-பத்மன்
தேச சேவை, ஹிந்து சமூக ஒற்றுமைத் தொண்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் கடந்த விஜயதசமியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி விஜயபாரதம் தேசிய வார இதழின் இந்த ஆண்டுக்கான தீபாவளி மலர், சங்கத்தின் ‘பஞ்ச பரிவர்த்தன்’ என்ற ‘ஐவகை முன்னேற்றம்’ என்னும் கருத்தியல் சார்ந்து மலர்ந்துள்ளது. இந்த ‘விஜயபாரதம்’ தீபாவளி மலரில் பஞ்ச பரிவர்த்தன் தொடர்பாக ‘சங்க ஐந்திணை’ என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள கவிதை இது…

நஞ்சை அகற்றிட நெஞ்சில் இனித்திடும்
அஞ்சு வளர்ச்சியை அண்டு. 1
கலிகாலம் வந்துற்றால் நலிவாகும் நற்குணங்கள்
வலிவூட்ட வந்துதித்த வரமாகும் நம்சங்கம்
பொலிவுடனே தந்ததிந்த பொன்போலும் பஞ்சசீலம்
தெளிவுடனே தேறியிதை, தேசத்தைக் காத்திடுவோம். 2
சமூகநோய் தீர்த்திட சமத்துவம் நாட்டிட
சுமுகமாய் நம்மிடம் சுதர்மமும் ஊட்டிட
சிரத்தையாய் ஹெட்கேவார் சுரந்திட்ட நற்சங்கம்
உரத்தினால் கோல்வால்கர் உயர்த்திட்ட பொற்சங்கம்
வழிவழி மேலோர்கள் வளர்த்திடும் நம்சங்கம்
வழியெனக் காட்டிடும் வளம்பரி வர்த்தனம். 3
சங்கம் வளர்த்த தமிழின் அங்கம் இருப்பது ஐந்திணை
சங்கம் வளர்க்கும் நெறியின் அங்கம் வகிப்பதும் ஐந்திணை. 4
திணையெனப் படுவது வகையென அறிக
வினையும் விளைவும் அதன்பாற் படுமே;
சங்கம் செப்பிய ஐந்திணை ஆற்றின்
எங்கும் நம்முடைத் தேசம் ஓங்கும். 5
சாற்றுகிறேன் சங்கத்தின் சீர்மைதரும் கொள்கையினை
நூற்றாண்டைக் கொண்டாட நாட்டுக்கோர் அர்ப்பணிப்பாய்
நாற்றைப்போல் நம்மையெலாம் நட்டுயிந்த பாரதத்தில்
போற்றிடவே வாழவைக்கும் புத்திளமைச் சூத்திரமாம். 6
நாமெல்லாம் ஓர்தாயின் மக்களெனும் நல்லிணக்கம்
நம்மில்லம் நாட்டுயர்வின் நல்லங்கம் என்றிருத்தல்
நம்சுற்றுச் சூழலதை நற்றாய்போல் பேணிடுதல்
நம்தேசம் தன்னிறைவு பெற்றிடவே நன்குழைத்தல்
நம்கடமை நாடதனின் நற்குடியாய் வாழ்ந்திடுதல்
நம்சங்கம் ஈன்றிட்ட நற்பேறாம் ஐந்திணையே! 7
சமூகத்தில் நல்லிணக்கம் சங்கத்தின் ஆதிநோக்கம்
சாதிசொல்லி ஹிந்துக்கள் சாய்ந்தகாலம் போதுமய்யா
ஓதியுணர் மெய்ஞானம் ஒன்றென்னும் மானுடரை
நீதியதில் நின்றேதான் சோதரத்தைப் போற்றிடுவோம்! 8
கங்கைநதி மீனவனும் ராமனவன் தம்பியானான்
கங்கைநதி கொண்டவனும் நந்தனவன் நம்பியானான்
மங்கைக்குப் பாதிதந்தான் மாதேவன் அன்றேதான்
சங்கத்தின் நல்லிணக்கம் சாற்றுவதும் இஃதேதான். 9
குடும்பத்து விழிப்புணர்வு குறைவில்லா நாட்டுணர்வு
விருப்பத்தில் இருப்பதெல்லாம் விரைவில்நம் முன்னேற்றம்
பழம்பெருமை கதையல்ல, பழகினால்நம் கண்தோன்றும்
விழைந்துழைக்கக் குடும்பத்தில் விதைப்பதுவே இந்நோக்கம். 10
மலையும் தெய்வம் கடலும் தெய்வம்
மரமும் தெய்வம் நதியும் தெய்வம்
மணலும் தெய்வம் அனலும் தெய்வம்
மனிதரும் தெய்வம் மற்றதும் தெய்வம்
மறையதைச் சொன்ன நம்திரு நாட்டில்
மறையது கழன்ற மாக்களாய் வாழ்வதோ? 11
நீரிலும் மாசு நிலத்திலும் மாசு
காற்றிலும் மாசு கவளமும் மாசு
மழைநீர் பொழிந்தால் தெருவெல்லாம் சேறு
மழைநீர் நின்றால் வறண்டிடும் ஆறு
பூமித் தாயின் புலம்பல் போக்க
சூழலைக் காத்தல் மூன்றாம் நோக்கம். 12
உலகின் குருவாய் பாரதம் ஆகிட
உலகத் தலைமை பாரதம் ஏற்றிட
உலக வளர்ச்சியில் பாரதம் ஓங்கிட
தாரக மந்திரம் தன்னிறை வொன்றே! 13
தாயகப் பொருளை நுகர்ந்து போற்றல்
தாயகப் படைப்பின் தரமும் திறமும்
தாரணி முழுதும் புகழ்ந்திடச் செய்தல்
தாரணை இதுவே நான்காம் நோக்கம். 14
நாடெனப் படுவது நிலத்தின் பரப்போ?
நன்றாய் வரைந்த வரம்பின் இருப்போ?
நாடெனப் படுவது நற்குடி மக்களும்,
நாடியே வளர்க்கும் நற்குணப் பண்பும். 15
பெற்றோரைப் பேணுதல் பிள்ளைகள் கடமை
பெற்றநாட்டைப் பேணுதல் நன்மக்கள் கடமை
உற்றவகைச் சமூகம் போற்றலும் கடமை
நற்றவம் இதுதான் ஐந்தாம் நோக்கம். 16
தேசம் புரக்கும் தெய்வப் பணியில்
தேகமும் பொருளும் ஆவியும் தருவோர்
நாமே என்பதை நன்றாய் பதித்தே
தாமே பயில்வோம் ஐந்திணை ஒழுக்கம். 17
$$$