நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்: நூல் மதிப்புரை

-கருவாபுரிச் சிறுவன்

தமிழகத்தில் சைவம் காத்த சான்றோர் திருநாவுக்கரசரையும், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் பயிர் வளர்த்த சுதேசி வீரர் வ.உ.சி. அவர்களையும் ஒப்பிட்டு அரிய நூலை அன்பர் ஒருவர் எழுதி இருக்கிறார். அந்த நூல் குறித்த மதிப்புரை இது....
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே.

    -திருநாவுக்கரசு நாயனார்

பூ என்றால் அது தாமரை தான்; மாலை என்றால் அது ஆண்டாள் மாலை தான்;  புடவை என்றால் அது காஞ்சிபுரம் பட்டுதான்; மலை என்றால் அது திருவண்ணாமலை தான்; அருவி என்றால் அது குற்றாலம்தான்; தீர்த்தம் என்றால் அது கங்கை  தான்; மூர்த்தி என்றால் அது சதாசிவம் தான்; தேர் என்றால் அது திருவாரூர் தியாகராஜர் தேர்தான்; திருவிழா என்றால் அது மதுரை சித்திரை கள்ளழகர் திருவிழாதான்; குடை என்றால் அது திருப்பதி குடை  தான்; நுால் என்றால் அது திருவாசகம்தான்; குறள் என்றால் அது திருக்குறள்தான்; கோயில் என்றால் அது சிதம்பரம்  தான்; கோயில்விமானம் என்றால் அது தஞ்சை பெருவுடையார் கோயில் விமானம் தான்; புராணம் என்றால் அது பெரிய புராணம்தான்;  பிள்ளை என்றால் அது சிதம்பரம் பிள்ளையைத் தான் குறிக்கும் என்று கூறி இந்த நுால் அறிமுகத்தைத் தொடங்குவோம்.

மடமையதோ பிறநாட்டார் மயக்கந்தானோ
     மக்களெல்லாம் சுதந்திரத்தை மறந்தாராகி
அடிமை இருள் நள்ளிரவாய் அனைத்தும் மூடி
    யாரும் தலை  நீட்ட வொண்ணா அந்த நாளில்
திடமனத்துச் சிதம்பரப் பேர் பிள்ளைவாள் தான்
    செய்திருக்கும் அச்சமற்ற சேவை சொன்னால்
உடல் சிலிர்க்கும் உயிர் நிமிர்ந்து உணர்ச்சி பொங்கும்
     உள்ள மெல்லாம் நெக்குநெக்காய் உருகுமன்றோ

பாரத தேசம் விடுதலை பெற அரும்பாடு பட்டவர்களின்  உண்மை  தியாகம் இன்று பலருக்கும் தெரியாமல் மண்மூடி கண்மூடி போய் விட்டது.  அக்குறை நீங்க  தெய்விகத்தோடு தேசியத்தைப் பற்றிப் பேசும் நூல் தான் இது.

சுதந்திரம் என்றால் அந்த  மூவர் கொண்ட அணியினரைப்  பேசாமல் எழுதாமல் அவ்விடத்தை விட்டு நகர முடியாது. அதையும் மீறி  ஒருவர் சுதந்திரம் பற்றி எழுதுகிறார், பேசுகிறார் என்றால் அது பொய்யுரை. அப்படியானால் எது மெய்யுரை  எனத் தெரிய வேண்டுமாயின் சமீபத்தில் யாப்பு வெளியீடு செய்த  ‘நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்’ என்ற நூலினை வாசியுங்கள்.

இந்நூலின் அட்டையை உருவாக்கிய அன்பருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ராஜகோபுரம், திருநாவுக்கரசு சுவாமிகள், கப்பல், வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் ஆகியோரின் படங்களை கருத்தாழத்தோடு  வரைந்து இருக்கிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தாதார்
இறைவனடி சேராதார்.
 
    -திருக்குறள்: கடவுள் வாழ்த்து - 10

 என்ற  குறளுக்கு செயல் முறை வடிவம் தான் இந்நூலினுடைய முகப்பு.

