-க.சண்முகம்

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம், கரிவலம் வந்த நல்லுார் அருள்மிகு பால்வண்ண நாத சுவாமி திருக்கோயிலில் ஜூன் 12, 2014ஆ ம் தேதி, வைகாசி திங்கள் அனுஷம் நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிய நன்னாளில் புதியதாக எழும்பிய மஹா ராஜ கோபுரத்திற்கும் மூலவர், ஏனைய பரிவார விமானங்களும் குருவருளும் திருவருளும் கூடி நிற்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைப் போற்றும் விதமாகவும், ராஜ கோபுரத்தை வரவேற்கும் விதமாகவும் ‘களாஈசனை வாழ்த்தவே’ என்னும் தொகுப்பு நூல் குகபதி பதிப்பகத்தாரால் வெளியீடு செய்யப்பட்டது. சைவர்களின் குல தெய்வம் மாதவசிவஞான யோகிகளின் பூர்வீகத் தலமான விக்கிரமசிங்கபுரத்தில் வசிப்பவரும், பல்வேறு அடியார்களுக்கு எளிதில் புரியும் வகையில் சைவ சித்தாந்த செம்பொருளை உணர்த்துபவருமான விரிவுரையாசிரியர் க.சண்முகம் எம்.ஏ. அவர்கள் அந்நூலிற்கு உவந்து அளித்த மதிப்புரை இது...
ஆன்மாக்களிடையும் பிறவிகளுள், மனத்தின் சிறப்புணர்வாகிய பகுத்துணர்விற்குச் சாதனமான மாநுடப்பிறவியே மிக மேலானது. இப்பிறவியானது ஏனைய பிறவிகளில் வருந்திய துன்பத்திற்கிரங்கிக் கருணை மேலிட்டால் சிவபெருமானால் தரப்பெற்றது. அவர் தந்ததும், உலகவிடயங்களைப் பகுத்துணர்ந்து அவற்றின் நிலையாமையினையும் அவற்றாலுண்டாகும் இன்பத்தின் நிலையாமையினையும் உணர்ந்து அவ்வுணர்ச்சி காரணமாக தானாகிய ஆன்மாவையும் தலைவனாகிய பரமசிவனையு முள்ளவாறுணர்ந்து அழியாத இன்பம் அடைதற்பொருட்டேயாம். இவ்வுணர்ச்சியும் சிவனை வழிபடுதலால் நிகழ்வதாம். ஆதலால் தேவவுலகத்தில் பக்குவப்பட்ட கன்மங்காரணமாக இன்பத்தை யநுபவித்துக்கொண்டிருக்கும் தேவர்கள் பிறவியும் இம்மாநுடப் பிறவிக்கு இணையாகாது. இக்கருத்துப்பற்றியே, ஞான நூல்கள் காட்டும் எழுவகைப் பிறப்பில் மக்கட்பிறவி மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதுபற்றியே
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்றும்,
“வாய்த்தது நம்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்றும்,
“மானிடராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா” என்றும்,
எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிதரிது காண் இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ” எனவும் கூறுகின்றன.
இம் மானிடப் பிறப்பிலும் சைவம் சார்ந்து சிவவழிபாடு செய்யாமல் உய்தி பெற முடியாது.
இதை
“நரர்பயில் தேயம் தன்னில் நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்துத் தோன்றல் மிக்க புண்ணியத்தால் ஆகும்” – என்றும்,
“சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது” – என்றும்,
“மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம் ஆன்இடத்து ஐந்தும் ஆடும் அரன் பணிக்கு ஆக அன்றோ” – என்றும் அருள்நந்தி கூறுவார்
“வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே” – என்பார் நாவுக்கரசு பெருமான்.
எனவே மக்கட்பிறப்புள்ளும் சைவத்தில் பிறத்தல் பெருமையுடைத்து. அச்சைவப்பிறப்பினும் சிறப்புச் சைவராதல் சிறப்புடைத்து என்பது.
சிறப்புச்சைவர்யார்? எனில் எழு வயதுக்குள் தீட்சை பெற்று நித்யக்கடன்களை இயற்றுவோர்.
முனிவர் கடன் கேள்வியாலும்,
தேவர்கடன் வேள்வியாலும்,
தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலாலும் அல்லது செலுத்துதற்கூடாதாயினும்,
ஆன்மாக்களின் (அடிமைகளின் )கடனாகிய ஆண்டவனை நித்தியம்,நியமமாய்ப் பூசிப்பதால் அனைத்துக் கடனும் நிறைவேறியதாய்க் கொள்ளப்படும்.
