காவடிச்சிந்து (உரையும் விளக்கமும்): நூல் அறிமுகம்

-கருவாபுரிச் சிறுவன்

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட சென்னிகுளம் அண்ணாமலைக்கவிராயர் தான் உண்மையான கவிப்பேரரசு. அவர் பாடிய  பாட்டெல்லாம் பரமனின் திருமகனாம் முருகப் பெருமான்  மீது மட்டும் தான்.

அப்பாடல்களான காவடிச்சிந்தில் தெளிவான நடை, பொழிவான வண்ணங்கள், இயைப்புத்தொடையின் கருவூலம் மிகுந்து, இன்கவிதைத்  தொகுப்பின் சாரமும், மரபு வழுவாமல்  ஒலிக்கும்  ஓசை நயமும் கேட்பவருக்கு  இறையின்பத்தை உண்டு பண்ணும்.

உடல், உள்ளத்திற்குக் களிப்பினையூட்டும் இப்பாடல்கள் யாவும் எழுத்து, சொல், பொருள் நயத்தோடு விளங்கும். இவ்வளவு சிறப்புடைய காவடிச்சிந்து நூலினை காலந்தோறும் பதிப்பித்தும் வெளியிட்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தோருக்கு வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்கும் விதமாக அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளோடு இந்நூல் அறிமுகம் தொடர்கிறது.

  • மதுரை புக் ஷாப் பி. நா.சிதம்பர முதலியார் அன் பிரதர்ஸ் அவர்களால் திருமங்கலம் ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் பிரஸ்ஸில் அச்சடிக்கப்பட்ட   ‘அண்ணாமலை ரெட்டியார் பாடிய கழுகுமலை சுப்பிரமணியர் காவடிச்சிந்து’ (ஆண்டு குறிப்பிடப்பட வில்லை)
  • சென்னை முரஹரி அச்சுக்கூடத்தில் ஆறுமுக முதலியார் அவர்களால்  1922இல் பிரசுரிக்கப்பட்ட  ‘அண்ணாமலை ரெட்டியார் பாடிய காவடிச்சிந்து’
  • மதுரை தமிழ்ச்சங்க வித்வான் நா.கிருஷ்ண சாமி நாயுடு அவர்களால் 1922 இல் எழுதப்பெற்ற ஆசிரியர் வரலாறும், அரும்பதவுரையும் கூடிய   ‘ஸ்ரீ சிவசுப்பிரமணியர் மீது சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் அவர்கள் இயற்றிய காவடிச்சிந்து’
  • கோலாலம்பூர் கமர்சியல் அச்சியந்திர சாலையில் கட்டுக்குடிப்பட்டு ராம. சொக்கலிங்கம் பிள்ளையவர்களால் 1924 இல்  வெளியிடப்பட்ட ‘அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து’
  • சென்னை கலைமகள் விலாச அச்சுக்கூடத்தில் 1926 இல் வெளியான,  ‘சென்னிகுளம் வித்வான் அண்ணாமலைரெட்டியார் இயற்றிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து’
  • பதிப்பாசிரியர் கு.அழகிரிசாமியைக் கொண்டு 1960இல் சக்தி காரியாலயமும், 2015 இல் வ.உ.சி. நூலகமும் வெளியிட்ட, ‘சென்னிகுளம் அண்ணாமலைரெட்டியார் பாடிய காவடிச்சிந்து’
  • சென்னிகுளம் அண்ணாமலை ரெ ட்டியார் நினைவு விழாக்குழுவினர் 1974, 1994 ஆண்டுகளில்  ஊற்றுமலை வித்வான் ரா. தங்கப்பாண்டியன் அவர்கள்  எழுதிய பொழிப்புரையுடன் கூடிய காவடிச்சிந்து
  • சென்னை தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் பதிப்பாசிரியர் எச்.வைத்தியநாதன் மூலம் 1986 இல் வெளியிட்ட ‘அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து’
  • அருட்கவி அரங்க சீனிவாசன் அவர்கள் 1989 இல் சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரின் கவிதைத் தொகுப்பு
  • சென்னை கவிதா பப்பிகேஷன் 2001 இல் வெளியிட்ட ‘அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து’
  • கெளரா பதிப்பகம், சாரதா பதிப்பகம்  வாயிலாக 2008 இல் முனைவர் கமலா முருகன்  வெளியிட்ட ‘காவடிச்சிந்து (மூலமும் உரையும்)’
  • பாரிநிலையம் செங்கை பொதுவன் – காவடிச்சிந்து
  • வானதி பதிப்பகம், முனைவர் சரஸ்வதி ராமநாதன் – தேன்சிந்தும் காவடிச்சிந்து
  • ஆழ்வார்கள் ஆய்வு மையம் – காவடிச்சிந்து
  • காரைக்குடி மு. நா. நாரயணன்  – காவடிச்சிந்து
  • மேலும்,  இணையத்தில், அண்ணாலையாரின் காவடிச்சிந்து செம்மை உரையுடன் –  செம்மை நதி ராசா என்பவருடைய நூலும்,  சென்னை , ராணிமேரி கல்லுாரி இசைத்துறை பிரிவில்  2019 இல்  சி. சூரிய குமார் என்பவர் அண்ணாமலைரெட்டியாரின் அருந்தமிழ்ப் படைப்பு என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையும் உள்ளன.
  • தமிழ் இணைய பல்கலைக்கழகப் பாடங்களில் சண்முக. செல்வகணபதியின் மூலம், காவடிச்சிந்துப் பாடல்களில் சந்தங்கள் என்ற தலைப்பில்  பாடமாக்கப்பட்டு இருப்பது போற்றத்தக்கது.

