-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #78...

78. ஒட்டடைகளை உடனுக்குடன் ஒழிப்போம்!
எலி கொழுத்தால் மட்டுமல்ல;
வாடினாலும் வளையில் தங்காது.
ஓநாய் கொழுத்தால் மட்டுமல்ல;
பட்டினியால் வாடினாலும்
ஊளையிட்டுக் கிளம்பும்.
முன்பு பயங்கரவாதிகள் வெடி மருந்தை மடியில் கட்டிக்கொண்டு
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இப்போது
ஒரு நாடே இடுப்பில் வெடி மருந்தைக் கட்டிக்கொண்டு
தற்கொலைத் தாக்குதலில் இறங்கியிருக்கிறது.
அரசு, ராணுவம், பயங்கரவாதிகள்,
மூவரும் ஒன்று கூடி நின்று
புனித வசனங்கள் முழங்கப்
புதைத்த சவப்பெட்டியின் மேலே
போர்த்தப்பட்டிருந்தது தேசியக் கொடி
உள்ளே கிடத்தப்பட்டிருக்கிறது அவர்கள் தேசம்.
*
இதுவரையில் அந்த ஓநாய்கள்
கிடைக்குள் ஊடுருவியிருந்தன.
புல்வெளிகள் செழிக்கச் செழிக்க
ஆடுகளின் மாமிசம் செழித்தது.
ஆடுகளின் மாமிசம் செழிக்கச் செழிக்க
ஓநாய்களின் உடல் கொழுத்தது.
கிடைக்குள் ஊடுருவிய ஓநாயை
இடையனால் இனம் காண முடியவில்லை.
ஏனென்றால்,
ஆட்டின் தோலை அல்ல;
உடம்பையே போர்த்தியிருக்கின்றன.
ஆடுகளின் மாம்சத்தை அல்ல;
ஆன்மாவையே கடித்துக் குதறிவிட்டன.
இடையன் வெட்டும் வற்றாத நீரோடைகள்
ஓநாய்களின் தாகம் தணிக்கின்றன.
கண் விழித்துக் காக்கும் புல்வெளிகள்
ஓநாய்களின் மறைவிடங்களாகின்றன.
ஒரு பயங்கரத் தாக்குதல் நடக்கும்போதுதான்
பாலைவன ஓநாய்களால் சூழப்பட்டிருப்பதே
பாவப்பட்ட ஜன்மங்களுக்குத் தெரியவருகிறது.
*
ஊடுருவிய ஓநாய்க் கும்பல்
உண்டு புணர்ந்து உறைவிடம் பெருக்கி
உற்சாகமாக இருந்தபோது
பட்டினி கிடந்த
பக்கத்துப் பாலைவன ஓநாய்க் கும்பல்
செழிப்பான கிடைக்குள் பாய்ந்து
கைக்குக் கிடைத்த ஆடுகளைக் கடித்துக் குதறியது.
பனிவன ஓநாய்க்குட்டி ஒன்றும்
பயங்கரவாதப் பாய்ச்சலில் மாட்டிக்கொண்டது.
அதையும் கொன்றது பாலைவன ஓநாய்க் கும்பல்
ஒரு புதிய போர் ஆரம்பித்திருக்கிறது.
*
கிடைக்குள் ஊடுருவியதைப் பொறுத்துக் கொண்டோம்…
பல்கிப் பெருகுவதைப் பார்த்துக் கொண்டுதான் நின்றோம்….
குரல்வளையைக் கடித்து, குருதி உறிஞ்சி
சப்தம் எழுப்பாமல் கொன்று தின்ன
ஒருநாளும் ஒருபோதும் தடை சொன்னதில்லை.
இத்தனை செய்து தந்த பிறகும்
இப்படியான கொலை வெறித் தாக்குதல் ஏன்?
அமைதிப் பூங்காவாக இருந்தால்தான்
புல்வெளிகள் செழித்து,
நீரோடைகள் நிரம்பி,
ஆடுகள் கொழுத்து…
நல்லது
எல்லாம் நல்லபடியாக நடக்க
எல்லா காடுகளுக்கும் சென்று செய்துகொண்ட
எளிய ஒப்பந்தம் அதுதானே…
அதையும் மீறினால்…
அண்டை நாட்டு ஓநாய்களுக்கு
எந்நேரமென்றாலும் இங்கு வந்துபோகவும்
எத்தனை காலமென்றாலும் இங்கு தங்கிக்கொள்ளவும்
எந்தத் தடையும் விதிக்கவே இல்லையே!
எதற்காக இந்தப் பயங்கரவாதப் பாய்ச்சல்?
பனிவன ஓநாய்க்குட்டியை
கதறக் கதறக் கொன்றதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?
ஆடுகளை மட்டும் கொன்று குவித்திருந்தால்
அமைதியாகத்தானே இருந்திருப்போம்?
பனிவன ஓநாய் ஊடுருவிய கிடையின் ஆடுகள் எல்லாம்
பாலைவன ஓநாய்களைப் பாய்ந்து கடிக்கத் தயாராகிவிட்டன.
நச்சுயிர் கொன்று நல்லுடல் காக்க…
பாலைவன ஓநாய்க்கு எதிராக
இப்படியானதோர் பாய்ச்சல்
இதுவரை இந்தக் கிடை கண்டிராதது.
ஒரே ஒரு பனிவன ஓநாய்க்குட்டி கொல்லப்பட்டதற்கு
பாலைவன ஓநாய்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்படுகின்றன.
சாந்தியும் சமாதானமும் எப்போதும் நிலவ வேண்டும் என்று சொன்னவைகூட
சக்கர வியூகம் வகுக்கத் துணை நிற்கின்றன.