எனவே சைவ மரபிலே பிறந்த அனைவரும் செய்யாமற் செய்த இறைவன் கருணைக்கு நாம் செய்யக் கூடிய நன்றிக் கடன் அவனை நியமமாய் வழிபடுவதே ஆகும். அதற்கு நாம் உரிய காலத்தில் ( ஏழு அல்லது ஒன்பது வயதிற்குள்) தீக்கைபெற்றுச் சிறப்புச் சைவர்களாகி, நித்திய வழிபாடியற்றுதற்கு ஆலயங்கள் இன்றியமையாதன.
களா ஈசனை வாழ்த்த வந்த சிறிய பெருந்தகையார் கருவாபுரி, பா.ஸ்ரீராமகிருஷ்ணன் அவர்கள் ஒப்பனையம்பாள் சமேத சுயம்பு மூர்த்தி பால்வண்ணநாத சுவாமிகளின் திருவருளை நிரம்பப் பெற்றவர்.
ஸ்ரீநம்பியாரூரர் அடியார்கள் திருக்கூட்டத்தை உருவாக்கிய ராஜா சுவாமிகள் இட்ட வித்தை விருட்சமாக்கிய வித்தகர்.
திரு.வி.க. அவர்களின் ஆண்டறிக்கையின் விஷேடமின்மைபற்றி உ.வே.சா. அவர்கள் உரைத்த கருத்தைத் தாமரைத் தடாக நியாயம்பற்றித் தங்களுக்கும் உரைத்ததாகக் கொண்ட பெருநோக்குடையார்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுதற்கிணங்க நுண்புலனும், நுழைபுலனும், மாண்புலனும் உடையதாய் அவர் தம் ஆய்வு மிளிர்கிறது.
கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகளின் திருவாசகம், திருக்கோவையாரையும் ஓதாது உண்ணாத்திறம் கூறி உயிர்ப்பசி ஆறி, பின் ஊண்பசியாறவேண்டிய சைவர்களின் கடமையைத் தகுந்த திருட்டாந்தம் மூலம் உணர்த்தியுள்ளார்.
நந்தியெம்பெருமான் சிவபெருமானிடத்து வேண்டிப்பெற்ற வரங்களை வழுத்தும் அனைவரும் வளம் பல பெறுவார்கள் என்பது திண்ணமாகும் எனக்கூறி சைவர்களுக்கு இருக்க வேண்டிய தலையாய பண்பை உணர்த்தியுள்ளார்.
புதிதாக எழுப்பப்பட்ட மஹா ராஜகோபுரத் திருக்கோயில்கள் வரிசையில் கரிவலம்வந்தநல்லூர் அன்னை ஒப்பனையம்பிகை சமேத எந்தை சுயம்புவாகத் தோன்றிய பால்வண்ணநாத சுவாமி ஆலயமும் அணி செய்து மிளிர்வது போல, இவர் தம் ஆய்வும் ராஜ கோபுரமாய், மூவிரண்டு ஆண்டுகளாக இந்நூல் தொடர்பாக அல்லும்பகலும் கருவிருந்து பெற்ற புண்ணியக் கொழுந்தாய் மிளிர்கிறது.
உயர்ந்த மாந்தர்களாக கருதப்படுபவர்கள் நிதிவழங்கல், அன்னச்சத்திரம் அமைத்தல், குளம் வெட்டல், நந்தவனம் நிறுவுதல், அந்தணருக்கு இருக்கைகள் ஏற்படுத்துதல், தேவாலயத் திருப்பணி செய்தல், பிரபந்த நிர்மாணம் என்ற ஏழு வகையான சிவப்புண்ணியங்களைச் செய்வார்கள் என்று அறம் புரிவோரைக் கோடிட்டு காட்டுவார் வில்லிபுத்தூரார் எனக் கூறிய ஆசிரியர், நம் சித்தாந்த சாத்திரங்கள் கூறும் பொதுப்பசுபுண்ணியம்,சிறப்புப்பசுபுண்ணியம், பொதுச் சிவபுண்ணியம், பொதுச்சிறப்புச் சிவபுண்ணியம், சிறப்புச் சிவபுண்ணியம், அருஞ்சிறப்புச் சிவபுண்ணியம் பற்றியும் கூறியிருக்கலாம்.
