-வீர. திருநாவுக்கரசு

1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் டிச. 25.
1924இல், பள்ளி ஆசிரியரான தந்தைக்கு மகனாகப் பிறந்த வாஜ்பாய், ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களை முதன்மையாகக் கொண்ட B.A., பட்டமும், அரசியல் அறிவியலில் M.A., பட்டமும் பெற்றவர். (பெற்றோர்: கிருஷ்ணா தேவி, கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்).
அவரது சட்டப் படிப்பு 1947இல் நடந்த துரதிருஷ்டவசமான தேசப்பிரிவினையால் ஏற்பட்ட கலவரங்களினால் தடைபட்டுப் போனது.
அவர் சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவராக விளங்கினார். அவரது கவிதைகளில் தேசப்பற்றும், ஹிந்துப் பண்பாட்டின் மீதான பெருமிதமும் வெளிப்படும்.
அதற்குப் பின்னணியாக RSS இருந்திருக்கலாம். தனது பள்ளிக் காலத்திலேயே RSSஇல் இணைந்து விட்டார், அடல் ஜி (அவர் பெயர் அடல்; வாஜ்பாய் என்பது குடும்பப் பெயர்).
மாணவராக இருந்தபோதே, இந்திய விடுதலைப் போராட்டத்தில் – 1942இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
இளமைப்பருவத்திலேயே RSSஇன் பிரசாரக் (முழுநேர ஊழியர்) ஆகிவிட்டார். RSSஇன் பிரசாரக் என்பவர் திருமணம் செய்துகொள்ளாமல், தனிப்பட்ட வகையில் எந்த வேலையிலோ அல்லது தொழிலிலோ இல்லாமல் தன் வாழ்வையே தேசப் பணிக்காக ஒப்படைப்பவர். அந்த வகையில், வாஜ்பாயும் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்து நம் தேசத்திற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்தவர்.
ஈடுஇணையற்ற பேச்சாற்றலும், சிறந்த எழுத்தாற்றலும் கொண்டவர் வாஜ்பாய். 1948இல், தனது 24ஆவது வயதிலேயே ‘பாஞ்சஜன்யா’ எனும் தேசிய வார இதழின் ஆசிரியர் ஆனார்.
அந்த இதழில் வெளியான அவரது தலையங்கங்கள் மிகவும் அறிவார்ந்தவையாகவும், சிந்தனையைக் தூண்டும்படியாகவும் இருந்ததோடு தேசிய சிந்தனையை வளர்ப்பவையாகவும், சிறந்த மாற்றுப்பார்வையை வைப்பவையாகவும் இருந்தன.
அவ்விதழில் அவ்வப்போது வெளிவந்த அவரது கவிதைகள் எழுச்சியூட்டுபவையாகவும், இந்தியப் பண்பாட்டு விழுமியங்களைத் தாங்கி நிற்பவையாகவும் இருந்தன.
மகாத்மா காந்தியின் பரிந்துரையால் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்று சிறப்பாகப் பணிபுரிந்து வந்த டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி, நேருவுடனான கருத்து வேறுபாட்டால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அக்டோபர் 21, 1951இல் ‘பாரதிய ஜன சங்கம்’ எனும் புதிய கட்சியை ஆரம்பித்தபோது, பாரதியப் பண்பாட்டிலும் ஒற்றுமையிலும் வளர்ச்சியிலும் தெளிவான சிந்தனை கொண்ட அவருக்கு ஆதரவாகவும், அக்கட்சியை வளர்க்கும் விதமாகவும் RSSஆல் அனுப்பப்பட்ட முக்கிய ஆளுமைகளுள் வாஜ்பாயும் ஒருவர்.
1953இல் எதிர்பாராத விதமாக கஷ்மீர் சிறையில் மரணமடைந்த டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜிக்குப் பிறகு, பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஜன சங்கத்தின் அத்தனை பொறுப்புகளையும் சுமக்க வேண்டியதாயிருந்தது. தீனதயாள் உபாத்யாயவின் மதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய நபராக இருந்தார் வாஜ்பாய்.
