-இசைக்கவி ரமணன், பத்மன், கவிஞர் குழலேந்தி
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, கவிஞர்கள் இசைக்கவி ரமணன், பத்மன், குழலேந்தி ஆகியோரின் மூன்று கவிதைகள் இங்கே வழங்கப்படுகின்றன...

1. ராம ராஜ்ஜியம் வருகவே!
-இசைக்கவி ரமணன்
வான் இன்று புதிய வண்ணம் சூடிக்கொண்டது
வார்த்தைக்குள் சத்தியமே பூத்து நின்றது
வாசலில் வசந்த ராகம் வந்து நின்றது
வாழ்க்கையின்று வாழ்வுபெற்று வாழ்த்துகின்றது
ராம ராஜ்ஜியம் வருகவே! எங்கள்
தேசம் நிம்மதி பெறுகவே!
அறம் வளர்ப்பதே கடமை என்று கொண்டனம்
அன்னை பூமி எங்கள் கோயில் என்றெழுந்தனம்
கருமம் என்னும் துயர மாயக் கட்டவிழ்ந்ததே
கல்குழைந்த கமலப் பாதம் ஊர் நுழைந்ததே!
ராம ராஜ்ஜியம் வருகவே! எங்கள்
தேசம் நிம்மதி பெறுகவே!
அச்சம் என்னும் அவலம் நீங்கி ஆண்மை வந்தது
ஆணவம் போய், பெண்மையென்னும் அன்பு நேர்ந்தது
மிச்சமின்றி மீதமின்றி மனம் நெகிழ்ந்தது
மிதிலைமகள் நுழைந்த தீயில் மிடி தொலைந்தது!
ராம ராஜ்ஜியம் வருகவே! எங்கள்
தேசம் நிம்மதி பெறுகவே!
திவலயெல்லாம் சேர்ந்து ஞான வெள்ளமானது
தெய்வமென்னும் திரிநுழைந்து தீபமானது
விண்ணும் மண்ணும் அனுமன் நெஞ்சம் விரிந்து கொண்டது
கோசலனின் வில்லெழுந்து குடைவிரித்தது!
ராம ராஜ்ஜியம் வருகவே! எங்கள்
தேசம் நிம்மதி பெறுகவே!
$$$
2. எங்கள் ராமர் ஆலயம்
-பத்மன்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
கண்டோம் கண்டோம் ஆலயம்…
கரசேவகர் தந்த ஆலயம்!
வென்றோம் வென்றோம் ஆணவம்…
வீண்பெருமை கொண்டோர் ஆணவம்!
ஆண்டுகள் ஐநூறு ஆனதே
அண்ணலின் ஆலயம் மீட்டிட
ஆயிரம் உயிர்பலி ஆனதே
அன்னியன் பிடியை அகற்றிட
அடிமைச் சங்கிலி அறுந்தாலும்
ஆலயம் இருந்தது சிறையினிலே
பொறுமை என்பது பயமல்ல
பொங்கிடும் சீற்றத்தின் எல்லையென்றே
கண்டோம் கண்டோம் ஆலயம்
கரசேவகர் தந்த ஆலயம்!
அன்பைப் பொழிவதும் ராமர்தான்
அம்புகள் பொழிவதும் ராமர்தான்
நண்பருக் கெல்லாம் அன்பரவர்
வம்பர்கள் முன்னே வில்லெடுப்பார்
குகனை அணைத்த சோதரராம்
சுக்ரீவனுக் குதவிய சுந்தரராம்
வீடணனைக் காத்த வீரியராம்
ராவணனை வதைத்த ரகுபதிக்கே
கண்டோம் கண்டோம் ஆலயம்
கரசேவகர் தந்த ஆலயம்!
உலகம் போற்றும் உத்தமராம்
உத்தமி சீதையின் உயிரவராம்
அனுமன் ஏத்தும் ஆரியராம்
அற்புதப் பண்புச் சூரியராம்
சிவனைத் துதித்த பெருமகனாம்
சீலங்கள் மிகுந்த திருமகனாம்
உண்மையின் மறுபெயர் ராமனன்றோ
உண்மை இறுதியில் வெல்லுமென்றே
கண்டோம் கண்டோம் ஆலயம்
கரசேவகர் தந்த ஆலயம்!
$$$
ஸ்ரீராமனின் மண்!
-கவிஞர் குழலேந்தி
இந்த மண்ணில் ஸ்ரீராமன் நடந்தான்.
இந்தத் தமிழ் மண்ணில் தான்
இதிகாச ராமன் நடந்தான்.
பிரிய மனைவியைத் தேடி அலைகையில்
அவன் சிந்திய கண்ணீர்த் துளிகளால்
ஈரமானது இந்த மண்.
அரக்க வேந்தனால் வீழ்த்தப்பட்ட
பறவைராஜனுக்கு சிரார்த்தம் செய்ய
அவன் நீர் தெளித்தது இந்த மண்ணில்தான்.
குரங்கரசனின் மனைவியை மீட்க,
அவன் தொடுத்த அம்பால்
குருதியிலாடியதும் இந்த மண்தான்.
சிரஞ்சீவி அனுமனின் அற்புத சாகசங்கள்
இந்த மண்ணில்தான்
பல இடங்களில் நிகழ்ந்தன.
தசரத ராமனின் உத்தரவுக்குப் பணிந்து
கடலரசன் அடங்கிய அதிசயம்
நிகழ்ந்ததும் இதே மண்ணில் தான்.
இந்த மண்ணில்தான்
அரக்க வேந்தனின் இளையவன்
ராகவனிடம் சரணாகதி அடைந்தான்.
இந்த மண்ணிலிருந்து தான்
அரக்க வேந்தனுக்கு
ரகுகுல திலகன் தூது அனுப்பினான்.
இந்த மண்ணிலிருந்து தான்
இலங்கைத் தீவுக்கு கடல் மீது
குரங்குப்படை பாலம் அமைத்தது.
இந்த மண்ணில்தான்
சேது பந்தன சேவை செய்த
அணிலை அவன் தடவிக் கொடுத்தான்.
இந்த மண்ணில்தான்
சீதை பிடித்து வைத்த
சிவலிங்கம் வீற்றிருக்கிறது.
இந்த மண்ணில்தான்
அசுரக் கொலைப் பாவம் நீங்க
கோசலைமைந்தன் யாகம் வளர்த்தான்.
இந்த மண்ணிலிருந்துதான்
புஷ்பக விமானத்தில்
அயோத்தி திரும்பினான் சீதாராமன்.
ராமனின் நினைவுகளால் பண்பட்ட மண்-
ராமன் புகழ்பாடும் ஆன்மிக மண்-
ராமனுக்கு ஆதாரமான தெய்வீக மண் இது.
நெற்றியில் திருமண் சூடும்போதெல்லாம்
இந்த நினைவு உடன் இருக்கட்டும்!
ஸ்ரீராமனின் வில் நமக்கு
என்றும் துணை நிற்கட்டும்!
$$$