சீறிப் பாயும் காவல் பைரவர்கள்
சிந்தூரச் சிங்கங்களாகச் சுற்றி வளைத்துக் கொல்கின்றனர்.
ஒட்டுமொத்தக் காவல் பைரவர்களும்
ஒரே குரலில் உரக்கக் கத்துகின்றனர்
(அது ஓநாயின் ஊளையைப் போலவே இருக்கின்றது.
ஒரே குடும்பம் தானோ
தவிர்க்க முடியாததும் தானே?)
ஓநாயைக் கொல்ல வேண்டுமென்றால்
ஓநாயாகித்தான் தீர வேண்டும்.
ஓநாயின் ஊளையை அடக்க வேண்டுமென்றால்
பைரவர்களும் ஊளையிட்டுத்தான் ஆக வேண்டும்.
தவறே இல்லை.
அதுவே தர்மம்.
பாலைவன ஓநாய்கள் கொல்லப்படுவதில்
முழு முழு சந்தோஷமே…
ஆனால்,
பக்கத்தில் பதுங்கியிருக்கிறது
பனிவன ஓநாய்க் கூட்டம்.
அதன் கொள்ளிக் கண்களில் ஒளிர்கிறது செஞ்சிலுவை
கடைவாயோரம் கசிகிறது சிந்தூரத் துளிகள்.
*
கிடை பாதுகாப்பு பெற வேண்டுமென்றால்
அண்டை பாலைவன ஓநாய்கள் மட்டுமல்ல…
கிடைக்குள் ஊடுருவியிருக்கும் பாலைவன ஓநாய்கள் மட்டுமல்ல…
அந்நியப் பனி வன ஓநாய்களும் அழிக்கப்படவேண்டும்.
பக்கத்து நாட்டில் ஈத் பண்டிகையின்போது
ஆடுகளின் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மற்ற நாட்களில் ஹிந்துக்களின் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எங்கெல்லாம் ஆடுகள் கொல்லப்படுகின்றனவோ
அங்கெல்லாம் பாயவேண்டும் காவல் பைரவர்கள்.
*
வங்கத்து மூளி அலங்காரி
என்றைக்கு சிந்தூரம் தரிப்பாள்?
பனி வன ஓநாய்க்குட்டி எதுவும் அங்கு
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாக வேண்டுமா?
*
ஒரு நேரத்தில் ஓர் ஓநாயையே அழிக்க முடியும்.
தெரிய வேண்டியதெல்லாம்
எந்நேரத்தில் இன்னோர் ஓநாய் குறிவைக்கப்படும்?
தூரத்து ஓநாய்களைத் துரத்தித் துரத்தி தாக்குதல் நல்லது
ஊடுருவியிருக்கும் ஓநாய்களின் குடலை
என்றைக்கு உருவப் போகிறோம்?
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
நெருப்பு எரியும்போதே
அத்தனை ஆயுதங்களையும் கூர் தீட்டிக் கொள்.
இருப்பதைக் காக்க வேண்டுமென்றால்
இழந்ததையெல்லாம் மீட்டுக் கொண்டாக வேண்டும்.
அடுத்த கும்ப கர்ணத் தூக்கத்தில் ஆழ்வதற்குள்
அத்தனை எதிரிகளையும் வென்றாகவேண்டும் அனுமன்
அதற்கு அவன் விழித்தெழும்போது
அத்தனை எதிரிகளையும் பற்றி
அவனுக்குச் சொல்லியாக வேண்டும்
*
அடக்கி ஆளும்போது சொன்னது:
உடம்பால் இந்தியர்; உள்ளத்தால் ஆங்கிலேயர்
வெளியேறியபோது சொல்லாதது:
உடம்பால் சுதந்தரர்: உள்ளத்தால் காலனிய அடிமை.
விளைவு:
உடம்பால் இந்தியர்; உள்ளத்தால் ஹிந்து விரோதி.
*
போர் வேண்டாமென்று கையெழுத்திடும்
அத்தனை புத்த பிக்குகளையும்
எல்லைக்கு அனுப்பிவைத்து
அண்டை நாட்டானை ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறும்படி
அன்பாகக் கேட்டுக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
சுற்றுலா மையத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்களுக்கு
எல்லையோரம் எழுப்பச் சொல்ல வேண்டும் நடுகற்கள்
பயங்கரவாதிகளின் அடக்கஸ்தலத்திலிருந்து பிணங்களைத் தோண்டியெடுத்து
பாலை மணல் வெளியில் வீசி எறியச் சொல்ல வேண்டும்.
என்றுமே உன் காதலியாக இருந்திராதவளை
இன்னொருவரின் மனைவியான பின்னும்
உன்னுடன் வரச் சொல்லி உபத்திரவம் செய்யாதே என்று
இன்சொல் சொல்லி
அன்பாகக் கொண்டுசென்ற அமைதிப் புறாவைக் கொடுத்து
அவர்கள் தருவதை வாங்கிக் கொண்டு வந்து சேரவும் என்று
வழிச் செலவுக்கு உண்டியலை வழிய வழிய நிரப்பி
வாய்க்கரிசியும் கொடுத்து அனுப்ப வேண்டும்.
வாசலில் குவியும் குப்பையைக் கூட்டித் தள்ளினால் போதாது
உள்ளே படியும் ஒட்டடையையும்
உடனுக்குடன் அடித்தாக வேண்டும்.
அதைச் செய்யத் தவறுபவர்கள்
குறைந்தபட்சம் போகி கொண்டாடும்போதாவது
அனைத்தையும் அள்ளிப்போட்டு எரித்தாக வேண்டும்.
$$$