அனைவரையும் கட்டிப்போடும் பேச்சாற்றல், கவிதைத் திறன், எழுத்துவன்மை, சிறந்த ஆளுமை முதலியவற்றால் பாரதிய ஜன சங்கத்தின் முன்னணி ஆளுமையானார் வாஜ்பாய்.
தீனதயாள் உபாத்யாயவின் ஆணைக்கிணங்க 1957 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார் வாஜ்பாய். அப்போது அவருக்கு வயது 33. 1957இல் தொடங்கிய அவரது நாடாளுமன்றப் பயணம் 2009 வரை தொடர்ந்தது. 10 முறை மக்களவைக்கும், இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாக பங்களித்தார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி, குஜராத் ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாஜ்பாய் என்பது அவரது பரந்த செல்வாக்கைக் காட்டுகிறது.
பொதுக்கூட்டங்களில் சிறப்பாகப் பேசுவதைப் போலவே, நாடாளுமன்றத்திலும் மிகச்சிறப்பாக உரையாற்றக் கூடியவர் வாஜ்பாய். அக்காலத்தில் நாடாளுமன்றத்தில் பாரதிய ஜன சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது; அதையும் கடந்து, தனது செயல்பாடுகளால் கட்சிக்கு மரியாதையை ஏற்படுத்தினார் வாஜ்பாய்.
உதாரணமாக, ஒருமுறை வாஜ்பாய் வெளியுறவுக் கொள்கையின் மீதான விவாதத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிரதமர் நேரு அவையில் இருந்தார். வாஜ்பாயின் சொல்வன்மை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. வாஜ்பாயின் பேச்சாற்றலில் நேருவே ஈர்க்கப்பட்டார். அதனால் நேரு சபாநாயகரிடம், ‘இந்த ஜன சங்க எம்.பி. நாடாளுமன்ற விவாதத்தில் மேலும் பங்களிப்பதைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
வாஜ்பாய் குறித்து, ‘இந்த இளைஞர் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வருவார்’ என்று நேரு சொன்னதாக பரவலாக ஒரு தகவலும் உண்டு.
பாரதிய ஜன சங்கத்தின் தூணாக இருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அதனைத் தூக்கி சுமந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா 1968இல் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் வாஜ்பாய். அப்போது அவருக்கு வயது 43. ‘இந்த அந்தஹாரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் தான் நம்பிக்கைக் கீற்று’ என்று அப்போது ஜன சங்கத் தொண்டர்களால் பேசப்பட்டது.
அதற்கிணங்க அல்லும் பகலும் அயராது பாடுபட்டு கட்சியை வெகுஜன இயக்கமாக மாற்றிக் காட்டினார் வாஜ்பாய். ஆனால், அவரது பயணம் எளிதாக இருந்ததில்லை. கட்சிக்கு உள்ளேயும் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டார். ஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் பால்ராஜ் மதோக், வாஜ்பாயை பல கட்டத்தில் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்தார்.
வாஜ்பாய் பின்பற்றிக் கொண்டிருந்த பொருளாதாரக் கொள்கைகள் இடதுசாரி சார்பானது என்று மதோக் கருதினார். அதனால் அவற்றை ஏற்க மறுத்தார். ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற கொள்கையை ஜன சங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது. அதற்காக விவசாய நிலங்களில், நில உச்சவரம்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கட்சி கோரியது.
பல்வேறு சவால்களையும் திறம்பட சமாளித்து, கட்சியை வளர்த்துச் சென்றதோடு தேசத்தின் நலனிலும் மக்கள் நலனிலும் அதிக கவனத்தோடு பங்காற்றினார்.
பங்களாதேஷ் பிரச்சினையில் பாகிஸ்தானோடு நடைபெற்ற 1971ஆம் ஆண்டு போரின்போது, வாஜ்பாய் தலைமையிலான ஜன சங்கம்,மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தை முழுமனதோடு ஆதரித்தது. அந்தக் காலகட்டத்தில் வாஜ்பாய், உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடிய, சிந்தனையைக் தூண்டக்கூடிய சொற்பொழிவினை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்!
