து எழுந்த காப்பிய காலத்தில் (பொ.யு.பி. இரண்டாம் நூற்றாண்டு) இயற்றப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமே, மூவேந்தரின் கீழ் தமிழகத்தில் நிலவிய செம்மையான ஆட்சிக்குத் தெளிவான இலக்கியச் சான்றாக விளங்குகிறது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் இணைந்த பெருங்காப்பியம் இது.
சேர மன்னர் குலத்தில் பிறந்து சமண சமயத்தைத் தழுவிய இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட இக்காப்பியம், அக்காலத்தில் நிலவிய அனைத்து சமய நம்பிக்கைகளையும் வேறுபாடின்றிக் கூறிச் செல்கிறது. அது மட்டுமல்ல, தான் சார்ந்த சேர குலம் பற்றி மட்டும் பாடாமல், சோழர், பாண்டியர் குறித்தும் பாடுகிறார் இளங்கோ அடிகள்.
‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ ஆகிய மூன்று அறவுரைகளை முன்னிறுத்தி, கற்பின் கனலி கண்ணகியின் கதையைக் காப்பியமாக்கி இருக்கிறார் இளங்கோ அடிகள்.
இக்காப்பியம், புகார்க் காண்டம் (10 காதைகள்), மதுரைக் காண்டம் (13 காதைகள்), வஞ்சிக் காண்டம் (7 காதைகள்) என்ற மூன்று பெரும் பிரிவுகளையும், துணைப் பிரிவான 30 காதைகளையும் உடையது. இக்காப்பியத்தில் ஆங்காங்கே, செங்கோல் குறித்தும், நல்லாட்சி குறித்தும் இனிய செய்திகள் தொடர்ந்து பயின்று வருகின்றன. அவற்றை இங்கு காண்போம்…
புகார்க் காண்டத்தில்…
புகார்க் காண்டம், இந்திர விழவூரெடுத்த காதையில், வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் என்ற ஐந்து வகையான மன்றங்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகவும் அவற்றின் பயன்களையும் இளங்கோவடிகள் கூறுகிறார். அவற்றில் ஒன்று பாவை மன்றம்.
நாட்டை ஆளும் மன்னனின் செங்கோல் ஆட்சியில் சிறிது மாறுபாடு ஏற்பட்டாலும், அறம் கூறும் அவைகள் நீதிநெறி வழுவினாலும், அதை நாட்டிற்கு வெளிப்படுத்தி நன்னெறி காட்டும் வகையில், துன்பக் கண்ணீர் வடிக்கும் பாவை அமைந்த மன்றமே பாவை மன்றமாகும். இது குறித்த பாடல் இது:
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவை நின்றமூஉம் பாவை மன்றமும்… (புகார்க் காண்டம்- இந்திரவிழவூரெடுத்த காதை- 1.5: 135-138)
அடுத்து, புகார்க் காண்டம், கானல்வரி காதையில், இரு இடங்களில் சோழ மன்னரின் செங்கோல்ப் பெருமை பாடலின் இடையே போற்றப்படுகிறது.
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. (புகார்க் காண்டம்- கானல்வரி- 1.7:2-3)
இதன் பொருள்:
“மாலையால் அலங்கரிக்கப்பட்ட முழுமதி போன்ற அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழ மன்னன், தனது செங்கோல் ஆட்சியின் கீழ் கொணர்ந்த கங்கையுடன் கூடினாலும், காவிரிப் பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய், உன் பண்பு வாழ்க. அவ்வாறு வெறுப்பதை ஒழித்தது, உனது தலைவன் மீது நீ கொண்ட காதலால் விளைந்த கற்பு என அறிந்தேன். கயல் கண்கள் கொண்டவளே, நீ வாழ்க.
சிறப்புமிக்க மாலையால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழ மன்னன், நேர்மையிலிருந்து வளையாத தனது செங்கோல் ஆட்சியின் கீழுள்ள குமரியாற்றுடன் கூடினாலும், காவிரிப் பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய், உன் பண்பு வாழ்க! அவ்வாறு நீ பிணக்கு கொள்வதை ஒழித்தது, மகளிரின் சிறப்புமிக்க கற்பின் நிலை என அறிந்தேன். கயல் கண்கள் கொண்டவளே, நீ வாழ்க.”