 ஆன்மாக்கள் திருநாவுக்கரசரின் திருவடியை சிக்கெனப் பிடித்து  பிறவிக்கடலைக் கடந்தால்  பரம்பொருள் என்னும் கோபுரத்தை அடையலாம் என்னும் செய்தியைப் புதுமையாக்கி இந்நூலின்  அட்டையின் வாயிலாக உணர்த்துகிறார் அட்டை வடிவமைப்பாளர். வாழ்க! வாழ்க! அவரது தொண்டு!

வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறுஅங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே.

     -திருநாவுக்கரசு நாயனார்

 தில்லைக் கோயிலுக்கு சென்று சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசிக்க நான்கு திசைகளிலும் இருக்கும் நான்கு கோபுர வாயில் வழியாகச் செல்வோம். அது போல  ‘நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்’ என்னும் சிதம்பரம் பிள்ளையவர்கள்  பற்றிய  சொற்கோயிலுக்கு  – திருவாளர்கள் செந்தில் வரதவேல், முனைவர் சண்முக. செல்வ கணபதி, ரெங்கையா முருகன், இரா. முருகன் ஆகிய நால்வரும் அமைத்த பதிப்புரை, வாழ்த்துரை, அணிந்துரை, மதிப்புரை வாயில் வழியாகச் செல்லலாம். 

இவர்கள் எழுப்பிய தோரணவாயில் ஏதோ எழுப்ப  வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல.  திருநாவுக்கரசு நாயனாரின் தெய்வீகச் சிந்தனையும், வ.உசிதம்பரம் பிள்ளையவர்களின் தேசிய வந்தனமும் நாடி, நரம்பு, ரத்தம் சதையில் ஊறி இருந்தால் தான் இப்படியொரு தோரணவாயிலை எழுத்துக்களில் காட்ட  முடியும். நிற்க.

நாவுக்கரசரும் நாவாய் நாயகரும் – நூலில் ஆசிரியரால் எடுத்தாளப்பெற்ற சிந்தனைத் திறனும், செயல் திறனும் கருத்தாழம் மிக்கவை. சைவ அன்பர்கள் யாவரும் மனமுவந்து போற்றப்பட வேண்டியவை.

நூல் இடம் பெறும் செய்யுள்களை தனித்தும் (போல்டு செய்தும்) அங்காங்கே இடம் பெறும் உணர்ச்சி மிகுந்த வரிகளையும் சற்று வழக்கத்தை விட பெரிது படுத்தியும் காட்டியிருந்தால் இன்னும் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 

இந்நுாலிற்குப்  பயன்பட்ட  சான்று நூற்கள், செய்யுள் முதற்குறிப்பகராதியைப் பார்க்கும் போது மற்றவர்களும் இப்பணியில் ஈடுபட்டால் அவர்கள் எந்த விதத்திலும் தடுமாற்றம் அடையக் கூடாது என்ற ஆசிரியரின் உயர்ந்த உள்ளம் புலப்படும்.

உள்ளன்போடு கற்றவர்கள் வரவேற்று மகிழ்வர். அதைப் பெற்றவர்கள் போற்றித் துதிப்பர். உற்றவர்கள் உச்சி முகப்பர் என்றால் அது மிகையல்ல. 

வேறுபட்ட இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த இருபெரும் சான்றோர்களை உணர்வுப்பூர்வமாக ஒப்பிட்டு, அறிவார்ந்தும் அழகாகவும் காட்டியுள்ளார்  அறிவழகன் அவர்கள். அவர்களுக்கு முதற்கண் மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும். இதுபோல இன்னும் பல தேசிய தலைவர்களையும் தெய்வீகப் பெரியோர்களையும் ஒப்பிட்டு பல ஆரோக்கியமான நூற்களை சமைக்க வேண்டுமென எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடியைப்  பணிகிறேன்.

இத்திரு நூல் வெளிவர ஆத்மார்த்தமாக தன்னை இணைத்துக் கொண்டு இதில் பணியாற்றிய ஆசிரியர் முதல் அச்சுக்கோர்த்தவர்கள் வரை, ஆலோசனை வழங்கி  அன்பு கூர்ந்தவர்கள் வரை, வெள்ளி விழாக் காண முயற்சிப்பவர்கள் முதல் வீதிதோறும் சென்று விற்பனை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் வரை வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின்  ஞான வேள்வியில் மனமுவந்து தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அத்துணை அன்பர்களுக்கும் திடமான ஆரோக்கியத்தை தில்லையம்பலவாணர் அருளுக. 

