-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம் - புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 18…

18. அதே யானை!
என்ன கொண்டாட்டம்! என்ன விளையாட்டு! குழந்தைகள் யானையை யானையென்றா எண்ணியிருக்கிறார்கள்? இல்லவே இல்லை. மரயானையை வைத்துக் கொண்டு விளையாடுவது போலல்லவா விளையாடுகிறார்கள்? தண்ணீரில் நிற்கும் யானையின் மத்தகத்திலிருந்து கொம்மாளம் போடுகிறார்கள். யானை குளிக்கிறது; அதுவாகக் குளிக்கிறதா? குளிப்பாட்டுகிறார்களா? குளத்திலே மண்டியிட்டு முதுகு முழுகக் குளிக்கிறது. குழந்தைகள் தங்கள் சிறுகையால் ஜலத்தை வாரி வாரி அதன் முகத்தில் இறைக்கிறார்கள்; அதன் தந்தத்தைக் கழுவுகிறார்கள். யானை தன் தும்பிக்கையினால் நீரை வாரி முகத்தில் வீசிக் கொள்கிறது. குழந்தைகளின்மேல் அந்த நீர்த்துளிகள் வீசும்போது அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள். யானையைத் தேய்த்துக் கழுவுகிறார்கள். அவர்கள் அதைக் குளிப்பாட்டுகிறார்கள். அது அவர்களைக் குளிப்பாட்டுகிறது. இந்த நீர் விளையாட்டிலே அந்த யானைக்குக்கூட மட்டற்ற மகிழ்ச்சி இருக்கிறது என்றுதான் தெரிகிறது. இல்லாவிட்டால் குழந்தைகளின் விளையாட்டுக்கு இடங்கொடுத்துக்கொண்டு அது நிற்குமா?
இப்படி ஊரிலுள்ள குறுமாக்கள் (சிறு பையன்கள்) தன் வெள்ளிய தந்தத்தைக் கழுவுதலால் மகிழ்ந்து போய் நீர்த்துறையிற் படியும் பெருங்களிற்றை ஒளவை பார்க்கிறாள். அவளுக்குத் தூக்கி வாரிப்போடுகிறது! அப்போது அவள் கண்ட காட்சியால் அல்ல; அந்தக் காட்சியையும் சில காலத்துக்கு முன் அவள் அறிந்த காட்சியையும் அவள் மனசிலே ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.
அடேயப்பா! அன்றைக்கு என்ன தடபுடல்! என்ன குழப்பம்! எத்தனை கவலை! ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டல்லவா நின்றது? யானையொன்று மதம் பிடித்து அடக்குவாரின்றி ஊர் முழுவதும் அலைந்து திரிந்து மரங்களை முறித்தும் கூரையைப் பிய்த்தும் மதிலோடு மோதியும் கதவினைக் குத்தியும் வெடிபடப் பிளிறியும் இடிபட உலவியும் பண்ணிய கொடுமையை இன்னும் ஊரார் மறக்க வில்லையே. அதே யானை இன்று சாதுவாகவும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகவும் நீர்த் துறையில் நிற்கிறது!
ஒளவைக்கு ஏன் ஆச்சரியம் உண்டாகாது? அந்தக் காலத்தில் அதனருகில் யாராவது போக முடிந்ததா? துன்னருங் கடாம் (அணுகுதற்கரிய மதம்) ஏறியிருந்தது. அதே யானைதான் இது என்பதை யாரும் நம்ப முடியாது. ஒளவைக்கு இந்தக் காட்சியைக் காணக் காண வியப்பு மேலிட்டது. இது குழந்தைகளின் பெருமையா? யானையின் இயல்பா? யோசித்து யோசித்துப் பார்த்தாள் தமிழ்ப் பாட்டி. நிச்சயமாக யானையின் இயல்புதான் என்று தெரிந்தது.
இந்த அதிசயத்தை நினைத்தபடியே அவள் அதியமான் அரண்மனையை அடைந்தாள். அதியமான் தகடூரில் அரசாண்ட சிற்றரசன்; பெருவீரன். அவன் பல போரில் பகைவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்து வெற்றி பெற்றவன். போர்க்களத்தில் ருத்திரமூர்த்தி போல நின்று பகைவருடைய யானைப்படையையும் தேர்ப்படையையும் பிற படைகளையும் கொன்று குவித்து கொற்றவைக்கு விருந்திடுபவன்.