-இப்பாடல்கள் சிலப்பதிகாரத்தில் கோவலனும் அவனது ஆசைநாயகி மாதவியும் கடற்கரைக்குச் செல்லும்பொழுது கோவலன் பாடும் கானல்வரிப் பாடல்களாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டுள்ளன. சோழ மன்னன் கங்கை, குமரி ஆறுகளுடன் கூடினாலும் காவிரி சோழனுடன் ஊடல் கொள்ள மாட்டாள்; அது அவளது செம்மையான கற்பின் அறிகுறி எனப் பொருள்படும்படி, பூடகமாக கோவலன் பாடுகிறான். இதுவே அக்காப்பியத்தின் திருப்புமுனைக் காட்சி. கோவலனின் இப்பாடலுக்கு மறுமொழியாக மாதவி பாடும் பாடலினால் கருத்து மாறுபாடு தோன்றவே, கோவலன் மாதவியைக் கைவிட்டு தனது மனைவி கண்ணகியிடமே திரும்பி விடுகிறான்.
இப்பாடல்களில், புகாரை ஆண்ட சோழ மன்னனின் செங்கோல் திறம் பாராட்டப்படுகிறது.
மதுரைக் காண்டத்தில்…
மதுரைக் காண்டம், புறஞ்சேரி யிறுத்த காதையில், கோவலன் கவுந்தி அடிகளிடம் கூறுகிறான்:
பகலில் கொடிய வெயிலில் கொதிக்கும் பரல் கல் நிறைந்த பாதையில் கண்ணகியின் கால்கள் நடக்க மாட்டா. ஆதலின், இனி நாம் இரவில் பயணம் செய்யலாம். பாண்டியனது ஆட்சியிலே இரவில் பயணம் செய்ய எந்த விதமான அச்சத்திற்கும் இடமில்லை; கண்டாரைக் கொல்லும் கரடியும் எந்தப் புற்றையும் அகழாது; வரிப் புலியும் மான் கூட்டத்தைக் கொல்ல நினையாது; முதலையும் பாம்பும் பேயும் இடியும் எவ்வுயிர்க்கும் இன்னல் விளைக்க மாட்டா. செங்கோல் மன்னனாம் பாண்டியன் காக்கும் நாடு இத்தகையது என்ற பெரும் புகழ் எங்கும் பரவியுள்ளது; ஆதலின் நாம் இரவுப் பயணமே மேற்கொள்ளலாம் என்று கோவலன் கூறுகிறான். அந்தப் பாடல் இதோ:
“கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவன் காக்கும் நாடென
எங்கணும் போக்கிய இசையோ பெரிதே”
(மதுரைக் காண்டம்- புறஞ்சேரியிறுத்த காதை 2.3: 5-10)
அடுத்து அடைக்கலக் காதையில், மதுரை நகரைச் சுற்றிப் பார்த்த கோவலன் கவுந்தி அடிகளிடம் வந்து, மதுரையின் சிறப்பையும் பாண்டியனின் செங்கோன்மையையும் புகழ்கிறான்:
“நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண்டு உருட்டும் கெளரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழி” (மதுரைக் காண்டம்- அடைக்கலக் காதை - 2.5: 15:1-10)
இப்பாடலில், செங்கோலின் நேர்மையையும், குடையின் குளிர்ச்சியையும், வேலின் மறத்தையும், மதுரையின் தீதற்ற சிறப்பையும், தென்னவனின் கொற்றத்தையும், மிக விரைவில் பாண்டியனது மாபெரும் பிழையால் இறக்கப் போகின்ற கோவலன் வாயாலேயே கூற வைத்துள்ளார் ஆசிரியர் இளங்கோ அடிகள். இங்கு ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்பதை குறிப்பாகக் காட்டுகிறார் அவர்.
அடுத்து கொளைக்களக் காதை. கோவலன், பழைய ஊழ்வினை உருத்தியதால் படுகொலை நிகழ்கிறது. பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்டுப் பிழைத்த பாண்டியனது செங்கோல் வளைந்து கொடுங்கோல் ஆனதால், வெட்டப்பட்டு வீழ்கிறான் கோவலன். அப்பாடல் இது:
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்
(மதுரைக் காண்டம் - கொலைக்களக் காதை - 2.6: 216, 217)
கொலைக்களக் காதையின் இறுதியில் பின்வரும் வெண்பா உள்ளது:
நண்ணும் இருவிளையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன்கோள்வன் காரணத்தான்- மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை.
