-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #72...

72. தூளிக்கயிறே தூக்குக் கயிறாகலாமா?
உங்கள் மீது நிச்சயம் தவறில்லை.
உங்கள் கண்களுக்கு
வாகை மலர் கிரீடம் மட்டுமே தெரிகிறது.
கோர்த்துக் கட்டிய காய்ந்த நாரின் கூர் முடிச்சுகள்
மென் நெற்றியில் முடிவற்றுக் குத்தி
வாகை மலர் கிரீடம் முள் முடியாக மாறி வலிப்பது தெரியாது.
உங்கள் மீது நிச்சயம் தவறே இல்லை.
மந்திரித்த தாயத்தைக் கட்டியிருக்கும் காப்புக் கயிறு
மரபின் மீதான பற்றையும்
துர் தேவதைகளிடமிருந்து கிடைத்திருக்கும் பாதுகாப்பையும்
உங்களுக்கு உணர்த்துவதாகவே இருக்கிறது.
உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக் கட்டிய நிலையிலும்
அந்தக் கரத்தின் ரத்த ஓட்டத்தை
முழுவதுமாக முடக்கி நிற்கும் விபரீதம் உங்களுக்குப் புரிந்திருக்காது.
(அந்தக் கரத்தை அசைக்க முடியாமல் இருப்பதை
கூர்ந்து கவனித்துப் புரிந்துகொண்டிருக்கலாம்.
ஆனால்,
அந்த மந்திரத் தாயத்தும் காப்புக் கயிறும்
அனைவருக்கும் தரும் ஆசுவாசமே
அதைக் கவனிக்கவிடாமல் தடுத்தும்விட்டது).
இரு தோள்கள் தொடங்கி
இடை வரை இடைவெளியின்றி அணிந்து நிற்கும்
இரும்புக் கவசம் உங்களுக்கு உணர்த்துவதும் அதுவே.
எந்தக் கொல்லன் செய் ஈட்டியும் துளைக்க முடியாதது.
எந்தப் பட்டறை வாளும் குத்திக் கீற முடியாதது.
இந்தக் கவசத்தைச் செய்த கொல்லனால் கூட
இதை உடைக்கும் கதாயுதத்தை உருவாக்க முடியாது.
ஆனால்,
வார்ப்புக் கவசத்தில்
ஒழுங்கற்று நீட்டி நிற்கும் உட்புறக் கூர் விளிம்புகளை
மென் ரம்பம் கொண்டு
முனை மழுங்கச் செய்யத் தவறிவிட்டார்
முது பெரும் கொல்லர்.
கவசம் மூடும் அத்தனை உடல் அணுக்களிலும்
கூர் ஊசியாகக் குத்திக் குத்திக் கசிகிறது குருதி.
அத்தனை ஈட்டிகளில் இருந்தும்
அற்புதமாகக் காக்கும் கவசமே
அத்தனை அணுக்களிலும் குருதி வழியச் செய்யும்
அபத்தம் புரிகிறதா?
வாய்ப்பில்லை.
சூரிய ஒளியில் மின்னும் கவசம்
உள் கசியும் குருதியை முழுமையாக மறைத்து நிற்கிறது.
காவல் கவசமே காயம் ஏற்படுத்தும் கையறு நிலை.
முழுதும் இறந்திராத கூட்டுப் புழுவின்
இறுதி வேதனை நெளிதலென
மேனி எங்கும் ஊர்கின்றன மென் பட்டின் பிரி இழைகள்.
கம்பீரக் காலணிக்குள்
எப்படிப் புகுந்தன நுண் கற்கள்?
முள்ளிலிருந்து காக்கும் காலணியே
முள்ளாகக் குத்தும் துயரம்
அத்தனை வலியும் சேர்ந்தும்
அலறவோ அழவோ கூட முடியாமல்
அசையாமல் நின்றாக வேண்டிய அவலம்.
வாகை மலர்க் கிரீடத்தை விமர்சித்தால்
ஏற்றுக்கொள்வீர்களா என்ன?
காப்புக் கயிறை அறுக்கச் சொன்னால்
செய்வீர்களா என்ன?
