-திருநின்றவூர் ரவிகுமார்

ஆ. வேத ரிஷியின் வேத விளக்கம்
ஆ. 4. விடுதலைக்கு உத்தரவாதம்
- காண்க: அத்யாயம்- 8
‘ஆர்யா’ தொடங்கப்பட்ட நேரமும் முதல் உலகப்போர் தொடங்கிய நேரமும் ஏறத்தாழ ஒரே நேரத்தில். இதை எதிர்பாராத நிகழ்வாகக் கருத முடியாது. உணர்வு தளத்தில் அழிவு சக்தியான போருக்கு எதிராக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஆன்மிக சக்தியின் பிரதிநிதியாக ‘ஆர்யா’ வெளிப்பட்டது.
மிர்ரா பாண்டிச்சேரியில் இருந்து பிரான்ஸுக்குப் போன பிறகு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவர் பாரிஸ் மாநகரிலிருந்து நாட்டின் தென்பகுதியில் இருக்கும் லூனெல் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு ஆறு மாதங்கள் இருந்தார். உடல்நிலை சரியில்லாத போதிலும் தனது யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்தார். அமானுஷ்ய உலக சக்திகளைப் பயன்படுத்தி, தன்னிடம் வந்தவர்களுக்கு உதவினார். அரவிந்தருடன் கடிதத் தொடர்பிலும் இருந்தார்.
அப்போது அவருக்கு அரவிந்தர் எழுதிய கடிதத்தில், “விண்ணுலகை நான் வென்று விட்டேன். மண்ணுலகில் அந்த வெற்றியை நிறுவ வேண்டியுள்ளது. அகவுலகிற்கும் புறவுலகிற்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பௌதீக உலகில் அழிவு சக்திகளின் வலிமை அதிகமாகவும் அதன் தாக்குதல்கள் தீவிரமாகவும் இருக்கின்றன. ஆன்மிக சக்திகளுக்கு வல்லமையும் உள்ளார்ந்த ஆனந்தமும் இல்லாவிட்டால் தாக்குதல்களை எதிர்கொள்வது பெரும் சிரமமாக இருக்கும். தீர்க்கமாகப் பார்க்கும் போது இது என் பணியை தாமதப்படுத்தும் செயலாகத் தெரியலாம். சாதாரணமான யோக முயற்சிகள் ஒரு முனையில் கவனத்தைக் குவிக்கும். ஆனால் நான் மேற்கொண்டுள்ளது பல முனை செயலாக்கம் கொண்டது. எனவே நான் பொறுமையின்மையையும் அதிருப்தியையும் தூரம் தள்ளி வைத்து விட்டேன்” என்று எழுதியுள்ளார்.
அதே வேளையில் பாண்டிச்சேரிக்கு பலர் வந்து அரவிந்தரைச் சந்தித்தனர். பரோடாவில் அவருடன் விடுதலைப் போராட்டப் பணியில் ஈடுபட்ட காசிராவ் ஜாதவ் பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தரைச் சந்தித்தார். 1913 இல் பள்ளி மாணவனாக அரவிந்தருக்கு அறிமுகமான அமுதன் 1919இல் அவருடைய சீடராகி அவருடனே தங்கி விட்டார். அரவிந்தர் அவருக்கு ‘அமிர்தா’ என்று பெயரிட்டார். பின்னாளில் அமிர்தா அன்னையின் ஆப்தராகி ஆசிரமப் பணிகளில் பெரும் பங்காற்றினார்.
டி.வி.கபாலி சாஸ்திரி என்ற பேரறிஞர் ‘ஆர்யா’ பத்திரிகையைப் படித்து, அதனால் அரவிந்தர்பால் ஈர்க்கப்பட்டார். 1917இல் அவர் பாண்டிச்சேரி வந்து அரவிந்தரை நேரில் சந்தித்தார். வேதம், ஆயுர்வேத மருத்துவம், ஜோதிடம், தாந்திரிகம் என்று பல துறைகளில் வல்லவராகவும் தத்துவக் கவிஞராகவும் விளங்கிய கபாலி சாஸ்திரியின் சந்திப்பு முக்கியம் வாய்ந்தது. அரவிந்தரைச் சந்தித்த பிறகு அவர் எழுதிய பல தத்துவ விளக்க நூல்கள் ஆன்மிக அன்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கின. அவர் மகரிஷி ரமணரின் சீடராகவும் இருந்தவர்.