(மதுரைக் காண்டம்- ஆய்ச்சியர் குரவை -2.7: இறுதிப் பாடல்)
கோவலனின் முன்வினையானது முதிர்ந்து வந்து ஊட்டியதால் அவன் வெட்டுண்டு தரையில் வீழ்ந்தான். ‘முன் செய்த தீவினையால் இந்நில உலகில் ஒரு காலத்தும் வளையாத பாண்டியனின் செங்கோல், கண்ணகியின் கணவனான கோவலனைக் காரணமாகக் கொண்டு வளைந்தது’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதாவது ஊழ்வினைப் பயன்தான் மன்னன் அறம் தவறியதற்குக் காரணம் என்கின்றன இந்தப் பாடலின் அடிகள்.
கனவிலும் வீழும் செங்கோல்:
பாண்டியன் மனைவியாகிய கோப்பெருந்தேவி, கோவலன் கொலையுண்ட முதல்நாள் இரவு தான் கண்ட தீய கனவை முதலில் தோழியிடம் கூறுகிறாள்:
“தோழி! மன்னனின் செங்கோலும் வெண்குடையும் நிலத்தில் வீழ்ந்தன. ஆராய்ச்சி மணி அடிக்கப்பட்டது. எட்டு திசைகளும் அதிர்ந்தன. கதிரவனை இருள் விழுங்கிற்று. இரவிலே வானவில் தோன்றியது. பகலில் விண்மீன்கள் விழுந்தன. இவ்வாறு கனாக் கண்டேன். இக்கனவை அரசருக்கு அறிவிப்பேன்” என்கிறாள். அந்தப் பாடல்:
“ஆங்குக்.......
குடையொடு கோல்வீழ, நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென் காண்எல்லா!
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா!
விடுங்கொடி வில்இர, வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா!'”
(மதுரைக் காண்டம் - வழக்குரை காதை- 2.10: 1-7)
பிறகு, தோழியிடம் கூறிய தனது கனவை கோப்பெருந்தேவி, தனது கணவனாம் பாண்டியன் நெடுஞ்செழியனிடமும் கூறுகிறாள்:
“செங்கோலும் வெண் குடையும்
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்,
நங் கோன்றன் கொற்ற வாயில்
மணி நடுங்க நடுங்கும் உள்ளம்,
இரவு வில்லிடும், பகல்மீன் விழும்,
இரு நான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவ தோர் துன்பம் உண்டு
மன்னவர்க் கியாம் உரைத்து மென”
(மதுரைக் காண்டம் - வழக்குரை காதை - 2.10: 9-12)
பாண்டியன் அவையில் ஆராயாத மன்னனால் தனது கணவன் கோவலன் கொலையுண்டான் என்று கேட்டவுடன், தீப்பிழம்பாகிறாள் கண்ணகி. அவள் பாண்டியன் அவைக்கு காளி போல வந்து, வழக்குரைத்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கிறாள்.
அப்போது கோவலனைக் கள்வன் என்கிறான் பாண்டியன். ‘கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று செங்கோலே’ என்றும் கூறுகிறான் பாண்டிய மன்னன்.
“கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என”
(மதுரைக் காண்டம் - வழக்குரை காதை- 2.10: 64, 65)
உடனே தனது சிலம்பின் மாணிக்கப் பரல்களைப் பற்றிக் கூறிய கண்ணகி, தன்னிடமிருந்த காற்சிலம்பையும், தன் கணவனிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அரசன் முன்வைத்த சிலம்பையும் அவையில் ஆவேசத்துடன் வீசி உடைக்கிறாள். அதன் உள்ளே இருந்த மணிக்கற்களில் ஒன்று அரசன் வாயில் தெறித்தது. உண்மை அறிந்த மன்னனின் வெண்கொற்றக் குடை சாய்ந்தது; அவன் கையிலிருந்த செங்கோல் வீழ்ந்தது.
அடுத்த நொடியே, “பொற்கொல்லன் சொல்லைக் கேட்டுத் தீர்ப்பு வழங்கிய யானோ அரசன்? யானே திருடன். மக்களைக் காக்கும் தென்புலப் பாண்டியர் குலம் என்னால் பிழை செய்துவிட்டது. என் ஆயுள் கெட்டொழியட்டும்” என்று சொல்லிக்கொண்டு மயங்கி விழுந்து உயிர் துறந்தான்.
