புதுவையில் பூத்த யோக மலர்- 8

-திருநின்றவூர் ரவிகுமார்

ஆ. வேத ரிஷியின் வேத விளக்கம் 

 ஆ. 3.  ரிஷி மொழி அல்லது அரவிந்த உபநிடதங்கள்

‘ஆர்யா’ பத்திரிகை தொடங்கிய நான்கைந்து மாதங்களில் ஐரோப்பாவில் போர் மேகங்கள் கவிழத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவத்தில் போர்க்காலப் பணிக்காக காத்திருப்போர் பட்டியலில் (ரிசர்வ் லிஸ்ட்) ரிச்சர்ட் பெயர் இருந்ததால் அவர் பிரான்ஸுக்குப் போக வேண்டியிருந்தது.  ‘ஆர்யா’ பத்திரிகை மற்றும் ஆன்மிக அன்பர்கள் கூட்டத்தில் மிர்ரா ஈடுபாடோடு இருந்த போதிலும், வேறு நிர்ப்பந்தங்களின் காரணமாக அவரும் ரிச்சர்டுடன் பிரான்ஸுக்குச் செல்ல  வேண்டியதாயிற்று. 1915 பிப்ரவரி மாத இறுதியில் இருவரும் பாண்டிச்சேரியை விட்டு சென்றார்கள். எனவே பத்திரிகை நடத்தும் முழு பொறுப்பும் அரவிந்தர் மீதானது.

‘ஆர்யா’ மாத இதழ் தொடர்ந்து வெளிவந்தது; ஒரு மாதம் கூட நிற்காமல் வெளிவந்தது. ஆனால் பிரெஞ்சு பதிப்பான  ‘ரிவ்யூ’ நிறுத்தப்பட்டது.  ‘ஆர்யா’வில் வெளிவந்த அரவிந்தரின் முக்கிய படைப்புகளை பார்ப்போம்.

  • தெய்வீக வாழ்க்கை  –  ஆகஸ்ட் 1914 – 1919 ஜனவரி
  • ஒருங்கிணைந்த யோகம் – ஆகஸ்ட் 1914 – 1921 ஜனவரி
  • வேதங்களின் ரகசியம் – ஆகஸ்ட் 1914 – 1916 ஜூலை
  • ஈஷா உபநிஷதம் – ஆகஸ்ட் 1914 – 1915 மே
  • கேனோபநிஷதம் – ஜூன் 1915 –  1916 ஜூலை
  • மனிதகுல ஒற்றுமை – செப்டம்பர் 1915 -1918 ஜூலை
  • கீதை விளக்கம் – ஆகஸ்ட் 1916 – 1920 ஜூலை
  • மனிதகுல சுழற்சி வட்டம் – ஆகஸ்ட் 1916 – 1918 ஜூலை
  • கவிதையின் எதிர்காலம் – டிசம்பர் 1917 – 1920 ஜூலை
  • இந்தியாவின் புத்தெழுச்சி – 1918 ஆகஸ்ட் – நவம்பர்
  • இந்திய நாகரிகம் – டிசம்பர் 1918 – 1919 நவம்பர்
  • இந்திய பண்பாட்டின் மீது விமர்சனம் – 1919  பிப்ரவரி – ஜூலை
  • இந்திய பண்பாட்டிற்கு ஆதரவாக – ஆகஸ்ட் 1919 – 1921 ஜனவரி
“இரண்டு விஷயங்களுக்கு இடையே உள்ள உறவு பற்றித்தான் எல்லா தத்துவங்களும் விவாதிக்கின்றன. ஒன்று, இருப்பின் அடிப்படை உண்மை குறித்து. மற்றது, அந்த உண்மை நம் அனுபவத்திற்காக வெளிப்படும் வடிவம் . ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் நமக்குத் தெரிய வரும் அடிப்படை உண்மையானது ஆன்மா பற்றியது. மற்றது,  வாழ்க்கையைப் பற்றியது. வடிவம், அதை உருவாக்கும் சக்தி, கருத்து மற்றும் செயல் என்பதே வாழ்க்கையைப் பற்றியதாகும்.