போரில் வெற்றியடைந்ததும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் வாஜ்பாய் இந்திர காந்தியை மனம் திறந்து பாராட்டினார் (ஆனால், இந்திரா காந்தியை ‘துர்கா’ என்று புகழ்ந்ததாக சொல்லப்படுவது உண்மையல்ல).
நேரு பிரதமராக இருந்தபோது, 1947-48இல் பாகிஸ்தான் நம் நாட்டின் மீது போர் தொடுத்தது. ஜனவரி 1, 1949இல் நம் ராணுவம் எதிரிகளை விரட்டியடித்த போது சர்வதேச அழுத்தங்களுக்குச் செவிசாய்த்து நேரு திடீரென்று போர்நிறுத்தத்தை அறிவித்தார்! பாகிஸ்தானிற்கு 83,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தானமாகக் கொடுத்தார்! அதேபோல், 1962இல் சீனா நம் நாட்டின் மீது போர் தொடுத்தது. சீனாவை நம்பி அஜாக்கிரதையாக இருந்த நேரு அரசால், நாம் பெருந்தோல்வி அடைந்தோம்!
லால் பகதூர் சாஸ்திரி பாரதப் பிரதமராக இருந்துபோது 1965இல் பாகிஸ்தான் மீண்டும் நம் மீது போர் தொடுத்தது. பாகிஸ்தானை ஓட ஓட விரட்டினார் சாஸ்திரி. ஏற்கனவே பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இருந்த ஹாஜ்பீர் மற்றும் தித்வா ஆகிய இடங்களை நம் இந்திய ராணுவம் மீட்டது. ஆனாலும், கம்யூனிஸ ரஷ்யாவின் தாஷ்கண்டில் நடந்த பேச்சுவார்த்தையில் ரஷ்ய கம்யூனிஸ்ட் அதிபரின் அழுத்தத்தால், நம் ராணுவம் மீட்ட இடங்களைத் திரும்பக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் மனம் நொந்து ஒப்பந்தம் ஏற்பட்ட ஒருசில மணி நேரத்தில் மாரடைப்பில் இறந்தார் நம் பிரதமர் சாஸ்திரி!
இதையெல்லாம் மனதில்கொண்டு, பாகிஸ்தானுடனான வங்கதேசப் போரில் வெற்றியடைந்து அவர்களது 93,000 ராணுவ வீரர்களை நாம் போர் கைதிகளாக வைத்திருந்தபோது, ‘காஷ்மீர் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்காமல் பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திற்கும் போகக் கூடாது’ என்றது வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜன சங்கம். ஆனால் அவ்வாறு செய்யாமல் சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் தவறிழைத்துவிட்டார் இந்திரா காந்தி.
1962இல் நடந்த சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு, இந்தியா அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பாரதிய ஜன சங்கம் கோரியது. 1972லிருந்து ஜன சங்கத்தின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் ‘இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தி வரப்பட்டது. அதனடிப்படையில், 1974இல் பொக்ரானில் அணு ஆயுத சோதனை செய்யப்பட்டபோது, அதை மனமாரப் பாராட்டினார் வாஜ்பாய்.
தனக்கு வந்த நெருக்கடியை நாட்டுக்கு வந்த நெருக்கடியாகச் சொல்லி ஜுன் 25, 1975 இல் நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார் இந்திரா காந்தி. வாஜ்பாய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சர்வாதிகாரம் தலைவிரித்தாடியது இந்தியாவில்.
நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் விளைவாக, 1977இல் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி. தேசம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, பாரதிய ஜன சங்கத்தைக் கலைத்துவிட்டு புதிதாக உருவான ‘ஜனதா கட்சி’யில் ஐக்கியமானார்கள் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள். தேர்தலில் ஜனதா கட்சி வென்றது; இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டார் வாஜ்பாய்.