பட்டத்தரசியான கோப்பெருந்தேவியும் நிலை குலைந்தாள்; ‘கணவனை இழந்தவருக்கு இவ்வுலகில் வேறொன்றும் இல்லை’ என்று சொல்லிக்கொண்டு கணவன் அடிகளைத் தொழுதவண்ணம் அவளும் விழுந்து உயிர் துறந்தாள். சிலப்பதிகாரத்தின் உச்சநிலைப் பாடல்கள் இவை:
கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்- தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலங் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.
(மதுரைக் காண்டம்- வழக்குரை காதை- 2.10: 71-81)
கணவனை இழந்த கண்ணகி, உரைத்த வஞ்சினத்தால், மூதூர் மாமதுரை எரிந்தது. காவல் தெய்வங்கள் வெளியேறி விட்டன. பாண்டியன் தனக்கு ஏற்பட்ட கொடும்பழியைத் தன் உயிர் கொடுத்து மாற்றினான்: வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கினான்; அவன் மனைவியும் அதே அரசுக் கட்டிலில் உடன்கட்டை ஏறினாள். பெண்ணொருத்திக்கு இழைத்த கொடுமையால் ஏற்பட்ட பழியை அவன் உயிர் கொடுத்துத் தீர்த்தான். நில மடந்தைக்கு இச் செய்தியை அறிவித்தான். இதோ அப்பாடல்:
ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
(மதுரைக் காண்டம்- அழற்படு காதை- 2.12: 1-5)
இதே காதையில், இன்னோரிடத்தில், மன்னனின் மறைவால் நாடு வீழ்ச்சியுற்றதை ஓர் உருவகமாக கூறுகிறார் காப்பிய ஆசிரியர்…
“செங்கதிர் போன்ற மேனி கொண்டவன். உலகை ஆள்பவன். முரசு, வெண்கொற்றக் குடை, விசிறும் கவரி, உயர்த்திப் பிடிக்கும் கொடி, அங்குசம் என்னும் செங்கோல், கூர்மையான வேல், கட்டும் கயிறு ஆகியவற்றைக் கையில் வைத்திருப்பவன்; மன்னர்களை வென்று, அவர்களின் நாட்டைக் கைப்பற்றி, செங்கோல் நடத்தி, கொடுமைகளைத் தண்டித்து, ஆட்சி நடத்தி, தன் புகழை வளர்த்துக்கொண்டு, உலகைக் காப்பாற்றும் நெடியோன் போல விளங்குபவன்; இத்தகைய அரச பூதம் மதுரையை விட்டு வெளியேறியது” என்கிறார். அப்பாடல்:
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்,
முரைசொடு வெண்குடை, கவரி, நெடுங் கொடி,
உரைசால் அங்குசம், வடி வேல், வடிகயிறு,
என இவை பிடித்த கையினன் ஆகி,
எண்-அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி,
மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி
கொடுந் தொழில் கடிந்து, கொற்றம் கொண்டு;
நடும் புகழ் வளர்த்து, நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும்-
(மதுரைக் காண்டம்- அழற்படு காதை - 2.12: 51-61)
பொற்கைப் பாண்டியன் கதை
கண்ணகியின் வஞ்சினத்தால் மதுரை மாநகர் எரிந்தபோது, மதுரை நகரின் பெருந்தலைவியாம் பாண்டியர்களின் குலமுதல்வியான அன்னை, கண்ணகியிடம் நேரில் வந்து, அவளை அமைதிப்படுத்துகிறாள். பாடல் வர்ணனைகளிலிருந்து அவள் மதுரையின் காவல் தெய்வம் மீனாட்சியே என அறிகிறோம்.
அவள், ருத்ரதேவியாக நிற்கும் கண்ணகியிடம், பாண்டியர் குலச் சிறப்பையும், கோவலனின் ஊழ்வினையையும் விளக்கமாகக் கூறுகிறாள். அதுகேட்டு கண்ணகியின் கோபம் தணிகிறது; மீதமுள்ள மதுரை தப்பிப் பிழைக்கிறது. அப்போது பாண்டியர் குலச் சிறப்பைக் கூறுகையில்ல், பொற்கைப் பாண்டியனின் கதையைக் கூறுகிறாள் மதுராபுரி மங்கை.