இன்னும் ஒரு நூற்றாண்டு இருந்து  வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் புகழைப் பரப்பவும், அனைவரும்  மெய்யறம் வழி நின்று திருவள்ளுவ தேவ நாயனார் வாய்மொழி பிரகாரம் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல அன்னை சிவகாமி அம்பிகை சமேத  சிதம்பர நாதர்  அனைவருக்கும் நல்லருள் புரிவாராக.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால்
நலமிலன் நாள்தோறும் நல்கு வான்நலன்
குலமிலர் ஆகினும்  குலத்திற்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே!

     -திருநாவுக்கரசு நாயனார்

நூலினை  படிக்கத் துாண்டும் பக்குவமான  வரிகள் ஒரு சில:

வாழ்த்துரை

இந்நூலினுள் தெய்வத் தமிழும் தேசியத்தமிழும் கைக் கோர்த்து நிற்கின்றன. திருநாவுகரசரின் சொல்லுறுதியும் நாவாய் அரசரின் செயல் உறுதியும் இணைந்து செல்கின்றன. அரசுக்கு எதிரான போராட்ட நிலைகள் வெளிப்பட்டுள்ளன. பல்லவர் காலத்திய வாழ்வும் ஆங்கிலேயர் காலத்து வாழ்வும் சங்கமிக்கின்றன. காலங்கள் மாறினாலும் மானுடம் தொடர்ந்து போராடி வரும் நிலையை இந்நூல் தெரிவிக்கிறது.

அணிந்துரை

ஆறாம் நுாற்றாண்டின் பிற்பகுதி திருநாவுக்கரசரையும் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் நாவாய் நாயகர் வ. உ.சி.யையும் பாரதுாரமான கால இடைவெளிக்குப் பிறகான நூற்றாண்டில் ஒப்பீடு செய்திருந்தாலும், கொண்ட  பொருண்மைக்கு மிகச்சரியான தெய்வச் சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் வழியாகவும், தேவாரப் பாடல்கள் வழியாகவும் வ. உ.சி. எழுதிய தற்சரிதம் மற்றும் பாடற்றிரட்டு வழியாகவும் ஒப்பீட்டு நம்மை யோசிக்கவும், அசரவும் வைத்துவிட்டார் நுாலாசிரியர். இந்த பொருத்தப்பாடு இதுவரை யாருமே யோசிக்காதது.

மதிப்புரை

ஆன்மிகத்தை, சமூக மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தியவர்கள் திருநாவுக்கரசர், வ. உ.சி. ஆகியோர். பக்தியை வெகுசனங்களிடமிருந்து பிரித்து வெகுதூரம் நிலை நிறுத்துவதால் புனிதங்கள் தோன்றலாம். பல பிரமிப்புகள் ஏற்படலாம். பயமும் பதற்றமும் கூட உண்டாகலாம். ஆனால் மக்களுக்கு இதனால் என்ன பயன்? இந்தப் பின்னணியின் ஊடாக இந்நூலைப் புரிந்துகொள்ள முற்பட்டால் பல உண்மைகள் விளங்கும்.

தன்னடக்கத் தன்னுரை

சுருக்கமாக தொகுத்து நானறிந்த வகையில் இந்நூலினை கொடுத்திருக்கிறேன். சமூகத்தொண்டில் ஆர்வமுள்ள ஆய்வாளர்கள், மாணவர்களும் இதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகின்றேன்.

இன்றிலிருந்து 75 ஆண்டுகளுக்கு முன்பே, திருநாவுக்கரசரின் அவதாரமே  வ.உ.சி.   என்று சொன்ன அறிஞரின் பாதையில் தான் நான் பயணித்திருக்கிறேன்  என்பது என்னை அறியாமலே நடந்தது மட்டுமல்ல… நூல் நிறைவுறும் போதே இக்கட்டுரை மூலம்  நான் அறிந்தேன். இதுவும், அவனருளால் அவன் தாள் வணங்கி என்றே  நிறைகிறேன்.

