-துக்ளக் சத்யா
பொருள் புதிது- தீபாவளி மலரின் நான்காம் இதழ், துக்ளக் வார இதழில் பணிபுரியும் எழுத்தாளர் திரு. துக்ளக் சத்யா அவர்களின் பதிவு…

தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும்படி, சட்டசபையில் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டும் அவர் மறுத்துள்ளார்.
ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது திமுக தரப்புக்கு அலர்ஜியான விஷயம் என்று தெரிந்தும், வானதி ஏன் அப்படிக் கேட்டார் என்ற அதிருப்தி பலருக்கு இருக்கலாம். இஷ்டமில்லாதவர்களின் வாழ்த்து நமக்கு எதற்கு என்று கோபப்படலாம்.
‘வாழ்த்து தெரிவித்தால் சந்தோஷம். தெரிவிக்க மறுத்தால், அவர்களை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளட்டும்’ என்ற எண்ணத்தில் வானதி கேட்டிருக்கிறார். அவரது கோரிக்கையில் கொஞ்சம் அரசியலும் இருக்கிறது.
சபாநாயகர் பதறிக்கொண்டு மறுத்ததற்கு பதிலாக, ‘அவ்வளவுதானே? அதற்கென்ன? தாராளமாக வாழ்த்தி விடுவோம் ‘ என்று முடிவு எடுத்திருந்தால் வானதியின் அரசியல் முயற்சி தோற்றிருக்கும். அல்லது முதல்வரே குறுக்கிட்டு, சபாநாயகருக்கு பதில் நானே அரசின் சார்பில் வாழ்த்தி விடுகிறேன்’ என்று கூறியிருந்தாலும் பெருவாரியான ஹிந்துக்களைக் கவர்ந்திருக்கும். நல்ல வாய்ப்பை அரசு நழுவ விட்டதாகவே நினைக்கிறேன்.
வாழ்த்து சொல்வது ஒரு பண்பாடு என்ற எண்ணம் இருந்தால் தயக்கத்திற்கு எந்த அவசியமும் இல்லை.
முதல்வரோ சபாநாயகரோ தீபாவளி வாழ்த்து சொல்வதால், சிறுபான்மையினருக்கு நிச்சயமாக கோபம் வரப்போவதில்லை. அது ஒரு நாகரீகம்தானே என்றே நினைத்திருப்பார்கள். அவர்களுக்கு கோபம் வரும் என்று நினைப்பதுதான் அவர்களை சிறுமைப்படுத்துவதாகும்.
ஆனால், ஆளும் தரப்பினர் தேவையற்ற பயத்தில் தவிப்பதால், ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொன்னால் மைனாரிட்டி ஓட்டு குறைந்து விடுமோ என்று நினைக்கிறார்கள்.
அமெரிக்க நாடாளுமன்றம் கூட தீபாவளி வாழ்த்து தெரிவிக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் மனதில் களங்கமற்று இருக்கின்றனர்.
ரம்ஜானுக்கோ , கிறிஸ்துமஸுக்கோ வாழ்த்து தெரிவிக்க முடியாது என்று ஹிந்து தலைவர்கள் கூறுவதில்லை. இங்கே மட்டும்தான் இப்படி.
சொல்லத் தோன்றியது சொன்னேன்.
ஹிந்துவாக பிறந்த அனைவருக்கும், அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும்,இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
- நன்றி: இது, திரு. துக்ளக் சத்யா அவர்களின் முகநூல் பதிவு.
$$$
One thought on “வாழ்த்துவது ஒரு பண்பாடு”