“கீரந்தை என்பவன் மனைவிக்கு உதவ இயலாத நிலையில் வெகுதொலைவில் இருந்தான். தனித்திருந்த அவன் மனைவியின் வீட்டை பாண்டிய மன்னன் பாதுகாத்து வந்தான். இரவுக் காவலனாக பாண்டிய மன்னனே மாறுவேடத்தில் அப்பகுதியைக் கண்காணித்து வந்தான்.
ஒருநாள் இரவு கீரந்தை திரும்பி வந்து மனைவியிடம் உரையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதனை வேறு யாரோ என ஐயுற்ற பாண்டியன் அவள் வீட்டுக் கதவைத் தட்டினான்; பிறகு உண்மை உணர்ந்தான். எனினும், கீரந்தை தன் மனைவியை ஐயுறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அருகிலுள்ள வீடுகளின் கதவுகளையும் பாண்டியன் தட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
மறுநாள் அனைவரும் அரசவையில் இதுகுறித்து முறையிட்டனர். ‘அரசனின் பாதுகாவல் வேலி தவிர வேறு பாதுகாவல் வேலி இல்லாமல் இருந்த எங்களுக்கு அரசனின் பாதுகாவல் வேலி பொய்த்துவிட்டதே’ என்று அவர்கள் முறையிட்டனர். அந்தச் சுடுசொல்லைக் கேட்ட பாண்டியன், கதவுகளைத் தட்டிய தன் கையைத் தானே வெட்டிக்கொண்டான்.
வச்சிரப் படை கொண்ட தேவேந்திரன் தலைமுடியில் வீர வளையல் அணிந்த தன் கைகளால் அடித்து அவன் மணிமகுடத்தை பாண்டியன் ஒருவன் உடைத்தான். அப்படிப்பட்ட பெருமை மிக்க கையை வெட்டிக் கொண்டான் மன்னன். அப்படிப்பட்ட வளையாத கோல் பாண்டியனின் செங்கோல்” என்கிறாள்- மதுராபுரி தெய்வம். இதோ அப்பாடல்:
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
“அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்” என மொழிந்து,
மன்றத்து இருத்திச் சென்றீர்: அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ?, என,
செவிச் சூட்டு ஆணியின், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான்
உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை:
(மதுரைக் காண்டம் - கட்டுரைக் காதை – 2.13: 42-53 )
முன்னதாக, “மறை ஓதும் ஒலி அல்லாமல் வேறு எந்த ஒலியும் காதில் கேட்டு அறியாதவன் பாண்டியன். பாண்டியன் அடியை மன்னர்கள் தொழுவார்களே அல்லாமல், குடிமக்கள் பழி தூற்றும் கோல் பாண்டியனிடம் இல்லை” என்கிறாள் மீனாள். இதோ அந்த வரிகள்:
மறைநா ஓசை அல்லது யாவதும்
மணிநா ஓசை கேட்டலும் இலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்
(மதுரைக் காண்டம்- கட்டுரைக் காதை 2.13: 31- 34)
வஞ்சிக் காண்டத்தில்…
பாண்டியன் மறைவைச் செவியுற்ற சேர மன்னன் செங்குட்டுவன் இரங்கிக் கூறிய வரிகள் மனிதம் மிகுந்தவை. தனது எதிரி நாட்டின் மன்னன் என்றபோதும் பாண்டியனின் வீழ்ச்சி அவனை வருந்தச் செய்கிறது. பாண்டியனுக்கு நேர்ந்த தீங்கினைக் கேட்ட சேரன் வருந்திக் கூறலானான்:
“பாண்டியன் செங்கோல் தவறியது என் போன்ற மன்னர் செவிக்கு எட்டுவதற்கு முன்னர் பாண்டியன் உயிர் சென்றுவிட்டது. அந்த உயிர் அவனது வளைந்த கோலை நிமிர்த்தி நிறுத்திச் செங்கோலாக மாற்றிவிட்டது….
