-சேக்கிழான்

பொருள் புதிது வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரான கருவாபுரிச் சிறுவன் தொகுத்து எழுதியுள்ள நூல் இது. கருணைக்கடல் ஸ்ரீ கணபதி ஞானதேசிக சுவாமிகள், கல்விக்கடல் ஸ்ரீ குக மணிவாசக சரணாலய சுவாமிகள் ஆகியோரின் வாழ்க்கை சரிதத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறைக்குப் பதிய வேண்டும் என்ற அளப்பரிய அவாவினால் இந்நூலை உருவாக்கி இருக்கிறார்.
சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் திருக்கருவையம்பதி எனப்படும் கரிவலம் வந்த நல்லூரில் ஞானவாழ்வு வாழ்ந்தவர் ஸ்ரீ கணபதி ஞானதேசிக சுவாமிகள் (சமாதி: 1936). இவர் கருவையிலுள்ள குன்றக்குடி மேலமடத்தின் நான்காவது பட்டமாக வீற்றிருந்து அருட்பணி ஆற்றிய பெருந்தகை. ஆலயத் திருப்பணி, ஆன்மிக வழிகாட்டல், அன்னதான மடம் அமைத்தல், அற்புத சித்துகள் உள்ளிட்ட அவரது வாழ்க்கைச் சரித நிகழ்வுகளை, இலக்கிய ஆதாரங்கள், செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார், கருவாபுரிச் சிறுவன் என்ற புனைப்பெயரைச் சூடியுள்ள ஸ்ரீராமகிருஷ்ணன்.
ஸ்ரீ கணபதி ஞானதேசிக சுவாமிகளிடம் தீட்சை பெற்ற பெரும் பேறுக்குரியவர், கல்விக்கடல் என்று போற்றப்பட்ட, கல்லல் ஸ்ரீ குக மணிவாசக சரணாலய சுவாமிகள் (1885 – 1944). இவர் மிகச் சிறந்த கல்வியாளராகவும் தமிழ்ப் புலவராகவும் விளங்கியவர். இவர் எழுதிய ‘செந்தமிழ் நாட்டுச் சிறப்பு’ எனும் கவிதை நூல் அளவில் சிறிதானாலும், தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு முன்னோடியாகும். மேலும் பதிகம் பாடுவதில் இவர் வல்லவராகத் திகழ்ந்தார். இவரது வாழ்க்கைச் சரிதமும் சுருக்கமாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
கௌமார சமயத்தின் புகழ் பரப்ப ஸ்ரீ குக மணிவாசக சரணாலய சுவாமிகள் இயற்றிய சோடச பிரபந்தங்கள் சொல்லின் இனிமையும் பொருட்சுவையும் மிளிர்பவை; திருமுருகன் உறையும் திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணிகை, திருவேரகம், குன்றக்குடி உள்ளிட்ட 16 திருத்தலங்கள் மீதான பதிகங்களின் தொகுப்பே இதுவாகும். சேறைப் பிரபந்தங்கள், திருக்கருவை பிரபந்தங்கள், குன்றக்குடி முருகன் மீதான 18 மயூர பிரபந்தங்கள், காரைக்குடி அருகிலுள்ள வெற்றியூர் அன்னை அன்னபூரணி மீதான அட்டப் பிரபந்தங்கள் ஆகியவை இவர் அளித்தவை.
இவ்விருவர் பற்றிய வரலாற்றுச் செய்திகளுடன், ‘திருமுறைகளில் கணபதி, கற்பக விநாயகர் காரியாசித்தி மாலை, திருக்கருவையந்தாதிகளும் வரலாற்றுப் பின்னணியும், திருக்கருவைப் பிரபந்தங்கள், நாகாபரண பாசுரங்கள், கல்லல் சுவாமிகளின் ஞான பரம்பரை, செந்தமிழ் நாட்டு சிறப்பு கவிதை நூல்’ உள்ளிட்ட அரிய பதிவுகளின் தொகுதியாக இந்நூல் மின்னுகிறது.
கல்லல் சுவாமிகள் இயற்றிய ‘செந்தமிழ் நாட்டுச் சிறப்பு’ என்ற நூலிலுள்ல 61 பாக்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது வாசகரின் அகம் மகிழச் செய்யும்:
சொக்கர் கடம்பில் வருநாடு- சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு. மிக்குயர் கன்னி வளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு! முருகன் ஆண்ட தமிழ்நாடு – கும்ப முனிவன் வாழும் தமிழ்நாடு. பெருகு தென்றல் வளர்நாடு – அறம் பேணிப் புரியும் தமிழ்நாடு! சங்கம் வளர்த்த தமிழ்நாடு – சைவ சாத்திரம் ஓங்கும் தமிழ்நாடு. மங்களமான தமிழ்நாடு – தவம் வாய்த்துப் பலிக்கும் தமிழ்நாடு! ... சம்பந்தர் வந்த தமிழ்நாடு – திருத் தாண்டக வேந்தர் வளர்நாடு. நம்பியாரூரர் வருநாடு – எங்கள் நல் வாதவூரர் திகழ்நாடு! ... மன்னுந் திருமுறை பன்னிரண்டும் ஓங்கி மங்களம் ஏறும் தமிழ்நாடு. பின்னும் பலநூல் தொகுதிகளும் – எழில் பிறங்கத் திகழும் தமிழ்நாடு! வேதம் திகழும் தமிழ்நாடு – மிக்க மேன்மையுடை தமிழ்நாடு. பாதம் கணாலும் தருமுயர் ஆகமம் பண்புடன் ஓங்கும் தமிழ்நாடு! ... சேரனும் சோழனும் பாண்டியன் மூவரும் செங்கோலோச்சும் தமிழ்நாடு. பாரறியத் தெய்வ நன்மணம் வீசியே பத்தி வளரும் தமிழ்நாடு! மன்னிடும் சைவ சமயம் வளரவே பன்முனிவோர்கள் வரும்நாடு. மின்னும் சிவமணம் வீசிக் கதித்தென்றும் மேலாய் விளங்கும் தமிழ்நாடு! ... சீ ராமானுஜர் வாழ்நாடு – திரு ஆழ்வார் பன் னிருவர் நாடு. ஏரார் நாலாயிரப் பிரபந்தம் இலங்கித் திகழும் தமிழ்நாடு! ... சோபமில்லாத தமிழ்நாடு –மற்றைத் துர்ப்பய மில்லாத் தமிநாடு. பாபமில்லாத தமிழ்நாடு – சிவம் பழுத்த மேன்மைத் தமிழ்நாடு! ...
இந்நூலின் பதிப்பில் உடனிருந்து உதவியுள்ள சிவ.மணிகண்டனும் புண்ணியம் அடைந்துள்ளார். குகபதி பதிப்பகம் இதுபோன்ற அரிய நூல்களை தொடர்ந்து பதிப்பித்து, தமிழின் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ வேண்டும் என்று, உலகெலாம் சைவமோங்க வந்துதித்த தெய்வச் சேக்கிழார் திருவடிகளை வணங்கி பிரார்த்திக்கிறேன்.
***
நூல் விவரம்:
கருணைக்கடலும் கல்விக்கடலும்
தொகுப்பும் பதிப்பும்: பா.ஸ்ரீராமகிருஷ்ணன், சிவ.மணிகண்டன்.
158 பக்கங்கள், விலை: ரூ. 150-
வெளியீடு: குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
தொடர்புக்கு: 97870 19109.
$$$