அரசியல் சூழ்ச்சியின் காரணமாக அந்த ஆட்சிக் கவிழ்ந்தது; ஜன சங்கத் தலைவர்கள் ஜனதா கட்சியை விட்டு வெளியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
அது ஏப்ரல் 6, 1980இல் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி உருவாகக் காரணமாக அமைந்தது.
1977 தேர்தல் வரை படிப்படியாக வளர்ந்து வெற்றி பெற்றுவந்த பாரதிய ஜன சங்கத் தலைவர்கள் பலரும், 1980 தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்கள். ஆயினும், வாஜ்பாய் தலைமையில் மிகுந்த நம்பிக்கையோடு நடைபோடத் தொடங்கியது பாஜக. ஆனால் அந்தப் பயணம் எளிதாக அமையவில்லை. 1984ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற அனுதாப அலை தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியடைந்தது. பாஜக வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. வாஜ்பாயே கூட தோல்வியடைந்தார்!
“நான் ஒருபோதும் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன். புதிய யுத்தத்திற்கு எப்போதும் நான் என்னை தயார்படுத்திக் கொள்வேன். காலத்தின் நெற்றியில் எழுதப்பட்ட பழையவைகளை அழித்து, புதியவைகளை எழுதுகிறவன் நான். நான் புதிய பாடலைப் பாடுகிறேன்” என்று வாஜ்பாயே எழுதியிருக்கும் கவிதைக்கிணங்கத் தொடர்ந்து உழைக்கக் தொடங்கியது அவர் தலைமையிலான பாஜக.
அயோத்தி இயக்கம் நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பா.ஜ.க.வுக்கும் ஆதரவு தளத்தை அதிகப்படுத்தியது. அதன் காரணமாக, 1989 தேர்தலில் பாஜக 86 எம்.பி. இடங்களை வெற்றி கொண்டது. பாஜகவின் ஆதரவோடு வி.பி.சிங் பிரதமரானார். அந்த ஆட்சியின் போது தான் அண்ணல் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுக்கப்பட்டது. அதுவரை காங்கிரஸின் எந்த ஆட்சியும் அம்பேத்கருக்கு உரிய உச்சபட்ச மரியாதையைக் கொடுக்கவில்லை.
1990ல் அத்வானி ஆரம்பித்த ராமரத யாத்திரை பாஜகவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. 1995ல் கட்சியின் தலைவராக இருந்த அத்வானி மும்பையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ‘1996இல் நடைபெறும் தேர்தலை நாம் வாஜ்பாய் தலைமையில் சந்திப்போம். நாம் ஆட்சியைமைப்போம். வாஜ்பாய் தான் பிரதம வேட்பாளர்” என்று தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்!
கூட்டத்தில் ஒருகணம் ஒரே அமைதி; மறுகணம் ஒரே ஆர்ப்பரிப்பு! வாஜ்பாய் எழுந்தார். “நாம் ஆட்சி அமைப்போம். அத்வானி தான் பிரதமராவார்” என்றார். அத்வானியோ ‘அறிவிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது’ என்றார். வாஜ்பாயோ ‘நானும் கூட அறிவிக்கலாம்’ என்றார். அத்வானி ‘வாஜ்பாய் பிரதமர் ஆவார் ‘ என்று மீண்டும் சொன்னார்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வயதான இரண்டு சகாக்கள்; நெருங்கிய நண்பர்கள். பாரதிய ஜன சங்கம் மற்றும் பாஜக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அவற்றை வளர்த்தவர்கள். இருவரது கண்களும் கலங்கின!
வாஜ்பாயை பிரதம வேட்பாளராக அறிவிப்பது குறித்து அவரிடம் அத்வானி முன்கூட்டியே சொல்லவில்லை. இதனால், கூட்டம் முடிந்த பிறகு வாஜ்பாய் அத்வானியிடம் ‘என்னமாதிரி அறிவிப்பைச் செய்தீர்கள்! குறைந்தபட்சம் என்னிடமாவது நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்’ என்றார்.
