திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 7

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -7)

தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி, உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் கந்த சஷ்டி கவச பாடல் பாடி உண்ணாவிரதம் இருந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்காததைக் கண்டித்தும், தீபம் ஏற்றக் கோரியும் டிச.13இல்  உயர்நீதிமன்ற அனுமதியுடன் உள்ளூர் மக்கள் திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் எதிரே உண்ணாவிரதம் இருந்தனர். கந்த சஷ்டி பாடலை தொடர்ந்து பாடினர். மக்கள் ஆர்வமுடன் திரண்டு வர, நீதிமன்ற உத்தரவுப்படி 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:

எம்.பிரியா: நான் பிறந்ததும், வாழ்வதும் திருப்பரங்குன்றத்தில் தான். 43 வயதாகிறது. மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நான் பிறக்கும் முன்பிருந்தே எனது பெற்றோர், தாத்தா, பாட்டி போராடிக் கொண்டுதான் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நல்ல உத்தரவைப் பிறப்பித்தும் தீபம் ஏற்ற அரசு மறுப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது. முருகப்பெருமான் மலைகளில் தீபம் ஏற்றுவது என்பது தொன்மையான கலாசாரம். அதுபோல் திருப்பரங்குன்றத்திலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

சிவ யசோதா: தீபத்தூணில் நாடு செழிக்க, மக்கள் செழிக்க, ஆன்மிக சிந்தனை வளர தீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது. இதற்கு வரலாற்றில் ஆதாரம் உள்ளது. என்ன காரணத்தினாலோ இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. பின்பு மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது ஆன்மிகத்திற்கு முரண்பாடானது. ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவை அரசு  செயல்படுத்த வேண்டும்.

பிரியா: மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அது எங்களது பாரம்பரிய உரிமை. யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. எங்களது உரிமைகளையும், கலாசாரத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம்.

முத்துக்கருப்பன்: மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக எங்களது பாட்டன், பூட்டன்  கூறியுள்ளனர். இடையில் ஏதோ காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு விட்டது. அதிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்துதான் வருகிறோம். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எங்களது கலாசாரத்தைக் கேவலப்படுத்துவது போல உள்ளது. இது ஆகம விதிகளுக்கு உட்பட்டதா? 100 ஆண்டுகளுக்கு முன்பு தீபத்தூணில் தீபம் ஏற்றியுள்ளனர். அதேபோல திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள 52 கிராமங்களுக்கும் தெரியும்படி நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதை 52 கிராம மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

மகாராஜன்: மீண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்களது குறிக்கோள். அதற்காகவே ஒன்று திரண்டு உள்ளோம். எனது அப்பத்தா இந்த ஊரில் பிறந்தவர் தான். தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதைப் பார்த்ததாக அவரே கூறியிருந்தார். தீபம் ஏற்ற யாரும் தடை போடக் கூடாது. எங்கெல்லாம் முருகப்பெருமான் குடி கொண்டுள்ளாரோ அங்கெல்லாம் அவரது கையில் வேல் மட்டுமே இருக்கும். திருப்பரங்குன்றத்தில் கையில் வேலுடன் தராசும் இருக்கும். இந்த அமைப்பு கோயிலின் பெரிய வைரத் தேரில் உள்ளது. இந்த ஊரில் நடக்கும் அனைத்தையும் முருகப் பெருமான் தராசு மூலம் நிறுப்பதாகவும், தவறு செய்தவர்களை தண்டிப்பார் என்பதும் ஆண்டாண்டு காலமாக மக்களின் நம்பிக்கை.

பிரபு, உண்ணாவிரதம் இருக்க ஊர் பொதுமக்கள் சார்பில் மனு செய்தவர்: மலை உச்சியில் இருப்பது தீபத்தூண்தான். அதன் அமைப்பைப் பார்த்தாலே தெரியும். ஆனால் தமிழக அரசும், அறநிலையத் துறையும் அதை  ‘சர்வே கல்’ என்றும் கிரானைட் கல் என்றும் கூறுகின்றன. இதைக் கேட்பதற்கே மனது வலிக்கிறது. நீதி ஒரு போதும் தூங்காது. எங்கள் முன்னோர்  அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாகக் கூறியுள்ளனர். உச்சிப் பிள்ளையார் மண்டபத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவதாகக் கூறுகிறார்கள். அது தவறு.

