-ச.சண்முகநாதன்
அன்புக்குரியவள் பிரியும்போது பிரிவாற்றாமை புலம்பச் செய்கிறது. இதோ, கவிச் சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியும் பிரிவின் துயரை இங்கு எப்படி வெளிப்படுத்தி இருக்கின்றனர், பாருங்கள்!

வஞ்சனையால் சீதையைத் தொலைத்தவன் ராமன்.
பொய்மான் வேண்டுமென்ற பெண்மானின் ஆசையால் முதுகில் குத்தப்பட்டு மனம் குமைந்து கிடக்கிறான்.
திட்டமிட்டு வஞ்சிக்கப்படுவதால் வரும் வேதனை, சொல்லி மாளாது.
வஞ்சிக்கப்பட்டிருக்கிறான் ராமன். மனம் பொறுக்கவில்லை அவனுக்கு.
ஜடாயு சொன்ன ஒரே துப்பு, ராவணன் சீதையைக் கடத்தி தெற்கு நோக்கிச் சென்றான் என்பதுதான்.
தெற்கில் என்றால் வானிலா, மலையிலா, கடலிலா, மணலிலா? எங்கே தேடுவது!
“நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?” என்று தன்னுடன் கைப்பிடித்து வனம் புகுந்தவள் சீதை. இன்று அவள் பிரிவால் பெருங்காடு சுடுகிறது ராமனுக்கு. முடிதுறந்து, தாயனைய சீதையின் மடி இழந்து, ஜடாயுவைப் பறிகொடுத்து ராமன் ஒரு விரக்தி நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
“எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்” என்று ‘சிவதனுசை எடுத்தது தான் தெரியும், இமைப்பொழுதில் ஒடித்தான்’ என்ற பெருமையை உடையவன் ராமன். இன்றோ தலைகவிழ்ந்து, வனத்தில் இருக்கும் அன்னங்களுடன் ‘சீதை எங்கே இருக்கிறாள் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.
“இலங்கை மன்னன் தலை பத்து உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன்” ராமன். சீதையின் பிரிவால், ராவணனின் தீச்செயலால், கொஞ்சம் கவலையுடன் ‘குளத்தில் திரியும் அன்னங்களே, என்னுடன் கொஞ்சம் பேசுங்களேன்’ என்று இரங்கிக் கேட்கிறான். அன்னங்களும் அவனுடன் பேசுவதாயில்லை. ‘என்னுடன் பேசினால் குறைந்து போய் விடுவீர்களா?’ என்று பரிதாபமாக்க் கேட்கிறான்.
“எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால், ஈது இசை அன்றோ? பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின், பூசல் பெரிது ஆமோ?”
இரவு நீள்கிறது.
வனம் உறங்கிவிட்டது.
வானும் உறங்கிவிட்டது.
ஆனால், ராமன் உறங்கவில்லை. தனியே அமர்ந்திருக்கிறான். வானம் வெறுமையாய் காட்சி அளிக்கிறது, அவன் மனதைப் போல. உலகம் முழுமையும் ராமனைத் தனியே விட்டுவிட்டு உறங்கச்சென்று விட்டது.
கம்பன் வருகிறான், ஒரு பாடலுடன்.
“மண் துயின்றன;
நிலைய மலை துயின்றன; மறு இல்
பண் துயின்றன;
விரவு பணி துயின்றன; பகரும்
விண் துயின்றன;
கழுதும் விழி துயின்றன; பழுது இல்
கண் துயின்றில,
நெடிய கடல் துயின்றதோர் களிறு"
மண்ணுயிர்களும், மலைவாழ் உயிரினங்களும் உறங்கி விட்டன. வனத்தில் தும்பிகள் பாடும் பாடல்கள் ஒலிப்பது நின்றது, அரவங்களும் உறங்கின. விண்ணும் உறங்கியது, பேய்கள் கூட உறங்கச்சென்று விட்டது. ஆனால் திருப்பாற்கடலில் உறங்கிப் பழக்கப்பட்ட திருமாலின் அம்சமான ராமன் கண்ணுறங்கவில்லை.
வானில் சூரியனும் சந்திரனும் இல்லை. அதற்குப் பதிலாக ராமனின் கண்கள் விழித்திருந்தன.
ஒரு கண்ணில் சீதை மீது காதல் கொண்ட சந்திரன் போல குளிர்ச்சியான கண். மற்றொன்று, சீதையை மீட்க, ராவணனை அழிக்க வேண்டும் என்று கோபாக்கினி உகுக்கும் கண்.
ஊரும் உறங்கியது, உலகம் உறங்கியது. ராமன் மட்டும் தனித்திருந்து விழித்திருக்கிறான்- வஞ்சனையால் வஞ்சிக்கப்பட்டதை நினைத்து, வெதும்பி. காதலைப் பிரிந்து!
“கண்துயின்றில, நெடிய கடல் துயின்றதோர் களிறு”
– இது கம்பன்.
“மேனி கொதிக்குதடி – தலை சுற்றியே
வேதனை செய்குதடி.
வானில் இடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்.
மோனத் திருக்குதடி – இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத்து உழலுவதோ.”
-இது பாரதி.
$$$