உருவகங்களின் ஊர்வலம் -76

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #76...

74. எப்போது நிகழும் அடுத்த அவதாரம்?

மேற்கில் உதிக்கும் சூரியனின் ஈர்ப்பு விசை
தலைகீழானது;
தன் நிறைவை மட்டுமே தலையானதாகக் கொண்டது.
தன் மையத்தைச் சுற்றியே
அனைத்தையும் அப்ரதஷிணம் செய்ய வைக்கக் கூடியது.

சுற்றிவரும் கிரஹங்கள் என்னதான் நினைத்தாலும்
தம் நீள் வட்டப் பாதையில் இருந்து
அரை அங்குலம் கூட விலக முடியாது.
கண்ணுக்குத் தெரியாத காந்த விசை…
கழற்றவே முடியாத கடிவாளங்கள்.

அத்தனை கிரஹங்களிலும்
அழிவை மட்டுமே நிரப்பியிருக்கும்
அந்தக சூரியனைச் சுற்றித்தான்
நாம் வாழும் நற்கிரகமும்
தன் கிழக்கு சூரியனை விட்டு விலகிச்
சுற்றிச் சுற்றிவருகிறது.

இந்தச் சுழற்சி
நடன லயச் சுழற்சி அல்ல
தலை சுற்றல்.
நம்மைச் சுற்றிவரும் நவீனத் துணை கிரஹம்
ஒளி பொருந்தியது என்றாலும்
பூமி சுற்றும் மேலைச் சூரியனின் ஒளியையே அது
மேலிருந்து பிரதிபலிக்கிறது.
அதனால் அங்கும் உயிர் வாழ்க்கைக்கு இடமில்லை.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல;
ஒளிர்வதெல்லாம் இந்து அல்ல.
நாம் வாழும் பூமி மேற்குச் சூரியனைச் சுற்றுவதால்
நம்மைச் சுற்றும் இந்து கிரஹமும் அதைச் சுற்றுகிறதா?

நம்மைச் சுற்றும் இந்து கிரஹம் அதைச் சுற்றுவதால்
நாமும் மேற்குச் சூரியனைச் சுற்றியாக வேண்டியிருக்கிறதா?

இந்து கிரஹம் பிரதிபலிக்கும் ஒளிதானே
நம் பூமிக்கு இருள் காலங்களில் வழிகாட்டுகிறது?
மேற்கில் உதிக்கும் சூரியனைச் சுற்றும் இந்து பூமி
எத்தனை காலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியும்?

சீக்ர உச்ச தருணங்கள் அதிகரிக்கின்றன.
நீள் வட்டப்பாதையின் விட்டம் குறைகிறது.
மேற்குச் சூரியனை நெருங்க நெருங்க பிரகாசம் அதிகரிக்கிறது.
அது கண்ணை மட்டுமல்ல;
ஒட்டுமொத்த உடம்பையும்
எரித்துப் பொசுக்கும் எரிமலைப் பிழம்பு என்பது
அதி விரைவிலேயே புரிந்தாக வேண்டும்.

எல்லா எரி நட்சத்திரங்களும்
சூனியக் கருந்துளையில் சென்றுதான் முடியும்.
என்றாலும்
பூமிப் பந்தின்
‘வாழு வாழவிடு’ என்ற வர்ணாஸ்ரம பொற்கால வாழ்வும்
‘வலியதே வாழும்’ என்ற வல்லாதிக்க வாழ்வும் ஒன்றல்லவே!

பிறக்கும் அனைவரும் இறப்பார்கள் என்றாலும்,
அடிமைகளின் வாழ்வும்
ஆதிக்கவாதிகளின் வாழ்வும் ஒன்றல்லவே!

பயணம் ஒன்றே என்றாலும்,
உச்சியை நோக்கிச் செல்லும் பாதையும்
பள்ளத்தில் வீழ்த்தும் பாதையும் ஒன்றல்லவே!

பூமிப் பந்தின் புண்ணியப் பகுதியே
புனித சூரியனை விட்டு விலகி
தன் வலிமை மறந்து
தறி கெட்டுச் சுற்றினால்?

உடம்பு சுற்றினால் தலை தடுக்க வேண்டும்.
தலையே சுற்றினால்..?

பாற்கடலில் இருந்து அடுத்த ஓங்காரம்
எப்போது வந்து சேரும் இந்தப் பால்வீதிக்கு?

அடுத்த புராண அவதாரம்
அரக்கர்களிடமிருந்து அகிலத்தைக் காக்க
எப்போது நிகழும் இந்த விஞ்ஞான பரிணாம வரலாறில்?

$$$

Leave a comment