அதற்கு அத்வானி ‘நான் சொல்லியிருந்தால் நீங்கள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டீர்கள்’ என்று சொன்னார்! காப்பியங்களில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் நடந்திருக்கிறது! வாஜ்பாய் எனும் மாபெரும் பிரதமரைத் தந்ததில் அத்வானி எனும் ஒப்பற்ற தலைவருக்குப் பெரும் பங்குண்டு.
அத்வானி அறிவித்ததைப் போலவே 1996 தேர்தலில் பாஜக தனிப்பெருங்கட்சியாக வென்று வாஜ்பாய் முதன்முறையாகப் பிரதமரானார். ஆனால் அந்த ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்தது. மீண்டும் 1998 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகப் பிரதமரானார் வாஜ்பாய்.
ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதத்திலேயே 1998 மே மாதத்தில் ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் ஐந்து அணு ஆயுத சோதனைகளை மிக தைரியத்துடன் செய்து காட்டினார் வாஜ்பாய். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நடத்தப்பட்ட சோதனைகள் அவை! இதனால் கோபங்கொண்டு அமெரிக்க, கனடா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நம் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அவற்றையெல்லாம் நெஞ்சுரத்தோடும் தலைமைப் பண்புகளோடும் சமாளித்து நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டினார் வாஜ்பாய்! பின்னர் சிறப்பான ராஜதந்திர உறவுகள் வாயிலாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நம் நாட்டோடு நல்லுறவு கொள்ள வைத்தார். இது வாஜ்பாயின் ஒப்பற்ற தலைமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானோடு நல்லுறவைப் பேணும் விதமாக 1999 பிப்ரவரியில் தில்லிக்கும் லாகூருக்கும் இடையே பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார். அமிர்தசரஸிலிருந்து லாகூருக்கு வாஜ்பாயே பேருந்துப் பயணம் மேற்கொண்டார். அவரை பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார். பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வழிவகை செய்யப்பட்டது.
1999 பிப்ரவரியில் எல்லோரும் பாராட்டும்படியான பட்ஜெட்டை அவரது அரசு தாக்கல் செய்தது.
இவற்றையெல்லாம் காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது சித்து விளையாட்டை ஆரம்பித்தது. தமிழகத்திலிருந்த திமுக ஆட்சியைக் கலைக்கச் சொன்னது. தர்மத்திற்குப் புறம்பான செயலைச் செய்ய முடியாது என்றார் வாஜ்பாய். அதிமுக கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் 1999 ஏப்ரலில் ஒரே ஒரு வாக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது வாஜ்பாய் அரசு.
அதனைத் தொடர்ந்து, சோனியா காந்தி பிரதமராக முயற்சிச் செய்தார். முரசொலி மாறன், வைகோ போன்றோர் பாஜகவுக்கு ஆதரவாக நின்றனர். முலாயம் சிங்கின் முடிவால், இந்தியாவுக்குப் பிரதமராகும் சோனியா காந்தியின் எண்ணம் ஈடேறாமல் போனது. மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டது.
அடுத்து நடந்திருக்க வேண்டிய தேர்தல் உடனே நடைபெறவில்லை. காரணம், நாட்டை சூழ்ந்த ஆபத்து. பாகிஸ்தானிடம் இருந்து வந்த ஆபத்து. வாஜ்பாய் தலைமையிலான இந்தியா அமைதிக்கான முயற்சியை எடுத்தும் பாகிஸ்தானின் சில சக்திகள் அதை விரும்பவில்லை. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் ஊடுருவி வந்திருக்கும் செய்தியறிந்து வெகுண்டெழுந்தார் வாஜ்பாய்! ‘ஆபரேஷன் விஜய்’ எனும் பெயரில் மே 26, 1999இல் போர் தொடங்கியது. பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுக்கத் தொடங்கியது பாரதம். அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனிடம் ஓடி, காப்பாற்றுமாறு கதறியது பாகிஸ்தான். முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் கிளிண்டன். ‘பாகிஸ்தானின் கடைசி ஊடுருவல்காரன் எங்கள் மண்ணில் இருக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது. அவர்கள் பின்வாங்க வேண்டும். இல்லையெனில் பின்வாங்க வைப்போம்’ என்று துணிச்சலோடு திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் வாஜ்பாய்.