மிர்ரா ஆறு மாதம் கழித்து பாரிஸ் மாநகருக்குத் திரும்பிய போது, ரிச்சர்டு பணி நிமித்தமாக ஜப்பான் போக வேண்டியிருந்தது. 1916 இல் அவர்கள் ஜப்பான் போனார்கள். நான்கு ஆண்டுகள் அங்கு இருந்தனர். அந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு மிர்ரா தன்னை தயார்படுத்திக் கொண்ட காலமாகவே கருத வேண்டியுள்ளது. அங்கிருந்தபோது நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். மிர்ராவைப் பற்றித் தெரிந்து கொண்ட தாகூர், தனது சாந்திநிகேதனை பொறுப்பேற்று நடத்தும்படி அழைத்தார்.
அன்னி பெசண்ட் அம்மையாரின் செயலாளராக இருந்த சிவராவ் 1917இல் பாண்டிச்சேரி வந்து அரவிந்தரைச் சந்தித்தார். அரவிந்தரின் அமைதியும் அவரது தெய்வீகத் தன்மையும் தன்னிடம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் பின்னாளில் குறிப்பிட்டார்.
1918இல் மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அதன்மூலம் இந்தியர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதாகச் சொன்னது. அன்னிபெசன்ட் நடத்திய ஹோம் ரூல் இயக்கத்தின் சார்பாக ‘நியூ இந்தியா’ என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.
அந்த பத்திரிகையில் 1918 ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஒரு கடிதம் வெளியானது. அதில், “சீனப் புதிரை கூட சற்று முயற்சித்தால் கண்டுபிடித்து விடலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசின் இந்த அறிவிப்பில் (மாண்டேகு – செம்ஸ்போர்டு திட்டம்) இந்தியர்களுக்கு என்ன அதிகாரம் பகிரப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக அரசிடம் மேலும் அதிகாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஆபத்தானது. இதை எதிர்த்துப் போராட வேண்டும். போராட்டத்தை தள்ளிப் போடலாம், ஆனால் தவிர்க்க முடியாது” என்றிருந்தது. அதை எழுதியவர் அரவிந்தர்தான். ஆனால் ‘ஒரு இந்திய தேசியவாதி’ என்ற பெயரில் அது வெளியானது.
வரும்கால நிகழ்வுகளைப் பற்றி அரவிந்தருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. விரைவில் இந்தியா விடுதலை அடையும் என்பதும், அதன் பிறகு செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் அவருக்கு தெளிவு இருந்தது. அதை அம்பாலால் புராணியோடு அவர் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
அம்பாலாலின் அண்ணன் சோட்டாலால் புராணி தீவிர தேசபக்தர். பரோடாவில் அரவிந்தர் இருந்தபோது அவருடன் பழகியவர். அவரது வழிகாட்டுதலின்படி புரட்சிகரப் பாதையில் பயணித்தவர். அம்பாலாலும் அவரது அண்ணன் வழியிலேயே தீவிர தேசியவாதியாகச் செயல்பட்டார். பின்னர் அரவிந்தரின் சீடரானார். அரவிந்தரின் வாழ்க்கை சரிதத்தை எழுதியுள்ளார். அரவிந்தருடன் அவர் நிகழ்த்திய உரையாடல் அதில் பதிவாகியுள்ளது. அந்த சுவாரஸ்யமான பகுதியைப் பார்ப்போம்….
அம்பாலால் புராணி: யோக சாதனைகள் எல்லாம் சரிதான். ஆனால் இந்தியா அடிமைப்பட்டு கிடக்கும் போது அதில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது.
அரவிந்தர்: இந்தியா விடுதலை பெறுவதற்காக இனி புரட்சிகரப் பாதையில் போராட வேண்டியதில்லை.
புராணி: அவ்வாறு இல்லாவிட்டால் பிரிட்டிஷ் அரசை எப்படி வெளியேற்றுவது?
அரவிந்தர்: அது வேறொரு கேள்வி. புரட்சிகரச் செயல்பாடுகள் இல்லாமலேயே இந்தியா விடுதலை அடைய முடியும் என்றால், நாம் ஏன் வன்முறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்? நாம் யோகத்தில் - ஆன்மிகப் பயிற்சிகளில் - கவனத்தைச் செலுத்துவது சரியானதாக இருக்கும்.