பிரம்மரந்திர மத்ய கபாலத்வாரஸ்தானம் என்று ஞானிகளால் போற்றப்படக்கூடிய மஹா ராஜகோபுரம் என்ற சிறப்பான ஒரு செய்தியைத் தந்திருக்கிறார். பொதுவாக சர்வஞானோத்தரம், காமியம் போன்ற ஆகமங்கள் திருக்கோயில் முகப்பில், உயர்ந்து மூன்று, ஐந்து, ஏழு முதலான பல மாடங்களும் பலப்பல சிறபங்களும் உடையதாய், கலசங்களுடன் காணப்படும் கோபுரம் ஒரு தூல லிங்கம் அல்லது தேகான்மா என்றும், திருப்பாதமென்றும், விஸ்வரூபமென்றும் தான் கூறியுள்ளன.
இதில் மாடங்கள் – 3 அவத்தை அல்லது. தூல, சூக்கும. பர தேகங்களைக் குறிக்கும். 5 மாடங்கள் – 5 பொறிகளையும், 7 மாடங்கள் – 5 பொறிகளுடன் மனம், புத்தியையும், 9 மாடங்கள் – 5 பொறியுடன் 4 அந்தக்கரணங்களையும் குறிக்கும். இக் கோபுரம், திருக்கோயிலுக்கு (தீட்டு, வயோதிகம், நோய்நொடி, இன்னும் பல காரணங்களால்) வரஇயலாதவர்களும் தூரத்திலிருந்தே திரிதாங்க (தலை, இரண்டு கைகள் ஆகியவற்றால்) வணக்கம் செய்து பயனடையும் பொருட்டு கருணையுடன் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே இத்தெய்வீகக் காட்சி தடைப்படும் வகையில் பிற கட்டடங்களை எழுப்புவது பெரும் பாவச் செயலாகும் என்றும் தான் கூறுகின்றன.
சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஆரூரர் உணர்த்திய அடியார் பெருமைகளை உரைத்து மகிழ்ந்தது போல், மண்ணில் வாழ்ந்து, வாழ்ந்து கொண்டுசிவப்பணி செய்த செய்யும் அன்பர்களின் வண்ணத்தைப் பால்வண்ணர் உணர்த்த அதை உயிர்ப்பாக வைத்தே இந்நூலை அமைத்திருக்கிறார்.
சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது . ஸத்யம் பூதஹிதம் ப்ரியம் , பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் உயிர்களுக்குநன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே! என்று காட்டியுள்ளார். ஆயினும் வினைவயப்பட்ட நமக்கு வாக்கும், மனமும் நம் வசத்தில் இல்லையே , நாம் அல்ல இந்திரியம், நம் வழியின் அல்ல என்பது சிவஞானபோதம். இது சத்தான அறிவில் அன்றிச் சத்தியம் உண்டாகாது. தெளிந்த அறிவிலன்றோ எது நல்லது என்பதும் எது உண்மையான நித்ய இன்பம் தருவது என்பதும் விளங்கும்.இதுபற்றியே நம் பெருமான் சத்துசித்து ஆனந்தம் எனப்படுகிறான்.
ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால் அதையாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்., அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம் என்பதை உணர்த்தினார். அல்லூழி எல்லாம் சித்திரத்தில் கண்ட சோறு போலப் பயனின்றிப் போம்.
இதை உவட்டா உபதேசம் என்பார் ஔவையார்.
எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று நில்லா வகையை நினைந்து என்பார் உமாபதி சிவம்.
அருளளி பரப்பும் திருக்கருவையம்பதி தலபுராணத் துதிப்பாக்கள் வந்தது விதியாலல்ல; வீதியால் என்று காட்டி, அது பற்றிய குறிப்பும், வீ என்பது நெற்குன்றநகர் முத்துவீரப்பக் கவிராயர் அவர்களாலும், தி என்பது எட்டிசேரி ச.திருமலைவேற்கவிராயர் அவர்களாலும் இயற்றப்பட்ட செய்யுள்களாகும் எனக் காட்டியுள்ளார்.