சைவனுக்கு அழகு திருநீறு

திருநீறு பற்றி  வ. உ.சி. கூறியதை அவரது திருமகனார் சி.சுப்பிரமணியம் அவர்கள்  ‘சைவனுக்கு அழகு’ என்ற தலைப்பில் எழுதிய குறிப்பில் இருந்து…

மார்கழி திங்கள். விடியற்காலை. பனி பெய்கிறது. அப்போது தான் விழித்தெழுந்த நான் வெளித்திண்ணையில் வந்து உட்கார்ந்தேன். தலையில் சிவப்புக் கம்பளியுடனும் கையில் தடியுடனும் தோட்டப் பக்கத்தில் இருந்து அப்பா முன்புறம் வந்தார்கள். என் தமைக்கையார் வாசலில் கோலமிட்டு, சாணிப் பிள்ளையார் மீது பூசணிப் பூ குத்திக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

 (இவ்விடத்தில் பெரியவர் என்பது வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களை குறிக்கும்)

பெரியவர் கூற்று : அடே பயலே, சைவனுக்கு என்னடா அடையாளம்?

சுப்பிரமணியம் பதில் : அப்பா, எனக்கு இது பெரிய கேள்வி அன்றும் தான் இன்றும் தான் (பலருக்கு இது எப்போதுமே பெரிய கேள்வி தான்)

பதில் பேசாமல் இருந்தேன்

பெரியவர் கூற்று : சொல்லுடா, யோசித்துப் பார்த்துப் பதிலைச் சொல் – என்றார்கள். அப்பா அவர்கள்.

சுப்பிரமணியம் அவர்கள் நிலைபாடு: அவர்கள் நெற்றியில் வெண்ணீறு ஒளியிட்டது, என் கண்ணில் பட்டது.

நெற்றியிலே நீறு பூசுதல் என்றேன்.

பெரியவர் கூற்று: அதுமட்டுமல்ல: புலால் உண்ணாமையும் கூட….

கொல்லான் புலாலை  மறுத்தானைக் கை கூப்பி
எல்லாவுயிருந் தொழும்

(திருக்குறள்: புலால் மறுத்தல்-260)

என்று கணீரென்று கூறி விட்டு, அவர்கள் அவர்களது வழியே  சென்றார்கள். இந்நிகழ்ச்சி இன்று நடந்தாற் போல என்னகத்தே ஒளி வீசுகிறது என்றார் சுப்பிரமணியம் அவர்கள்.

இவற்றை அடியேன் திரும்பத்திரும்ப வாசித்த வைர வரிகள்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே. 

       -திருநாவுக்கரசு நாயனார்

தலைவனுக்கு அழகு எவ்வுயிருக்கும் ஊறு செய்யாமை

அப்பழுக்கற்ற தேச பக்தன்.

தமிழர்களின் எழுச்சி நாயகன்

 சைவத்தின் பழுத்த ஊற்றுக்கண்.

ஹிந்துக்களின் அடையாளம்

வேளாளர்களின்  மணிமுடி.

ஏனென்றால்  பெரியவர் இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் வாழ்ந்து காண்பித்தவர்.

எதிரியையும் மன்னிக்கும் வல்லமை   ஹிந்து மத நாயகர்களுக்கு உண்டு என வேதம் முதலான  பலநுாற்கள் வாயிலாக அறியலாம்.

போர்க் களத்தில் ராவணனை மன்னித்து அனுப்புகிறார்  ஸ்ரீராமபிரான்.

சூரபத்மனை சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன் வசம் வைத்துக் கொள்கிறார் முருகப் பெருமான்

கொல்ல வந்த முத்தநாதனை எல்லையில் பாதுகாப்பாக கொண்டு விடுகிறார் மெய்பொருள் நாயனார்.

கொல்ல வந்த பாம்புகளை மீண்டும் வாழ்விக்க வேடனுக்கே உயிர் பிச்சை கொடுக்கிறார் வேதாந்த தேசிகர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வடலூர் வள்ளல் பெருமகனார். 

 ஞானிகளின் உச்சபட்சக் கொள்கை  கோட்பாட்டில் எவ்வுயிருக்கும் இரங்குதல் அடங்கும். அதைத் தான்,

மானுடச்சட்டை தாங்கி இப்பூவுலகில் உலா வந்த  வ. உ.சிதம்பரம் பிள்ளையவர்களும்  சிறையில் இருக்கும் போது செயல்படுத்தினார்  என்பதை அடியேன் உங்கள் முன்னால் எழுதிக்காட்ட விரும்பவில்லை. ஏனென்றால்,

நீங்கள் இப்புத்தகத்தை வாங்கிப் அச்செய்தியை படிக்கும் போது அதை  நன்கு உணருவீர்கள்.

