-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #71...

71. ஸ்டிக்கர் ஒட்டுதல் எங்கள் தொழில்
எங்கள் சாதனைச் சுவர்களிலெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுவதென்றால்
உங்களைப் படைத்த பிரம்மனாலும் முடியாது
அவர் படைத்த
முப்பத்து முக்கோடி தேவர்களாலும் முடியாது.
எங்கள் இடத்தில் நீங்களும்
உங்கள் இடத்தில் நாங்களும் இருந்திருந்தால்
எங்கெல்லாம் ஒட்டியிருப்போம் தெரியுமா?
அன்னைத் தமிழகத்தின்
அத்தனை சாராய பாட்டில்களிலும்
அமீரகத்து கஞ்சா பாக்கெட்களிலும்
உங்கள் தானைத் தலைவன்களின் புகைப்படத்தை
தங்க நிறத்தில் ஒட்டி
தரை லெவலுக்கு இறங்கி அடித்திருப்போம்.
அத்தனை பல்கலைக்கழகங்களின்
அத்தனை மரங்களிலும்
உங்கள் தலைவன்களின் படங்களை ஒட்டி
அத்தனை மாணவர்களையும் விட்டு
அறுந்த செருப்பால் அடிக்க வைத்திருப்போம்.
சாக்குத்துணி மறைப்புக்குப் பின்னால்
புணர்ந்து மருக நேர்ந்த
மண்டபத்து அகதிகள் முகாம்களின்
காரை பெயர்ந்த சுவர்களில்
உங்கள் கட் அவுட்டையே எழுப்பியிருப்போம் –
காறித் துப்பச் சொல்லி.
வேங்கைவயல் நீர்த்தொட்டியின் மேல்
விழாக்கால அலங்காரங்கள் செய்து
உங்கள் வீரத் தலைவன்கள்
அத்தனை பேரின் படத்தையும் மாட்டி
விடிய விடிய அசிங்கப்படுத்தியிருப்போம்.
முடவரை நடக்கவும் குருடரைப் பார்க்கவும் வைக்கும்
அத்தனை நற்செய்தி கூட்டங்களின் ஃப்ளக்ஸ் பேனர்களில்
உங்கள் நாயகர்களின் படங்களை ஒட்டி
பகுத்தறிவுப் பாடங்கள் எடுத்திருப்போம்.
அத்தனை சிலிண்டர்களிலும் உங்கள்
ஆன்மிகத் தலைவர்களின் படங்களைப் பொறித்திருப்போம்.
தமிழ்க் குடிமகன்கள் விழுந்து கிடக்கும்
அத்தனை மூத்திர சந்துகளிலும் உங்கள் படங்களை
ஒரு அங்குலம் விடாமல் ஒட்டியிருப்போம்.
விதவைப் பெண்களின் வீதி ஊர்வலத்தை…
ஒப்பாரி பாடல்களை…
மண் வாரித் தூற்றும் சாபங்களை…
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு தெருவை அடைத்து
ஊரெல்லாம் பார்க்க ஒளிபரப்பியிருப்போம்.
அரை மணி நேர மழையில்
அரித்துச் கொண்டு செல்லும்
அத்தனை சாலைப் பள்ளங்களிலும்
ஆம்ஸ்ட்ராங் நிலவில் நட்ட கொடிபோல
உங்கள் அத்தனை கொடிகளையும் ஊன்றியிருப்போம்.
ஒட்டுமொத்த உலகமும் பார்க்க
யுனெஸ்கோ வளாகத்தில் ஒட்டியிருப்போம்-
ஓராயிரம் அடி ஸ்டிக்கரை.
ஆஸ்தான ஆசன வாய்களான
அத்தனை ஊடகவியலாளன்களின்
அத்தனை வாயிலும் அடைத்திருப்போம்
ஆகப் பெரிய ஸ்டிக்கர்களை.
ஏகாதிபத்திய நிறுவனத்தின்
எடுபிடித் திரைகள் அனைத்தையும்
என்றைக்கோ எரித்திருப்போம்.
அல்லக்கை கலைஞர்களின் அண்டர்வேரை
அத்தனைபேர் முன்னிலையில் உருவியிருப்போம்.
புறமுதுகிட்டு ஓடும்
எதிர்க்கட்சி தலைவன்களின் முதுகிலும்,
காலடியிலேயே விழுந்து கிடக்கும்
கூட்டணித் தலைவன்களின் நெற்றியிலும்,
அத்தனை தேர்தல்களிலும்
அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைக்கும்
திருட்டு முட்டாள் கூட்டத்தின் நவ துவாரங்களிலும்,
மாட்டித் தொங்கவிட்டிருப்போம்.
எனவே
ரத்தத்தின் ரத்தங்களே…
மானனீய ஜீக்களே…
ஸ்டிக்கர் ஒட்டுதல் எங்கள் தொழில்.
எங்களுக்கு மட்டுமே கைவந்த கலை.
நிபுணர்கள் செய்வதை
நீங்கள் செய்துபார்க்க வேண்டாம்!
$$$