-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #77...

77. கள்ளப் பூனைகளின் பச்சைக் கண்கள்
குண்டு மல்லிச் சரத்தை
ஆசை ஆசையாக வாங்கிக் கொண்டார்…
பச்சிளம் குழந்தையின்
மென் கேசம் வருடுவதுபோல் வருடினார்…
பயண வழி நெடுக
உச்சி முகர்வதுபோல் நுகர்ந்தபடியேவந்தார்…
யாரும் பார்க்கிறார்களா என்று அஞ்சியபடியே
அன்பு மகளுக்குச் சூடினார்
சட்டென்று அகற்றியும்விட்டார்.
சேரவேண்டிய இடம் வெகுதொலைவில் இருந்தும்,
இறங்க வேண்டிய இடம் வந்ததும்
குண்டு மல்லிச்சரத்தை
இருக்கையில் விட்டுவிட்டு இறக்கிச் சென்றார் பாயம்மா.
எளிய ஆசையின் மீதான
இயல்பான வேரின் மீதான
அராஜக அடக்குமுறையின் வாசம்
பேருந்து முழுவதும் பரவியது.
//முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை//
என்று நெக்குருகிக் கொண்டிருந்தவருக்கு,
மலர் சூடவே முடியாமல் போகும்
பாயம்மாக்களின் சோகம்
மனதை வாட்டாமலே போனதன் மர்மம் என்ன?
திலகம் தரிக்கவே முடியாமல் போகும்
பெந்தேகோஸ்தே பெண்களின் ஏக்கம்
திடுக்கிடச் செய்யாமல் போனதன் மர்மம் என்ன?
*
//உண்ணும்போது ஒரு பருக்கை
தவறிக் கீழே விழுந்துவிட்டது.
வருந்தினேன்.
இவன் கணக்கில்
பத்து எறும்புகளுக்கு உணவிட்ட புண்ணியத்தை எழுதுங்கள்
என்றான் இறைவன்.//
ஈத் பண்டிகைக்கு ஆட்டுக் குட்டிகளை
ஹலால் முறையில் புனித வசனங்கள் ஓதி
கழுத்தை அறுத்துக் கொன்றபோது
இவர்களின் பெயரில் என்ன எழுதியிருப்பார் ஏக இறைவன்?
*
//ஆடுகளைப் போலவே
ஓநாய்களுக்கும் வயிறு உள்ளது.
தாவரங்களிடம் விசாரித்தால்
கதை கதையாகச் சொல்லும்
ஆடுகளின் அத்துமீறல் குறித்து//
உண்மைதானே…
ஒரு சொட்டு உதிரம் வராமல்
ஒவ்வொரு குழையாக மேய்ந்தாலும்
ஒரு தாவரமும் சாகாமல் உண்ணும் ஆடும்,
ஒரு வேளை உணவுக்காக ஓர் உயிரை
ஓட ஓட விரட்டிக் கொல்லும் ஓநாயும் ஒன்றாம்!
இல்லையா பின்னே…
தலையை வெட்டுவதும்
தலை மயிரை வெட்டுவதும் ஒன்றேதானே?
செந்தேள்களின் கொடுக்குகள்தான் எவ்வளவு வசீகரம்!
கள்ளப் பூனைகளின் பச்சைக் கண்கள்தான் எவ்வளவு வனப்பு!
கருநாகங்களின் உடல்தான் என்னே மினுமினுப்பு!
சில அன்பின் சிப்பிகளைத் திறக்கவே பயமாக இருக்கிறது.
$$$