அமுதச் சுவையை அனைவருக்கும் அளிப்போம்!

-கவிஞர் குழலேந்தி

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரின் பிறந்த நாள் யுகாதி நன்னாள் (இன்று). இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். (இயக்கம் வேறு- அதன் நிறுவனர் வேறல்ல) குறித்த கவிதை இங்கு பதிவாகிறது....

நாடும்
நாட்டு மக்களும்
வேரும் நீரும் போல.

நாடென்பது
வெறும் மண்ணல்ல..
மாபெரும் மக்கள் கூட்டம்.

நாடென்பது,
நாடாக உணர்ந்த
மக்களின் ஒருங்கிணைப்பு.

நாட்டின் ஆன்மா குடிமகன்…
குடிமகனின் ஆன்மா பண்பாடு…
பண்பாட்டின் ஆன்மா தன்னுணர்வு.


தேசிய சிந்தனையும்
நாட்டு விடுதலையும்
நாணயத்தின் இரு பக்கங்கள்.

குடிமக்களின் பண்பாடும்
நாட்டு வளர்ச்சியும்
த்வஜத்தின் இரு முனைகள்.

சுயம் உணர்ந்த மக்கள்
ஒருங்கிணையும்போது
சுதந்திர ஒளி மிளிர்கிறது.


மக்கள் பங்கேற்காத
போராட்டமும்,
தேசிய சிந்தனையற்ற
தேச விடுதலையும்,
பண்பாட்டை மறந்த
தேச வளர்ச்சியும்
நிலையற்றவை.

அந்நியனுக்கு ஏன்
அடிமைப்பட்டோம்
என்றுணராமல்
காற்றில் கத்தி வீசுவது-
அடிமைத்தளையை
மேலும் ரணமாக்கும்….
ஆதிக்க வல்லூறுகளை
மேலும் பலமாக்கும்.

மன்னர்கள் நடத்த முயன்ற போர்…
ஆயுதம் தாங்கிய புரட்சிக் கலகம்…
மனு எழுதிக் கெஞ்சும் இயக்கம்…
அமைதி வழிப் போராட்டம்…
எதுவும் பயனின்றி
நாடு தத்தளிப்பது ஏன்?

ராமனும் ஜனகனும்
கண்ணனும் தர்மனும்
ஆண்ட பூமியில்…
விக்கிரமாதித்தனும்
பேரரசர் அசோகனும்
முடிபுனை மூவேந்தரும்
ஆண்ட தேசத்தில்…
ஆயிரம் ஆண்டுகளாக
அவதிகள் ஏன்? ஏன்?


தன்னை மறந்ததே முதல் குறை.
தனித்தனியாய் நிற்பது இரண்டாம் குறை…
தனது பலம் பெருக்காதது மூன்றாம் குறை…
குறைகள் இவை என்றும் தெரிந்தும்
களையாமல் தவிர்ப்பது பெரும் குறை.

நமது சுயம் உணர்வதே
முதல் நிறை.
‘ஸ்வயமேவ மிருகேந்திரதா’.

நாமாக இணைவதே
இரண்டாம் நிறை.
‘கலியுகத்தில் சங்கமே சக்தி’.

பலவீனங்களை ஒழித்து
நம்மை வலுப்படுத்துவது
மூன்றாம் நிறை.
‘வலிமையே வாழ்வு!’.

மூன்று நிறை நிலைகளிலும் ஏறிவிட்டால்
வெற்றிக் கோட்டையின் கதவு திறக்கும்…
தன்னை உணர்ந்த மக்கள் இணைகையில்
ஆவேசப் பெருமூச்சு சிம்மநாதமாகும்…
சிறுநரிக் கூட்டம் சிதறும்.


நமது உடனடித் தேவை
சுதந்திரமல்ல-
சுய பிரக்ஞை.

சுய உணர்வு வந்துவிட்டாலே
சுய மரியாதை கருவாகும்…
ஸ்வ தேசியம் தருவாகும்…
ஸ்வ தந்திரம் உருவாகும்!

நாட்டின் நோய் தெரியாமல்
மருந்தளிப்பவன்
நல்ல மருத்துவன் அல்ல.
நோயெது என்றும் தெரிந்தும்
காணாமல் இருப்பவன்
நல்ல குடிமகன் அல்ல.


நாட்டு நடப்புகளால் நொந்திருந்த
தேசபக்தர்களிடையே
வேறாகச் சிந்தித்த
அந்த நாகபுரி மருத்துவர் மனதில்
வேராகத் தோன்றிய விதைகள் இவை.

காங்கிரஸ் கட்சிக்குக் கொடி பிடித்தவர்…
அனுசீலன் சமிதியில் பயிற்சி பெற்றவர்…
காந்திஜியை மட்டுமல்ல
நேதாஜியையும் அறிந்தவர்…
விவேகானந்தரும் திலகரும்
மனதில் கொண்டவர்…
அந்த மருத்துவர் தான்
நாட்டின் நோய்க்கு
அருமருந்து கண்டவர்!

தற்காலிக மருந்துகளால்
நீண்டகாலப் பயனில்லை என்பதால்,
நமது வழிமுறையை மாற்ற வேண்டும்
என்று முதலில் உணர்ந்தவர்…
அதற்கான மருந்தாய்
தன்னையே அர்ப்பணித்து
தவமாய்த் துணிந்தவர்!


நோய் நாடி
நோய் முதல் நாடி
அது தணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச் செய்த
பெருமகன் அவர்.

அவர் கண்டறிந்த மருந்து
ஒரு முக்கூட்டு மருந்து.

தனி மனித ஒழுக்கத்துடன்
கூடிய சங்க வலிமை…
சமுதாயத்திற்காக தன்னையே
அளிக்கும் ஈகை…
நம்மை ஒன்றிணைக்கும்
கலாசாரப் பெருமிதம்…

இம்மூன்றும் கலந்த
இனிய அமுதம்
அவர் கண்ட சங்கம்.

தேவ அமுதம் அமரத்துவம் தரும்.
இவரது மருந்தோ
தேசபக்தியென்னும் அமுதம் தரும்.

சங்க அமுதம் பலவீனம் ஒழித்தது…
மக்களைப் பிணைத்தது…
ஸ்வதேசியம் உணர்ந்த மக்களுக்கு
ஸ்வதந்திரமும் சுயாட்சியும்
தந்துகொண்டிருக்கிறது!


அந்த நாகபுரி மருத்துவர்
நூறாண்டுகளுக்கு முன்
தினமும் ஒரு மணி நேரம்
இளம் பாலகர்களுடன் ஆடிய
இயல்பான விளையாட்டுதான்
பேரியக்கமாய் மலர்ந்த
அந்த அமரத்துவ மருந்து…

ஆல் போலத் தழைத்து,
அருகு போல வேரூன்றி,
வாழையடி வாழையாக இயங்கும்
சங்க அமுதம் கண்ட
மகத்தான மருத்துவர் கேசவர்.

இந்த அமுதத்தை எங்கும் அளிப்போம்.
இந்த கங்கை எங்கும் பரவிட,
அமுதச் சுவையை
அனைவருக்கும் தருவோம்!

பாரத அன்னை வெல்லட்டும்
பாரில் அமைதி ஓங்கட்டும்!
மக்கள் அனைவரும் நலமுடன் திகழட்டும்!
ஓம் ஓம் ஓம்!

$$$

Leave a comment