வ.உ..சிதம்பரம்பிள்ளையவர்கள்  காருண்யம் நிறைந்தவர்,  கப்பலுக்கு சொந்தக்காரர், தரணியாளும் தயாபரன், தமிழ் மொழியை ஆட்கொண்ட வள்ளல் என்பதெல்லாம் உண்மை தானே.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சிவாயவே.  

       -திருநாவுக்கரசு நாயனார்

 நிறைவாக,

  • பள்ளி, கல்லுாரி மாணவ மாணவர்களிடையே இந்நூல் பெரிதும் முறையாக உண்மையாக உணர்வுப்பூர்வமாக உள்ளன்போடு வாசிக்கப்பட வேண்டும்.
  • சமுதாய அங்கத்தினர் பலரும் இந்நூலினை வாங்கி பிறந்தநாள், திருமண நாள்  மற்றும் இல்ல விழாக்களில் பரிசளிக்க வேண்டும். அதுவே, இந்நூல் குழுவினருக்குச் செய்யும்  கைம்மாறு.
  • தேசம், தெய்வீகத்தின் மீது பற்றுள்ளவர்கள் இந்நூலினை முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுதல் சாலவும் பொருந்தும். 
  • போலி சமுதாய அந்தஸ்தில் உள்ளவர்கள் கண்ணில் இந்நூல் படுமேயானால் அவர்களின்  செருக்கு அக்கணமே அழியும்.
  • அக -புற அழுக்காறுகளுக்கு சொந்தமான அரசியல்வாதிகள், புதிதாக கட்சி தொடங்கி சீர்த்திருத்தத்திற்கு முனையும் புதுமையாளர்கள், ஊழலில் திளைத்து கொழுத்துக் கிடக்கும்  கொடுங்கோலர்கள்  யாவரே யாயினும் இந்நூலை மனமுவந்து படித்தால் அவர்களது  ரத்தம் இப்பிறவியிலேயே சுத்தமாகும்.
  • அடுத்த பிறவியிலாவது  திருவள்ளுவ தேவ நாயனார்  காட்டும் அரசியலில் கோலோச்சுவதற்கு  இந்நூல் ஒரு தூண்டுகோலாய் அமையும்.
வாழ்த்துகள் சொல்ல: ஆ.அறிவழகன் - 93821 35385

***

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாய பத்தும்
ஏத்த‌வல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே.

    -திருநாவுக்கரசு நாயனார்

தமிழ் மொழி ஓங்கி யென்றும்
    தரணியில் சிறக்கு மாறு
தமிழ் நுால்கள் இயற்றித் தந்தாய்,
    தமிழ்க் குறள் போற்றி நின்றாய்!

தமிழர்கள் புதுவாழ் வெய்தித்
   தரணியில் ஓங்குமாறு
தமிழர்கள் தலைவா, நாளும்
   தளர்விலா துழைத்தல் செய்தாய்!

ஊக்கமும் வலியும் குன்றி
  ஒளியிழந்துலகில் நீண்ட
தூக்கத்தில் வீழ்ந்த நாட்டைத்
  துயில் எழுச் செய்தாய்,ஐய,

பாக்கியம் பெருகி நாட்டார்
  பாரினில் ஓங்கு மாறு
தூக்கிய வினைகள் செய்தாய்
  துணிவுமிக் குடைய கோவே!

நற் செயல் பெரிதும் செய்தாய்
    நாட்டினை அகத்தில் கொண்டுன்
நற்பெயர் நிலவி நிற்கும்
    ஞாலம் உள்ளளவும் வாழி!

     -பரலி.சு.நெல்லையப்ப பிள்ளையவர்கள் 

வந்தே மாதரம்! வாழ்க பாரதம்!

நூல் விவரம்:

நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்

-ஆ.அறிவழகன்

வெளியீடு:

யாப்பு  பதிப்பகம், சென்னை,
பக்கங்கள்: 136; விலை: ரூ. 150-
தொடர்புக்கு: 90805 14506.

$$$

Leave a comment