ஒளவைப்பாட்டி அவன் திருவோலக்கத்தை அடைந்தபோது புலவர் பலர் அவனுடைய வீரச் சிறப்பைப் பாராட்டிக் கொண்டிருந்தனர். சிங்கம் போலவும் புலிபோலவும் அவன் போர்க்களத்தில் போர் புரிந்து வென்றதை வருணித்தனர். களமெல்லாம் குருதிவெள்ளம் பாய, அந்த வெள்ளத்திலே இறந்த யானைகளும் வீரர் உடல்களும் மிதக்க, கழுகுகளும் பருந்துகளும் தம் வயிறார உணவுபெற, அவன் செய்த வீர விளையாட்டை வீரச் சுவையும் கோபச் சுவையும் புலப்படச் சொன்னார்கள். ‘அவ்வளவு கொடுமையை உடையவனா!’ என்று நினக்கும்படி இருந்தன, அவர்கள் சொன்ன செய்திகள்.
போர்க்களத்திலே அவன் அப்படி இருந்திருக்கலாம்; ஆனால் இங்கே புலவர்களிடையே அவன் மிகவும் சாதுவாக ஒரு குழந்தையைப் போல அமர்ந்திருந்தான். கவிஞர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டான்; மென்மையாகவும் இனிமையாகவும் பேசினான். அவனுடைய வார்த்தைகளிலே அன்பு தான் இருந்தது; மருந்துக்குக்கூடக் கடுமையில்லை. புலவர்கள் பேசும்போது அந்தப் பேச்சை மிகவும் ஆர்வத்தோடும் மரியாதையோடும் கேட்டான். பார்வையிலே ஒரு குளிர்ச்சி, உடலிலே ஒரு பணிவு, வார்த்தைகளிலே ஒரு குழைவு ஆகிய இவ்வளவும் அவனது கோலத்தை இனிமைப் பிழம்பாகச் செய்தன.
‘இவன்தானா போர்க்களத்தில் பகைவர்களைப் படுகொலை செய்து தன் கைக்குச் செவ்வண்ணம் தீற்றியவன்? இருதயத்திலே சென்று தண்மையைப் புகுத்தும் இவனுடைய பார்வையா தீப்பொறிகளைக் கக்கியிருக்கும்?’ என்று எண்ணமிடலானாள் ஒளவை. அப்பொழுது அவள் அகக் கண்ணின்முன் சற்றுமுன் கண்ட காட்சி, நீர்த்துறைபடியும் களிறு, வந்தது. ஊரை அன்றொரு நாள் அலைத்து வருத்திய அதே யானை இன்று சிறு பிள்ளைகள் தன் தந்தத்தைக் கழுவி விளையாட, சாந்த நிலையோடு நிற்கிறது. இரண்டு நிலையிலும் அதே யானைதான். அன்று மதம் பெருகி நின்றது; இன்றுமதம் அடங்கி நிற்கிறது. இந்த அதியமானும் அப்படித்தான் இருக்கிறான். பகைவருக்கு மதம் பட்ட யானை அவன். புலவர்களுக்கோ நீர்த்துறை படியும் களிறாக உள்ளான்.
எவ்வளவு பொருத்தமான உவமை! கருத்து அழகிது! உள்ளத்தே பதிந்த அக்கருத்து உடனே ஒளவையின் வாக்கில் கவிதையாக வெளிப்பட்டது. அதியமானை நோக்கிப் பாடுகிறாள் ஒளவை:
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.
-புறநானூறு (94)- ஒளவையார் பாட்டு.
[ஊர்க் குறுமாக்கள் – ஊரிலுள்ள சிறு பிள்ளைகள். வெண்கோடு – வெள்ளையான தந்தத்தை. கழாஅலின் – கழுவுதலால். துன்னரும் கடாஅம் போல – யாரும் அணுகுதற்கரிய மதம்பட்ட நிலைமையைப் போல. இன்னாய் – கொடியவனானாய். ஒன்னாதோர்க்கு – பகைவர்களுக்கு.]
(நிறைவு)
- அரும்பதக் குறிப்பு தனியே உண்டு.
$$$