எங்களுக்குத் தெரிந்த வரை அதிகபட்சம் 25 ஆண்டுகள் கூட ஏற்றி இருக்க மாட்டார்கள். அங்கு தீபம் ஏற்றியதற்கு காரணம், சில இயக்கங்கள் கொடுத்த நெருக்கடிதான். தீபத்தூணில் தீபம் ஏற்ற தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடுகிறார்கள். அதை திசை திருப்புவதற்காக தான் உச்சிப் பிள்ளையார் மண்டபத்தின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றும் சம்பிரதாயம் தொடங்கியது. இவ்வளவு நாட்கள் அமைதியாகத் தான் இருந்தோம். எங்களது கலாசாரத்தை, மரபை மீறுவதுடன் சட்டத்தையும் மீறுகிறார்கள். அதனால் தான் பொதுமக்கள் கேள்வி கேட்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு ஊர் மக்கள் கூறினர்.

  • (தினமலர்- 14.12.2025)

$$$

கூடுதலாக மாற்று இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன?

மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலையில் அனைவரும் பார்க்கும் வகையில், கூடுதலாக மாற்று இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன?’ என, மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம. ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து, சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். இதேபோல, ஆட்சியர், காவல் ஆணையர், அறநிலையத் துறை இணை ஆணையர், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து, 20 ரிட் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.

தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘தீபத்தூணில் ராம.ரவிகுமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என, டிச. 4இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

அதை எதிர்த்து, ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அவமதிப்பு வழக்கு டிச. 9இல் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், ‘நீதிமன்ற உத்தரவு மீண்டும் மீண்டும் மீறப்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் தொடர்பாக சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல் வெளியிடும் திட்டம் உள்ளதா என்பதை அறிய தமிழக தலைமை செயலர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., காணொளியில் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து, தலைமை செயலர், ஏ.டி.ஜி.பி., காவல் ஆணையர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு டிச. 12இல் விசாரணைக்கு வந்தன.

அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா.கதிரவன், ரவீந்திரன், அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கோயில் நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி ஆகியோர் ஆஜராகினர்.

டிச.  1இல் ரிட் மனுவில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது விவாதம் நடந்தது.

வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம்:

தீபம் ஏற்றும் விவகாரத்தில், 1994இல் பிரச்னை ஏற்பட்டது. அப்போது தாக்கலான ஒரு வழக்கு அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், ‘வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டப தீபத்தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றலாம். வேறு யாரையும் ஏற்ற அனுமதிக்கக் கூடாது.  எதிர்காலத்தில் தேவையெனில் வேறு இடத்தில் தீபம் ஏற்றும் வகையில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் முடிவெடுக்கலாம். மாற்று இடம் தர்காவிலிருந்து 15 மீட்டர் அப்பால் இருக்க வேண்டும்’ என  உத்தரவிட்டார்.

மலை உச்சியில் தீபம் ஏற்ற, 2014 இல் மற்றொரு வழக்கு தாக்கலானது. நீதிபதி வேணுகோபால், ‘வழக்கமாக ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதை வேறு இடத்திற்கு மாற்றத் தேவையில்லை’ என, தள்ளுபடி செய்தார்.

அதை எதிர்த்து அம்மனுதாரர் மேல்முறையீடு செய்தார். 2017இல் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்தது.

பாரம்பரியமாக தீபம் ஏற்றும் அதே இடத்தில் ஏற்ற வேண்டும் என, கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாற்று இடத்தில் ஏற்றுவது குறித்து அத்தீர்ப்புகளில் குறிப்பிடப்படவில்லை.

வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி 1947 ஆக. 15இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் தொடர வேண்டும். மாற்றம் செய்ய முடியாது.

-என்று வாதிட்டார்.

நீதிபதிகள், ‘அனைவரும் பார்க்கும் வகையில் கூடுதலாக மாற்று இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன?’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு, பி.எஸ்.ராமன், ‘இதை சிவில் வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். ரிட் வழக்கு மூலம் தீர்வு காண முடியாது. வேறு இடத்தில் மாற்றி தீபம் ஏற்றினால் சமூக அமைதியைப் பாதிக்கும்.

‘மாற்றக் கூடாது என கடந்த காலங்களில் நீதிமன்ற உத்தரவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ராம. ரவிகுமார் உள்நோக்குடன் மனு அளித்துள்ளார்’ என்றார்.

வழக்கறிஞர் மாசிலாமணி, ‘மலை இரு பகுதிகளைக் கொண்டது. ஒரு பகுதியில் தர்கா உயரமான இடத்திலும், தீபத்தூண் என குறிப்பிடும் பகுதி சற்று தாழ்வான இடத்திலும் அமைந்துள்ளன. அதில் தீபம் ஏற்றினால் மலையைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு தெரியாது. அது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது நில அளவை எல்லையைக் குறிக்கும் சர்வே கல். கிரானைட்டால் ஆனது. அதில் தீபம் ஏற்றுவது பாதுகாப்பற்றது’ என்றார்.

நீதிபதிகள் விசாரணையை டிச. 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  • (தினமலர் -13.12.2025)

$$$

2 thoughts on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 7

Leave a comment