மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில் ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும், முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில் 'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது.