-திருநின்றவூர் ரவிகுமார்

- காண்க: அத்தியாயம்-6
ஆ. வேத ரிஷியின் வேத விளக்கம்
ஆ. 1. ரிஷியும் ரிஷிகாவும்
அரசியல் ஈடுபாடு கொண்டவர் பவுல் ரிச்சர்ட் என்பதையும், அப்படித்தான் அவர் முதல்முறை பாண்டிச்சேரிக்கு வந்தபோது அரவிந்தரைச் சந்தித்தார் என்பதையும், ஏற்கனவே பார்த்தோம். அவர் மீண்டும் ஆசியப் பகுதிகளுக்கு வர வேண்டி இருந்தது. இம்முறை அவர் ஜப்பான் சென்ற போது அவருடன் அவரது மனைவி மிர்ராவும் உடன் வந்தார். ஜப்பானிலிருந்து அவர்கள் கொழும்பு வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்தார்கள். பிறகு ரயில் மூலம் பாண்டிச்சேரி வந்தடைந்தனர்.
1914 மார்ச் 6 ஆம் தேதி ஜப்பானிலிருந்து கிளம்பிய அவர்கள் மார்ச் 29 ஆம் தேதி பாண்டிச்சேரி வந்தார்கள். அன்று மாலையே அவர்கள் அரவிந்தரைச் சந்தித்தனர். அரவிந்தரைப் பார்த்தவுடனே இவர்தான் தாம் அகவுலகில் கண்ட ‘கிருஷ்ணர்’ என்பதை மிர்ரா தெரிந்து கொண்டார்.
“ஆயிரக்கணக்கானோர் அறியாமை என்னும் அடர் இருளில் மூழ்கிக் கிடந்தாலும் கவலையில்லை. நேற்று நான் பார்த்தவர் இந்தப் பூவுலகில் இருக்கிறார் என்ற ஒரு விஷயமே அந்த இருளைப் போக்கி உலகிற்கு ஒளியைக் கொண்டு வரும் என்பதை நிரூபிக்கிறது. இறைவனின் ஆட்சியை அவர் இங்கு நிறுவுவார்” என்று மிர்ரா மறுநாள் தன் டைரியில் குறித்துள்ளார்.

ஆண்டுகள் பல கழிந்த பின்னர் அரவிந்தரின் தம்பி பரீந்தர் அவரிடம், “முதன் முதலில் நீங்கள் அன்னையை (மிர்ரா) சந்தித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?” என்று கேட்டார். “உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரண சரணாகதி என்பது சாத்தியம் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர் வந்து என்னை வணங்கியபோது சரணாகதி என்பதை செயலில் வெளிப்பட்டதைப் பார்த்தேன்” என்று அரவிந்தர் கூறினார்.
“அன்னையின் வருகை உங்களது பணி மற்றும் யோக சாதனைக்கு பெரும் உதவியாக இருந்தது இல்லையா?” என்று கேட்டபோது, “வெளியுலகைச் சேர்ந்தவர்களுக்கு நான் அடைந்த சமாதி நிலை என்பது வெறும் கொள்கை அளவில்தான் தெரிந்திருந்தது. அவர்தான் அதை அடையும் வழியை நடைமுறை பயிற்சிகள் மூலம் அனைவருக்கும் காட்டினார். அவர் இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது” என்றார் அரவிந்தர்.
அன்னை மிர்ராவும், “அவரில்லாமல் நானில்லை. நான் இல்லாமல் அவர் வெளிப்பட்டிருக்க மாட்டார்” என்று வேறொரு விதமாகச் சொல்லியுள்ளார்.
பவுல் ரிச்சர்ட் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அவர்தான் அரவிந்தரிடம் “ஞானத்தை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்” என்றார் . அரவிந்தரும் சரியென்றார். அதற்காக ஒரு மாத இதழை ஆரம்பித்தனர். அதுதான் ‘ஆர்யா’.
1914 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய அந்த தத்துவ மாத இதழ் 1921 ஜனவரி வரை தொடர்ந்து வெளிவந்தது. அரவிந்தரின் பிரதானப் படைப்பாகிய ‘சாவித்திரி’ என்ற காவியத்தைத் தவிர மற்றெல்லா படைப்புகளும் அதில் வெளிவந்தன.
“வேதங்களைப் பற்றிய என்னுடைய புதிய கண்ணோட்டம் இதில்தான் வெளியாகி வருகிறது. உபநிஷதங்களின் மொழிபெயர்ப்பும் அதுபற்றி என்னுடைய விளக்கங்களும் இதில் வருகின்றன. யோக சாதனை பற்றிய என்னுடைய வழிமுறைகள் இதில் பதிவாகி வருகின்றன. தெய்வீக வாழ்க்கை என்னும் லட்சியத்தை நோக்கி மனித இனம் செல்ல வேண்டும். அதற்கு உபநிஷதங்களை அடிப்படையாகக் கொண்ட வேதாந்த தத்துவத்தை, கருத்தியலை இதில் நான் தொடர்ந்து கட்டுரைகளாக எழுதி வருகிறேன். நான் செய்யும் பணியின் கருத்தியல் பக்கமாக இது இருக்கிறது” என்று அரவிந்தர் தனது சீடருக்கு (மோதிலால் ராய்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மோதிலால் ராய் தீவிர தேச பக்தர். புரட்சிகரப் பாதையில் பயணித்தவர். அரவிந்தர் கல்கத்தாவில் இருந்து சந்திரநாகூர் சென்ற போது அவரை யாரும் அறியாமல் பாதுகாத்தவர் இவர்தான். அரவிந்தரின் நம்பிக்கைக்குரியவர். பாண்டிச்சேரிக்கு அடிக்கடி வந்து அரவிந்தரைப் பார்த்ததுடன், அவருக்கு ஆரம்பத்தில் பண உதவியும் செய்தவர். அரவிந்தர் யோக மார்க்கத்திற்குத் திரும்பிய பிறகு, இவரும் அதே வழியில் வந்தார். யோக மார்க்கத்தில் பயணிக்க ‘பிரபார்தக்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதற்காக ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்.
‘ஆர்யா’ தொடங்கப்பட்ட போது அதன் நோக்கத்தையும் அந்தச் சொல்லின் பொருளையும் விளக்கி அரவிந்தர் எழுதியுள்ளார். “ஆர்யா என்ற சொல் இனத்தைக் குறிப்பது அல்ல; பண்பாட்டைக் குறிப்பதாகும். ஓர் உயர்ந்த லட்சியத்தை, வாழ்வியல் நோக்கத்தை மேற்கொண்டு அதை அடைய, அக, புற வாழ்க்கையில் சில பயிற்சிகளை, பழக்கங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருபவனே ஆரியன். சுய ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் கொண்டவன். சுருக்கமாகச் சொன்னால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் அக, புற தடைகளை மீறி மேலெழுந்து வருபவன். தன்னை வெல்வதே அவனது முதல் பணி” என்று அரவிந்தர் அந்தச் சொல்லை விளக்கி உள்ளார்.
பின்னாளில் ஹிட்லர் என்பவன் வருவான், அவன் அந்தச் சொல்லை இன மேட்டிமைச் சொல்லாக, ஆணவத்தின் வெளிப்பாடாகப் பயன்படுத்தி அந்த சொல்லையே இழிவுபடுத்தி விடுவான் என்று அரவிந்தருக்கு முன்னமே தெரியும் போலிருக்கிறது. அதனால்தான் அவன் வருவதற்கு முன்னமே, அதன் உண்மைப் பொருளை பதிவு செய்துள்ளார்.
‘ஆர்யா’ மாத இதழ் ஆங்கில மொழியில் வெளியானது . அது பிரஞ்சு மொழியில் ‘ரிவ்யூ’ என்ற பெயரில் வெளிவந்தது. அரவிந்தரின் கட்டுரைகளை பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் பணியை மிர்ரா ஏற்றுக் கொண்டார். அரவிந்தரின் கட்டுரைகளும் ரிச்சர்ட் எழுதிய கட்டுரைகளும் ரிவ்யூவில் இடம் பெற்றன.
மிர்ரா மொழிபெயர்ப்புப் பணியை மட்டுமின்றி, இரண்டு பத்திரிகைகளின் வரவு- செலவு கணக்கையும் பார்த்துக் கொண்டார். அதை தன் கைப்பட எழுதி பராமரித்தார். ஆரம்பத்தில் சுமார் இருநூறு பேர் அதற்கு சந்தாதாரர்களாக இருந்தனர்.
தொடர்கிறது…
$$$