மழை பொழியாவிட்டால் அச்சம். மக்களுக்குத் துன்பம் நேர்ந்தால் அச்சம். இப்படி அஞ்சிக்கொண்டு மக்களைக் காக்கும் பொறுப்புள்ள அரசர் குடியில் பிறத்தலானது, துன்பமே அல்லாமல் தொழும் தகைமை உடையது அன்று”
– என்று சீத்தலைச் சாத்தனாரிடம் சேரன் கூறுகிறான். அதாவது அரசக் குடியில் பிறப்பது, மகிழ்ச்சிக்குரியதல்ல, ஒவ்வொரு நாளும் மக்கள் என்ன சொல்வார்களோ என்று அஞ்சி வாழ்வதற்கானது என்கிறான். இதுவே அக்கால முடியாட்சியின் உயர்வு; இக்கால மக்களாட்சியிலும் காண இயலாச் சிறப்பு. இதோ அந்த அற்புதமான பாடல்:
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்:
‘எம்மோரன்ன வேந்தற்கு’ உற்ற
செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
‘உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு’ என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது:
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;
பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்’ என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-
(வஞ்சிக் காண்டம்- காட்சிக் காதை- 3.2: 93- 106)
பிறகு கற்புடைத் தெய்வம் கண்ணகியின் வரலாறு அறிந்த சேரன் செங்குட்டுவன், அவள் விண்ணேகிய இடத்தில் கோயில் அமைக்க இமயம் சென்று கல்லெடுத்து வருவேன் என்று அறிவிக்கிறான். ஏற்கனவே தன்னுடன் பகை கொண்ட வட பகுதி மன்னர்களை வென்று அவர்கள் தலையில் ஏற்றி கண்ணகி சிலைக்கு கல் சுமந்து கொண்டுவரச் செய்வேன். அவ்வாறு செய்யாது போவேனெனில், என்னை கொடுங்கோலன் என்று மக்கள் தூற்றட்டும் என்கிறான் சேர மன்னன். அந்தப் பாடல் இது:
வடதிசை மருங்கின் மன்னர்த முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது
வறிது மீளுமென் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடிநடுக் குறூஉங் கோலே னாகுக
(வஞ்சிக் காண்டம்- கால்கோள் காதை - 3.3: 13-18)
அதன்படி, இமயம் சென்று வென்று, கல்லெடுத்து வந்து கண்ணகிக்குச் சிலையும் கோட்டமும் அமைக்கிறான் சேர மன்னன். முன்னதாக, சேரன் அவையில் மாடலன் என்னும் நல்லமைச்சன், மன்னனின் போர்வெறியைத் தனிக்கும் வகையில் அறிவுரை கூறுகிறான். அதை ஏற்று, பிடிபட்ட பகை மன்னர்களை விடுவிக்கிறான் சேரன். இங்கு நல்லரசனின் இயல்பாக, மன்னிப்பையும் போரற்ற அரசையும் காட்டுகிறார் இளங்கோ அடிகள்.
அப்போது, கண்ணகி வாழ்வின் மூலமாகக் கிடைத்த மூன்று படிப்பினைகளை காப்பிய ஆசிரியர் கூறிச் செல்கிறார்:
அரசர் செங்கோல் வழுவாது ஆண்டால் தான் பெண்களின் கற்பு சிறக்கும் என்பதைச் சோழன் வாயிலாக அறிவித்தாள் கண்ணகி.
செங்கோல் வழுவினால் நேரிய மன்னர்கள் உயிர் வாழ மாட்டார்கள் என்பதைப் பாண்டியன் வாயிலாகத் தெரிவித்தாள் கண்ணகி.
மன்னர்கள் தாம் சொன்ன சூளுரையை முடித்தாலன்றிச் சினம் நீங்கார் – முடித்தே தீர்வார் என்பதை, வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தியவளும் கண்ணகியே.
-என்கிறார் இளங்கோ அடிகள். இதோ அந்தப் பாடல்:
“அருந்திறல் அரசர் முறை செயின் அல்லது
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து,
செங்கோல் வளைய உயிர் வாழாமை
தென்புலம் காவல் மன்னவற்கு அளித்து,
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
வடதிசை மருங்கின் மன்னவர் அறியக்
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து”
(வஞ்சிக் காண்டம்- நடுகல் காதை - 3.5: 207-217)
இவ்வாறாக, சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தரின் செங்கோல் சிறப்பை தனது காப்பியம் முழுவதிலும் தூவி செல்கிறார் இளங்கோ அடிகள். மன்னரின் அணிகலன் செங்கோல் ஒன்றே என்பது தான் சிலம்பு காட்டும் இலக்கண விளக்கம்.
$$$
2 thoughts on “தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 4”