புராணி: இந்தியாவின் உடம்பில் ஓடுவது யோகமென்ற ரத்தம். இந்தியா விடுதலை பெற்று விட்டால் ஆயிரக் கணக்கானோர் யோக மார்க்கத்தில் வருவார்கள். ஆனால் அடிமைகளின் பேச்சை உலகம் கேட்குமா? அவர்களது ஆன்மிகத்தை மதிக்குமா?
அரவிந்தர்: இந்தியா விடுதலை அடைய முடிவெடுத்து விட்டது. அதற்காக தலைவர்களும் தொண்டர்களும் பணியாற்ற வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் யோகத்திற்கான அழைப்பு இல்லை. உனக்கு அந்த அழைப்பு வந்துள்ளபோது, நீ ஏன் அதில் கவனம் செலுத்தக் கூடாது?
புராணி: யோக சாதனையின் முக்கியத்துவம் குறித்து எனக்கு அறிவுபூர்வமாகப் புரிகிறது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. ஆனால் இந்திய விடுதலைக்காகப் பாடுபட வேண்டும் என்ற உந்துதல் மிகத் தீவிரமாக எனக்குள் எழுகிறது. அதனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக என்னால் நிம்மதியாக தூங்கவும் கூட முடியவில்லை. என் கவனம் முழுக்கவும் சுதந்திரம் பெறுவதிலேயே இருக்கிறது. அதை அடைந்தால் தான் என்னால் தூங்கவே முடியும்.
இதைக் கேட்டதும் அரவிந்தர் இரண்டு மூன்று நிமிடங்கள் அமைதியாக இருந்தார். அது நீண்ட காலம் போலத் தெரிந்தது. கனத்த அமைதிக்குப் பிறகு அவர், “இந்தியா விடுதலை அடைவது நிச்சயம் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தால், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
யார் அந்த உத்தரவாதத்தைக் கொடுக்க முடியும்? என்று சந்தேகத்துடன், சவாலாகக் கேட்டேன்.
மீண்டும் அவர் இரண்டு மூன்று நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பிறகு என்னைப் பார்த்தார். “நான் உனக்கு அந்த உத்தரவாதத்தைக் கொடுத்தால் ” என்றார்.
நான் அந்தக் கேள்வியை உள்வாங்க சில கணங்களானது. பிறகு, “நீங்கள் அந்த உத்தரவாதம் கொடுத்தால், நான் அதை ஏற்றுக் கொள்வேன்” என்றேன்.
“இந்தியா விடுதலை அடைவது உறுதி என்ற உத்தரவாதத்தை நான் உனக்குக் கொடுக்கிறேன்” என்றார்.
1918 டிசம்பர் 17 ஆம் தேதி, பாண்டிச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அரவிந்தரின் அறையில் இருந்த அவரது மனைவி மிருணாளினியின் சட்டமிட்ட படம் கீழே விழுந்து உடைந்தது. அதே நாளில் கல்கத்தாவில் காய்ச்சலில் இருந்த அவர் இயற்கை எய்தினார். அவர் பாண்டிச்சேரிக்கு வருவதாக இருந்தார். பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. ஆனால் இறைவன் அவரை வேறொரு பயணத்தை மேற்கொள்ள வைத்து விட்டான்.
அரவிந்தர் தன் மாமனார் பூபால சந்திர போஸூக்கு, 1919 பிப்ரவரி 17 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், மனைவியின் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்படுகிறது; அவரது மறைவு அளித்த வேதனை புலனாகிறது. இறைச்சிந்தனையை ஏற்கும் அவரது மனப்பக்குவம் தெளிவாகத் தெரிகிறது. மனைவியின் மறைவுடன் அரவிந்தரின் பூர்வாசிரமத் தொடர்பு அற்றுப் போனது.
முதல் உலகப்போர் ஓய்ந்து அமைதி திரும்பத் தொடங்கியது. ஆனாலும் மிர்ரா ஜப்பானிலிருந்து கிளம்பவில்லை. 1920 இல் தான் அவர் இந்தியாவுக்கு வர முடிவு எடுத்தார். அது அவரது இரண்டாவது வருகையாக, ஆனால் நிரந்தரமாக வருவதாக அமைந்தது. அவரது வருகைக்குப் பிறகு அரவிந்தரின் பணி வேறொரு கட்டத்திற்கு நகர்ந்தது.
தொடர்கிறது…
$$$