-இவை எல்லாம் சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயருக்கு  மணிமகுடமாக விளங்குகின்றன.

 பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் சங்கரன்கோவில் கி.சுப்பையா அவர்கள் தனது இறை திருமகள் நிலையத்தின் வாயிலாகப் பதிப்பித்த  ‘காவடிச்சிந்து: உரையும் விளக்கமும்’ என்ற நூல் அம்மகுடத்தில் பதித்த ரத்தினமாக மிளிர்கிறது.

இந்நூலின் சிறப்புகள் சில:

  • தலைமையாசிரியர் என்ற முறையில் மாணவர்கள் மரபு செய்யுள்களில்  ஆர்வம் காட்டுவதில்லை என்பதை அறிந்துணர்ந்து, அண்ணாமலைக்கவிராயர் வரலாற்றினை செய்யுள் வடிவில் இயற்றி முன்னுதாரணமாகத் திகழ்வது முத்தாய்ப்பான செய்தி.
  • காவடிச்சிந்து இலக்கியத் திறனாய்வு, அண்ணாமலையார் பாடிய அமுதக் கவிதைகள்,அண்ணாமலைக்கவிராயரின் சொல்லாடல்கள் என்னும் மூன்று  கட்டுரைகளும் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற விழைவோருக்கு முதன்மையான  வழிகாட்டி.
  • அண்ணாமலைக் கவிராயர் வரலாற்றினை தனித்தனியாக தலைப்பிட்டது, படிப்பதற்கு ஆர்வத்தைத்  தூண்டுகிறது. இதில் சமகால வரலாற்றினையும் எழுதி உபகரித்திருக்கும்  பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கது.
  • நூலில் இறுதிப் பக்கத்தில் செய்யுள் முதற்குறிப்பகராதி கொடுத்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
  • 252 பக்கங்களைக் கொண்ட இந்நூல் தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

உரையாசிரியர் பற்றி…

  • தன் முன்னோருக்கு நன்றி சொல்லும்விதமாக நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி வாழ்வியலில் அனைவருக்கும் கடைபிடிக்க வேண்டியதாகும்.
  • வித்வான் தங்கப்பாண்டியனார், அருட்கவி அரங்க சீனிவாசன், வழக்கறிஞர் ச.ராமசாமி ஆகியோர் வழங்கிய காவடிச்சிந்துவுரையை மூலதனமாகக் கொண்டு புத்துரை எழுதி அவர்களது உரைகளில் சில  மாற்றம்  காண்பதே இப்பதிப்பின் நோக்கம்  என முன்னுரையில் வெளிப்படையாகக் குறிப்பிடும் துணிபு போற்றத்தகுந்தது.
  •  ‘காவடிச்சிந்தில் வடமொழிச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. இது செய்யுளுக்கு வடுவா… வடிவா? வடிவு – அழகு என்பது  என் கருத்து’ என்ற வரிகள் மொழி அரசியல்  செய்வோருக்கு மறைமுகமாக தலைமையாசிரியர் தன் மோதிரக் கைகளால் கொட்டு வைக்கிறார் என்று கூறலாம்.

 தமிழ் கூறும் நல்லுலகிற்கு உரையாசிரியர் சொல்லும் நற்செய்தி இதோ…

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு

என்பது வள்ளுவம்.

தங்கம் நேர் சங்கத்தமிழ் நூல்களையும் இலக்கிய வான் தொட்ட திருக்குறளையும் காப்பியங்களையும் காவியங்களையும் கவிதைகளையும் கதைகளையும்  நன்னடையிலான நற்கருத்துச் செறிவுடைய ஆற்றொழுக்கான உரை நடை நூல்களைக் கற்க. கற்க வேண்டியதை குற்றமறக் கற்க. கற்ற பின் சூழலுக்கேற்ப ஒப்புரவாம் ஒழுக்கமுடன் வாழ்க. வளம் பெறுக. நலம் பெறுக  என்கிறார். 

நிறைவாக,

சங்க இலக்கியம் என்றால் ஒளவை துரைசாமி பிள்ளையும்,
திருக்குறள் என்றால் பரிமேலழகரும்,
கம்ப ராமாயணம் என்றால் வை.மு.கோ.வும்,
பெரியபுராணம் என்றால் சி.கே.சுப்பிரமணிய முதலியாரும்,
கந்த புராணம் என்றால் பட்டுச்சாமி ஓதுவாரும்,
திருவிளையாடல் புராணம் என்றால்  ராய.சொக்கலிங்கமும்,
திருப்புகழ் என்றால் வாரியார் சுவாமிகளும்
-நினைவுக்கு வருவார்கள்.

 அவர்களைப் போல சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர் காவடிச்சிந்து என்றால் கி.சுப்பையா தலைமையாசிரியர்  அவர்கள்  நினைவுக்கு  வருவார்கள் என்று கூறி நிறைவு செய்கிறேன். 

கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளின் மேல் ஏற்றி - கொழுங்
கனலேறிய மெழுகாய்
வருபவரே வரும் இகமேதி காண்பார்
இன்பம் பூண்பார்! 

-என்ற கருத்தழம் மிக்க காவடிச்சிந்து வரிகளுடன் இந்த நூல் அறிமுகத்தை நிறைவு  செய்கிறேன்.

  • தொடர்புக்கு: இறைதிருமகள் நிலையம் –  94435 07702, 72008 18278

$$$

Leave a comment