தென்தமிழக பஞ்சபூதத் திருத்தலங்களின் தனிச்சிறப்பு யாதெனில் ஆதித்த பகவான் தோன்றி மறையும் காலங்களுக்குள் ஐந்து திருக்கோவிலில் உறையும் அம்மையப்பனை தரிசித்து, வாலி பெற்றது போன்ற திருவருளைப் பெறலாம் என்பது நோக்கற்குரியது. (திரேதாயுகத்தில் இந்திரனின் மகனாகத் தோன்றியவன் வாலி. அவன் மிகச் சிறந்த சிவபக்தன். நாளெல்லாம் நாதன் நமசிவாயனை பூஜிப்பதையே தன் பிறவிக் கடனாகக் கருதி, தினந்தோறும் உதயகாலம் முதல் சந்தியாகாலம் வரை கடல் நீராடி, எட்டுத் திசைகளிலும் சென்று சிவபூஜை செய்து முடிப்பது வாலியின் வழக்கம்)
இந்திரனின் ஐராவதமாகிய யானை வலம் வந்து வணங்கி வழிபட்ட இறைவன் எழுந்தருளி இருக்கும் சிறப்புக்குரிய தலம் ஆதலால், இத்தலத்திற்கு கரிவலம்வந்தநல்லூர் என பெயர் வந்தது எனப் பெயர் விளக்கம் தந்துள்ளார்.
திருவாசகம் கல்லைப் பிசைந்து கனியாக்கும் கவினை உடையது. மனம், மொழி, மெய்களை ஈசன்பால் ஈர்க்கச் செய்வது இத்திருவாசகத்திற்கு நிகரான குட்டித் (உத்தர) திருவாசகம் எனப்படும் திருக்கருவை அந்தாதிகளை தன்அகத்தே கொண்டது இத்திருக்கருவை மாநகர். பிரமோத்திர காண்டம் தந்த வரதுங்கராமபாண்டியர், சேரமான்போல ஒரு அருளரசர். பால்வண்ணநாதர் மீது என்றும் வாடாத பாமாலையாம் திருக்கருவைஅந்தாதி திருக்கருவைக் கலித்துறைஅந்தாதி, திருக்கருவை வெண்பாஅந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்துஅந்தாதி முதலிய பாவண்ணங்களை சாத்தியுள்ளார் எனக்காட்டி இருக்கிறார்.
பரிவார தேவதைகள் உட்பட கோவில் அமைப்பைப் பற்றிய முழுத் தகவலையும் தந்துள்ளார்கள். திருவிழாக்கள் பற்றிய விபரம் தந்துள்ளார்.
சைவசிரோண்மணி, சிவஞானபானு, ஞானவள்ளல், ஞானப்பிரபு, ஞானவேந்தர் என்று அழைக்கப்பெறும் அன்னை சிவகாமசௌந்தரியம்பிகை சமேத எந்தை வரதுங்கராமபாண்டிய மன்னரின் திருவடிக்கு மனம், மொழி, மெய்களால் நமஸ்காரங்களைச் செலுத்தி திருவருளுக்கும், குருவருளுக்கும் பாத்திரமாவோமாக என வரதுங்கராம பாண்டிய மன்னரை சிவமாய்க் கண்டு போற்றும் பெருந்தகையாளர்.
இந் நூலில் திருத்தலத்தின் பொதுச் சிறப்பும், தனிச்சிறப்பும் உரைத்த பாங்கு கண்டு இன்புறத்தக்கது.
தோணியப்பர் போற்றும் பிள்ளைப்பாண்டியன் என்னும் அதிவீரராமபாண்டியன் அழகுப்பெருமாள், கொற்கையாளி, குலசேகரன், சீவலவேள், சீவலமாறன், வரீ மாறன், அதிவீரன், வரராமன், வல்லபதேவன், குணசேகரவழுதி, தமிழ் வளர்த்த தென்னவன் என்று பல்வேறு பெயர்களைக் கொண்டவன் என்பதையும், இவர் தம் பெருமைக்கு இவருடைய படைப்புகள் ஆகிய காசிக்காண்டம், கூர்மபுராணம், லிங்கபுராணம், வாயு சங்கிதை,நறுந்தொகை, மற்றும் நைடதம் போன்ற நூல்களே சான்றாகத் திகழ்வதையும் அண்ணலுக்கேற்ற தம்பி என்பதையும் இவர் நூல் மூலம் உணர்த்தியுள்ளார்.
இன்னும் எத்தனையோ பெருமைகள் உடைய இந்நூலுக்குத் தாலிபுலாக நியாயம்பற்றி ஒரு சிலவற்றை எடுத்துரைத்ததும் சிவசங்கற்பமே. நூற்புத்துறைச் சார்ந்த தமிழ் அணியில்லாப் பேதையையும் அணிந்துறைக்கச் சொன்னது எழுத்துப் போலியையும் எழுத்து என ஆளுகின்ற தன்மை பற்றியோ, அல்லது முக்களா தொடர்பு பற்றியோ என்பதறியேன்.
எளியேன்,
திருவடித்தொழும்பன்
க.சண்முகம் எம்.ஏ.
$$$