-ஜடாயு
அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படைப் பகுப்பில் ஆரம்பித்து, திருக்குறளின் ஒவ்வொரு உபதேசமும் இந்து தர்மத்தின் சாரம் தான். பரிமேலழகர் தொடங்கி அந்த நூலுக்கு உரையழுதிய பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்கள் ஒட்டுமொத்த இந்து தர்ம சாஸ்திரத் தொகுதியின் ஒரு அங்கமாகவே அதைக் கண்டனர். திரு. ஜடாயுவின் இனிய கட்டுரை மீள்பதிவாகிறது...

திருக்குறளைக் குறித்த பொய்யான ஓர் அபத்தவாதம் தமிழ்நாட்டில் கடந்த நூறாண்டுகளாக திராவிட இயக்கத்தினராலும் காலனிய அடிமைகளாலும் அன்னிய மதத்தினராலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.
“திருக்குறளில் பேசப்பட்டிருக்கும் செய்திகள் எந்த மொழிக்கும், எந்த மதத்திற்கும், எந்தக் காலத்திற்கும், எந்தத் தொழிலுக்கும் ஏற்புடையவை” என்கிறார்கள்.
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இன்றைக்குக் கூட உண்மையில் அப்படி ஒரு நீதிநூலை யாரும் எழுதிவிட முடியாது. சாலை விதிகள், செல்ஃபோன் பயன்பாட்டுக் கையேடு போன்றவற்றை வேண்டுமானால் எழுதலாம். அவற்றில் கூட பிரதேச மாறுபாடுகள் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் (வையாபுரிப்பிள்ளை 1500 ஆண்டுகள் தான் என்பார்) திருவள்ளுவர் இப்படி எழுதினார் என்று கூறுவது, உளறல் அல்லது திட்டமிட்ட திரிபுவாதம்.
அந்தத் தொல்பழங்காலத்தில், பாரத நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் மதமும் மரபுமே பண்பாட்டின் அடித்தளமாக இருந்தது என்பது அடிப்படையான வரலாற்று விஷயம். எனவே, திருக்குறள் இந்துப் பண்பாட்டில், இந்து ஞானத்தின் கனியாக மகரிஷியான திருவள்ளுவர் இயற்றிய நூல் என்பதே சரியானது (இங்கு இந்து என்ற சொல் வேதநெறி, பௌத்தம், சமணம் உள்ளிட்ட பாரதநாட்டின் பண்டைய தரிசனங்கள் அனைத்தையும் குறிக்கிறது).
அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படைப் பகுப்பில் ஆரம்பித்து, திருக்குறளின் ஒவ்வொரு உபதேசமும் இந்து தர்மத்தின் சாரம் தான். பரிமேலழகர் தொடங்கி அந்த நூலுக்கு உரையழுதிய பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்கள் ஒட்டுமொத்த இந்து தர்ம சாஸ்திரத் தொகுதியின் ஒரு அங்கமாகவே அதைக் கண்டனர். எனவே, எல்லாவகையிலும் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு திருக்குறள் முற்றிலும் முரணானது. அந்த மதத்தினர் இந்து தர்ம சாத்திரமான திருக்குறளை அன்னியமானதாகக் கருதி வெறுத்தல் இயல்பானது, அதில் எந்த ஆச்சரியமுமில்லை.
“ஆனால் வள்ளுவரையும் குறளையும் பற்றிய சர்ச்சைகளைக் காலம் காலமாய் வளர்த்து வருகிறோம். அவர் இந்துவா, சமணரா? அவர் என்ன ஜாதி? பூணூல் போட்டிருந்தாரா இல்லையா? திருக்குறளை எழுதியது ஒரு தமிழன்! தன்னை ஒரு சிமிழுக்குள் சிறை வைத்துக்கொள்ள மறுத்த ஒரு தமிழன். அபத்தச் சர்ச்சைகளை நிறுத்துங்கள் ஆயாசமாக இருக்கிறது” என்கிறார்கள் சில தமிழ் அறிவுஜீவிகள்.
உண்மையில் இந்த மொண்ணைத்தனம் தான் அபத்தமானதே அன்றி, திருக்குறளைப் பற்றிய அறிவார்ந்த ஆராய்ச்சிகளும் சர்ச்சைகளும் அல்ல. வைதிக, சைவ, வைணவ, சமண, பௌத்த சமயப் பாகுபாடுகளின்றி கற்றறிந்தோர் அனைவரும் பயிலும் பழைய நீதி நூல்களும் சாஸ்திரங்களும் தமிழில் மட்டுமல்ல, சம்ஸ்கிருதத்திலும் (பாணினியின் அஷ்டாத்யாயி, பர்த்ருஹரியின் சதகங்கள், சுபாஷிதம்), கன்னடம் போன்ற மொழிகளிலும் கூட (சர்வக்ஞரின் வசனங்கள்) உள்ளன. எனவே இது திருக்குறளுக்கு மட்டும் உண்டான புதுமையல்ல. விசேஷமான ‘தமிழன்’ சமாசாரமும் அல்ல. சமயங்கள் பலவாகப் பிரிந்திருந்தாலும் ‘தர்மம்’ என்ற இழையில் அவையனைத்தும் பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் பாரதிய மதங்களின் இயல்பு இது. பாரதப் பண்பாட்டின் ஒரு முக்கியமான கூறு.
கால்டுவெல் என்கிற பிரிட்டிஷ் காலனிய வரலாற்று மோசடிக்காரனும், ஜி.யு.போப் என்கிற கிறிஸ்தவப் பாதிரியும் தங்களது பொய்யான இனவாத திரிபுகளையும், பிரசாரங்களையும் கூறும் வரை, திருக்குறளின் தன்மையைப் பற்றி தமிழர்களிடையே எந்தக் குழப்பமும், சர்ச்சையும் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் திட்டமிட்டு திருக்குறளை அதன் பண்பாட்டு அடித்தளத்திலிருந்து பிய்த்தெடுத்தல் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக, திராவிட இயக்க அரசியலின் பின்னணியில் அது கணிசமான அளவில் வெற்றியும் பெற்று விட்டது. இதனைக் குறித்து ‘திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்’ என்ற எனது ‘திண்ணை’ கட்டுரையில் (2008) விரிவாகவே எழுதியுள்ளேன்.
திருக்குறளின் மீது இத்தகைய மாபெரும் வன்முறையை நிகழ்த்தி, பிய்த்தெடுத்து ‘மதச்சார்பற்ற’ நூல், ‘உலகப் பொதுமறை’ என்றெல்லாம் ஓயாமல் பொய்ப் பிரசாரம் செய்தது தான், “தோமாவிடம் வள்ளுவர் பாடம் கேட்டார்” என்று கிறிஸ்தவக் கயவர்கள் அடுத்த கட்ட திரிபுகளை உருவாக்க இடம் கொடுத்தது. அதன் பின்னணியில் தான் இந்த சர்ச்சைகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
அரசியல் ரீதியாக திராவிட இயக்கம் சவப்பெட்டிக்குள் போய்க் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், திருக்குறளை இந்தத் திரிபுகளிலிருந்து மீட்க வேண்டியது முக்கியம். இவ்வளவு மோசமான திரிபுகள் நடக்கும்போது அதற்கு ஒத்தூதிக் கொண்டு, அல்லது தண்டமாக சும்மா இருந்துவிட்டு, உண்மைகள் உரத்துப்பேசப்படும் பொழுது ‘சர்ச்சையை நிறுத்துங்கள், ஆயாசமாக இருக்கிறது’ என்பது கையாலாகத்தனம், சோம்பேறித்தனம்.
$$$