74 நாட்கள் நடைபெற்ற போரில் பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைகளைவிட்டு ஓட ஓட விரட்டப்பட்டனர். அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது பாகிஸ்தான். உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் புகழும் வாஜ்பாயின் புகழும் அதிகரித்தன.
போர் முடிந்ததும் இந்தியாவில் தேர்தல் பணிகள் தொடங்கின. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று 1999 அக்டோபரில் மூன்றாவது முறையாக பிரதமரானார் வாஜ்பாய்.
மார்ச் 2000-இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்தது அதுதான் முதல்முறை. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மேம்பட்டன.
2002-2003ஆம் ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கி விட்டார் வாஜ்பாய். அதனால் 2003லிருந்து 2007 வரை நாட்டின் ஜி.டி.பி. ஏழு சதவீதத்தைத் தாண்டியது.
ஜூலை 2003இல் சீன விஜயம் செய்தார் வாஜ்பாய். அதன் காரணமாக சிக்கிம் மாநிலம் இந்தியாவினுடையது தான் என்று அங்கீகரித்தது சீனா. இருதரப்பு உறவுகளும் மேம்படத் தொடங்கின.
அவரது ஆட்சிக்காலத்தில் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் வாயிலாக சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட பெருநகரங்களை எல்லாம் இணைக்கும் விதமாக உலகத்தரத்திலான அகண்ட சாலைகள் சுமார் 49,260 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டன. கிராமச் சாலைகளும் அமைக்கப்பட்டன.
சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களை உலகத்தரத்திற்கு உயர்த்தியதோடு, பல்வேறு புதிய விமான நிலையங்களுக்கு அடித்தளமிட்டார் வாஜ்பாய். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதன்முதலில் ஒப்புதல் வழங்கியவரும் அவரே.
அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்துக் கொண்டுவந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தனியார் துறை முதலீடுகள் அதிகமாகி, நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தின.
புதிய தொலை தொடர்பு கொள்கை கொண்டுவந்து, இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியில் புரட்சியை உண்டுபண்ணினார். இன்சூரன்ஸ் துறையின் வளர்ச்சிக்கு ஆவன செய்தார். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தார்.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் வாயிலாக தரம் வாய்ந்தக் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார். நிலவுக்கு விண்கலம் அமைக்க அடித்தளமிட்டவரும் அவர்தான்.
வாஜ்பாயின் தேசப்பணிகளைப் போற்றும் விதமாக 1992இல் அன்றைய காங்கிரஸ் அரசு அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை வழங்கியது. 2014இல் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வாஜ்பாயிக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்தார்.
நல்லாட்சி நாயகனான வாஜ்பாயின் பிறந்தநாள் டிசம்பர் 25ஐ நல்லாட்சி தினமாக அறிவித்து மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
நாட்டுக்காக ஓடோடி உழைத்து வந்த வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 16, 2018இல் இறைவனடி சேர்ந்தார்.
பன்முக ஆளுமையான வாஜ்பாயைப்போன்று இன்னொரு தலைவரைக் காண்பது அரிது! எல்லோராலும் மதிக்கப்பட்ட அவர் ஒரு புனிதமான ஆன்மா! இந்தியப் பண்பாட்டின் வெளிப்பாடு! 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நெருங்கிய நண்பராகவும் சக பயணியாகவும் இருந்த திரு.அத்வானி அவர்கள் சொல்லியிருப்பது போல ‘வாஜ்பாய் – விதியால் உண்டாக்கப்பட்ட மனிதர்!’ Yes, he was a man of destiny!
- குறிப்பு: திரு. வீர.திருநாவுக்கரசு, தமிழக பாஜகவின் பிற்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர்.
$$$