கவிச்சூரியனை களங்கப்படுத்த முடியாது!

-நிரஞ்சன் பாரதி

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியை அவதூறாகப் பேசிய திராவிட அறிவிலிகளுக்கு இங்கிதமாக பதில் அளித்திருக்கிறார், அவரது எள்ளுப்பேரன் திரு. நிரஞ்சன் பாரதி...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் பாரதியாரையும் பெரியாரையும் ஒப்பிட்டுப் பேசிய பிறகு (சென்னை- விஜில் நிகழ்ச்சி), அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் காட்டிலும் பாரதியார் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அதிகமாக இருக்கின்றன.

அது கூட வலிக்கவில்லை. அந்த விமர்சனங்கள் மிக மிகக் கீழ்த்தரமாகவும் அடிப்படை ஆதாரம் அற்றவையாகவும் இருப்பது, மனத்தில் கொதிப்பையும் வேதனையையும் தருகிறது.

பாரதியார் மீது பெரியார் ஆதரவாளர்கள், தி.க.வினர் விமர்சனங்கள் வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை அவை வரம்பு மீறி அவர்களின் வன்மத்தைக் கக்குவதாய் உள்ளன. YouTube -இல் தேடினால் அவர்களின் காணொளிகள் கொட்டிக் கிடக்கின்றன.

* இந்துவாகப்‌ பிறந்து இந்துக் கடவுள்கள் மீது மட்டும் பாடல்கள் இயற்றாமல் இயேசுபிரான், அல்லா மீதும் பாடல்கள் இயற்றிய ஒருவரை…

*பார்ப்பனராக இருந்தாலும் தன் சாதியினரைத் தாக்கத் தயங்காமல் ‘பேராசைக் காரனடா பார்ப்பான் ‘ என்று துணிந்து எழுதிய ஒருவரை…

* பெரியாருக்கு முன்பே கைம்பெண் மறுமணம், பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை உள்ளிட்டவை பற்றி பேசிய ஒருவரை…

* சகோதரி நிவேதிதையைச் சந்திப்பதற்கு முன்பே  ‘சக்கரவர்த்தினி’ என்னும் மகளிர் முன்னேற்ற மாத இதழுக்கு ஆசிரியராகி, பெண்ணிய முற்போக்கு கருத்துகளைக் கூறிய ஒருவரை…

* ‘சாதிகள் இல்லையடி‌ பாப்பா ‘ என்று பாடியதுடன், வாய்ச்சொல்‌ வீரராக இல்லாமல், புதுச்சேரியில் தன் வீட்டில் சாதி மத வேறுபாடின்றி பலருக்குப் பலமுறை சோறு போட்ட ஒருவரை…

* பன்மொழிகள் கற்றாலும் இறுதிவரை தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு தனக்கெனவும் குடும்பத்துக்கெனவும் சொத்து சேர்க்காமல் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் வாழ்ந்து மடிந்த ஒருவரை…

‘மதவெறி பிடித்தவர்’, ‘சாதிவெறி பிடித்தவர்’, ‘ஆர்.எஸ்.எஸ். முன்னோடி’…

‘ஒருமுறை ரயில்ல வந்துட்டு இருந்தப்போ போலீஸுக்கு பயந்து ரயிலையே நாறடிச்சிட்டாரு’…

‘நிறைய‌ கஞ்சா அடிச்சா பசியெடுக்கும். அதனால் தான்  ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ அப்படின்னு பாடினார் ‘…

‘பாரதியே ஒரு‌ சப்ப பீஸு’…

-என்றெல்லாம் அசிங்கமாக வசைபாடுவது எந்த விதத்தில் நியாயம்?

பாரதி வாழ்ந்த வாழ்க்கையை ஒரு‌ சதவிகிதம் கூட வாழ வக்கில்லாதவர்கள் இவர்கள். எனவே அவரை விமர்சிக்க அருகதையற்றவர்கள்.

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பல கோடி பேருக்கு இன்று அவர் ஆசான், உந்துசக்தி, குலசாமி, தெய்வம்.

இந்தத் தரக்குறைவான பேச்சுகள் அந்தக் கவிச்சூரியனை ஒருபோதும் களங்கப்படுத்தாது. இன்னும் இன்னும் பிரகாசமாகவே சுடர் விடச் செய்யும்.

வாழ்க பாரதி!

  • குறிப்பு: திரு. நிரஞ்சன் பாரதி, மகாகவி பாரதியின் எள்ளுப்பேரன்.

$$$

Leave a comment