இங்குதான் மேற்கத்தியர்களும் கிழக்கத்தியர்களும் வேறுபடுகிறார்கள். மேற்கில், வாழ்வைப் பற்றிய உண்மையை வலியுறுத்துகின்றனர்; ஆன்மாவைப் பற்றிய உண்மையை மறுக்கின்றனர். அது தெரிந்துகொள்ள முடியாதது, தேவையற்றது என்று புறந்தள்ளினார்கள். இப்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகின்றனர்.

கிழக்கில் இருப்பவர்களோ - குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்கள் - இருப்பே ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்துவதுடன், வாழ்க்கையையும் அதன் மேம்பாட்டையும் வசதிகளையும் புறந்தள்ளி வைத்தனர். இந்நிலையும் இப்போது மாறி வருகிறது.

மேற்கு இப்போது ஆன்ம உண்மையைப் பற்றி விழிப்புணர்வு பெற்று வருகின்றது. ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலைப் பயிலத் தொடங்கி உள்ளனர். அதேபோல கிழக்கைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கை பற்றிய உண்மை குறித்து விழிப்புணர்வு பெறுவதோடு தங்களது ஆன்மிக அறிவை அத்துடன் இணைத்து புதுமையை செய்யத் தொடங்கியுள்ளனர்” 

– என்கிறார் அரவிந்தர்.

ஆர்யா

கிழக்கிற்கும் மேற்கிற்குமான முரண்பாடு செயற்கையானது என்பது அரவிந்தரின் நிலைப்பாடு.  “இருப்பின் அடிப்படை உண்மை ஆன்மாதான். அதன் வெளிப்பாடு தான் வாழ்க்கையும், அதன் பல்வேறு வடிவங்களும். வடிவங்களின் வேறுபாடுகள் நம்மை உண்மையைத் தெரிந்துகொள்ள முடியாதபடி ஏமாற்றுகின்றன. மனிதன் தன் ஆன்ம பலத்தையும் தரத்தையும் அதிகரிக்கும் போது, வடிவத்திற்கும் அதற்குள் உறைந்திருக்கும் உண்மைக்குமான வேறுபாடு அகலுகிறது.  தெய்வீகத்தில் முழுமையாக வளர்வதே மனித பரிணாமத்தின் உண்மையான அர்த்தம். இதுவே ஆர்யா தத்துவத்தின் அடித்தளம்”  என்று அவர் எழுதியுள்ளார்.

ஆச்சாரவாதிகள் எழுப்பியுள்ள புகை மூட்டத்தில் வேத உண்மைகள் மறைந்து விட்டன. புத்திசாலிகள் அந்த புகை மூட்டத்தில் உண்மையைத் தேடி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளனர். யோக சாதனைகள் மூலம் அரவிந்தர் அந்த வேதக் கருத்துக்களைக் கண்டெடுத்து, புதிய கண்ணோட்டத்தில் – உண்மையில் அதுதான் சரியான கண்ணோட்டம் – வெளிப்படுத்த முனைந்தார்.

“வேதங்களின் ரகசியத்தை நாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும் அது எப்போதும் மறைபொருளாகவே இருக்கும்” என்று அவர் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை மேலும் விளக்குவதற்காக அவர் எடுத்துக் கொண்டதே ஈஷோபநிஷதம் மற்றும் கேனோபநிஷதங்களின் விளக்கவுரைகள்.

ஆன்ம உண்மையை வாழ்வியலில் பொருத்திப் பார்ப்பது கீதை. செயல், செயல்படும் விதம், அதனால் வெளிப்படும் ஆன்மஞானம் , அதை வாழ்வியலோடு இணைத்துக் கொள்வது என, அரவிந்தரின் தத்துவம் கீதை உரைகளில் வெளிப்படுகின்றன.

பல்வேறு யோக கொள்கைகள், சுய கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகள், அதன் மூலம் தனிமனித வாழ்வில் மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்க்கையையும் தெய்வீக வாழ்க்கையாக மாற்றுவதைப் பற்றிக் கூறுகிறது  ‘ஒருங்கிணைந்த யோகம்’ என்ற நூல்.

இந்தியா, இந்திய நாகரிகம், இந்திய நாகரிகத்தின் மீதான விமர்சனப் பார்வை, இந்தியாவின் புத்தெழுச்சி ஆகிய நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,  அவை நம் நாட்டைப் பற்றிய உயர்வான கருத்தை, இதுவரையில் இல்லாத கண்ணோட்டத்தில், புதிய மொழியில் முன்வைப்பதைக் காணலாம்.

ஆன்மிகம் இந்திய மனங்களைத் திறக்கும் அற்புதச் சாவி. முடிவிலி என்பது அதன் இயல்பு. இந்தியா தர்க்க அறிவில் ஓங்கி இருந்த காலம் உண்டு. அறியாமை இருளில் மூழ்கி கிடந்த காலமும் உண்டு. ஆனால் எந்த நிலையிலும் அவள் (இந்தியா) தன் ஆன்மிகத்தை இழந்ததில்லை. வாழ்க்கையை ஒற்றைப் பரிமாணத்தில் அணுக முடியாது என்பதும், புறவுலக சக்திகளின் துணையோடு மட்டுமே சீரிய வாழ்க்கையை வாழ முடியாது என்பதும், அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளுக்கு அறிவியலின் சக்தியும் விதிகளும் நன்கு தெரியும். அவற்றைப் பயன்படுத்தி சாதாரண வாழ்க்கையை சிறப்பாக வாழும் கலை அவளுக்கு கைவந்த கலை. ஆனால் அறிவியலை மீ - அறிவியலோடு இணைத்துப் பார்க்காவிட்டால் பிரபஞ்சச் சிக்கல்களை இன்றைய மனித அறிவுக்கு ஏற்ப விளக்க முடியாது என்பது அவளுக்கு தெரியும்”.

“மனிதக் கண்களுக்குப் புலப்படும் சக்திகளுக்கு பின்னால் வேறு பல சக்திகள் மறைந்திருக்கின்றன.  அவனுக்குள்ளும் அளப்பரிய ஆற்றல் இருக்கிறது. அது பற்றி அவனுக்கு ஏதோ கொஞ்சம் தெரியும். அது பற்றிய முழுமையான விழிப்புணர்வு அவனுக்கு இல்லை என்பது அவளுக்கு (இந்தியா) தெரியும். அவனுக்குள் கடவுள் இருக்கிறார் என்பது அவளுக்கு தெரியும். முயன்றால் அவன் அவரைக் காண முடியும் என்பதும் அவளுக்குத் தெரியும். அதற்கான வழிமுறைகளை அவள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறாள். பல்வேறு வழிகளில் காலம் தோறும் கண்டு வருகிறாள். அவளிடம் பயமில்லை, அற்பத்தனம் இல்லை; அவளிடம் தைரியம் இருக்கிறது, அறிவிருக்கிறது. எதையும் அற்பமாக பார்ப்பதில்லை அவள். அவளிடம் ஆன்மிகம் இருக்கிறது. முடிவிலியைப் புரிந்து கொள்ளும் உளவியல் வல்லமை இருக்கிறது. அவளிடம் லட்சியம் இருக்கிறது. யோகா இருக்கிறது. அவள் தத்துவ மனம் கொண்டவள் . அதை வெளிப்படுத்தும் கலைத்திறன் அவளிடம் இருக்கிறது”.

மேலே நாம் பார்த்தது சிறிய மேற்கோள்தான்.  அந்த நூல்களில் இந்தியாவின் புற, அக உலகை, அழகை அருமையாக நம் கண் முன்னே நிறுத்துவார். ஏற்கனவே அவர் மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதத்தில்,  “இந்தியா நதியும் மலையும் சமவெளியும் பள்ளத்தாக்கும் கொண்ட நிலப்பரப்பு அல்ல. அவள் தேவி. உயிர்ப்புள்ளவள்” என்று குறிப்பிட்டுள்ளதை இங்கு நினைவு கூர்வது சாலச் சிறந்தது.

இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவ நூல்களைக் கற்று தேர்ச்சி பெறாமல்  ‘தெய்வீக வாழ்க்கை’ என்ற தத்துவ நூலை எப்படி எழுத முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவர் எழுதியது, விளக்கியது, எதுவும் தனிமனித முயற்சியினாலோ, தனிமனிதனின் அறிவுப் பயிற்சியினாலோ அல்ல. அவரது யோக, தியான சாதனைகளால் யோக சக்தியின் மூலம் வெளிப்பட்டது. அதன் விளைவாக, வெளிப்பாடாக இதைப் பார்க்க வேண்டுமென பதில் அளித்துள்ளார்.

“யோக சக்தி , அதன் வெளிப்பாட்டிற்கு மிக அதிக முக்கியத்துவமும் வலியுறுத்தலும் இருப்பது சரியா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. மீ - அறிவியல் வாதங்களைப் புரிந்து கொள்ளாதவன். காண்ட் , ஹெகல், ஹூம், பெர்க்கலோ போன்றோரின் நூல்களைக் கற்க ஆர்வம் இல்லாதவன். அவர்களின் நூல்களில் சில பக்கங்களைப் படித்தாலே களைப்படையக் கூடியவன். திடீரென்று ஆர்யா பத்திரிகையைத் தொடங்கி,  பக்கம் பக்கமாக எழுத இவரென்ன தத்துவவாதியா என்று கேட்கிறார்கள். இதுபோன்ற அறிவற்ற கேள்விகளைக் கேட்பதை விட்டுவிட்டு, அதை படித்துப் பாருங்கள். பலகாலம் தொடர்ந்து ஈடுபாடுடன் சீரிய முயற்சிகள் மேற்கொண்ட பிறகே அடையக் கூடியவற்றை சில நாட்கள் யோகப் பயிற்சியின் மூலமாக அடைவதைப் பார்க்க முடிகிறது. இது யோக சக்தியின் வல்லமையை வெளிப்படுத்துகிறது. இதுவரை இல்லாத ஒரு புலன் திடீரென்று தானாகவே தோன்றுகிறது. அதுவரை சாரமற்று இருந்தவை எழுச்சி பெறுகின்றன. அதுவரை தடையாக இருந்தவை சாதகமாக மாறுவதை சகஜமாகப் பார்க்க முடிகிறது. இவ்வளவையும் பார்த்த பிறகும் யோக சக்தியை நீங்கள் ஏற்க மறுத்தால், உங்களுக்கு வேற எந்த சான்றும் திருப்தி தராது. ஏனெனில் நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, ஏற்றுக் கொள்ளக் கூடாது, மறுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டீர்கள்”

-என்று அரவிந்தர் பதிலளித்துள்ளார்.

“ஸ்ரீ அரவிந்தர் 1914 இல்  ‘ஆர்யா’வில் எழுதத் தொடங்கினர். அது ஒரு அறிவுப் பயிற்சியோ முயற்சியோ அல்ல, மனத்தூண்டலும் அல்ல. மாறாக அவர் மனதை அமைதிப்படுத்தினார். ஏற்கனவே மேலே, உயர்ந்த தளத்தில் இருந்தது, அவர் மீது இறங்கியது. அவருள் நுழைந்து கைவிரல்கள் மூலம் வெளிப்பட்டது. ஆழ்ந்த மனஅமைதியின் மூலமாக உயர்ந்த ஞானம் வெளிப்பட்டது. அவர்  ‘ஆர்யா’வில் எழுதியவை தனிமனித அறிவு மற்றும் மனப் பயிற்சியினால் செய்யக்கூடிய செயல் அல்ல”  என்று அன்னை பின்னாளில் இதை விளக்கி உள்ளார்.

தொடர்கிறது…

$$$

Leave a comment