கவசத்தைக் கழற்றச் சொன்னால்
பொறுப்பீர்களா என்ன?
பட்டு நூலைப் பழித்தால்
புரிந்துகொள்வீர்களா என்ன?
காலணியைக் கழற்றி வீசினால்
கரகோஷம் செய்யும் நபர்கள் மீதல்லவா விழும்!
எதிரியை வெல்வது கடினமென்றாலும் சாத்தியமே.
துரோகிகளைக் களைவது கடினமென்றாலும் சாத்தியமே.
வெற்றியின் அடையாளமான வாகை மலர்க் கிரீடத்தை…
மரபின் அடையாளமான காப்புக் கயிறை…
வீரத்துக்குப் பக்கபலமான கவசத்தை…
கலாசாரத்தின் அடையாளமான பட்டாடைகளை…
கல்லிலும் முள்ளிலும் இருந்து காக்கும் காலணிகளை…
எப்படிக் கழற்ற..?
வெல்லப்பாகும் இளநீரும் கலந்து இறுக்கிய சாந்துக் கலவை
வெப்பம் முழுவதையும் ஈர்ப்பதால் மெள்ள விரிசலுறுகிறது.
(வலுவான பிணைப்புக்கு உதவுவதே
விரிசலுக்கும் காரணமாகிறது).
நமக்கான அனைத்தையும்
நம் எதிரியின் அடியாட்களைக் கொண்டே தயாரிக்கச் சொன்னால்
எதிரியின் அடிமைகள் தயாரிப்பதையே
நமக்கானதாக தரித்துக் கொண்டால்
இப்படி நடக்காமல் வேறு எப்படி நடக்கும்?
தாங்கு தூண்கள் எதுவும் இல்லாத உப்பரிகை
அரண்மனையின் உயரத்தின் நேர்விகிதத்திலானது வீழ்ச்சி.
மன்னருடைய கால்கள் மெள்ள உணர்கின்றன
விரிசலின் நடுக்கத்தை.
அவர் அதிர்ந்து எடுத்துவைக்கும் எந்தவொரு நகர்வும்
அந்த விரிசலை மேலும் அதிகரிக்கும்.
மரணத் தறுவாயிலும் கம்பீரமாக நின்றவர் என்ற
மாபெரும் பெருமை பெறக் கிடைத்திருக்கும் நல் வாய்ப்பு-
அத்தனை வேதனைகளில் இருந்து விடுதலை தரப்போகிறது
ஆகப் பெரிய வேதனையே என்பது
அவர் இதழோரம் மெல்லிய புன்முறுவலை வரவழைக்கிறது.
கண்ணீருக்குப் பதிலாக வரும் புன்னகை.
செவ்வரி ஓடிய அவருடைய கண்களில்
கோர்த்து நிற்கிறது
கசந்த புன்னகையின் கடைசித் துளி.
வெற்றிப் பெருமிதத்து ஆனந்தக் கண்ணீர் என்று
வீறிட்டு ஆர்ப்பரிக்கிறது தாழக் கிடக்கும் பெருங்கூட்டம்.
எம் தெய்வமே…
உயரத்தை எட்டுபவரெல்லாம்
தனக்கான போட்டியென்றெண்ணும்
பொறாமை இந்திரியனோ நீ..?
நீ மட்டுமே நிற்கும் உப்பரிகையின் நிழல்
இத்தனை கறுப்பாக இருக்கலாமா?
உன்னால் உயர்ந்த ஒன்றை…
உன்னை நோக்கி உயர்ந்து வந்த ஒன்றை…
தாயின் தோளில் இருந்து விழும் குழந்தைபோல
ஏன் முடிவற்று விழவைக்கிறாய்?
பச்சிளம் குழந்தை இறுகப்பற்றும்
கன்னித் தாயின் மென் துகில்
இப்படி அவிழ்ந்து ஏன்
அதல பாதாளத்தில் விழவைக்கிறது?
தூளிக்கயிறே தூக்குக் கயிறாகலாமா?
கழுத்தறுக்கும் வேளையில் ஓதப்படும் புனித வேதமா
காஃபிர்களுக்கான தாலாட்டெல்லாம்?
$$$